இதழ் 33

தற்சார்பு வாழ்வியலை நோக்கி காடை வளர்ப்பு

அறிமுகம்

சிறியது முதல் நடுத்தர அளவிலான பறவைகளாகிய காடைகள், கோழிகளின் உயிரியல் குடும்பமான Phasianidae குடும்பத்தினைச் சேர்ந்தவையாகும்.

காடைகளை பண்ணைகளில் வளர்க்கும் முறையானது 1920 இல் ஜப்பானில் ஆரம்பிக்கப்பட்டு 1930 களில் அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. எனினும் காடை வளர்ப்பானது அண்மைக்காலமாகவே இலங்கையில் குறிப்பாக வடபகுதியில் பிரபலமாகி வருகிறது. வீடுகளிலும் பண்ணைகளிலும் பொதுவாக ஜப்பானிய காடைகளே (Coturnix coturnix japanica) வளர்க்கப்படுகின்றன.

தற்சார்பு பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் காடைகள் இறைச்சி மற்றும் முட்டை தேவைகளை பூர்த்தி செய்கின்றன. கோழி வளர்ப்பினைப் போன்று அதிகளவு முதலீடு இவற்றுக்கு தேவையில்லை. மிகக் குறைந்த இடத்தில் அதிகளவு காடைகளை வளர்க்க முடியும்.

காடைகளுக்கு நோய் எதிர்ப்புசக்தி மிக அதிகமாக இருப்பதனால் தடுப்பூசிகள் அளிக்க வேண்டிய அவசியமும் இல்லை. காடைகள் பொதுவாக 35 நாட்களில் (5 – 6 வாரங்கள்) இறைச்சிக்குத் தயராகிவிடும். இவற்றின் நிறை 150 கிராம் தொடக்கம் 200 கிராம் வரை காணப்படும். பொதுவாக 48 நாட்களில் முட்டையிட ஆரம்பித்துவிடும்.

காடைகள் அடைகாக்கும் காலம் 18 நாட்களாக இருக்கும் அதேவேளை ஒருநாள் குஞ்சின் எடை 8 -10 கிராம் வரை காணப்படும். காடை முதல் வருடத்தில் சராசரியாக 250 – 300 முட்டைகள் வரை இடும். எனினும் ஒருவருடத்தின் பின் முட்டை உற்பத்தி வீதம் குறைவடைந்துவிடும். காடைகளின் சராசரி ஆயுட்காலம் 2 – 2 1/2 வருடங்களாகும்.

குஞ்சுப் பராமரிப்பு

காடைக்குஞ்சுகளுக்கு முதல் 15 நாட்களுக்கு வெப்பம் வழங்க வேண்டும். வெப்பத்தை வழங்க வட்ட வடிவான அமைப்பை (Brooding ring) தயார் செய்து 60 காடைக்குஞ்சுகளுக்கு 1 மின்குமிழ் என்ற விகிதத்தில் வழங்க வேண்டும். மின்குமிழ் ஒரு அடி உயரத்தில் பொருத்தப்பட வேண்டும்.

குஞ்சுகளின் நடத்தை வெப்பநிலையை சரிசெய்ய சிறந்த வழிகாட்டியாகும். மின்குமிழைச் சுற்றி குஞ்சுகள் நெருக்கமாக காணப்படுவது வெப்பநிலை குறைவாக காணப்படுவதையும் குஞ்சுகள் அதிக தொலைவில் விலகிக் காணப்படுவது அதிகரித்த வெப்பநிலையையும் குறிக்கிறது. குஞ்சுகள் சீராக பரந்து காணப்படும் வகையில் வெப்பம் வழங்கப்பட வேண்டும்

குஞ்சுகளை வாங்கி வந்தவுடன் அவற்றுக்கு நாட்டுச் சர்க்கரை அல்லது குளுக்கோஸ் கலந்த தண்ணீர் வைப்பது சிறந்தது. தண்ணீர் வைக்கும் பாத்திரங்களில் கூழாங்கற்கள் அல்லது சிறுகற்கள் போட்டு வைப்பதன் மூலம் குஞ்சுகள் நீரில் மூழ்கி இறப்பதை தடுக்க முடியும்.

இவற்றின் சராசரி இறப்புவீதம் 6 -7 % ஆகும். காடை வளர்ப்பில் முதல் இரண்டு வாரங்களே அதிக கவனம் செலுத்த வேண்டும்.

காடை வளர்ப்பு முறைகள்

காடைகள் ஆள்கூள முறை மற்றும் கூண்டு முறைகளில் வளர்க்கப்படுகின்றன.

ஆள்கூள முறை என்பது தரையில் இருந்து 2 அங்குலம் மணல் கொட்டி அதற்கு மேல் தண்ணீர் உறிஞ்சக்கூடிய தேங்காய் நார், மரத்தூள் போன்றவற்றை 2 அங்குலம் போட்டு அதற்குமேல் காடைகளை வளர்க்கும் முறையாகும்.

கூண்டு முறையில் காடைகளுக்கு என்று பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட கூண்டுகளில் காடைகள் வளர்க்கப்படுகின்றன.

ஒரு சதுர அடி பரப்பு 4 – 6 காடைகளுக்கு போதுமானது. எனவே 100 சதுர அடி பரப்பில் 500 காடைகள் வரை வளர்க்க முடியும்.

