நகராக்கம்
நகராக்கம் காரணமாகவும் அதிளவில் கழிவுகள் நீரில் கலக்கின்றன. குறிப்பாக நகரப் பகுதிகளில், இடவசதிப் பற்றாக்குறை காணப்படுகின்றது. இதனால் தமது வீடுகளில் சேரும் கழிவுகளை நீர் நிரைகளில் வீசிவிடுகின்றனர். மேலும் நகரப்பகுதிகளில், இருந்து மிதமிஞ்சிய அளவில் சாக்கடைகளுக்கூடாகப் போய்ச் சேரும் மாசுக்களாலும் நீர் மாசடைகின்றது. இவற்றை விட நகரப்பகுதிகளில் பெரும்பாலும் அருகருகில் அமைக்கப்பட்டிருக்கும் மலசலகூடக் கழிவுகளினாலும் தரைக்கீழ் நீர் மாசடைகின்றது. குறிப்பாக தரைக்கீழ் நீர்வளம் கொண்ட கரையோர நகரப் பிரதேசங்களில், இந்நிலைமையினை அவதானிக்கலாம்.
கண்டல் தாவரங்கள் மற்றும் முருகைக் கற்பாறைகளை அகற்றுதல்
கரையோரப் பிரதேசங்களில் காணப்படும் கண்டல்தாவரங்களும் முருகைக்கற்பாறைகளும் உவர்நீர் தரைக்கீழ் நீருடன் சேர்ந்துவிடாமல் பாதுகாக்கின்றன. ஆனால் இவற்றை அகற்றுகின்றபோது அல்லது அழிக்கின்றபோது தரைக்கீழ் நீருடன் நேரடியாக உவர்நீர் கலந்து தரைக்கீழ் நீரில் உவர்த்தன்மையை அதிகரிக்கின்றது.
எண்ணெய்க்கசிவு
ஏரிகளுக்கூடாக அல்லது கடலிலே பயணம் செய்கின்ற கப்பல்களிலிருந்து எண்ணெய்க் கசிவுகள் ஏற்படுகின்றபோதும் நீர் மாசடைகின்றது. அமெரிக்காவில் பேரேரி போன்ற ஏரிகள் போக்குவரத்திற்காக பெருமளவில் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றினூடாகப் பயணம் செய்யும் கப்பல்களிலிருந்து எண்ணெய் கசிகின்ற போது நீரின் தன்மையை மாற்றியமைக்கின்றது. கடலிலே பயணம் செய்யும் கப்பல்களினாலும் மற்றும் எண்ணெய் கிணறுகளின் கசிவினாலும் கடற்கரை நீர் மாசடைகின்றது.

