இதழ் 33

T-20 உலகக்கோப்பை 2021 அணிகளின் அலசல் – 02

நியூசிலாந்து மற்றும் அவுஸ்திரேலியா அணிகள் தங்கள் ரி20 உலக கிண்ணத்திற்கான 15 பேர் கொண்ட குழுவை அறிவித்திருந்த நிலையில்; அவற்றை தொடர்ந்து பாகிஸ்தான் மற்றும் இந்திய அணிகளும் தங்கள் 15பேர் கொண்ட அணியினை அறிவித்துள்ளது. இந்த அணிகளில் எதேனும் மாற்றம் செய்ய வேண்டும் எனின் ஒக்டோபர் மாதம் 10 திகதி வரை செய்து கொள்ள முடியும்.

பாகிஸ்தான்

Pakistan – ICC Men's T20 World Cup 2021

பலம் பொருந்திய அணிகளை வீழ்த்துவதும் பலம் குறைந்த அணிகளிடம் வீழ்வது என்று கிரிக்கெட் உலகில் unpredictable அணியாக திகழ்கிறது, பாகிஸ்தான் அணி.
பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் – அணித் தலைவர் சப்ராஸ் அகமட் கூட்டணியில் டெஸ்ட் மற்றும் ரி20 சர்வதேச தரவரிசையில் முதல் இடம் அத்துடன் 2017 இல் சாம்பியன்ஸ் கிண்ணம் வென்று வெற்றிகரமான அணியாக வலம் வந்தது. 2019 உலகக் கிண்ணத்தில் 5ம் இடம் பிடித்த நிலையில் பயிற்சியாளர் ஆர்தர் ஒப்பந்தம் முடிந்து விலக அகமட் அணித்தலைவர் பதவியும் பறிபோனது. தற்போது சப்ராஸ் அகமட் க்கு 15 பேர் கொண்ட அணியிலும் இடம் இல்லாமல் போயிருக்கிறது.

அணி விபரம்: Babar Azam (c), Shadab Khan, Asif Ali, Azam Khan, Haris Rauf, Hasan Ali, Imad Wasim , Khushdil Shah, Mohammad Hafeez, Mohammad Hasnain, Mohammad Nawaz, Mohammad Rizwan, Mohammad Wasim, Shaheen Shah Afridi, Sohaib Maqsood.

அசிவ் அலி மற்றும் குஷ்டில் ஷா மீண்டும் மத்திய வரிசை வீரர்களாக அணிக்குள் நுழைய மொஹம்மத் ரிஸ்வான் முதல் நிலை விக்கெட் கீப்பராகவும் அசாம் கான் இரண்டாம் நிலை விக்கெட் கீப்பராகவும் அணியில் இடம்பெற்றுள்ளனர். ஷகின் ஷா, ஹசன் அலி, ஹரிஸ் ராவ் போன்ற வேகப்பந்து வீச்சாளர்களுடன் சதாப் கான், இமாட் வசிம் போன்ற சூழற் பந்து வீச்சாளர்களும் அணியில் உள்ளனர். அனுபவ வீரர் மொஹமட் ஹாபிஸ், அணித்தலைவர் பாபர் அசாம் உடன் சொகைல் மஹ்மூத் Top order துடுப்பாட்ட வீரர்களாக அணியில் உள்ளனர். பாகிஸ்தானின் பந்து வீச்சு கூட்டணி சிறப்பாக இருந்தாலும் துடுப்பாட்டம் பாபர் அசாம் இல் பெரிதும் தங்கியுள்ளது.

கடந்த 2016 ஆண்டு ரி20 உலகக் கிண்ணத்திற்கு பின், பாகிஸ்தான் மொத்தமாக 71 சர்வதேச ரி20 ஆட்டங்களில் விளையாடி 46 வெற்றி, 20 தோல்வி மற்றும் 5 முடிவற்ற நிலையும் பெற்றுள்ளது. இதுவரை ரி20 உலக கிண்ணத்தில் மொத்தமாக 34 ஆட்டங்களில் விளையாடி 19 வெற்றி, 14 தோல்வி மற்றும் 1 சமநிலை கிடைத்துள்ளது.
2007 இல் இறுதிக்கு முன்னேறிய பாகிஸ்தான் 2009 இல் ரி20 உலகக் கிணத்தை வென்று அடுத்த இரு தொடர்களிலும் அரையிறுதிக்கு முன்னேறியது. பின் கடந்த இரு தொடர்களில் Super 10 இனை தாண்டி முன்னேறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா

India – Men's T20 World Cup 2021 squad

சர்வதேச கிரிக்கெட்டில் மூன்று விதமான போட்டிகளில் பிரகாசித்து வருகிற இந்தியா, இம்முறையும் ரி20 உலக கிண்ணத்தை வெல்லக்கூடிய அணிகள் என்று எதிர்பார்க்கப்பபடுகிறவற்றில் முன்னிலையில் இருக்கிறது.

