இதழ்-32

தாயுமானவரின் சமய சமரசம்-02

”அருமறையின் சிரிப்பொருள்” என இவர் தொழுகின்ற தலமைச் செல்வமாகிய கடவுளை எந்த மதமும் தனியுடமை கொண்டாட முடியாது. எத்தகைய சமயச்சடங்குகளாலும் அவரை வசப்படுத்த முடியாது. அவர் அனைத்துச் சமயங்களுக்கும் பொதுவானவர் என சமரச சிந்தனையை விதைக்கிறார். ஒவ்வொரு சமயத்திலும் நின்று ஒழுகும்போது அதனுள் உறுதியான ஊக்கம் உண்டாகும் பொருட்டு தம்மதம் நிறுவுதலும் பிறர்மதம் மறுத்தலும் ஆகிய சமயவாதம் ஏற்படுவதால் ”ஒருவர் போல் அனைவரும் தத்தம் நிலையே முத்தி முடிவென வாத தர்க்கமும் போதநூல்களும் முடிவிற் காட்டியே” என்கிறார்.

கடவுளை அடைவதற்கு வெவ்வேறு நெறிகளைக் கொண்ட எல்லா சமயங்களும் இறுதியில் உயர்ந்த கடவுள்நெறியில் உயிர்களைச் செலுத்துவதால் ”பலவாஞ் சமயப் பகுதியும் நீ” என்றார்.

‘வேறுபடு சமயமெல்லாம் புகுந்து பார்க்கின்
விளங்கு பரம்பொருளே நின் விளையாட்டல்லால்…’

எனத்தொடரும் பாடலில் ஒரு சமயத்தைக் கடைப்பிடிக்கும் ஒருவர் தம் கொள்கையைப் போற்றி பிறசமயத்தை இகழ்வதற்கும் அச்சமயத்தை விட்டு பிறிதொரு சமயம் செல்லும்போது கைவிட்ட சமயத்தை இகழ்ந்து கைக்கொண்ட சமயத்தைப் போற்றுவதற்கும் இறைவனே காரணம் என்கிறார். சிறிய அருவிகள் அனைத்தும் ஒன்றாய்க்கூடி கடலினுள் கலத்தல் போல பல்வேறுபட்ட மதங்களும் இறுதியில் முழுமுதற் கடவுளாகிய ஒருவரையே சென்றடைவதால்

வாரிதியில் நதித்திரள் போல் வயங்கிற்றம்மா” என்கிறார். இக்கருத்தினையே
”நதியுண்ட கடலெனச் சமயத்தை உண்ட பரஞான ஆனந்த வெளியே”

‘ஆறொத்திலங்கு சமயங்கள் ஆறுக்கும் ஆழ்கடலாய்..’

என்பவற்றினூடும் புலப்படுத்துகின்றார்.

மேலும் சமயபேதங்கள் பேசப்படுவதால் கடவுளின் பெருமை உணரப்படாது என்பதையும் பல இடங்களில் உணர்த்துகிறார். ”நெறிகள் தாம் பலப்பலவுமாய் அந்தந்த நெறிக்காய்” என்பதில் சமயங்களின் பிணக்குகளுக்கு அளவில்லை என்றும் அதனால் தெளிவு பிறக்காதென்றும் உரைக்கிறார். பலவகைப்பட்ட சமயவாதங்களால் உண்மை உணராது பரிதவிக்கும்படி கடவுள் தம்மை விட்ட நிலையை ”பன்னெறியாம் பாலைவனத்தில் விட்ட பாவமென்னோ” என்கிறார். எனவே இதன் மூலம் பலசமய முரண்பாடுகள் பாலைவனம் என்பதையும் அவை அனைத்தையும் சமரசத்துடன் நோக்கின் அதுவே சோலைவனம் என்கின்ற கருத்தும் புலனாவதைக் காணலாம்.

