இதழ்-37

ஈழச்சூழலியல் – 23

அமில மழையினால் நீர் மாசடைதலும் உலக விஞ்ஞானப்போக்கில் நீர் மாசடைதல் காரணியாக நோக்கப்படுகின்றது. பிரித்தானிய இரசாயனவியலாளரான அங்கஸ் ஸ்மித் அவர்களினால் அமில மழை என்னும் சொல் 1872 ஆண்டு உருவாக்கப்பட்டது. உலோக மேற்பரப்புகளில் துருப்பிடித்தல், கட்டிடப் பொருட்கள் அழிவடைதல், தாவரங்கள் கருகுதல் போன்ற பாதிப்புகளை அவர் சுட்டிக்காட்டினார்.

மாசடையாத மழை நீர் வளி மண்டலத்திலுள்ள காபனீரொட்சைட்டுடன் சமநிலையைக் பேணுவதன் மூலம் அதன் pH பெறுமானம் ஏறத்தாழ 5.6 காணப்படுகின்றது. மழை நீருக்கு அனேகமான அமிலத்தன்மை வளி மண்டலத்தின் சில இடங்களில்  அதிகளவான செறிவில் காணப்படும் கந்தகவீரொட்சைட்டு. நைதரசனீரொட்சைட்டு என்பனவற்றினாலாகும் உயிர்ச்சுவட்டு எரிபொருட்களை எரித்தல், உருக்கியெடுத்தல், எரிமலைகளின் தொழிற்பாடுகள், காற்றின்றிய நிலையில் சேதனப் பொருட்கள் சிதைவடைவதனால் உருவாகும் மீதைல் மெர்கெப்பரான், கார்போனில் சல்பைட் போன்ற ஏனைய வாயுக்கள் ஒட்சியேற்றமடைதல் என்பனவற்றினால் கந்தகவீரொட்சைட் உருவாகலாம். எரிபொருட்கள் தகனமடைதல், கைத்தொழிற் செயற்பாடுகள், வளி மண்டலத்தில் மின்னலினால் ஏற்றமடைதல் என்பனவற்றின் மூலம் வளிமண்டல மூலக்கூற்று நைதரசன் ஒட்சைட் ஆக மாற்றமடைகிறது. கந்தகவீரொட்சைட்டு, நைதரசனீரொட்சைட்டு ஆகிய இவ்விரண்டு இரசாயனங்களும் மழைத்துளிகளுடன் சேர்ந்து கீழே விழும் போது சல்பூரிக் அமிலம், நைட்ரிக் அமிலம் என்பன உருவாகின்றன.

பல இடங்களில் உள்ள பாலங்கள் துருப்பிடிப்பதற்கு அமில மழையும் காரணமாக அமைந்தது. அமில மழையினால் புகையிரதத்தின் தண்டவாளம் துருப்பிடித்ததினால் போலந்திலுள்ள சில பிரதேசங்களில் புகையிரதத்தின் வேகம் குறைக்கப்பட்டது. பூமியில் மிக அழகான கோவிலாக கருதப்படும் பார்த்தினன் ஆனது ஏதென்சில் அக்குறோபோலிசில் அமைந்துள்ளது. அட்டினா எனப்படும் அழகிய ஏதென்ஸ் புரவலர் தெய்வத்தினை மகிமைப்படுத்தும் முகமாக இந்த கோவில் கி.பி. 447 இல் கட்டப்பட்டது. இந்தக் கோவிலில் அமில மழையினால் பாதிக்கப்பட்ட பளிங்குக் கற்களாலான பல சிலைகள் காணப்படுகின்றன. கிறீசிற்கான பிரித்தானிய தூதுவர் லோட் எல்யின் என்பவர் இந்த சிலைகளை வாங்கி இலண்டனிலுள்ள பிரித்தானிய நூதனசாலைக்கு 1806 இல் கடல் மூலமாக அனுப்பினார். இவை “எல்”;யின் பளிங்குகள் என பெயரிடப்பட்டு தற்பொழுதும் அங்கு காணப்படுகின்றன. இந்தியாவிலுள்ள தாஜ்மஹால், நியுயோர்க்கிலுள்ள சுதந்திர மாதாவின் சிலை, உரோமிலுள்ள கொலிசியம் ஆகிய அனைத்தும் அமில மழையினால் பாதிக்கப்பட்டவையாகும்.

