இதழ்-32

அழகான ராட்சசியே!

அவனது ராஜ்ஜியத்தில் அவனே ராஜா! அவனே மந்திரி! சிகரத்தில் ஏற வழி  தேடி ஓடிக்கொண்டிருப்பவன். தொழில் வாழ்க்கை என்று மட்டுமே சுழன்று கொண்டிருந்தவன். வாழ்க்கை துணை, பெண் என்ற நினைப்பே இல்லாது தன் வழி தனி வழி என்று வாழ்ந்தவன்.  இன்றோ,

“மன்னர் மன்னனே எனக்கு கப்பம் கட்டு நீ

ஜென்ம ஜென்மமாய் எனக்கு கட்டுப்பட்டு நீ”

என்று ஒருத்தி ஆணையிட , தானே விலங்கினை மாட்டிக்கொண்டு மண்டியிடுகிறான். அவனது சிம்மாசனத்தில் சிம்ம சொப்பனமாய் வீற்றிருந்தாலும் காதலாள் கடைக்கண் பார்வை வீச அவள் பாதம் பணிவான். அவளே சரணாகதி என அவள் பாதங்களில் முத்தமிட காத்திருக்கிறான்.

“மானிட பிறவி என்னடி மதிப்பு;

உன் கால் விரல் நகமாய் இருப்பது சிறப்பு”

இவனை இவ்வளவுக்கு மயக்கி வைத்திருக்கிறாள் என்றால், அவள் எவ்வளவு பெரிய வசியக்காரி! அவளுக்கு இரண்டு முகம். காதல் மதுவை அள்ளி வார்த்து அவனை போதையில் திக்குமுக்காட செய்யும் ‘யட்சி’ நிலை. மற்றையது, அவனை சீண்டி சண்டையிட்டு அவனை பிரிவுத்தீயில் தகிக்க விட்டு ரசிக்கும் ‘பிசாசுகளின் ராணி’ நிலை. மொத்தத்தில்,

//அழகான ராட்சசியே//

பெண் என்றாலே கவிதை, வழிபாடு, கொண்டாட்டம். காதலில் இது மூன்றுமே இணைந்து கொள்ளும். கவிதை பொதுத்தளத்துக்கு சொந்தமானது. ஆனால் வழிபாடும் கொண்டாட்டமும் எல்லா காதலிகளுக்கும் வாய்ப்பதில்லை.  தன்னவளை வழிபடவும் கொண்டாடவும் எல்லா ஆண்களுக்கும் தெரிவதுமில்லை. அது சில காதலிகளுக்கே கிடைக்கும் வரம். சில காதலர்களுக்கே வாய்த்த கலை.

“பார்த்த விழி பார்த்தபடி பூத்து இருக்க

காத்திருந்த காட்சி இங்கு காண கிடைக்க

ஊன் உருக உயிர் உருக தேன் தரும் தடாகம்”

இப்படியாக, ‘காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி காதலியே தேவி’ என்று பக்தியில் உருகுதல் அபூர்வம். அதே போலத்தான் கொண்டாடப்படும் காதலிகளும்.

காதலில் தோய்ந்து உம்மத்தம் அடைந்த காதலனுக்கு மட்டும் தேவதை, கோதை, ராதை, ரம்பை, ஊர்வசி என்ற விளிப்புகள் அன்னியமானதாகிவிடுகிறது. ராட்சசி, வசியக்காரி, சூனியக்காரி போன்ற பொதுத்தளத்து “பயானக” வார்த்தைகளினால்,  அவனை கட்டி ஆள்பவள் என்ற ‘காதல் வட்டத்தினுள்’ ஆணின் ஆணவத்தை உடைக்கிறாள் பெண். ஆண் என்ற மமதையை தவிடு பொடியாக்குகிறாள்.

“புயலென்று நினைத்தேன் என்னை

புயல் கட்டும் கயிறாய் வந்தாள்.

மலை என்று நினைத்தேன் என்னை

மல்லிகையால் மலையை சாய்த்தாள்

நெற்றிப்பொட்டில் என்னை உருக்கி வைத்தாளே”

“எனை ஆள்பவளே! உனக்கு நான் அடிமை!”

என்று காதல் “அடிமைசாசனம்” எழுதிக்கொடுத்துவிட்டு, அவளை ‘ராட்சசி’ என்று அழைக்க இனிக்கிறது இவனுக்கு.

