கடந்த இதழில் கொட்டித்தீர்த்தவற்றோடு முடிந்துவிடவில்லை என் ஆதங்கங்கள். மற்றவர்களை விடுங்கள். என்னவர்கள் என்ன செய்தார்கள்?

தருமன் என்று பெயரில் மட்டும் தருமத்தை வைத்திருந்து யாருக்கு என்ன பலன் ? சூதாடுவது தர்மமா? தனக்குரியவளை வைத்து சூதாடுவதே தவறெனும் போது ஐவருக்கும் உரியவளை எப்படி சூதாட்டத்தில் பணயம் வைக்கலாம்?
வில் வித்தையில் விஜயனை வீழ்த்த ஒருவன் இல்லை என்கிற நிலையில் விளையாட்டு விபரீதமாகிப் போவது தெரிந்த மறுநொடியே காண்டீபத்தை அர்ச்சுனன் கையிலேந்தியல்லவா இருக்க வேண்டும்? சுயம்வர சபையில் காட்டிய வீரம் என் சுயம் பறிக்கப்படுகையில் எங்குதான் புதையுண்டு போனது?

பீமன் மூச்சுவிட்டாலே எதிரிகள் மூர்ச்சையாகிப் போவார்களாம். துச்சாதனனோடு போராடி நான் மூர்ச்சையாகிக் கொண்டிருக்கிறேன். இந்த பீமன் மூச்சைவிட மறந்துவிட்டானா?
குதிரைகளின் மொழிகள் குதிரைகளை விட நகுலனுக்குத்தான் அதிகம் பரீட்சையம். தான் அடிமையாகிப் போனாலென்ன கண்ணசைவில் குதிரைகள் மூலம் அங்கே குழப்பத்தை ஏற்படுத்தி என்னை காப்பாற்றியிருக்கலாமே?
நடக்கமுதலே நடப்பது தெரிந்தவனாம் சகாதேவன். இந்த அக்கிரமம் நடக்கப் போவது தெரியாமலா போயிருக்கும்? எப்படிப் பிடிவாதம் பூண்டேனும் இந்த விபரீதங்களை வருமுன் தடுத்திருக்கவல்லவா வேண்டும்? சாத்திரங்கள் கற்றும் தக்க சமயத்தில் பயன்படவில்லையே?
மன்னனுக்கு மூளையாக இருந்து வழிநடத்த வேண்டிய மந்திரியார் ஒரு மூலைக்குள் ஒடுங்கிப் போனதேனோ? பொறுப்பான பதவியின் பொறுப்புக்களை நிறைவேற்ற முடியாவிட்டால் அதற்குப்பிறகும் அந்த பதவியில் அமர்வது அவனுக்கு அழகில்லை.

அங்கே ஒருத்தி மீது மட்டும் எனக்கு கோபம் வரவில்லை. அனுதாபம் தான் வந்தது. தனக்கு அநீதி நடந்த போதே அமைதியாய் இருந்தவள் எனக்கு அநீதி நடக்கும் போது மட்டும் குரல் கொடுப்பாளா என்ன? கல்லானாலும் கணவன் என்று கண்களைக் கட்டிக் கொண்ட காந்தாரிக்கு மந்தையேயானாலும் அத்தனையும் மகன்கள்தானே?
இத்தனை பேரைப் பற்றியும் சொன்னவள் இன்னும் கண்ணனைப்பற்றி சொல்லவில்லையே என்று நீங்கள் கேட்பது எனக்கும் கேட்கிறது.
அந்த மாதவனாம் மாயவனை வாழ்த்தப் போகிறேனா? வையப் போகிறேனா?
காத்திருங்கள் அடுத்த இதழ் வரை…