//வேரில் நான் அழுதேன் என் பூவோ சோகம் உணரவில்லை
வேஷம் தரிக்கவில்லை முன் நாளில் காதல் பழக்கமில்லை//
காதலென்ன காதல்! அன்பு – அரவணைப்பு என்பதே ரொம்பத்தூரம். கனவுகளும் கற்பனைகளும் அதீதமானவன். நிலவு போல தேய்ந்து வளரும் நிலையில்லா கற்பனை கடலில் தத்தளிப்பதும் எதிர்நீச்சலடிப்பதும் இவன் உள்ளியல்பு. ஆனால் அவன் சிந்தனை வீச்சு மனித உணர்ச்சி சீற்றங்களில் சிக்கி தவிக்காது, அறிவியல் சார் பார்வையாக மட்டுமே இருந்தது.

இப்பொழுது
//நீ என்பது எதுவரை எதுவரை
நான் என்பது எதுவரை எதுவரை
நாம் என்பதும் அதுவரை அதுவரை தான்//
நீயும் நானும் வேறில்லை; இனி நாம் என்பதே வாழ்வின் எல்லை வரை என முழுவதுமாய் தன்னை இழந்து காதலுக்கு ஒப்புக்கொடுத்திருக்கிறான். முப்பொழுதும் அவள் நினைவுகளால் தவிக்கிறான். தான் இப்படி ஆவேன் என்று சில வருடங்களுக்கு முதல் யாரேனும் அவனிடம் சொல்லியிருந்தால்,
யாருடா இவன் பைத்தியக்காரனென்று வைதிருப்பான். ஆனால் இன்றோ, ‘எப்பிடியிருந்த நான் இப்பிடி ஆகிட்டேன்’ என்ற நிலை.
//வாழ்வென்பது ஒரு முறை ஒரு முறை
சாவென்பதும் ஒரு முறை ஒரு முறை
காதல் வரும் ஒரு முறை ஒரு முறைதான்//

காதல் என்பது வெறும் ஓமோன்களின் ஆதீக்கம் என்று பிரசங்கம் செய்தவன், இன்று சாதாரணமாக வீதியில் நடந்தாலும் எவ்வளவு கடுமையான வேலையில் உழன்றாலும், மின்னல் கீற்றாய் இடைவெட்டி நிழலாக ஊசலாடி பின்னர் நிலையாக அவன் சிந்தனையை நிறுத்தி விடுகிறது அவளை தாங்கிய நினைவுகள். வீதிகளும் மதில்களும் ஏன் கடந்த காலமே இவனுடன் பேசும். நிச்சயமாக முன்பிருந்த இவன் இப்பொழுது இல்லை.

காதல் என்பது பித்து நிலை. முழு பைத்தியக்காரத்தனம்.
ஆனால், இருவர் இணைந்து வாழ காதல் என்ற பித்து நிலையை அடைய வேண்டியதில்லை என்பதும் இவனுக்கு தெரியாமலில்லை. அதற்கு பரஸ்பர புரிந்துணர்வே போதுமானது. ஒரு அறையில் தங்கியிருக்கும் இருவர் போல! தேவை ஏற்படும் போது உடல் ஆசையை தீர்த்துக்கொண்டும் இரு மனிதர்கள் அன்பையும் அரவணைப்பையும் நினைவுகளையும் நேரத்தையும் பகிர்ந்து கொண்டும் இன்னும் வேண்டுமென்றால் குழந்தைகளை பெற்றுக்கொண்டும் சந்தோஷமாக இங்கே வாழலாம். அதற்கு பெயர் தான் காதல் என்று யாரேனும் சொன்னால், இவன் ஒருபோதும் அதை ஏற்கமாட்டான். அதற்கு பெயர் புரிந்துணர்வு – அன்பு. அதையும் தாண்டிய நிலை தான் இவன் அகராதியில் “காதல்”. அது அவன் அனுபவத்தில் கண்ட உண்மை. Love is a pure Psychiatric illness.
//ஏதோ நான் இருந்தேன் என் உள்ளே காற்றாய் நீ கிடைத்தாய்
காற்றை மொழி பெயர்தேன் அன்பே சொல் மூச்சை ஏன் பறித்தாய்//

தான் என்பதை தாண்டி இன்னொரு நபரை தன்னோடும் தன் வாழ்வோடும் என்றைக்குமே சேர்த்துக்கொண்டு சிந்திக்காத மனிதன் இவன். தாய், தந்தை, சகோதரர்கள், நண்பர்கள் என்று எவருமே “நான் – என் வாழ்க்கை” என்ற அவனது வட்டத்துக்குள் வந்ததேயில்லை. இன்றோ, அவளை தாண்டி சிந்திக்க முடியாமல் தவிப்பது கொடுமை. அந்த வேதனையை அனுபவித்துக்கொண்டிருக்கிறான்.
பிரபஞ்சம் வழி ஏணி போட்டு கடவுளை தேடிக்கொண்டிருந்தவன், மதி கெட்டு தவிக்கும் தன் நிலையை அவளிடம் ஒப்பிக்கும் போதெல்லாம் அவள் அவனுக்கு எதிர்திசையில் பதில் சொல்வாள். இவனது அதிகபட்ச எதிர்பார்ப்பு அவள் தனக்காக ஏங்குவதாய் உணரும் ஒரு வார்த்தை. ஆனால் அவள் வீசும் வார்த்தைகள் இவனை உலுக்கும்.
//நீயா பேசியது என் அன்பே நீயா பேசியது
தீயை வீசியது என் அன்பே தீயை வீசியது//