//அடி நெஞ்சில் குதிக்கிறியே//

காதலிக்கும் அத்தனை ஆண்களுமே அனுபவித்திருக்கும் சுகமான வேதனை இது. அதுவும் காதலை தன்னவளிடம் வெளிப்படுத்தும் வரை, இந்த வேதனை  உச்சக்கட்ட ஊசலாட்டம்.

நெஞ்சாங்கூட்டில் அங்கும் இங்குமாய் காதலி ஏறிக்குதிக்க, இதயத்தின் அலைவரிசை உச்ச மீடிறன்களை தாண்டி தடுமாற, இதயம் தத்தளிக்கும் ஆதரவற்ற நிலை. அவள் குதிப்பினால், நெஞ்சினுள் ஏதோ வலி. மூச்சு விட சிரமம். இந்த அதிர்வு வயிற்றுக்கும் தொண்டைக்கும் கடத்தப்பட,

“வயிற்றுக்கும் தொண்டைக்கும் உருவமில்லா

ஒரு உருண்டையும் உருளுதடி”

இந்த குதிப்பின் அதிர்வு வாழ்நாள் முழுதும் தொடரும். தொடரும் பயணத்தில் இன்னும் பல குதிப்புக்களும் குத்துக்களும் இதயத்தை பதம் பார்க்கும்.

//முட்டாசு வார்த்தையிலே பட்டாசு வெடிக்கிறியே//

இவன் தன்நிலை மறந்து, சிறுவனாகி விடுகிறான். சிறுவனுக்கு முட்டாசு தின்பதே அதிகபட்ச சந்தோஷம். பட்டாசு வெடிப்பது  வருடத்தில் பண்டிகைகளின் போதே கிடைக்கும் உச்சபட்ச மகிழ்ச்சி. அந்த இரண்டும் இணைந்து கிடைக்கும் சுகம் காதலி பேசும் போது வருகிறது.

//அடி மனச அருவா மனையில் நறுக்குறியே//

மனைஞ்ச அருவாளினால்  எதையாவது அறுக்க முடியுமா? அறுத்தால் தான் அறுபடுமா? அறுத்து பாருங்கள், நசுங்கி பிழிந்து சிதைந்து சின்னாபின்னமாகிவிடும். அது வதை. அதே வதை தான் காதலிலும். அடிமனச அருவாமனையில் அறுக்கும் கொடுமைக்காரி அவள். இவனுக்கு வலிக்கிறது! வலிக்கிறது என்று குழறுகிறான்! அவன் துடிப்பதை இவள் ரசிக்கிறாள். ரசித்துக்கொண்டே பதில் சொல்கிறாள்,

//அருகம்புல்லுக்கு அறுக்கத் தெரியுமா ?

கொழந்த கொமரி நான் ஆமா

அயிர மீனுதான் கொக்க முழுங்குமா? அடுக்குமா ?//

இந்த வரிகளில்  அவள் மழலையாகி அணுங்கிறாள். அதிலும் ‘கொழந்த கொமரி’ என்ற செல்லக்கொஞ்சல்.

குமரியான பிறகு குழந்தையா?

“கட்டிலிடும் வயதில் தொட்டில் இட சொன்னால் சரியா சரியா?

கட்டிலில் இருவரும் குழந்தைகள் ஆனால் பிழையா பிழையா?”

காதலிகளுக்கே உரிய குணமது. தன்னவனிடம் தன்னை குழந்தையாக பாவிப்பது. குழந்தையாகி செல்லம் பொழிவதோடு குழந்தையின் ‘பிடிவாதத்தையும்’ குமரியின் விழிப்போடு பற்றிக்கொள்ளுவாள்.

என்னை கொலை செய்யிறியேடி ராட்சசி! துண்டு துண்டாக அறுத்து போடுறாயேடி கள்ளி! என்று இவன் குழைய, நானே ஒரு குழந்தை, எனக்கு எப்படி கொலை செய்ய தெரியும்? என்று வினவுகிறாள் அவள்.

“எனக்கு அப்படி எல்லாம் செய்யத் தெரியாது, போடா!”

