இதழ் 33

அவளுடன் ஒரு நாள் – 01

‘..தென்றல் வந்து தீண்டும் போது
என்ன வண்ணமோ மனசுல..”

‘..தென்றல் வந்து தீண்டும் போது..
என்ன வண்….”

‘ஒரு வழியா காலையிலேயே அடிச்சி உயிர வாங்கிட்டு இருந்த மொபைல எடுத்துப் பேசிட்டான். இல்லனா அது விடிய விடிய அடிக்கிறது தான். இந்த தடிமாடும் விடிய விடிய தூங்கிறது தான்.”

ஜீவனின் சித்தி அவனை திட்டிக்கொண்டே சமலறைக்குள் போக, அது காதில் விழுந்தும் விழாதது போல தன்பாட்டுக்கு பத்திரிகை படித்து கொண்டிருந்தார் ரவிச்சந்திரன்.

மனைவி ஜீவனை கையில் கொடுத்துவிட்டு இறந்து போகையில் ரவிச்சந்திரனுக்கு பெரிய வயது இல்லை. அதனால் ‘என்னதான் ஆம்பள அது இதுனாலும் வீட்டுல ஒரு பொம்பள வேணுமுல அப்பாவையும் புள்ளையையும் பாத்துக்க..’ என்று கூட நின்ற உறவுகள் அனைவருமே சேர்ந்து அவருக்கு இரண்டாவது திருமணம் செய்து வைத்தனர். திருமணமாகி வந்த அந்த சித்திதான் வசந்தி. அப்படியே காலப்போக்கில் வசந்தியும் ஜீவனை பெற்ற மகனாகவே எண்ணி வாழத்தொடங்கி விட்டாள். அவனும் சித்தி என்றால் உயிரையே விட்டுவிடுவான்.

இருவருமே ஏச்சும் பேச்சுமாய் இருப்பார்கள். பின்பு பாசமழையை பொழிந்து அள்ளிக் கட்டிக் கொள்வார்கள். மறுபடியும் யுத்தம் நடக்கும். பின்பு சத்தமில்லால் சேர்ந்துப்பார்கள். இதனால்த்தான் வசந்தி ஜீவனை என்ன சொன்னாலும் ரவிச்சந்திரன் இடையில் போவதே இல்லை. இன்றும் வழக்கம் போல வேதாளம் முருங்கை மரம் ஏறிப்போக, விக்கிரமாதித்தன் இன்னும் அறையை விட்டு மாடிப்படியிறங்கி வந்தபாடில்லை.

மணி பத்துக்கு பத்து நிமிடங்கள்.

‘..சித்தி எனக்கு கொஞ்சம் வேல இருக்கு. நான் வெளியவே சாப்பிட்டுக்கிறன்..’

மாடியிலிருந்து இறங்கியபடியே சொன்னவன் பைக் சாவியையும் எடுத்துக் கொண்டு வெளியே போனான்.

“என்னங்க?.. புள்ளைய நிக்க சொல்லுங்க..”
‘சாப்பிட சொல்லுங்க..”

‘டேய்.. நில்லுடா..”

வசந்தி தோசைக் கரண்டியும் கையுமாக வெளியே வருவதற்குள் ஜீவன் தன் வண்டியிலேறி சிட்டாய் பறந்திருந்தான்.

ரவிச்சந்திரனென்றால் பத்திரிகையே கதியென்று இருக்க, அவரை விறைப்பாய் ஒரு பார்வை பார்த்துவிட்டு உள்ளே போனாள் வசந்தி.

சும்மா ஒரு மனுஷன் பத்திரிகை படிச்சிட்டு இருந்தது ஒரு தப்பா??? என்று ஆனது ரவிச்சந்திரனுக்கு.

வீட்டைவிட்டு கிளம்பிய ஜீவனின் வண்டி நேராகப் போனது வைத்தியசாலைக்குத்தான்.

பார்க்கிங் ஏரியாவில் தன் வண்டியை நிறுத்திவிட்டு அவசர அவசரமாக வண்டிச்சாவியை கூட எடுக்காமல் இரண்டாவது மாடிக்கு விரைந்தான். ஆம், இரண்டாவது மாடியில் நான்காவது அறை.