காடைகளுக்கான தீவனம்

காடைகள் இயற்கையாக விதைகள், தாணியங்கள் மற்றும் பூச்சிகள் என்பவற்றை உண்டு வாழும்.

அசோலா மற்றும் முருங்கைக் கீரை என்பவற்றை வழங்குவதன் மூலம் தீவனச் செலவைக் குறைக்க முடியும்.

காடைத் தீவனமானது 24% கச்சா புரதத்தையும் (Crude protein) 2400 kcal/kg வளர்சிதை மாற்ற எரிசக்தியையும் (Metabolic energy) கொண்டிருக்க வேண்டுமென தேசிய ஆய்வு கவுன்சில் (National research council) பரிந்துரை செய்துள்ளது.

தீவனத் தொட்டி 50 காடைகளுக்கு 1 என்ற விகிதத்தில் வழங்குவது போதுமானது.

சமீபத்திய ஆய்வுகளின் படி இஞ்சி மற்றும் பூண்டு போன்றவற்றை தீவனச் சேர்க்கைகளாக தீவனத்தில் சேர்ப்பது காடைகளின் வளர்ச்சி மற்றும் அவற்றின் உடலின் தீவன மாற்று விகிதம் என்பவற்றை அதிகரிக்கும் எனக் கண்டறியப்பட்டுள்ளது.

காடை முட்டை

காடை முட்டைகள் சிறிதாகவும் 7 – 15 கிராம் நிறையையும் கொண்டிருக்கும்.

பொதுவாக காடைகள் மாலை நேரத்திலேயே முட்டடையிடும்.

காடை முட்டை நம் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றது.

கோழி முட்டையில் 11% புரதம் காணப்படும் அதேவேளை காடை முட்டையில் 13% புரதம் காணப்படுகிறது.

காடை முட்டை 140% விற்றமின் பி யினை கொண்டுள்ள அதேவளை கோழி முட்டை 50% பி மட்டுமே கொண்டுள்ளது.

இரும்பு, பொட்டாசியம் என்பன கோழி முட்டையை விட 5 மடங்கு அதிகமாக காடை முட்டையில் காணப்படுகின்றன.

கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு ஆரோக்கியத்தில் உள்ள குறைபாட்டினை இந்த காடை முட்டையின் மூலம் தவிர்க்கலாம். கருவில் வளரும் குழந்தையின் எலும்பினை உறுதியாக்க காடை முட்டையில் உள்ள சத்துகள் உதவுகின்றது. 

காடை முட்டைகள் நம் உடலில் ஒவ்வாமைப் பிரச்சனைகள் வராமல் தடுக்கின்றது. நரம்பு மண்டலத்தை சீராக்குதல், ஞாபக சக்தியை அதிகரித்தல், ஹீமோகுளோபின் அளவை அதிகரித்தல், நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுவடையச் செய்தல் போன்ற பல்வேறு நன்மைகள் காடை முட்டைகளை உட்கொள்வதால் கிடைக்கின்றன.

அத்துடன் காசநோய், ஆஸ்துமா, நீரிழிவு போன்றன வராமல் தடுக்கின்றது.

காடை முட்டையில் பல்வேறு புற்றுநோய்களின் வளர்ச்சியை தடுக்கும் கார்சினோஜெனிக் பொருட்கள் அதிகமாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

காடை இறைச்சி

காடை இறைச்சி உற்பத்தியானது விலங்குப்புரத மூலங்களைப் பல்வகைப்படுத்துவதற்கும், நுகர்வோருக்கு புதிய சுவையைக் கொண்டுவருவதற்கும், இறைச்சி உற்பத்தியை மேம்படுத்துவதற்கும் ஒரு புதிய வழியாகும்.

அதேவேளையில் காடை இறைச்சியானது பிராய்லருக்கு (Broiler) சிறந்த மாற்றீடாக கருதப்படுகிறது. சில ஆய்வுகளின் மூலம் காடை இறைச்சியின் தரமானது கோழி இறைச்சியை விட சிறந்ததாக அறியப்பட்டுள்ளது.

குறைந்த கொழுப்பை உடைய உணவாக காடை இறைச்சி பரிந்துரைக்கப்படுகிறது. அவற்றின் மெல்லிய தோல் மற்றும் அதன் திசுக்களுக்கு இடையில் குறைந்த அளவு கொழுப்பு சேமிக்கப்படுவதால் இவை குறைந்த அளவு கொழுப்பும் கொலஸ்ரோலும் கொண்டுள்ளன.

 “கால் ஆடு, அரை முயல், முக்கால் உடும்பு, முழு காடை” என்பது முன்னோர் கூற்று. அதவாது ஒரு காடையானது ஆட்டு இறைச்சியில் உள்ள சத்தின் கால்ப் பங்கும் முயல் இறைச்சியின் சத்தின் அரைப் பங்கும் உடும்பு இறைச்சியின் சத்தின் முக்கால் பங்கும் கொண்டுள்ளது எனக் கூறியுள்ளனர்.

இவ்வாறு பல்வேறு சத்துக்களை கொண்டுள்ள காடை மருத்துவக்குணம் மிக்க உணவாகவும் திகழ்கிறது.

Related posts

இன்பமே உந்தன் பேர் பெண்மையோ!

Thumi2021

அவளுடன் ஒரு நாள் – 01

Thumi2021

சிங்ககிரித்தலைவன் – 31

Thumi2021

Leave a Comment