இதழ்-32

சித்திராங்கதா – 32

இறந்தகாலம் சரி! எதிர்காலம்?

சந்திர சேகர மாப்பாணரின் பாணன் விளக்கத்திற்கு மாற்று விளக்கத்தோடு எழுந்து நின்ற புலவர் கனகராயரால் சபை ஆச்சரியமயமானது.

‘முதலில் விளக்கத்தைக் கூறுங்கள் புலவரே” என்றான் சங்கிலியன்.

‘வேந்தே, சிங்கள தேசத்தினர் நல்லூரிற்கு வைத்த நாமங்களே ‘யாப்பநே”, ‘யாப்பா பட்டுநே” என்பனவாகும். நல்ல ஊர் என்பதே இவற்றின் பொருளாகும். இவையே நம்முன்னர் வழக்கத்தில் இணைந்து இன்று நம் யாழ்ப்பாணமானது. அதை விடுத்து இப்பாணன் கதையெல்லாம் பின்னாளில் புலவர்கள் உருவகித்ததே அன்றி உண்மையாகாது அரசே” என்று பகிரங்கமாய் கூறி அமர்ந்தார் புலவர் கனகராயர்.

கோபத்தோடு எழுந்த புலவர் சந்திர சேகர மாப்பாணர்
‘புலவரே, என்ன அபத்தம் உரைக்கிறீர் என்று அறிவீர்களா? செந்தமிழ் நாட்டின் திருநாமம் ஓர் அந்நிய மொழிச்சொல் என்று இப்பெருஞ் சபையில் உரைப்பதற்கு தைரியம் எங்ஙனம் பெற்றீர் புலவரே? என்ன ஆதாரம் கொண்டு இவ் அபத்தம் உரைத்தீர்? முடிந்தால் அதைக்கூறும் முதலில்!!!”
என்றார்.

“கூறுகிறேன் புலவரே, இந்தத் திருநாமமானது நம் இலக்கியங்களைக் காட்டிலும், சிங்கள இலக்கியங்களிலே முதன்முதலில் கையாளப்பட்டிருக்கிறது. இன்று நம் எல்லோராலும் இத்திருநாமமே கையாளப்படுகிறது. நாமம் முதன்முதலில் உருவான இடமன்றோ அதன் பிறப்புக் காரணம் என்ற உண்மையினை ஆதாரமாக்கியே கூறினேன். இதை ஏற்பதே நிதர்சனமாகும் புலவரே!”

புலவர் கனகராயர் கூறியவை அவையோர்க்கு சங்கடத்தை ஏற்படுத்தியது என்பது எல்லோர் முகங்களிலும் தெளிவாக தெரிந்தது. ஆனால் யாரும் எதிர்த்து பேச முடியாதவர்களாக அமர்ந்திருந்தனர். அந்த சமயத்தில் புலவர் தேவராசேந்திரக் கவிராயர் எழுந்தார்.

‘வேந்தே, விடைக்கொடி விண்ணைமுட்ட தமிழர் தாம் தலைநிமிர்ந்து ஆண்ட நம் யாழ்ப்பாண தேசநாமம் சிங்கள மொழித்திரிபு என்கிற புலவர் கனகராயரின் கருத்தை நான் வலுவாக எதிர்க்கிறேன். ‘யாழ்ப்பாணப் பட்டணம்” என்கிற திருநாமத்தின் மாற்று மொழித் திரிபே அவர்கள் இயம்பும் ‘யாப்பட்டுநே” ஆகுமேயன்றி அதன் திரிபு எம் இனிய யாழ்ப்பாணம் என்கிற நாமம் என்று கூறுவது அர்த்தமற்றதேயாகும். வெறும் சிங்கள இலக்கிய ஆதாரத்தைக் கொண்டு சபையில் இங்ஙனம் கூறுவது பொருத்தமற்றதாகும் வேந்தே. மேலும் நல்லூர் எனும் நகர் நாமத்தை மொழிமாற்றி பிறமொழியினர் கையாண்டனர் எனக்கூறுவதும் விந்தையாக இருக்கிறது. ‘பட்டினம்” என்பது எம் பழங்கால நற்றமிழ். ‘பட்டுநே” மருவி பட்டினம் ஆனதாய்க் கூறுவதும் இன்னும் வேடிக்கை அரசே!”
என்றார் புலவர் தேவராசேந்திரக் கவிராயர்.

