காதல் மனிதனுக்கு மட்டும் தானா?
வானம் மனிதனுக்கு மட்டும் தானா?
இந்த இரண்டு கேள்விகளில்
இரண்டு ஜீவன்களின்
இரண்டு ஜென்மக் கதை இருக்கிறது.
மூளை சம்பந்தப்பட்டதா காதல்?
மூளையின் மூலை கணக்கிடும் முன்பே
இதயங்கள் சங்கமிக்கும் இன்பம் காதல்!
காதலுக்கு மூளை தேவையில்லை! இதயம் போதும்! இரத்தம் ஓடுகிற எல்லாவற்றுக்கும் பம்பியாக இருதயம் இருப்பதாக மருத்துவம் சொல்கிறது. இதயம் இருப்பவை எல்லாம் காதலிக்கும். மாதவன் மட்டுமல்ல மாடும் காதலிக்கும். கீரன் மட்டுமல்ல கீரியும் காதலிக்கும். கோகிலா மட்டுமல்ல கோழியும் காதலிக்கும். மதுரா மட்டுமல்ல மயிலும் காதலிக்கும். ஆம்! இந்த புளுனிகளும் காதலித்தன.
மனிதர்கள் காதலித்தால் கற்பனையில்த்தான் வானத்தில் பறப்பார்கள். இந்த புளுனிகள் நிஜமாகவே பறந்தன. ஜோடியாகப் பறந்தன. எத்தனை கண்டங்கள் தாண்டின? எத்தனை சமுத்திரங்கள் கடந்தன? எதுவும் தெரியாது. பூமி அவ்வளவு சிறிய உருண்டையா? பல முறை சுற்றி வந்துவிட்டன. ஆனால் இவை கதைப்பதற்கு இன்னும் நிறையக் கதை இருக்கிறது. பறந்து பறந்து கதைப்பது இருவருக்குமே பிடித்தது. கதைத்துக் கொண்டே இருந்தன. பறந்து கொண்டே இருந்தன. சிறகுகள் வலிக்கவில்லை. எல்லையற்ற சந்தோசத்தில் இருக்கும் ஒருவருக்கு ஒரு மிளகாயை தின்ன கொடுத்துப் பாருங்கள். அதன் காரம் அவருக்கு தெரியாது.
இவை இளம் காதலர்கள். இவர்களைப் போலவே இவர்கள் காதலுக்கும் வயது குறைவு. ஆனால் கால காலமாக காதலித்ததாக ஏதோ ஒரு உணர்வு. ஒருவரை ஒருவர் விட்டுவிடக்கூடாது என்று உறுதியாய் அந்த உணர்வு சொல்லிக் கொண்டேயிருந்தது.
ஒரு நீண்ட மலைத் தொடரில் ஒற்றை மரமாய் பட்ட மரம் ஒன்று தனித்திருந்தது. அதுவரை களை தெரியாத காதல் பறவைகளுக்கு அந்த மரத்தை அண்மிக்கையில் களைத்தது; வியர்த்தது. பட்ட மரமாய் இருந்தாலும் பலரையும் பார்த்த மரமாய் இருந்திருக்க வேண்டும் என்று பல நூறு வருட பழமையை அந்த மரத்தின் பரந்த தண்டு சொல்லி நின்றது. நீண்டிருந்த ஒரு கொப்பில் இரு பறவைகளும் சற்றே இளைப்பாறின. என்ன அதிசயம்? காற்றைக் கிழித்து தொடர்ச்சியாக பறந்த போது வராத களைப்பு இப்போது அந்த கிளையில் இளைப்பாறும் போது மேலும் அதிகரிக்கிறுது. மாலை மங்கும் நேரம். உச்சி வெயில் இல்லை. ஆனால் பயங்கர வெம்மையை உணர்ந்தன பறவைகள்.
அந்த பறவைகளுக்கு அதுவரை உணராத ஒரு அசௌகரியத்தை அந்த மரம் அளித்தது. ஏன் அவ்வாறு நடக்க வேண்டும்? காரணங்கள் இல்லாமல் இந்த பூமியில் காற்றுக்கூட வீசுவதில்லை. காதலர்கள் இந்த காய்ந்த மரத்தில் காய்வதற்கும் ஒரு காரணம் இருக்கிறது. இந்த பறவைகள் புதுக் காதலர்கள் என்றா நினைக்கிறீர்கள்? காலங்கடந்த தலைமுறை தாண்டிய காதல் இவர்களுடையது என்றால் நம்ப முடிகிறதா?
ஆம். அதோ அந்த பட்ட மரக் கொப்பை சற்றே ஆழமாக கவனியுங்கள். அந்த புள்ளினங்களுக்கு அருகில் ஒரு கவண் தொங்கிக் கொண்டு இருக்கிறது. வண்ணத்துப் பூச்சி விளைவு கேள்விப்பட்டிருப்பீர்கள். அதுபோல இந்த கவணுக்கும் அந்த புளுனிகளுக்கும் அவை இரண்டும் இருக்கும் மரத்திற்கும் சம்பந்தம் இருக்கிறது.
