இதழ் 33

இன்பமே உந்தன் பேர் பெண்மையோ!

“கல்யாண தேன் நிலா காய்ச்சாத பால்நிலா

நீதானே வான் நிலா என்னோடு வா நிலா

தேயாத வெண்ணிலா -உன்

காதல் கண்ணிலா

ஆகாயம் மண்ணிலா”

‘லா நிலா லா’ என்று முடியும் காலத்தால் அழியாத காதல் சங்கீதத்தை எழுதிய புலவன் அவன். சங்கக்கவிகளின் தொடர்ச்சியாக தேன் ஒழுகும் வரிகளுக்கு சொந்தக்காரன். புரட்சி பாடல்களிலும் தடம் பதித்து பின்னர் காதல் பாடல்களில் காமரசம் சொட்ட சொட்ட  கவி புனைந்த  கவிஞன். வரிகளில் புதுமையும் வார்த்தைகளில் சந்தமும் தோய்ந்து எழுதிய ஜித்தன். தமிழின் மேல் காதல் கொண்ட புலமைப்பித்தன்.

lyricist Pulamai pithan lifesupport hospital press release

மண்ணுலகம் விட்டு மறைந்தாலும், காற்றுடன் கலந்து கலகலக்கும் அவன் பாடல்கள் இசை அஞ்சலி செலுத்துகின்றன.

*****

காலங்கள் மாறினாலும் காதலை கொண்டாடுவது நித்தியமானது. ஒவ்வொரு காலகட்டத்திலும் உவமைகள் மாறினாலும் உணர்வுகள் ஒன்று தான். அதிலே ‘தமிழ்’ என்ற சொல்லையை உவமையாக்கி கவி புனைவது தமிழுக்கு செழுமை; காதலுக்கு இனிமை. காதலுடன் தமிழை கலப்பதும் தமிழுடன் காதலை கலப்பதும் கவியின் பெருமை. அப்படியே காதலின் அரும்பு நிலை.

“தத்தித்தோம் வித்தைகள் கற்றிட

தத்தைகள் சொன்னது தத்தித்தோம்

தித்தித்தோம் தத்தைகள் சொன்னது

முத்தமிழ் என்றுளம் தித்தித்தோம்”

கிளிகளின் பேச்சிலே முத்தமிழ் சிந்துவதாய் அவன் கூற, கிளிப்பேச்சுக்காரி பாடுகிறாள்;

“முத்தமிழ் கவியே வருக

முக்கனிச் சுவையே வருக”

என்று காதலனை முத்தமிழ் கவிதை என்று அழைக்கிறாள். இவனோ,

“சங்கம் கொள்ளும் தமிழ் காதல் சிந்து

கொஞ்சம் கெஞ்சும் வண்ணம் ஒரு ராகம் சிந்து”

சங்கத்தமிழ் போல நீ பேசு என்று குழைகிறான். இன்னும் மேலே போய்,

“சங்கத்தில் பாடாத கவிதை உன்

அங்கத்தில் யார் தந்தது

சந்தத்தில் மாறாத நடையோடு என்

முன்னே யார் வந்தது”

அவள் உடல் சங்க கவியை மீறிய அழகு என்று வியந்தவன்,

“காதலில் உண்டாகும் சுகம் இப்போது மறப்போம்

கன்னித் தமிழ் தொண்டாற்று அதை முன்னேற்று

பின்பு கட்டிலில் தாலாட்டு

சாதி மல்லி பூச்சரமே

சங்கத்தமிழ் பாச்சரமே”

காதல் தொண்டாற்றும் கன்னிகையை சங்கத்தமிழ் பாச்சரமே! என்று  கொஞ்சுகிறான்.

“யாதும் ஊரென யாரு சொன்னது சொல்லடி

பாடும் நம்தமிழ் பாட்டன் சொன்னது பொன்மணி”

காதலியுடனான உரையாடலில் கணியன் பூங்குன்றனை சொருகுவதிலும் அந்த காதல் இனிக்கிறது. தமிழ் போல் செழுமை அடைகிறது.

*****

இனி காதலெனும் பருவபோதை ஏறிய காதலர்களின் அதிகாரம். காதலென்றால் அது தன்நிலை மறந்த நிலை. கற்பனை தட்டில் அண்டம் முழுவதும் ஆட்சி நடத்தும் மயக்க நிலை.