மூச்சு வாங்க வாங்க அறைக்கதவை திறந்து உள்ளே போனால், அங்கு அவள் இருக்கவில்லை.

வெளியே சென்று பார்த்த பொழுது, ஒரு நேர்ஸ் வந்துகொண்டிருந்தார், “நேர்ஸ் அந்த அறையில் இருந்த..?”

“ஓ.. அவங்களா? அவங்கள ஐ.சி.யூ வுக்கு மாத்திட்டாங்க.. மூணாவது மாடியில இரண்டாவது..”

“தாங்ஸ்..”

என்ன நினைத்தானோ என்னவோ அந்த நேர்ஸ் கூறியதை முழுமையாகக்கூட நின்று கேட்கவில்லை. தாங்ஸ் என்ற ஒற்றை வார்த்தையில் விடைபெற்றுக்கொண்டு மூன்றாவது மாடிக்கு வேக வேகமாக ஓடினான்.

இது என்ன பெரிய ஓட்டம். அவளை சந்தித்த முதல் தடவையிலேயே அவள் அவனை என்னமாக ஓடவிட்டிருந்தாள்.

சரியாக ஒரு ஆறு மாதங்களுக்கு முன்பு இருவருடைய வீடுகளிலும் திருமண பேச்சுவார்த்தைகள் நடந்துகொண்டிருக்க, பெண்ணையும் பையனையும் வெளியில் ஏதேனும் ஒரு இடத்தில் சந்திக்க வைத்து பேச வைப்பதுதான் திட்டமாக இருந்தது.

அன்று காலை இதே போல ஒரு பத்து மணி இருக்கும். ஜீவனை பூங்காவிற்கு அருகிலுள்ள மைதானத்திற்கு வருமாறு கைப்பேசியின் மறுபக்கம் பேசிய பெண்குரல் சொல்லவும், அவனும் அங்கு போயிருந்தான். ஏற்கனவே போட்டோவில் அவளை பார்த்திருந்தாலும் நேரில் பார்ப்பது போல வராது அல்லவா? அதனால் பல கனவுகளுடன் அவன் மைதானத்திற்கு சென்று அவள் வரும் வரை காத்துக்கொண்டிருந்தான்.

தூரத்தில் ஒரு பெண் நடந்து வருவது தெரியவும், அது அவள்தான் என்று எண்ணிக்கொண்டே, போட்டோவில் இருந்த அதே அழகிய முகம்தான் தூரத்தில் கொஞ்சம் தெளிவில்லாமல் தெரிகின்றது என்று தன்னைத்தானே சமாதானப்படுத்திக்கொண்டு, வருவது அதே பெண்தான் என்று அவள் அருகில் நெருங்கும் வரை அவளையே பார்த்துக்கொண்டிருந்தான். வந்தவள் அவனைப்பார்த்து மெல்லியதாய் ஒரு புன்சிரிப்பு சிரித்தாள். அப்படியே அருகிலிருந்த இருக்கைகளை ஜீவன் காட்டவும், இருவரும் போய் அமர்ந்துகொண்டார்கள்.

“ஹா..”

ஜீவன் பேச வாயைத் திறந்ததுதான் தாமதம்.

“என்ன ரேட்டு?”
அவளிடமிருந்து கொஞ்சம்கூட இப்படியொரு கேள்வியை ஜீவன் எதிர்பார்க்கவில்லை. தேன் ஒழுகும் பாணியில் ஏதாவது அழகாக பேசுவாள் என்று பார்த்தால், என்ன இந்தப்பெண் இப்படி கேட்கிறாள் என்று இருந்தது ஜீவனுக்கு. அவன் புரியாமல் மறுபடியும் கேட்டான்.

“என்ன சொன்னீங்க?”

