நவீனவாழ்க்கை முறை காரணமாகவும் சூழல் தரமிழத்தலுக்கு உள்ளாகின்றது. பல இளைஞாகள் இன்று நவீனத்துவமான வாழ்க்கை முறையினையே பெரிதும் விரும்புகின்றனர். பாதியளவிலான ஒலிபெருக்கி சாதனங்களைப் பயன்படுத்தல், பொருத்தமான நவீன ஆடைகள், வேகமான தனிநபர் வாகனங்கள் போன்றவற்றின் பாவரனையினையை விரும்புகின்ற போக்கு காணப்படுகின்றது. அத்துடன் இன்று தமது வீடுகளில் சமைத்து சாப்பிடுவதை விடுத்து துரித உணவிற்காக உணவு விடுதிகளை நாடுகின்ற நிலைமையும் காணப்படுகின்றது. இதனால் உணவகங்களின் எண்ணிக்கை அதிகரிக்கின்றது.
உணவகங்களை அதிகளவில் அமைப்பதற்காக இயற்கையான இடங்கள் மாற்றியமைக்கப்படுவதுடன், அதிகளவில் மரங்கள் அழிக்கப்படுவதுடன், இயற்கை வளங்களும் அழிக்கப்படுகின்றன. அத்துடன் உணவகங்கள் மூலம் வெளியேற்றப்படும் கழிவுகள் நீர் மாசடைவதில் செல்வாக்குச் செலுத்துகின்றன.
நவீன வாழ்க்கை முறைகளில் இன்று பொருட்களை எளியமுறையில் கொள்வனவு செய்து கொண்டு செல்வதற்கு அதிகளவில் பிளாஸ்டிக்கால் உருவாக்கப்பட்ட பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன. உணவு பொதியிடல், மென்பாணங்கள் போன்றவற்றிற்கு இன்று பிளாஸ்டிக்காலான பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன. இத்தகைய நிலையில் இவை சூழலில் விடப்படுகின்றபோது திண்மக்கழிவு தொடர்பான பிரச்சினைகளைத் தோற்றுவிக்கின்றன.
விழாக்களும் சூழல் தரமிழத்தலில் செல்வாக்குச் செலுத்துகின்றன. இந்தியாவிலே விழாக்களுக்குப் பெயர்போன இடமாக பஞ்சாப் பிரதேசம் விளங்குகின்றது. இங்கு விழாக்கள் ஜனவரி மாதத்தில் தொடங்கி டிசம்பர் மாதத்தில் நிறைவு பெறுகின்றது. அதாவது வருடம் முழுவதும் விழாக்கள் கொண்டாடப்படுகின்றன. பஞ்சாப்பின் முதல் பண்டிகையாக போகி பண்டிகை முக்கியமானதாகக் காணப்படுகின்றது. இது தொடங்குவதற்கு முதல் சில நாட்களுக்கு முன்னரே இளைஞர்கள் குழுக்களாக தமது இருப்பிடங்களைச் சுற்றியுள்ள பகுதிகளுக்குப் போகி பண்டிகையுடன் தொடர்புபட்ட பாடல்களுடன் சென்று, தேவையற்ற குப்பை கூழங்களை அழிப்பதற்காக எரிபொருள் மற்றும் பணத்தினை சேகரிப்பார்கள். இந்த விசேட கொண்டாட்டமானது தீயூட்டுவதற்கான விசேட வாய்ப்பினை வழங்குகின்றது.
மேலும் தீபாவளி போன்ற பண்டிகைகளின் போது பட்டாசுகள் கொழுத்தி கொண்டாடுகின்றனர்.

பட்டாசுகள் உடலுக்குள் சுவாசத்தின் போது சென்று சேர்வதனால் பல்வேறு பாதிப்புக்களை எற்படுத்துவதுடுன், குறிப்பிட்ட வளிமண்டலத்தில் பச்சைவீட்டு வாயுக்களையும் சேர்க்கின்றது.