          என்று காதல் பொழிகிறாள். அவளுக்கே தெரியும், காதலன் பேச்சு அப்படியே சத்தியம் என்றும். அவனை கொல்லும் கொலைகாரி தானேயென்றும்!! கொடுக்கி! அவனை வதைத்து ரசிப்பதில் அவளுக்கு சுகம். அவனுக்கு வலி!

அறுகம்புல் எப்படி அறுக்கும்?  அயிரை மீனை தானே கொக்கு முழுங்கும்! நீ எப்படி இப்படி முரணாக குற்றம் சொல்கிறாய்? என ‘செல்லாது செல்லாது’ என்று பொய்க் கோபத்துடன் தான் நிரபராதி என்பதாக வாதம் செய்கிறாள்.

//சூரியன ரெண்டு துண்டு செஞ்சு

கண்ணில் கொண்டவளோ

சந்திரன கள்ளுக்குள்ள ஊர வெச்ச

பெண்ணிவளோ

ராத்திரிய தட்டித்தட்டி கெட்டி செஞ்சி

மையிடவோ

மின்மினிய கன்னத்துல ஒட்ட வெச்சுக்

கைதட்டவோ//

அவளின் ராட்சசி அவதாரத்தில் தோற்று, கொஞ்சம் காமத்தை கலந்து ரசனை அம்புகளை எய்கிறான்.

சந்திரனே குளிர்ச்சியானது. அதை இன்னும் குளிர்ச்சியான கள்ளினுள் ஊற வைத்தால், குளிர்ச்சியிலேயே கூதல் அடிக்கும். அந்த கூதலில் நரம்புகளில் மின்சாரம் பாயும்.

அதே மின்பாய்ச்சலை காதலியிடமிருந்து உணர்கிறான் காதலன்.

//வெளிய பூத்து நீ உள்ள காய்க்கிற

கடலக்காடு நீ ஆமா//

கடலைத் தாவரங்களில் வெளியில் பூ  பூத்து மண்ணுக்குள் கடலை விளைவது போல, வெளியில் ராட்சசத்தனம் செய்தாலும், அவள் அறியாமல் அவளினுள்ளே பெருங்காதல் பெருக்கெடுக்கும். அதை அவள் வெளிப்படுத்தாமல் காதலனை கொல்வதனால் தான் அவள் ராட்சசி.

“கொடியோடும் சக்கரவள்ளி

தெரியாம கிழங்கு வைக்கும்

அது போல பொம்பள சாதி

அறியாம மனசு வைக்கும்”

எனை ஆளும் ராட்சசா! உயிரை நனைத்த ரட்சகா!  என்னை துருவித்துளைத்து உன் நினைவுகளை நிரப்பி, தூக்கத்தையே சொப்பனமாக்கிவிட்டாயே! இப்படி அவள் காதலில் தவித்தாலும் அவனிடம் தன்னை ஒப்புக்கொடுக்க முரண்டுபிடிப்பாள்.

//துருவி என்னத் தொலச்சிபுட்ட

தூக்கம் இப்ப தூரமய்யா

தலைக்கு வெச்சி நான் படுக்க

அழுக்கு வேட்டி தாருமய்யா

தூங்கும் தூக்கம் கனவா//

உனையே நினைத்து நெளியும் சிறு புழுவானாளே மாது! கொஞ்சமாகவேனும் தூங்க வேண்டுமே! உன்னை நினைத்து நினைத்து உருக, அதற்காகவே உயிர் வளர்க்க தூக்கம் வேண்டுமே! நீயோ பக்கத்தில்  இல்லை. உனது அழுக்கு வேட்டியையாவது தா! அதை தலையணையாக்கி நான் குட்டித்தூக்கம் போட!

அதென்ன அழுக்கு வேட்டி? காதலனை காலினிடையே உரசும் பூனையாய் சுத்தவிட்டு அவனை வதைத்து, அதை தூர நின்றே ரசித்த ராட்சசிக்கு காதல் பெருகி விட்டால்,

“சிந்தும் வேர்வை, தீர்த்தம் ஆகும்

சின்ன பார்வை மோட்ஷம் ஆகும்”

காதலனின் வியர்வை வாசம் அர்த்தரை தாண்டியது என்பாள். அழுக்கு வேட்டிக்குள் ஆண்மையின் சுவாசம் மேய்கிறது என்பாள். வியர்வை துளிகளின் ருசி கள்ளுண்டாலும் கிட்டாத போதை  என்பாள். ராட்சசிகள் ராட்டினம் காணும் இடம் அது.