‘அப்படியாயின், புலவர் சந்திர சேகர மாப்பாணர் கருத்தே உண்மையாகும் என்கிறீர்களா தேவராசேந்திரக் கவிராயரே?”

‘அது பற்றி நான் அறியேன் அரசே, தகுந்த ஆதாரத்தை அக்கருத்தும் கொண்டிருக்கவில்லை என்றே கருதுகிறேன். என் வேறான கருத்தொன்றையே நான் கூற விளைகிறேன்.”

‘ம்.. கூறுங்கள்!” என்றான் குழப்பான முகத்துடன் சங்கிலியன்.

‘அரசே, நம் தமிழருள் பழைய சாதியினரான பாணர் மூவகையினராவர். அவர்களுள் ஒரு பிரிவினரே யாழ்ப்பாணர் என்பதாகும். தமிழர் தம் பழைய இசைக்கருவிகளும் மூன்று. அவை யாழ், குழல், முழவு என்பனவே. இவற்றில் யாழ் மீட்டிப் பாடிடும் பாணரே யாழ்ப்பாணர் என்ற பெயரைப் பெற்றிருந்தனர். ஆகவே யாழ்ப்பாணம் என்பது ஒரு சாதிப்பெயரேயாகும் என்கிறேன். அவ்வாறே நோக்கினால் நம் தமிழ்ப்பெருங்காப்பியங்களிலும், இலக்கியங்களிலும் கூட யாழ்ப்பாணர் என்கிற சாதியினரைப் பற்றி நாம் கற்றறிய முடிகிறது.

இலங்கை வேந்தர் இராவணனுடைய சோதரர் விபீடணனிடம் யாழ் வாசிக்கும் யாழ்ப்பாணரே இலங்கையின் வடபுறத்து மணற்றிடரினை திருத்தி வளமாக்கினர் என்று கூறப்படுகிறது. அப்படி யாழ்ப்பாணர் எனும் சாதியின் ஒரு பகுதியினர் இலங்கையின் வடபகுதியில் வாழ்ந்த இடமே யாழ்ப்பாணம் என நாமம் கொண்டது. இதுவே என் கருத்தாகும் வேந்தே” என்று கூறி அமர்ந்தார் புலவர் தேவராசாந்திரக் கவிராயர்.

சபையில் ஒரு நீண்ட அமைதி நிலவியது. சிறிது நேரத்திற்குப்பின் புலவர் சந்திரசேகர மாப்பாணர் எழுந்தார்.

‘அரசே, புலவர் தேவராசேந்திரக் கவிராயர் கருத்தை ஏற்பது பொருத்தமற்றது என்றே நான் இன்னும் கருதுகிறேன். ஒரு சாதிப்பெயரே நம் இராச்சியத் திருநாமம் ஆனதென்பதை எங்ஙனம் ஏற்பது அரசே?”

தேவராசேந்திரக் கவிராயர் பதில் கூற எழுந்தார்.

‘புலவரே, ஒரு இராச்சியம் புகழ் மிளிர்ந்து ஒளிரும் போது அந்த இராச்சிய நாமம் தோன்றிய விதமும் புகழுக்குரியதாய் இருக்க வேண்டும் என்பதன் அவசியம் இல்லை. புகழுடைய முறையன்று என்றாலும் இது ஏற்கனவே நிகழ்ந்து விட்டது. நடந்து முடிந்த வரலாறு. இதை ஏற்க இயலாது என்பதற்காக பொய்க்கதைகளை புனைந்துரைத்து விதண்டாவாதம் மேற்கொள்வதில் அர்த்தம் என்ன புலவரே?”

‘எது விதண்டாவாதம் புலவரே, நான் கூறும் காரணமா விதண்டாவாதம்? அரசே என் காரணத்தை வலிமைப்படுத்தவும் தக்க சான்றினை முன்வைக்க தயாராகவே இருக்கிறேன். நான் கூறிய படி ஏலேல சிங்கனென்ற மன்னர் யாழ்பாடிக்கு கொடையாக வழங்கிய நிலமே யாழ்ப்பாணம் என்பதற்காதாரமாய் பண்டைய ஈழத்து இலக்கியப்பாடல் ஒன்றை இந்தப்பேரவையில் முன்வைக்கிறேன்.”