வெப்பமடைந்த நீர்
நீர் மின்சாரம், தொழிற்சாலைகளில் இயந்திரங்களை குளிர்ச்சிப் படுத்துவதற்காக நீரானது பயன்படுத்தப்பட்டு அவை மீண்டும் நீர்த்தொகுதியுடன் இணைகின்றபோது அந்நீர் வெப்படைந்த நீராக மாற்றமடைகின்றது. குறிப்பிட்ட நீரில் உயிரினங்கள் வாழமுடியாத நிலை உருவாவதுடன், அது வேறோர் நீர்த்தொகுதியில் கலக்கின்றபோதும் பாதிப்பை ஏற்படுத்துகின்றது. கரையோரங்களில் அமைக்கப்படுகின்ற அனல் மின் நிலையங்களினால், இவ்வாறு சூடாக்கப்பட்ட நீர் கடலினுள் விடப்படுகின்றது. அதனால் மீன்வளம் பாதிப்படைவதுடன், அயற்சூழலிலும் தாக்கத்தை தோற்றுவிக்கின்றது.
மாசடைந்த நீரை பருகுவதனாலும், மாசடைந்த நீர் சூழலில் காணப்படும் போதும் பல்வேறு விதமான சுகாதார சீர்கேடுகள் ஏற்படுகின்றன. மாசடைந்த நீரைப் பருகுவதனால் வாந்தி, வயிற்றோட்டம், வயிற்றுளைவு, நெருப்புக் காய்ச்சல், தைபோயிட்டுக் காய்ச்சல் முதலிய நோய்கள் ஏற்படுகின்றன. மேலும் மாசடைந்த நீர் சூழலில் காணப்படுவதனால் மலேரியா, டெங்கு, யானைக்கால், மஞ்சட்காய்ச்சல், தைவசுக் காய்ச்சல் போன்ற நோய்கள் ஏற்படுகின்றன, நீர் மாசடைவதால் நீர்வாழ் உயிரினங்களின் அழிவுக்கு வழிவகுக்கும். நீரில் ரசாயண மாசுக்கள் கலப்பதனாலும், நீர் வெப்பப்படுத்துவதாலும் இத்தகைய அழிவுகள் ஏற்படுகின்றன. குறிப்பாக கைத்தொழிற்சாலைகள் போன்றவற்றிலிருந்து வெளியேறும் இரசாயணப் பொருட்கள் நீரில் கலப்பதனால் அதனை உட்கொள்ளும் நீர்வாழ் உயிரினங்கள் அழிவடைவதுடன் அவற்றின் இனப்பெருக்கத்திலும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன.
மேலும் வெப்பப்படுத்திய நீர் நீர்த்தொகுதியுடன் கலப்பதால் உயிரினங்கள் இறப்பதுடன், குடம்பி நிலையிலுள்ள பெரும்பாலான நீர்வாழ் உயிரினங்கள் அதிகளவில் அழிவடைகின்றன. ஒரு பிரதேசத்தில் மாசடைந்த நீர் காணப்படுகின்றபோது அப்பிரதேச குடிநீர் வளத்திலும் பாதிப்பை ஏற்படுத்துகின்றது, சில பிரதேசங்களில் மக்களின் அன்றாடத் தேவையைப் பூர்த்தி செய்கின்ற வளமாகவே நீர்நிலைகள் காணப்படுகின்றன. குறிப்பாக ஆறுகள், குளங்கள் என்பவற்றைக் குறிப்பிடலாம். இவை மாசடைகின்றபோது அப்பகுதி மக்களின் நீர்வளம் மாசடைகின்றது. சில இடங்களில் மலசலக்கூடகுளிகள் அருகருகே அமைந்திருப்பதனால் நீர் குடிப்பதற்கு பொருத்தமற்ற வகையில் மாற்றமடைந்துள்ளது.

பயிர் விளைச்சலிலும் நீர்ப்பாசன நடவடிக்கைகளிலும் நீர் மாசடைத லானது பாதிப்பை ஏற்படுத்துகின்றது. குறிப்பாக நீர் உவர்த்தன்மை அடைவதனால் நீரானது பயிர் விளைச்சலைக் கட்டுப்படுத்தும் அத்துடன் உற்பத்தியில் வீழ்ச்சியை ஏற்படுத்தும். யாழ்ப்பாணப் பகுதி யில் அதிகளவில் கிணற்றுவழி நீர்ப்பாசனத்திற்காக தரைக்கீழ் நீர் பயன்படுத்தப்பட்டதனால் தற்போது சில பகுதிகளில் நீரின் உவர்த்தன்மை அதிகரித்துள்ளது. குறிப்பாக இது கிணற்றுவழி நீர்ப்பாசனத்தில் இனிவரும் காலங்களில் பாதிப்பை ஏற்படுத்தும். இதனால் இவ்வாறு நீர்ப்பாசண நடவடிக்கையை நம்பி மேற்கொள்ளப்படுகின்ற உபஉணவுப் பயிர்ச்செய்கையில் பாதிப்பை ஏற்படுத்தும்,உணவுற்பத்தி நிறுவனங்களுக்கு மாசடைந்த நீரினால் பெருமளவில் செலவு ஏற்படும். நீரின் துணையுடன் உணவுற்பத்திப் பொருட்களைத் தயாரிக்கும் சில நிறுவனங்களுக்கு இவ்வாறு பாதிப்புகள் ஏற்படும். குறிப்பாக இறைச்சி பதப்படுத்தும் நிறுவனங்கள், குடிபானங்கள் தயாரிக்கும் நிறுவனங்கள், கோதுமை மாவை அடிப்படையாகக் கொண்ட நிறுவனங்களைக் குறிப்பிடலாம். இவை தமது பொருட்களைச் சுத்ததப்படுத்துவதற்கும், கலவை யாக பயன்படுத்துவதற்கும் நீரினைப் பயன்படுத்துகின்றன. இதற்கு சுத்தமான நீர் கிடைக்காதபோது சுத்தமாக்கி நீரைப் பயன்படுத்துவதற்குரிய இயந்திரங்களை அதிக செலவில் கொள்வனவு செய்யவேண்டி ஏற்படும்.

ஆராய்வோம்………