//தேன் கூட்டப் பிச்சி பிச்சி

எச்சி வெக்க லட்சியமா//

தேன்கூடு போலவே வரிவரியாக கட்டம் கட்டமாக அழகாக இருக்கும் காதலி உதடு. அவள் எச்சிலே அது சுரக்கும் தேன். இவனுக்கோ அந்த தேன்கூட்டை ருசித்து பார்த்துவிட ஆசை!

“உன் பன்னீர் எச்சில் ருசியை அறியாமல் போவேனோ”

எச்சில்! ஈயாஆஆஆ! அதற்கு பன்னீர் சுவையா?

“காதல் ஒன்றும் சுத்தம் கித்தம் பார்ப்பதில்லையே

எச்சில் கூட புனிதம் ஆகுமே”

அவன் ஆசையை புரிந்து கொண்டவள்,  “லட்சியமா” என்று சேர்கிறாள். அதிலே ‘உன்னுடைய இலட்சியத்தை எப்போதடா அடைவாய்?’ என்ற அவளின் விரகதாபம் சேர்கிறது. அவனின் முத்தத்துக்கு  சம்மதத்தை சொல்லாமல் சொல்கிறாள்.

//பொண்ணு சொன்னா தலகீழா

ஒக்கிப்போட முடியுமா?

நான் நடக்கும் நிழலுக்குள்ள

நீ வசிக்க சம்மதமா?//

தான் சொன்னால் என்னவும் செய்ய தயாராகவே காதலன் இருக்கிறானென்று தெரிந்தும்,சர்வாதிகார ஆட்சி; செல்லச்சீண்டல்; அன்பு அதட்டல்;

கட்டளையை பிறப்பித்துவிட்டு, “சம்மதமா?” என்பதை  கூட சேர்த்து சர்வதிகாரத்திலும் தன்னை ஜனநாயகவாதி என்று நிறுவ முனைகிறாள்.  “என்னை வதைக்கும் ராட்சசி நீ” என்ற காதலனின் குற்றச்சாட்டிலிருந்து தப்பிப்பதற்கான உத்தி. அதிலும்  கண்ணாகவே இருக்கிறாள் சூனியக்காரி.

//நீராக நானிருந்தால் – உன்

நெத்தியில நானிறங்கி

கூரான உன் நெஞ்சில் – குதிச்சி

அங்க குடியிருப்பேன்

ஆணா வீணா போனேனே//

நீர் காணும் சொர்க்கம் கூட ஆணாக பிறந்த எனக்கு இல்லையே! நீர் செய்த மாதவத்தில் ஒரு துளி, அதனிலும் சிறிய துமியாக கூட இந்த மானிடனுக்கு வரம் இல்லையே! ஆணாக பிறந்ததே வீண்!!

“மழையின் துளிகள் அவளை நனைத்து

மார்பு கடந்து இறங்கும் பொழுது

முக்தி அடைந்து முத்துக்கள் ஆகின்றதே”

பொறாமை, ஆற்றாமை, சோகம், தவிப்பு, தத்தளிப்பு, கோபம், பிரிவு, கெஞ்சல், கொஞ்சல், அதிகாரம், ஆசை, மகிழ்ச்சி என்ற அத்தனை உணர்ச்சித் தந்திகள் மேல் ஏறி நின்றும் கிட்டார் மீட்டி மகிழ்பவள் அவள். அதன் பரிவதிர்வின் வலியால் பரிதவிப்பவன் இவன். ஆனால் ராட்சசி யட்சியாகி காதல் மடையை திறந்து விடும் போது, காதல்சாராய வெள்ளத்தில் மூழ்கும் போதைக்கு இவன் அடிமையாகிவிட்டான். அதனால் அவள் கொடுக்கும் வலி உயிரை பிழிந்தாலும்,

//உயிர உாிச்சு நீ கயிறு திாிக்கிற

சுகம் சுகமா//

காதல் பவித்திரமானது.

Related posts

சித்திராங்கதா – 32

Thumi2021

T-20 உலகக்கோப்பை 2021 அணிகளின் அலசல்

Thumi2021

ஈழச்சூழலியல் 19

Thumi2021

Leave a Comment