கடவுட் தன்மையின் ஒவ்வொரு பகுதியையுமே வெவ்வேறு சமயங்கள் வற்புறுத்துவதை ‘எங்கும் நிறைகின்ற பொருள்” இரண்டாவது பாட்டிலே விளக்குகிறார். எவ்வாறெனில் சில சமயங்கள் கடவுளை ‘அன்னை” என்றும், சில சமயங்கள் ‘அப்பன்” என்றும் கூறும். சிலர் இந்திரன், பிரம்மன் முதலியவர்களோடு சுடலைமாடன், மதுரைவீரன் முதலிய சிறுதெய்வங்களும் பிறநாட்டினர் கூறும் தெய்வங்களும் ஆகிய எல்லாம் கடவுளே என்பர். இத்தகையவர்களுடைய சமயக்கருத்தினையே

‘பேய் போல அலறியே ஒன்றும் இலவாய்ப் பின்னேதும் அறியாமல் ஒன்றை விட்டொன்றைப் பிதற்றிடும்” என்றார். சிலர் கடவுளை ஒளி என்பர், சிலர் வெளியென்பர், சிலர் தத்துவங்களே கடவுள்நிலை என்பர், சிலர் காலமே கடவுள் என்பர். இவர்கள் கூறும் எல்லாமாய் வேறாகி, என்றும் ஒன்றாய் அறிவின் முழுமுதலாய் விளங்குவது இறைவன் திருவருளே என்கிறார் தாயுமானவர். இவ்விதம் சமய சமரசத்தை வலியுறுத்தினாலும் சைவசமயமே சிறந்ததெனக் கொள்ளும் இவர் சில சமயங்களைப் பெயர்கூறி மறுத்துள்ளமையும் சுட்டத்தக்கதே.

”தரணிமிசை உலோகாயதன் சமயநடை சாராமல்..”
என்ற சில அடிகளில் நாத்திகத்தையும் அகம்பிரவாதத்தையும் கண்டிக்கிறார். அத்துடன் அளவற்ற பிறசமயங்கள் எல்லாம் தத்தம் தெய்வமே மெய்த்தெய்வமென்று தமக்கேற்ற காரணங்களுடன் சாதிக்கும் போது தம்முள் முரண்படுகின்றன. அவற்றின் பொருளையெல்லாம் தக்கமுறையில் ஒப்புக் கொண்டு எச்சமயமும் வணங்கும் இயல்பை உடையன என்கிறார்.

இதன்படி நோக்கின், தாயுமான சுவாமிகள் எச்சமயத்தையும் உரிய முறையில் தழுவிக்கொள்ளும் சைவ சித்தாந்த சமயத்தவரென்பதும், சித்தாந்தக் கருத்தே உபநிடதத்தின் சிறந்த கருத்தென்று கொள்ளுதலால் உண்மை வேதாந்தமும் சித்தாந்தமும் சமநிலை உடையன என்னும் கொள்கையுடையவர் என்பதும் நன்கு புலனாகின்றன. இவற்றைக்கொண்டு தொகுத்து நோக்கின், சமய சமரச ஞானவிளக்காகக் கருதப்படும் தாயுமானவரை எத்தகைய மதக் கூட்டிலும் அடக்கிவிட முடியாதென சமரச நெறியாளர்கள் கருதுவதுடன் இன்றைய சமய சமரசவாதிகளும் இவரது பாடல்களில் தங்கள் கொள்கைகளுக்கு ஆதாரம் தேடலாம் எனவும் கூறுவதுடன் கடவுள், உயிர், உள்ளம், தத்துவம், நெறிமுறைகள் பற்றிய சமரசக் கருத்துக்களையும் குறிப்புக்களையும் இவரது சிந்தனைகளில் காணமுடிகின்றது. அத்துடன் சாதி சமயம் முதலான வேறுபாடுகளின்றி இவரது பாடல்கள் அனைவருக்கும் பயன்படுவது சமரச சிந்தனையின் வெளிப்பாடே எனலாம்.

இவ்விதம் முற்காலத்தில் வாழ்ந்த சமய சிந்தனையாளர்களும் இலக்கிய கர்த்தாக்களும் சமய சமரசத்தை வலியுறுத்தி இருப்பது இன்றைய காலத்தில் நாம் சிந்தித்து செயற்படுவதற்கும் மத நல்லிணக்கத்தை வளர்த்துக் கொள்வதற்குமான முன்மாதிரிகை யாகக் கொள்ளலாம்.

தொடரும்…,

Related posts

புதிர் 11 – கட்டங்களை தீர்ப்பவனுக்கே கல்யாணம்

Thumi2021

தாய்ப்பால் – ஒரு அறிமுகம்

Thumi2021

சிங்ககிரித்தலைவன் – 30

Thumi2021

Leave a Comment