“உலகம் எங்கும் நமது ஆட்சி

நிலமும் வானும் அதற்கு சாட்சி

நிலமும் வானும் நமது ஆட்சி

உலகம் எங்கும் அதற்கு சாட்சி”

வார்த்தைகளை மாற்றிப்போட்டு விளையாடினாலும் காதலுக்கும் காதலர்க்கும் அது உண்மையான ஆட்சி. இந்த நிலையில்,

“சங்கீத ஸ்வரங்கள் ஏழே கணக்கா

இன்னும் இருக்கா என்னவோ மயக்கம்

என் வீட்டில் இரவு அங்கே இரவா

இல்ல பகலா எனக்கும் மயக்கம்”

என இரவு-பகல் தெரியாது நீளும் பேச்சில்,

“நீ என்னென்ன சொன்னாலும் கவிதை”

என்று காதலி பேச்சை காதலன் கொஞ்சுவான். அதே காதலியின் பேச்சின் இனிமையை சொல்லும் சொற்களை மாற்றி இப்படி கோர்த்தால்,

“சங்கீதம் பாட்டிலா நீ பேசும் பேச்சிலா

தேனூறும் வேர் பலா உன் சொல்லிலா”

என கூடலின் போது தித்திக்கும் வார்த்தைகள், காணாது பிரிவு துயரில் தவிக்கின்ற போது,

“பூவினைச் சூட்டும் கூந்தலில் எந்தன் ஆவியை நீ ஏன் சூட்டுகிறாய்

தேனை ஊற்றும் நிலவினில் கூட தீயினை நீ ஏன் மூட்டுகிறாய்”

இப்படியாக வெந்து கொண்டிருக்கும் போது, பேச்சு கடவுளுக்கு நிகரானதாகிறது.

“வாய் மொழி சொன்னால் தெய்வீகம்”

இன்னும் நேரில் சந்திக்கும் போது, மௌனங்கள் பேசிக்கொள்ளும் நிலையில்,

“கண்ணில் பேசும் சங்கீத மொழியது

கண்ணன் அறிய ஒன்னானதா

உன்னைத் தேடும் ஏக்கத்தில் இரவினில்

கண்ணுக்கு இமைகள் முள்ளாவதா”

காதலுக்காய் ஏங்கி காதலால் காய்ந்து காதலித்து தேய்ந்து காதலில் கலந்து நீண்ட நாளுக்கு பின்னர் கடற்கரையில் சந்திக்கும் போது,

“கடற்கரைக் காற்றே வழியை விடு

தேவதை வந்தால் என்னோடு”

என காற்றுக்கு ஆணையிட்டவன், கடல் மணல் தொட்டு அவள் கரம் பற்றி நடக்கிறான்.

“மென் பஞ்சு மேகங்கள் உன் பிஞ்சு பாதங்கள்

மண் தொட்டதால் இன்று செவ்வானம் போல் ஆச்சு”

மண் பட்டு அவள் கால்கள் சிவந்ததும் இவன் பதறுகிறான்.

“உனது பாதம் அடடா இலவம் பஞ்சு

நடக்கும் போது துடித்தது எனது நெஞ்சு”

அவள் பாதத்தை ஒற்றியபடியே, நடந்து வந்த தடத்தை பார்த்து மீண்டும் காற்றுக்கு ஆணையிடுகிறான்.

“மணல்வெளி யாவும்

இருவரின் பாதம் நடந்ததைக்

காற்றே மறைக்காதே

தினமும் பயணம் தொடரட்டுமே”

*****

காதலின் அடுத்த நிலை,  காமத்தின் அழகியலில் காதலை கொண்டாடுவது. கூடல்.

“உன்னை எங்கெங்கு தொட்டாலும் இனிமை”

வெறும் பேச்சில் எப்படி இன்பம் கிடைக்கிறதோ, அந்த பேச்சு இன்பம் தீரும் நிலையில் தான் தொடுகை இன்பத்திற்காக ஒத்திகை தொடங்குகிறது.

“பேரின்பம் மெய்யிலா நீ தீண்டும் கையிலா”

காதலாள் மேனி மேலே காதல் மையம் கொள்ளும் நிலையில், மூடி வைத்த அழகை தரிசிக்க ஏங்கும் காதலன் மனம். இயலாமையில் மூடிய சேலை மேல் பொறாமை கொள்கிறான்.

“சித்திரை நிலவு சேலையில் வந்தது முன்னே

உன் சேலையின் புண்ணியம் நான் பெற வேண்டும் பெண்ணே

அந்த மண்ணுக்குள் எங்கே நீர் உண்டு

அது வேருக்கு தெரியும்

இந்த பெண்ணுக்குள் எங்கே எதுவுண்டு

அது சேலைக்கு தெரியும்”

ரட்சகியே! நீ சேலையில் எவ்வளவு அழகு தெரியுமா?

“சேலைச் சோலையே பருவசுகம் தேடும் மாலையே”

என அவளை குளர்வித்து வைத்தபடியே,

“அல்லி மலர் மேனியிலே ஆடையென நானிருக்க”

என்று மெதுவாக தன் ஆசையை அவளிடம் தெரிவிப்பான் காதலன்.

