இதழ்-32

தமிழ் நாவல் இலக்கிய வரலாற்றில் கமலாம்பாள் சரித்திரத்தின் முக்கியத்துவம் – 06

முன்வந்த நாவலைக் கடந்தும், பின்வந்த நாவலைப் பாதிக்கும் தன்மையில் அமைதல்

வேதநாயகம் பிள்ளையும், மாதவை யாவும் ”சரித்திரம்” என்று கூறி முன்னவர் சுயவரலாறு போலவும், பின்னவர் வாழ்க்கை வரலாறு போலவும் தம் நாவலைப் படைக்கலாயினர். மாதவையா அது நடந்த கதை என நிறுவவும் பிரயத்தணிக்கிறார். ஆனால் ராஜமய்யர் இது கதை என்று தம்முடைய பிற்கூற்றில் தாமே கூறிவிடுகின்றார்.
”இப் பொய்க்கதையை இதுகாறும் பொறுத்தருளிய…” என்றும் ”இச் சரித்திரம் எழுதுவதில் எனக்குக் கதையே முக்கியக் கருத்தன்று…” என்றும் பிற்கூற்றில் சொல்கின்றார்.

சமய ஒற்றுமையை வலியுறுத்துவதில் ராஜமய்யர் வெற்றி பெற்றுள்ளார் எனலாம். இதில் கமலாம்பாள் இராமனை அடைவதையும், முத்துஸ்வாமி ஐயர் சிவனைச் சென்றடைவதும் சைவர் – வைணவர்களின் தேவையற்ற விரோதம் நீக்கி ஒற்றுமையை வலியுறுத்த ஆசிரியர் முயன்றதாகவும் கொள்ளலாம். அ.மாதவையா பெண்கல்வியை அநேகமாகத் தமது எல்லாப் படைப்புகளிலும் வலியுறுத்தி வருகிறார். ”பத்மாவதி சரித்திரத்தின்” சிறப்பான பகுதிகளில் ஒன்று, பத்மாவதி நாராயணனுக்குக் குறைக்கல்வியுடன் தப்பும் தவறுமாய்க் கடிதம் எழுதும் பகுதியாகும். ரசனைக்குரிய இதேமுறை கடிதத்தை ராஜமய்யர், மாதவையாவிற்கு முன்பே கையாளுகின்றார். ஸ்ரீநிவாசனின் மூன்றாம் நாள் கலியாணத்தன்று லட்சுமி எழுதியதாய் ஒரு குறும்புப்பெண் தானே எழுதி ஸ்ரீநிவாசனிடம் கொடுக்கிறாள். இப்படித் தமக்கு முன்வந்த நாவலைக் கடந்தும், தமக்கு அடுத்து வந்த நாவலைப் பாதிக்கும் முறையிலும் ராஜமய்யரின் நாவல் அமைந்துள்ளதை அறியலாம்.

மேலும், இளமைப் பருவ விளையாட்டுக்கள் பற்றியும், கதைப்போக்கிலான ஒரு சம்பவமாய்த் ”தீ விபத்து” ஒன்றினையும் விரிவாய் குருஸ்வாமி சர்மா எழுதுகிறார். ராஜமய்யரின் நாவலிலும் ஸ்ரீநிவாசன் ‘பலீன் சடுகுடு” விளையாடுவதும், வைக்கோர்ப்போர் தீப்பற்றி எரிவதும் இடம்பெறுகின்றன. இதேபோல மாதவையாவும் தம் நாவலில் போகிறபோக்கில் நாடகக்கொட்டகை எரிந்ததாய்ச் சொல்கிறார். அத்துடன், குருஸ்வாமி சர்மாவின் ‘பிரேமகலாவதியத்தில்” ராஜமய்யரைப் பெரிதும் பாதித்தது நரபலியாவே தோன்றுகிறது. ராஜமய்யரின் நாவலிலும் நரபலியின் களமான காளி கோவில் பற்றியும் விபரங்கள் இடம்பெறுகின்றன.