என்று கூறிப் பாடத் தொடங்கினார் புலவர் சந்திரசேகர மாப்பாணர்.

“……………………..நரை கோட்டிளங் கன்று 
நல் வளநாடு நயந்தளிப்பான் 
விரையூட்டு தார்ப் புயன்வெற்பீழ மன்னனெ தேவிரும்பிக் 
கரையோட்ட மாக மரக்கலம் 
போட்டுனைக் காணவந்தாற் 
திரை போட்டிருந்தனை யேலேல 
சிங்க சிகாமணியே..”

‘இதன் மேல் என்ன ஆதாரம் வேண்டும் கூறுங்கள் புலவரே” என்று கூறியபடி அமர்ந்தார் புலவர் சந்திரசேகர மாப்பாணர்.

அச்சமயத்தில் தலைமைப்புலவர் செண்பகமாப்பாணர் எழுந்தார்.

‘அரசே, சந்திரசேகர மாப்பாணர் இப்போது பாடிய பாடல் உண்மையில் ஆயிரமாண்டு காலப் பழையது. அப்பாடலின் பொருளும் அவருடைய கருத்தினையே வலியுறுத்துகிறது. நான் கற்றறிந்தது வரை கூட புலவர் சந்திரசேகர சேகர மாப்பாணர் கூறியதே தக்க காரணமாய் அமையக்கூடும் என்பதே என் புலமையின் வெளிச்சம் அரசே. யாழ்பாடிப் பரிசு பெற்ற நாடே இவ் யாழ்ப்பாணம் எனும் புண்ணிய பூமி எனக்கூறுவதே சாலப் பொருத்தமாகும் வேந்தே…” என்று கூறி அமர்ந்தார்.

‘அருமை புலவர்களே, அருமை! என் சந்தேகம் தீர்ந்த விதம் குறித்து மெய் சிலிர்க்கிறேன். ஈழவள நாட்டின் வல்லோர், நல்லோர் யாவருங் கூடிய இம் மகா சபையில் இச்சந்தேகம் அனைவருக்கும் தீர்ந்திருக்கும் என எண்ணுகையில் உள்ளம் புளகாங்கிதம் கொள்கிறது.”

என்று பூரிப்பு மிகுதியில் கூறிக்கொண்டிருந்த சங்கிலியன் சிறிது சிந்தனையில் ஆழ்ந்தவாறு மேலும் பேசத் தொடங்கினான்.

‘எம் இராச்சியத்தின் தோற்றம் குறித்து நாம் கௌரவம் கொள்கின்ற வேளையில் இதன் மறைவு பற்றியும் எண்ணங்கள் உள்ளத்தில் உதிக்கின்றன என்பதையும் மறுக்க முடியவில்லை.”

என்று கூறி அமைதியானான் சங்கிலியன். வன்னியர் விழா மணிமண்டபமும் அமைதியானது.
‘எம் இறந்தகாலம் புகழுடையதாய் இருக்கலாம். ஆனால் எதிர்காலம்?
ஒரு வேளை மறைவு என்பது நிச்சயமானால் அது நம் முன்னோர் தம் கௌரவத்தை சீரழித்து விடாமலாவது இருக்கவேண்டுமல்லவா?”

தொடர் சிந்தனைவயப்பட்டவனாக சங்கிலியன் கூறிக்கொண்டிருந்தான்.

அவையோர் அமைதியாய் தத்தம் எண்ண அலைக்கேற்ப அதை வெவ்வேறு விதமாக புரிந்து கொண்டிருந்தனர்.

அமைதி நீங்கும்…

Related posts

சூழல் தரமிழத்தலில் செல்வாக்கு செலுத்தும் சமூகக் காரணிகள் – 01

Thumi2021

தாயுமானவரின் சமய சமரசம்-02

Thumi2021

புதிர் 11 – கட்டங்களை தீர்ப்பவனுக்கே கல்யாணம்

Thumi2021

Leave a Comment