“என்ன ரேட்டு தருவீங்கனு கேட்டன்”

திடீரென இருக்கையை விட்டு எழுந்த ஜீவன், வருங்கால மனைவி என்று நினைத்துக் கொண்டு வேறு ஒரு பெண்ணிடம் வந்து சிக்கிக்கொண்டோமே என்று எண்ணிக்கொண்டே, “சோரி தங்கச்சி” என்றுவிட்டு தன் வண்டியை எடுத்துக்கொண்டு அந்த பெண் பேசுவது என்ன என்பதை முழுமையாகக்கூட கேட்காமல் ஓடியே போய்விட்டான். வீட்டுக்கு போன பின்பு, மொத்த குடும்பமும் விழுந்து விழுந்து சிரித்த பின்னால்த்தான் தெரிந்தது அதெல்லாம் நாடகம் என்றும் தன்னை நன்றாக ஓட வைத்திருக்கிறாள் என்றும். அந்த சம்பவத்திற்கு பிறகு அவனை கண்டு பேசுகின்ற அனைவரும் ‘சோரி தங்கச்சி’, ‘சோரி தங்கச்சி’ என்று கூறி கேலி செய்யத் தொடங்கிவிட்டார்கள்.

அன்று என்னை எப்படி ஓட வைத்தாள். அன்று மட்டுமா? இன்றும்தான். ஆனால் அவள் மட்டும் அசைவற்றுப்போய் கிடக்கிறாளே. இதெல்லாம் வேணாம், பேசாம எழுந்திருச்சி எங்கூடவே வந்துருடி.. என்று அவன் நூறு இல்லை ஆயிரம் இல்லை லட்சம் முறை சொல்லியிருப்பான். பிடிவாதக்காரி அவள், ஒரு முறை கூட எழுந்திருக்கவே இல்லையே.

கண்களில் சிந்திய கண்ணீரை துடைத்துக்கொண்டே மூன்றாவது மாடியின் இரண்டாவது அறைக்குள் நுழைந்தான். அங்குதான் இருந்தது ஜீவனுடைய ஜீவன்.

அவனை கண்டதும் எழுந்துகொள்ள முற்பட்டாள். அவன் வேண்டாமென கண்ணசைத்த பின், அவள் அசையாமல் மறுபடியும் படுத்துக்கொண்டாள். டாக்டர் நேர்ஸ் என்று யாரும் இருக்கவில்லை. ஜீவன் அறைக்கதவை சாத்திவிட்டு கட்டிலை நோக்கி நடந்துவந்தான்.
அழகான மெல்லிய இரு வெண்கைகள். அவ்விரண்டில் ஒன்றினை ஊசியால் துளைத்து வயரினால் சேலையின் போட்டிருந்தார்கள் உயிர்ப்பாய் இருக்க வேண்டுமென்று. அந்த மெல்லிய கைகளில் தானே வண்ண வண்ண கண்ணாடி வளையல்களை போட்டுக்கொண்டு, ஜீவனை நோக்கி எட்டி எட்டி பார்த்து, ‘அழகா இருக்கா?” ‘அழகா இருக்கா?” என்று கேட்டாள். அவன் ஆம் என்று தலையசைத்ததும் அதே இரண்டு கைகளை எடுத்து வெட்கத்தை மறைப்பதற்காக அவளுடைய முகத்தில் ஒற்றிகொண்டாளே. ஒவ்வொரு நினைவுகளும் வெந்த புண்ணில் பாய்ந்த வேல்களாக நினைவில் வந்துபோயின.

செய்து வைத்தாற்போல கூர் மூக்கு அவளுக்கு. இளஞ் சிவப்பு மெல்லிதழ்கள் இரண்டு.அவற்றைச்சுற்றியும் வயரினால் இறுகக்கட்டி தடையின்றி சுவாசிப்பதற்காக ஒக்சிஜன் போட்டிருந்தார்கள் . ஜீவன் ஏதாவது தவறு செய்தான் என்று இல்லை, செய்ய நினைத்தான் என்றால் போதும், அந்த கூர்மூக்கும், மெல்லிதழ்களும் இரத்தச்சிவப்பாய் மாறிப்போகும். அப்படி திட்டுவாள் ஜீவனை. இன்று இந்த கொடுமையான நிஜத்திற்கு முன்னால் அந்த நினைவுகளை மட்டும் வைத்துக்கொண்டு அவன் என்ன செய்யப்போகின்றானோ?

அடுத்த இதழில் பார்க்கலாம்…

Related posts

சாபமா என் சபதம் – 02

Thumi2021

புதிர் 12 – தேடியது கிடைக்க தேனீக்களுக்கு உதவுங்கள்!

Thumi2021

Covid-19 நோய்த்தொற்று பரவல் காலப்பகுதியில் வாய் சுகாதாரத்தினை பேணுதல்

Thumi2021

Leave a Comment