அப்பொழுது கனவுகள் வழி உலகத்தை கண்டவன்; இப்பொழும் காதலின் வழி – காதலி வழி உலகை பார்க்கிறான். அவள் சரியாகவே செயற்பட்டாலும் தன்னை போல அவளும் பித்தாக இருக்கிறாள் என்பதை உணர்வதற்கு இவனுக்கு ஏக்கம். அவளுக்கு அவனை நன்றாக புரிந்தாலும் அவனுக்காய் இரங்கி போகிறவள் இல்லை. காதல் எவ்வளவோ அதை விட பிடிவாதம் அதிகம். அதை இழந்துவிட்டால் தான் காதலில் தடம் புரண்டு விடலாம் என்ற எச்சரிக்கை இயல்பிலேயே இருக்கக் கூடும். இவனுக்கு பித்து முற்றும் போதெல்லாம் அவள் காதலிலாளாகி அவன் மேல் வேல் பாய்ச்சுவாள். அது தான் அவள் காதலை வெளிப்படுத்தும் நிலை. விசித்திரமான விநோதம்!
//இரவிங்கே பகல் இங்கே தொடுவானம் போனதெங்கே
உடல் இங்கே உயிர் இங்கே தடுமாறும் ஆவி எங்கே
உருகினேன் நான் உருகினேன் இன்று உயிரில் பாதி கருகினேன்//
காதல் காதல் என்று பைத்தியம் பிடித்து திரியும் இவன். அவனை தெரிந்தும் புரிந்தும் பிடி கொடுக்காத இவள். அவள் எரிச்சலில் உதிர்க்கும் சின்ன சின்ன சொற்களிலேயே இதயம் கிழிந்து ரத்தம் கசிவதாய் துடிக்கும் இவன், அவளை முற்றாக புரிந்து காதலில் ஆதிக்கம் செய்ய வேண்டுமென்ற ஆசையிலேயே அடி வாங்கி பின்னால் அலைவான். வேதாளம் தொடர்ந்து தப்பித்தாலும் விக்கிரமாதித்தன் வெல்லும் நாள் வரும் என்பது இவன் நம்பிக்கை.

//உனக்கென்றே உயிர் கொண்டேன் அதில் ஏதும் மாற்றம் இல்லை
பிரிவென்றால் உறவுண்டு அதனாலே வாட்டம் இல்லை
மறைப்பதால் நீ மறைப்பதால் என் காதல் மாய்ந்து போகுமா//
ஏன் மறைக்கிறாள்? ஒரு வார்த்தை சொல்லிவிட்டால் நான் ஏன் இப்படி இருக்கிறேன்? என்னை விட்டு ஏன் இவ்வளவு தூரம் போகிறாள்? நான் என்ன பிழை செய்தேன்? ஏதும் பிடிக்கவில்லையா? ஒரே இப்படியே போனால்? இவனது சஞ்சல மனம் அத்தனை பக்கமும் கோணும். அவள் நினைத்தால், ஒரு நொடியில் அவனை சரி செய்ய இயலும்! அவள் செய்வதில்லை; அவள் செய்ய வேண்டும் என்று எதிர்பார்த்து எதிர்பார்த்து இவன் வலியும் தீர்வதில்லை.

உச்சமாய் பைத்தியம் தூய அன்பின் கத்தி முனையில் நர்த்தனமாடும்! என்னை போல அவள் காதலில் உருகவில்லையா? ஏன் அவள் என் மேல் பைத்தியமாகவில்லை? நான் சரியில்லையா? அதற்கு தகுதியில்லையா?
//கண்களிலே உன் கண்களிலே பொய் காதல் நாடகம் ஏனடி
அன்பினிலே மெய் அன்பினிலே ஓர் ஊமை காதலன் நானடி//
இனிக்கும் சொற்களுக்கு சொந்தக்காரி சுடு சொற்களால் இவனை சிதைப்பாள். அந்த இடத்தில் நேரம் ஸ்தம்பிக்கும். இவனது அத்தனை சிந்தனைகளும் இடம்மாறி அலைவரிசைகள் குழம்பி தடுமாறும். இவனது இயக்கம் நிற்கும். சுற்றி தனிமை. அவள் தன்னை விட்டு சென்று விட்டாள் என்ற வெறுமை. System collapsed.
//நீயா பேசியது நீயா பேசியது அன்பே நீயா பேசியது//

ஜெஸ்! காதலர் சண்டை. அதிகம் போனால் நான்கு நாட்களுக்குள் மீண்டும் கட்டிக் கொள்வார்கள். ஆனால் இன்றைய தவிப்பு நிஜம். முழுவதுமாக காதல் என்ற பைத்தியத்தில் எவ்வளவு தூரம் தான் மூழ்கியிருக்கிறேன் என்று இவன் உணரும் நாட்கள் அது. தன் இயலாமையை நினைத்து வெட்கிப்பான். இதிலிருந்து வெளியில் வரவேண்டும் என்று கூட நினைப்பான். அந்த முயற்சியும் அவளை பற்றியே என்பதால், அது இன்னும் ஆழத்திற்கு அவனை இழுத்து அமிழ்த்தும்.
இது இவன் கதை மட்டும் தான். அவள் கதையை சொல்வதில்லை என்பது தான் இவன் பிரச்சினை.
//வேரில் நான் அழுதேன் என் பூவோ சோகம் உணரவில்லை
வேஷம் தரிக்கவில்லை முன் நாளில் காதல் பழக்கமில்லை//
முன் நாளில் காதல் பழக்கமில்லை.