வறுமையும் சூழல் தரமிழத்தலில் செல்வாக்குச் செலுத்துகின்ற ஒரு காரணியாகக் காணப்படுகின்றது. இலங்கை மற்றும் ஆபிரிக்க நாடுகளில் காடுகள் பெருமளவில் அழிக்கப்படுதற்கு வறுமை முக்கியமான காரணியாக அமைகின்றது. ஆபிரிக்க நாடுகளில் நகரப்பகுதிகளில் காணிகளைப் பெற்றுக்கொள்வதற்கு முடியாமை, வீடுகளை அமைப்பதற்கு வசதியின்மை போன்ற காரணிகளால் காடுகள் பெருமளவில் அழிக்கப்படுகின்றன. குறிப்பாக பங்களாதேஷ் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளில் அதிகளவில் வெள்ளப்பெருக்குகள் ஏற்படுவதற்கு பெரியளவில் நிகழ்கின்ற காடழிப்பும் முக்கிய காரணியாகக் குறிப்பிடப்படுகின்றது. அதேபோன்று பெரும்பாலானவாகள் காடுகளை அழித்து அதிலே தமது விவசாய நடவடிக்கைகளைச் சட்டவிரோதமாகச் செய்வதற்கும் வறுமையே முக்கியமான காரணியாகக் காணப்படுகின்றது.
இலங்கை போன்ற நாடுகளில் இன்று முருகைக்கற்பாறை அகழ்தல் சில இடங்களில் நடைபெறுவதற்கு வறுமையே காரணம். குறிப்பாக கரையோரப் பிரதேசங்களில் வறிய மக்களினால் முருகைக்கற்பாறை அகழ்வு தொழிலாக இடம்பெறுகின்றது. இவை இலங்கையின் கல்குடா, திருகோணமலை போன்ற பகுதிகளில் அதிகளவில் இடம்பெற்று வந்தமை குறிப்பிடத்தக்கது. இதனால் கடற்கரைச் சூழல் அதிகளவில் மாசடைந்து வருகின்றது.
நகராக்கம் சூழல் தரமிழத்தலில் செல்வாக்குச் செலுத்துகின்ற இன்னுமொரு காரணியாகும். நகரப்பகுதியில் ஏற்படும் கவர்ச்சி காரணமாக நகரங்களின் சனத்தொகை அதிகரித்து நகரங்கள் கிராமப் பகுதியை நோக்கி விஸ்தரித்துச் செல்லுதலை குறித்து நிற்கின்றது.
நகரப்பகுதிகளின் அபரிதமான வளர்ச்சியினால் சூழல் மிகவும் மோசமான நிலைக்கு மாற்றமடைந்து செல்கின்றது. குறிப்பாக நீர் மாசடைதல், வளிமாசடைதல், நிலம்மாசடைதல் போன்ற சூழல் தரமிழத்தல் இங்கு நடைபெற வழிவகுக்கின்றது. குறிப்பாக ஆசிய ஆபிரிக்க நாடுகளைப் பொறுத்தவரையில் வளர்முக நாடுகளில் இந்த நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. நகரப்பகுதியின் வெளியேறும் கழிவகளினால் நீர்நிலைகள் மிகவும் மோசமான நிலையை அடைகின்றன. குறிப்பாக வளர்முக நாடுகளில் ஏற்படும் இத்தகைய மோசமான நிலைகளினால் அவற்றை அண்டிய குடிநீர் பெறும் வழிமுறைகள் மிகவும் மோசமாகப் பாதிப்படைகின்றன.

எனவே சிந்திக்கத் தெரிந்த விலங்கான மனிதன் தனது செயற்பாடுகளைத் திட்டமிட்டு சூழல் மீத தாக்கமற்ற வகையில் முன்னெடுத்துச் செல்வதனால் எதிர்கால சந்ததிக்கு ஏற்ற வகையில் நிலைத்திருக்கத்தக்க வளமானதொரு சூழலை வழங்க முடியும் என்பதில் ஐயமில்லை.