இதழ்-37

மலையக மக்களும் குடியுரிமைப்பிரச்சினையும் மு.சிவலிங்கத்தின் சிறுகதைகளை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு – 02

மலையக மக்களின் உணர்வுகளைச் சரித்திரமாகச் சொன்னால் எத்தனை பேர் அறிந்து கொள்வார்கள். ஆனால் ஒரு கலைப்படைப்பின் ஊடே வெளிப்படுத்தும் போது அதனை எண்ணிலடங்கா மக்கள் படித்து கண்கலங்குகின்றனர். அவ்வாறு அமைந்த ஒரு சிறுகதையே ஒப்பாரிக் கோச்சி.

ஒப்பாரி என்பது இறந்தவர்களின் நினைவால் அழுது புலம்புவது. கோச்சி என்பது பயணம் செய்யும் புகைவண்டி. இரண்டிற்கும் இடையில் என்ன தொடர்பு இருக்கின்றது. ஆனால் மு. சிவலிங்கம் இரண்டிற்கும் இடையில் ஒரு தொடர்பினை ஏற்படுத்தி விடுகின்றார்.

இச் சிறுகதையும் இக்குடியுரிமை பிரச்சினையால் நாடு கடத்தப்படும் ஒரு குடும்பம் பற்றியதாகவே அமைகின்றது. நாட்டை விட்டு வெளியேறுங்கள் என கூறுவது எளிது. ஆனால் காலம் காலமாக வாழ்ந்த ஒரு இடத்தை விட்டு, அந்தச் சமூகத்தை விட்டு, அச் சூழலைவிட்டு பிரிந்து செல்வது என்பது அவ்வளவு எளிதான ஒன்றல்ல. அதனை மு.சிவலிங்கம் நன்கு அறிந்து எழுதியுள்ளார்.
‘சுப்பிரமணி இந்தியாவுக்குப் போவதற்கான ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருக்கின்றான். முன் பின் அறியாத ஒரு ஊருக்கு தாய்நாடு என்ற பெயரை மட்டும் வைத்துக் கொண்டு மூன்று குமரிப்பிள்ளைகள், ஊரைத்தவிர வேறொன்றும் அறியாத மனைவி, வயசாகி நடை தளர்ந்த பெற்றோர,; அவர்களை இழுத்துக்கொண்டு இன்னொரு நாட்டில் போய் எப்படி புதிய வாழ்க்கையை ஆரம்பிப்பது என்ற சுப்பிரமணியத்தின் கேள்விதான் நாடு விட்டுச் சென்ற அனைவருடைய மனதிலும் இருந்தது.”

இதனை மு.சிவலிங்கம் ஒப்பாரிக் கோச்சி என்ற இச் சிறுகதையில் அழகாக வெளிப்படுத்தியுள்ளார்.

இலங்கையில் வாழ்ந்த வாழ்க்கையை விட இந்தியா சென்று அகதிகளாக வாழும் வாழ்க்கை இதை விடக் கொடுமையானது என்ற செய்தியையும் இச் சிறுகதையில் பதிவுசெய்துள்ளார்.

‘தம்பி இந்தியாவுக்கு வாற ஆசையை விட்டுபுடு. நாங்க ஏமாந்துட்டம் குடும்ப கார்டு எல்லாம் பொய். புனர் வாழ்வும் பொய். இங்கு இருக்குறவனெல்லாம் மனுசங்களே கிடையாது. திருட்டு, ஏமாத்து, பொய்தான் வாழ்க்க”

என்ற தங்கவேலுவின் கடதாசியில் உள்ள வரிகள் இந்தியாவிற்கு நாடு கடத்தப்பட்டோரின் துன்பங்களை வெளியிடுவதாக அமைந்துள்ளது.

துரிதமாக இவர்களை இந்தியாவிற்கு அனுப்ப வேண்டும் என்பதில் அரசாங்கம் கடுமையாக நடந்துகொண்டது. அவர்களை அடித்து துன்புறுத்தி கோச்சியில் அனுப்பிய பதிவுகளையும் ஆசிரியர் இச்சிறுகதையில் இணைத்துள்ளார்.
‘தலைமன்னார் கோச்சி பதுளையில் இருந்து காலை 6.00 மணிக்கு புறப்படும். இக்கோச்சியை ஒப்பாரிக்கோச்சி என பட்டப்பெயர் சூட்டியிருந்தார்கள்.” என்ற வரிகளில் கூறப்படுகின்ற ஒப்பாரிக்கோச்சி எனும் பெயரானது பொருத்தமானதாக அமைந்துவிடுகின்றது. காரணம் நாட்டைப் பிரிந்து செல்லும் மக்கள் இந்த கோச்சியிலே பயணிக்கிறார்கள். தங்களுக்கும் இந்த நாட்டுக்கும் தன் சமூகத்துக்குமான உறவு இந்த இடத்திலேயே அறுந்து விடுகின்றது. அதனை தாங்கிக் கொள்ள முடியாதவர்கள் கதறி அழுகின்றார்கள். அந்தக் காட்சியை மு.சிவலிங்கம் படிப்பவரை கண்கலங்க வைக்கும் வரிகளைக் கொண்டு புனைந்துள்ளார்.