நன்னீரில் நேரடியாக விழும் மழையின் அமிலத் தன்மை, மழையின் அளவு, அமில மழையைப் பெறும் நீர் நிலையின் பரிமாணம் என்பனவற்றிற்கு அமைய உடனடியாகவே அது நன்னீரின் இரசாயனத்தை மாற்றமடையச் செய்யலாம். மழையின் போது உருவாகும் மேற்பரப்பு நீரோட்ட நீரின் தரம், அது அடையும் நீர் நிலையைச் சூழுவுள்ள மண்கள், பூகற்பவியல் என்பனவற்றினால் பாதிக்கப்படலாம். சூழவுள்ளவை சுண்ணக்கல் ஆயின் மழை நீரிலுள்ள சில அமிலத்தன்மை நடுநிலையை அடையலாம், இதேவேளை அடித்தளப்பாறை கருங்கல், பளிங்குப் பாறை என்பனவற்றைக் கொண்டிருக்குமாயின் மழையினால் அவை கரைக்கப்பட்டு, அலுமினியம் போன்ற நச்சுத் தன்மையான உலோகங்களை நீர் நிலைகளிற்குக் கொண்டு செல்லலாம்.நீரின் pH இனால் நுண்ணுயிர்களின் குடித்தொகையில் பாதிப்புகள் ஏற்படலாம். அமிலத் தன்மை அதிகமாகும் போது குடித்தொகையானது பக்றீரியாவிலிருந்து, பங்கசுவாக மாற்றமடையலாம். நீரில் வாழும் பெரும்பாலான முள்ளந்தண்டில்லாத விலங்குகளிற்கு அவற்றின் உடற்றொழிலியல் அனுசேப நடவடிக்கைகளிற்கு சோடியம், பொட்டாசியம் என்பன அவசியமாகும். இந்த அயன்களின் செறிவு அமில நீரில் குறைவாகவே காணப்படும். அமில நீரில் ஐதரசன், அலுமினியம் அயன்களே அதிகளவில் காணப்படும். பெரும் எண்ணிக்கையான நீர் நிலைகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் நீரின் pH இன் அளவு குறையும் போது கிறஸ்டேசியா விலங்கினங்களின் ஓடுகளின் தடிப்பு, அவற்றின் குடித்தொகை எண்ணிக்கை என்பன குறிப்பிடத்தக்களவு குறைவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மீன்களின் உணவுகளிற்கு கிறஸ்டேசியா  இனங்கள் மிகவும் முக்கியமானவையாகும். பல மீன் இனங்கள் நீரின் அமிலத் தன்மையால்பாதிக்கப்படுகின்றன. சோடியம், குளோரைட் என்பனவே மீன்களின் குருதி திரவவிழையத்தில் (blood plasma) காணப்படும் முக்கியமான இரண்டு அயன்களாகும். மீனின் பூக்கள் (gills) சிறுநீர் என்பனவற்றின் மூலம் அகற்றப்படும். இவ்விரண்டு அயன்களையும் மீளவும் பிரதியீடு செய்தல் வேண்டும். ஆனால் அமில நீரில் இம்மாற்றம் இடம்பெறுவதில்லை. இதன் விளைவாக உடற் கலங்கள் பாதிக்கப்பட்டு மீன்களில் உயிரிழப்பு ஏற்படலாம்.