“ஆடை ஏன் உன் மேனி அழகை

ஆதிக்கம் செய்கின்றது

நாளைக்கே அனந்த விடுதலை

காணட்டும் காணாத உறவில்

கை தொட்டு மெய் தொட்டு”

இவன் குறும்பாக நெருங்க, அவள் கடிந்து கொண்டு,

“கண்களால் என் தேகம் எங்கும் காயம் செய்கிறாய்”

என  வெட்கத்துடன் கோபத்தை காட்ட, இவன் முத்தத்திற்கு ஒத்திகை பார்க்க தொடங்கி விடுவான்.

“ஆயிரம் நிலவே வா ஓராயிரம் நிலவே வா

இதழோரம் சுவை தேட புது பாடல் விழி பாட பாட”

இன்னும்,

“சிந்தித்தேன் செந்தூர இதழ்களில்

சிந்தித் தேன் பாய்கின்ற உறவை

கொஞ்சம் தா கொஞ்சம் தா”

அவள் தொடர்ந்து முரண்டு பிடிக்க, முத்தமிடும் ஆசைக்கு முத்தமிழை துணை சேர்க்கிறான் இவன்.

“பொங்கும் தமிழினில் கவிதைகள் புனைந்து

பன்னீர் புதுமலர் இதழ்களில் நனைந்து”

அவளோ முடியவே முடியாது என்று முட்டுக்கட்டை போட்டுவிட,

“என் மேகமே வா வா இதழ் நீரைத் தூவு”

கெஞ்சுகிறான். இன்னும் அணைத்து, அவளின் பெண்மையின் அழகை கவியாக்கி கிறங்கடிக்கிறான்.

“மாங்கனிகள் தொட்டிலிலே தூங்குதடி

அங்கே மன்னவனின் பசியாற மாலையிலே பரிமாற”

இன்னொரு முறை அதையே மாற்றி பாடினான்.

“தொட்டில் இடும் இரு தேமாங்கனி என்

தோளில் ஆட வேண்டுமே”

இவன் கள்ளப்பார்வை வீசும் போது, அவள் வெட்கத்தில் நிலைகுலைவாள்.

“தேனொடு பால் தரும் செவ்விளனீர்களை

ஓரிரு வாழைகள் தாங்கும்”

இவனது உவமையில் சில்மிஷ சில்வண்டுகளின் ரீங்காரம் அதிகரிக்க,  அவள் பொய்க்கோபங்கொண்டு கிளம்பி விடுகிறாள்.

*****

காதலில் உருவி உடலிரண்டு இணையும் போது,

தலைவன் –

“வார்த்தைக்குள் அடங்காத ரசமான சரசம்

நான் ஆட ஒரு மேடை நீ கொண்டு வா”

தலைவி-

“நள்ளிரவு துணையிருக்க நாமிருவர் தனியிருக்க

நாணமென்ன பாவமென்ன நடை தளர்ந்து போனதென்ன”

தலைவன்-

“இல்லை உறக்கம் ஒரே மனம் என் ஆசை பாராயோ

என் உயிரிலே உன்னை எழுத உன் மேனி தாராயோ”

தலைவி-

“எந்தெந்த இடங்கள் தொட்டால் ஸ்வரங்கள்

துள்ளும் சுகங்கள் கொஞ்சம் நீ சொல்லித்தா”

 தலைவன்-

“உன் தேகம் என் தேசம் எந்நாளும் சந்தோஷம்”

தலைவி-

“மன்னவனின் தோளிரண்டை மங்கை எந்தன் கை தழுவ

கார்குழலும் பாய் விரிக்கும் கண்சிவந்து வாய் வெளுக்கும்

இந்த மயக்கம் எழில் முகம் முத்தாக வேர்க்காதோ

அந்த நினைவில் வந்து விழுந்தேன் கொத்தான பூவாக”

தலைவன்-

“வீணையெனும் மேனியிலே தந்தியினை மீட்டும்

கைவிரலில் ஒரு வேகம் கண்ணசைவில் ஒரு பாவம்”

தலைவனும் தலைவியும் –

“நாயகன் ஒருவன் நாயகி ஒருத்தி

தேன்மழை பொழிய பூவுடல் நனைய

காமனின் சபையில் காதலின் சுவையில்

பாடிடும் கவிதை சுகந்தான்”

அந்த நிலையில்,

“ஆராதனை நேரம் ஆலாபனை ராகம்

அலைபாயுதே தாகம் அனல் ஆகுதே மோகம்

மன்மதக் கோயிலில் பால் அபிஷேகம்”

காதலின் இன்பம் எப்பொழுதுமே பெண்மையை சார்ந்திருக்கிறது. அதனால் தான் இப்படி எழுதினான்,

“இன்பமே உந்தன் பேர் பெண்மையோ”

Related posts

தற்சார்பு வாழ்வியலை நோக்கி காடை வளர்ப்பு

Thumi2021

பாரதிகளை உருவாக்குவோம்!!!

Thumi2021

அவளுடன் ஒரு நாள் – 01

Thumi2021

Leave a Comment