பாடநூற்கல்விக்குத் தகுதியுடைய நாவல்

”பிரதாபமுதலியார் சரித்திரம்” எனும் நாவல் வெளிவந்து பதினாறு வருடங்களில் நாவலுக்குரிய அமைப்போடு கமலாம்பாள் சரித்திரம் வெளிவந்தது. நாவலின் அமைப்பின் சிறப்பினால், நிலமானியச் சமூகத் தைப் பேசும் தன்மையாலும் தமிழில் முதல் நாவல் என்று இதனையே கூறுவர். இந்தியாவில் 1932 ஆம் ஆண்டு இது பாடப்புத்தகமாக அங்கீகரிக்கப்பட்டது. ஆசிரியர் சான்றிதழுக்காக முதல்நிலைத் தேர்விற்கு உரிய பாடநூலாக தமிழக அரசால் இந்நூல் பரிந்துரைக்கப்பட்டது. எனவே பாடநூற் தகுதிக்குரிய முதல் ஆரம்ப நாவல் என்ற பெருமையையும் பெறுகிறது.

எடுத்துரைப்பு முறையில் புதுமை

ராஜமய்யர் நகைச்சுவை கலந்த நடையை தம் தேவைப்படி கையாண்டுள்ளார். ஆரம்பத்தில் கமலாம்பாளையும் முத்துஸ்வாமி ஐயரையும், காட்டும் போதே நகைச்சுவை கலந்த அன்னியோன்யத்துடன் அறிமுகம் செய்கிறார். தான் அடுத்துக் கொண்டுவரவுள்ள கதைச்சிக்கல்களாலும், அவலச்சுவை மிக்க சம்பவங்களாலும் வாசகனை இம்முறையில் அதிகம் கவரலாம் என அவர் முன்பே கணித்து விட்டார். ”அம்மையப்பிள்ளையை” முற்றிலும் நகைச்சுவை கலந்த பாத்திரமாகப் படைக்கின்றார். நகைச்சுவை அம்சமாய் ராஜமய்யர் எள்ளல் தொனியில் பட்டப்பெயர்கள் வைக்கிறார். ”பாப்பா பட்டியகத்து வெட்டரிவாள்”, ”வம்பர் மஹாசபை அக்கிராசனாதிபதி”, ”சமாசார ஸ்திரீகள்”, ”தெனாலிராமன்”, ‘லேடி”, ”பெரும் தீனி வைத்தி”, ”மாம்பழம்”, ”ஷோக் சங்கரன்” முதலிய பெயர்களைக் குறிப்பிடலாம். இதனால் பாத்திரங்கள் வாசகர் களால் ஒரு நெருக்கத்துடன் அடையாளங் காணப்படுகின்றார்கள்.