2007 இல் நடைபெற்ற முதலாவது ரி20 உலக கிண்ணத்தை வென்ற இந்திய அணி, அடுத்து வந்த மூன்று தொடர்களிலும் அரையிறுதியை எட்டவில்லை; ஆனாலும் கடந்த 2014 இல் இறுதிக்கும் 2016 இல் அரையிறுதிக்கும் முன்னேறி இருந்தது.

அணி விவரம்: Virat Kohli (c), Rohit Sharma, KL Rahul, Suryakumar Yadav, Rishabh Pant (wk), Ishan Kishan (wk), Hardik Pandya, Ravindra Jadeja, Rahul Chahar, Ravichandran Ashwin, Axar Patel, Varun Chakravarthy, Jasprit Bumrah, Bhuvneshwar Kumar, Mohammad Shami.

அணியில் இளம் வீரர் இசான் கிசான், ஐசிசி தொடர்களில் மிகவும் சிறப்பாக விளையாடுகின்ற அனுபவ வீரர் ஷிகார் தவான் மற்றும் இன்னொரு இளம் வீரரான பிரித்வி ஷா ஆகியோரை பின் தள்ளி ரோகித் சர்மா, லோகஷ் ராகுல் ஆகியோருடன் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்; கோஹ்லி ஆரம்ப வீரராக களம் காணும் பட்சத்தில் கிசான் மத்திய வரிசையிலும் ஆடக்கூடிய வீரர் ஆவார்.

விக்கெட் கீப்பராக ரிசாப் பந்த் உள்வாங்கப்பட்டுள்ளார். இந்தியாவின் விராட் கோஹ்லி, சூர்யகுமார் யாதவ், ஹர்டிக் பாண்டிய என்ற வலதுகை துடுப்பாட்ட மத்திய வரிசையில் இடதுகை துடுப்பாட்ட வீரரான பந்த் ஒரு சிறந்த தெரிவு.

பந்து வீச்சாளர்களை பொறுத்தவரை இந்தியா, ஆடுகளத்தின் தன்மையை கருத்தில் கொண்டு 5 சுழற்பந்து வீச்சாளர்களையும் (ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, ராகுல் சஹார், வருண் சக்கரவர்த்தி, அக்சர் பட்டேல்) வெறுமனே 3 வேகப்பந்து வீச்சாளர்களையும் (பும்ரா, புவனேஸ்வர் குமார், மொகமட் சமி) 15 பேர் கொண்ட அணியில் தெரிவு செய்துள்ளது. கடந்த வருடங்களில் இந்தியாவுக்காக சிறப்பாக செயற்பட்ட சஹால், வாய்ப்பு வழங்கப்பட்ட 5 சுழற்பந்து வீச்சாளரில் இல்லை என்பது அதிர்ச்சி. பல வருடங்களுக்கு பின் அனுபவ வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின் மீண்டும் ரி20க்கு அணிக்கு திரும்பி இருக்கிறார்.

இவர்களை விடுத்து மேலதிகமாக மாற்று வீரர்களாக Shreyas Iyer, Deepak Chahar, Shardul Thakur தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் இருவர் இரு வேகப்பந்து வீச்சாளர்கள் என்பதும் 15 பேர் அணியில் 5 சுழற்பந்து வீச்சாளர்கள் என்பதும் இந்தியாவின் தந்திரமான அணித் தெரிவை காட்டுகிறது.

இத்துடன் முன்னாள் அணித் தலைவர் மகேந்திர சிங் தோனி, தமது ரி20 உலக கிண்ணத்தில் ஆலோசகராக செயற்படுவார் என்றும் அறிவித்தது இருக்கிறது இந்திய கிரிக்கெட் சபை. கடந்த வருடங்களில் இறுதி மற்றும் அரையிறுதி ஆட்டங்களில் தோற்று வருகிற இந்தியா, இம்முறை ஒட்டுமொத்தமாக கிண்ணம் வென்றே தீர வேண்டும் என்று களமிறங்கின்றது.

2016 ரி20 உலக கிண்ணத்திற்கு பின்னர் இந்திய அணி, மொத்தமாக 72 சர்வதேச ரி20 ஆட்டங்களில் விளையாடி 45 வெற்றி, 22 தோல்வி 2 சமநிலை மற்றும் 3 முடிவற்ற நிலையும் பெற்றுள்ளது. இதுவரை மொத்தமாக 33 ரி20 உலக கிண்ண ஆட்டங்களில் விளையாடிய இந்தியாவுக்கு 20 வெற்றி, 11 தோல்வி, 1 சமநிலை மற்றும் 1 முடிவற்ற நிலையும் கிடைத்துள்ளது.

ஆட்டம் தொடரும்…,

Related posts

சூழல் தரமிழத்தலில் செல்வாக்கு செலுத்தும் சமூகக் காரணிகள் – 02

Thumi2021

குறுக்கெழுத்துப்போட்டி – 29

Thumi2021

சாபமா என் சபதம் – 02

Thumi2021

Leave a Comment