பல வருடங்களுக்கு முன் நாட்டு மருத்துவன் ஒருவனுக்கு ஒரு லேகியம் செய்வதற்காக புளுனியின் குருதி தேவைப்பட்டிருக்கிறது. கையில் கவணுடன் காடு மேடெல்லாம் திரிந்தவனுக்கு தேடியது கிடைக்கவில்லை. ஒரு பெரிய மருத மர நிழலில் வந்து இளைப்பாறினான். சற்றே கண்ணயர்ந்து தூங்கிவிட்டவனை பறவைகளின் சத்தம் தட்டி எழுப்பியது. அட! அது அவன் தேடிவந்த புளுனிகளின் சத்தம். ஒற்றை புளுனியைத் தேடிவந்தவனுக்கு இரட்டைப் புளுனிகள் தென்பட்டன.
ஜோடிப் புளுனிகள் காதலில் தம்மை மறந்து மகிழ்ந்திருந்த போது இவன் மறைந்திருந்து கவண் மூலம் தாக்கினான்.
ஈட்டியாய் சீறி வந்த கல் ஆண் பறவையின் கழுத்தை பதம் பார்த்தது. நிலை குலைந்துவிட்டன பறவைகள்! கூரான கல் என்பதால் சிறிது வினாடிகளிலையே பறவை இறந்துபோனது. காதலி அருகிலிருக்கும் போதே இறந்த அந்த ஏக்கம் அதன் கண்களில் தெரிந்தது. மருத மர இலைகள் காதலுக்கு மரியாதை செய்வது போல இறந்த குருவி கீழே விழாதவாறு ஏந்தி வைத்திருந்தன. அதுவரை பேசிச் சிரித்த தன் துணை பேச்சற்று இறந்து கிடப்பது கண்டு கவலைப்பட்டது பெண் பறவை. பொதுவாக ஒரு பறவைக்கு கல் எறிந்தால் அடுத்த பறவைகள் பறந்து விடும். ஆனால் இந்த பெண் பட்சி பறக்காமல் தன் துணையை பார்த்து கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தது. மரத்தில் ஏறிய மருத்துவன் இரத்த வெள்ளத்தில் கிடந்த ஆண் குருவியையும், கண்ணீர் வெள்ளத்தில் கிடந்த பெண் குருவியையும் ஒருசேர எடுத்துச் சென்றான். புளுனி கிடைத்த சந்தோசத்தில் தன் ஆயுதத்தை அந்த மரக் கொப்பிலேயே விட்டுச் சென்றுவிட்டான்.
தன்னிடம் அடைக்கலம் தேடிவந்த இரு உயிர்களை காக்க முடியாத மரமாகி விட்டேனே என்ற வேதனையில் மருத மரம் மெல்ல மெல்ல வாடத் தொடங்கியது. குருவியின் உயிர் பறித்த கருவியும் காதலைப் பிரித்த கவலையில் வருந்திக் கொண்டது. இனி ஒரு உயிரைப் பறிக்கக் கூடாதென்பதில் உறுதியாக இருந்தது. அந்த மருத மரத்திலேயே தங்கிவிட்டது.
அங்கே மரித்த அந்த காதலுக்கு மருத மரமும் கவணும் தான் சாட்சி. காலங் கடந்து இன்று அவை அதே புள்ளினங்களின் காட்சியை காண்கின்றன. எய்பவன் இல்லை என்றால் கல்லுக்கும் பயமில்லை, கருவிக்கும் பயமில்லை. கவணுக்கு புரிந்தது. தான் வெறும் கருவியே அன்றி கர்த்தா அல்ல என்பது. மீண்டும் அந்த காதல் பட்சிகளை கண்ட சந்தோசத்தால் சாப விமோசனம் பெற்றதாக உணர்ந்தன மரமும் கவணும். இதயமுள்ளவை தான் காதலிக்கும் என்றேன் அல்லவா? மன்னிக்க வேண்டும்! அந்த வசனத்தை மாற்றுங்கள். இரக்கமுள்ளவை யாவும் காதலிக்கும். இந்த கவணும் அந்த மரமும் காதலை காதலிக்கிறதே!
ஆரம்பத்தில் கேட்கப்பட்ட கேள்விகளை மீண்டும் கேட்கிறேன்.
காதல் மனிதனுக்கு மட்டும் தானா?
இல்லை. உயிரற்ற கவணும் காதலுக்காக வருந்துமென்றால் காதல் யாவருக்குமானது.
வானம் மனிதனுக்கு மட்டும் தானா?
இல்லை. மண்ணில் ஆசை கொண்டவனுக்கு ஆகாசத்தில் ஆசை அவனுக்கு அவ்வளவாக இல்லை என்றுதான் நினைத்திருந்தோம். நிலத்தை எல்லையாக பிரித்து கூறு போடும் எவனும் இதுவரை ஆகாசத்தில் வேலி போடவில்லை. ஆனால் ஆகாசத்தில் கல்லெறிந்து இந்த பறவைகளை கொன்றது முறையா? ஆகாயம் என்ன இவன் அப்பன் வீட்டு சொத்தா?
மனிதர்களே! சிந்தியுங்கள். பூமி யாவருக்குமானது. காதலும் தான்! வாழ்வது உரிமை! காதலிப்பதும் உரிமை! உரிமையை பறிக்காதீர்கள்!
நடந்தவை, நடப்பவை ஏதும் அறியாத அந்த இளம் பட்சிகள் மீண்டும் பறப்பதற்கு ஆயத்தமாகின.