நாவலின் வர்ணனை மரபைத் தொடக்கி வைத்தவர் ராஜமய்யர்தான். வர்ணனைகளின் வழி வெளிப்படும் இவரின் கூர்ந்த சமூக அவதானிப்பு ஆச்சரியமாக உள்ளது. வர்ணனை களில் நகைச்சுவை உணர்வு நிரம்பி வழிகிறது. ஆனாலும் நாவலின் பிற்பகுதியில் ராஜமய்யர் வேதாந்த விசாரணையில் ஈடுபடும் போது வெளிப்படும் வர்ணனைகள் சலிப்படையச் செய்கின்றன. பிற இலக்கிய ரசனைகளை நாவலுக்குள் வெளிப்படுத்துவதில் ராஜமய்யர் வெற்றி கண்டுள்ளார் எனலாம். குறிப்பாகக் கம்பனிடத்தில் மனதைப் பறிகொடுத்தவர் ராஜமய்யர். அவர் தமது மிகப்பிரியமான லட்சுமி என்ற பாத்திரத்தைக் கம்பராமாயணப் பாடல்களை அபாரமாய்ப் பாடுவதாக அமைத்துக் கொள்கிறார். கம்பரையும், மாணிக்கவாசகரையும் மிகுந்த விருப்பமுடன் பல விதங்களில் பல இடங்களில் அவர் பயன்படுத்திக் கொள்கிறார். இந்த ரசனை, அடிப்படையில் நாவலின் பெரிய பலமாக அவருக்குக் கைகொடுத்தது. இந்நாவலில் பாத்திரங்களின் குணச்சித்திர வர்ணனைகளும், சம்பவங்களின் யதார்த்தச் சித்திரிப்புக்களும் ராஜமய்யரின் தனி ஆளுமை கொண்டவை. இவ்விதத்தில் பாத்திரங்களின் வாழ்வியல் கவர்ச்சி வாசகனைப் பெரிதும் ஈர்த்து மறக்க முடியாதபடி கட்டிப்போட்டு விடுகின்றது. இந்துப்பண்பாட்டோடு கூடிய வாழ்வியல் செயற்பாடுகளை இந்நாவலில் காட்சிப்படுத்துகின்றார். நிலமானிய சமூகத்தின் கூட்டுக்குடும்ப அமைப்பையும், அது படிப்படியாக சிதைவுற்றுச் செல்வதையும் யதார்த்த நெறியில் படைத்துள்ளார்.

முடிவுரை

”கமலாம்பாள் சரித்திரம்”, நாவல் எனும் இலக்கிய வடிவத்தின் தன்மைகள் முழுமையாகப் பொருந்தி வெளிவந்த முதல் நாவல் என்பதால் தமிழ்நாவல் வரலாற்றில் இதற்கென்று தனியான இடமுண்டு. ஏனெனில் 19ஆம் நூற்றாண்டு மக்களின் மனோநிலையையும், குறிப்பாகப் பிராமண சமூகத்தவர்களின் வாழ்வியலை மையமாகக்கொண்டு, ஒட்டுமொத்தமாக நிலமானிய சமூகத்தின் கூட்டுக்குடும்ப அமைப்பையும் பின்னர் அது படிப்படியாக சிதைவுற்றுச் செல்கின்றமையையும் யாதார்த்த பூர்வமாகக் கூறுகின்றது. எனவே தொடக்க காலத்திலேயே உருவ, உள்ளடக்கத்தில் சிறப்புற்றுத் தோன்றிய நாவல் என்னும் பெருமையை ”கமலாம்பாள் சரித்திரம்” பெறுகின்றது.

உசாத்துணை நூல்கள்

  1. சுப்பிரமணியம். க. நா, (1957), முதல் ஐந்து தமிழ் நாவல்கள், அமுத நிலையம், சென்னை.
  2. மோகன். இரா, (1989), நாவல் வளர்ச்சி, மணிவாசகர் பதிப்பகம், சென்னை.
  3. ஞானி, (2008), தமிழ் நாவல், காவ்யா வெளியீடு, சென்னை.
  4. கைலாசபதி. க, (1968), தமிழ் நாவல் இலக்கியம், குமரன் பப்பிளி~ர்ஸ், சென்னை.
  5. பாலசுப்பிரமணியன். இரா, (2004), நாவல் கலையியல், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை.
  6. சீனிச்சாமி. துரை, (1977), நாவல் வளம், தமிழ்ப் புத்தகாலய வெளியீடு, சென்னை.
  7. ராஜமய்யர். பி. ஆர், (1957), கமலாம்பாள் சரித்திரம், ராமநாத் பப்பிளிகேஷன்ஸ், சென்னை.

Related posts

கொரோனா நோயினால் வாயில் ஏற்படும் அறிகுறிகள்

Thumi2021

சாபமா என் சபதம்?

Thumi2021

குறுக்கெழுத்துப்போட்டி – 28

Thumi2021

Leave a Comment