மண்ணிலுள்ள அலுமினியத்தை, அமில மழை கரைக்கலாம். இதன் விளைவாக அலுமினியத்தின் செறிவு அதிகரித்து, நீரின் pH பெறுமானம் 5.0 ஐ விடக் குறையலாம். இது மீன்களிற்கு ஆபத்தானதாகும். ஏனெனில் அலுமினியம் ஒக்சைட்டுகளினால் மீன்களின் பூக்கள் அடைபட்டு மூச்சுத் திணறல் ஏற்படலாம். கட்மியம், செப்பு, நாகம், ஏனைய பாரமான உலோகங்கள் என்பனவற்றையும் அமில நீர் அதிகளவில் கொண்டிருக்கலாம். இதனால் மீன்களின் வன்கூட்டுத் தொகுதியில் விகாரங்கள் ஏற்படலாம். மீன்களின் முட்டைகள் அமிலத் தன்மைக்கு மிகவும் உணர்திறன் கொண்டனவாகும். pH 4.5 ஆகக் காணப்படும் போது நன்னீர் மீன்களின் முட்டைகளின் இறப்பு 80 வீதமாகக் காணப்படும். pH 5.5 ஆகக் காணப்படும் போது 18 வீதமாகவும்,pH 7.5 ஆக உள்ள போது இறப்பு 2 வீதத்திலும் குறைவாகக் காணப்படும். நோர்வேயில் மேற்கொள்ளப்பட்ட ஏராளமான ஆய்வுகளில் நீரின் அமிலத் தன்மைக்கும் வஞ்சிர மீன் வகைகளின்குடித்தொகைக்குமிடையே எதிர் மறையான தொடர்பு அவதானிக்கப்பட்டது. நியுயோர்க்கிலுள்ள அடிரொன்டக் மலைகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் 5 ஐ விடக் குறைவான pH ஐக் கொண்ட 40 ஏரிகளில் 19இல் மீன்கள் எதுவும் இல்லாதிருப்பது அவதானிக்கப்பட்டது. ஐக்கிய அமெரிக்காவிலுள்ள 400 ஏரிகள்200இல் அமிலத் தன்மையின் காரணமாக அவற்றிலுள்ள மீன்கள் அழிந்துபோய்விட்டன. பிரித்தானியாவில் 5ஐ விடக் குறைவான pH ஐக் கொண்ட அருவிகளில் 28 வீதமானவைகளில் மாத்திரமே கபில நன்னீர் மீன்கள் காணப்பட்டன. ஆனால் 6.5 ஐ விட அதிகமான pH ஐக் கொண்ட 95% நீர் நிலைகளில் கபில மீன்கள் காணப்பட்டன. மறுபுறம் அமில நீரில் விலாங்கு மீன்கள் பரவலாகக் காணப்பட்டன. ஆனால் அவற்றின் உயிர்த் திணிவு 6.0 ஐ விட அதிகமான pH ஐக் கொண்ட நீரிலுள்ளதுடன் ஒப்பிடும் போது 5.5 ஐ விடக் குறைவான pH ஐக் கொண்ட நீரில் மூன்று அல்லது நான்கு மடங்கு குறைவாகக் காணப்பட்டன. pH பெறுமானம் 6 – 7 வரை காணப்படும் போது மீன்களை மோசமாகப் பாதிப்பதில்லை எனவும், pH இன் அளவு 4.5 ஐ விடக் குறையும் போது பெரும்பாலான மீன்களிற்கு ஆபத்தானதாக மாறும் என்பது பொதுவாக ஏற்றுக் கொள்ளப்பட்டதொன்றாகும்.

Southern Sea Otter Enhydra lutris 6-8 week old pup in rehabilitation feeding from bottle Monterey Bay Aquarium, Monterey, CA

பெரும்பாலான ஈரூடக வாழிகளின் முட்டைகள் அமில நீரினால் மோசமாகப் பாதிக்கப்படும். இதேபோன்றே பெரும்பாலான பறவையினங்களும் பாதிக்கப்படும். நீரில் வாழும் கீரி இனங்களின் (Otter) சுற்றாடலின் pH பெறுமானம் குறையும் போது, அவற்றின் எண்ணிக்கையும் குறைவது அவதானிக்கப்பட்டுள்ளது.

ஆராய்வோம்….

Related posts

சித்திராங்கதா – 36

Thumi202122

வினோத உலகம் – 03

Thumi202122

கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா…

Thumi202122

Leave a Comment