‘கோச்சி வண்டிக்குள் ஏறியவர்கள் கரங்களை நீட்டி கீழே நிற்பவர்களை பிடித்துக்கொண்டு அலறும் அந்த துயரக்காட்சி உயிரையும் ஆத்மாவையும் பிடுங்கியது. ஒப்பாரி சத்தத்தோடு கோச்சி புறப்பட்டது. சட்டத்தின் முன்னால் மனித தவிப்புகள் எப்படியெல்லாம் சித்திரவதை செய்யப்படுகின்றது” என்ற ஆசிரியரின் கருத்தானது இந்த மக்களது ஓலங்களாக வெளிப்படுகின்றது.

குடியுரிமை பிரச்சினையின் பாதிப்பினை வெளிப்படுத்தும் மற்றுமொரு சிறுகதையாக ‘ஆயிரத்து தொளாயிரத்து நாற்பத்தெட்டு” எனும் சிறுகதை அமைந்துள்ளது. பிரஜாவுரிமை சட்டம் என்ற பெயரில் விசாரணைக்காக பல தடவை அழைக்கப்பட்டும் பிரஜாவுரிமை வழங்காமையைக் காட்டுகின்றது. இதனால் கணபதி என்பவன் படும் பாட்டையும் இறுதியில் விரக்தியில் குடித்துவிட்டு விசாரணைக்குச் சென்று சண்டை பிடிப்பதனையும் ஆசிரியர் காட்டுகின்றார். விசாரணை என்ற பெயரில் இம் மக்கள் பட்ட துன்பங்களை ஆழமாக மு.சிவலிங்கம் விளக்குகின்றார்.

மு.சிவலிங்கம் மலையக மக்களுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட சட்டங்களையும் அதனை ஆதரித்தவர் எதிர்த்தவர் பற்றிய விடயங்களையும் ஒரு கோவையாக சிறுகதைக்குள் புகுத்தி புதுமை செய்துள்ளார்.

‘சுதந்திரத்தால் எல்லோரும் ஆனந்த கூத்தாடினார்கள். மலையக தமிழர்கள் முகாரி ராகம் பாடினார்கள்.”

என்ற வாசகமே மலையக மக்களின் சொல்லெனா துன்பங்களைச் சொல்லுவதாக அமைந்து காணப்படுகின்றது.

இந்த வகையில் தொகுத்து நோக்கும் போது மு.சிவலிங்கம் அவர்கள் மலையக மக்களின் துயரங்களையும் அவர்களின் துன்ப நிலையினையும் ஏனையோரின் பார்வைக்குக் கொண்டு சென்றுள்ளார். இம் மக்கள் தன் வாழ்வின் முழு பகுதியையுமே துன்பத்திற்கு மட்டுமே அர்பணித்தவர்கள். ஒரு நாட்டில் குடியுரிமை என்பது ஒருவரின் அடையாளம். அந்த அடையாளமே கேள்விக்குரியதாகும் போது அவர்களுடைய வாழ்க்கையும் கேள்விக்குரியதாகின்றது.

இதனை மு.சிவலிங்கம் நன்கு உணர்ந்திருக்கின்றார். எனவேதான் குடியுரிமைப் பிரச்சினையால் மலையக மக்கள் பட்டத் துயரத்தையும் அதனால் அவர்கள் எதிர்நோக்கிய சவால்களையும் சிறுகதை எனும் வடிவத்தின் ஊடாக வடித்து உலகத்திறகுத் தந்துள்ளார். இவ்வகையில் இவர்களின் துன்பங்கள் வெளிப்படுத்தப்பட்டிருந்தாலும் இன்றும் இவர்கள் மறைமுகமாக நாடற்ற அகதிகளாக கணிக்கப்படுவதே வரலாறு காணாத உண்மையாக உள்ளது.

Related posts

குறுக்கெழுத்துப்போட்டி – 33

Thumi202122

சித்திராங்கதா – 36

Thumi202122

உலகக்கோப்பை 2021- நடந்தது என்ன?

Thumi202122

Leave a Comment