இதழ்-37

துருப்பிடிக்காது இருப்பது எலும்பு மட்டும் தான்

‘இலங்கையில் சடலமாக மீட்கப்பட்ட தமிழக மீனவர் – திருமணமாகி 40 நாட்களே ஆனவர்”

‘கடலுக்கு சென்ற மீனவர்கள் இருவர் காணாமல் போயுள்ளனர். யாழ்ப்பாணம் – நெடுந்தீவு கடற்பரப்பில் காணாமற்போன இரு மீனவர்களை தேடும் நடவடிக்கை தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.”

‘தமிழக மீனவர்கள் சென்ற படகு லட்சத்தீவு அருகே கடலில் மூழ்கியது: மீனவர்களை தேடும் பணி மும்முரம்”

‘யாழ் வடமராட்சி கடற்பரப்பில் கடற்தொழிலுக்கு சென்ற பதினைந்திற்கு மேற்பட்ட படகுகளும் நாற்பந்தைந்திற்கும் அதிகமான மீனவர்களும் நான்கு நாட்களாகியும் இன்னும் கரை திரும்பவில்லை என்று உறவினர்கள் பொலீஸில் முறையிட்டுள்ளனர்.”

இப்படி இன்னும் பல செய்திகள் எமக்கு கேட்டு கேட்டு பழகிவிட்டது. அந்த செய்திகளில் பெரும் சுவாரசியம் எதுவும் இல்லாததால் அவற்றை நாம் உண்மையில் பொருட்படுத்துவது கூடக் கிடையாது.
பத்திரிகைகளில் குறுகிய இடத்தில் சிறிய தலைப்புகளில் கடந்து போகும் இந்தச் செய்திகள் நமக்கும் ஒரு மீனவக் குடும்பத்தலைவனிற்கும் வெவ்வேறானவை.
கடல் என்றால் பயந்தான். ஆனால் பயந்தால் யார் வாழவைப்பது? யார் வாழ விடுவது?
என்னதான் செய்யினும் கடலைமட்டுமே நம்பி கடமை செய்யும் கரைவாழ் மக்களின் கண்ணீரில் உப்பின் செறிவை ஒப்பிட்டுப் பார்க்கவே இம்முறை அட்டையில் ஒரு காட்சி சாட்சியமாகிறது.
மீண்டும் ஒருமுறை முன் அட்டையை உற்றுப் பாருங்கள். இந்த உப்புக்
காற்றில் துருப்பிடித்துக்கிடக்கிறது ஒரு சுக்கான்.

சுக்கான் இரும்பில் துரு. சமைக்கும் அடுப்பில் துரு. நட்ட கம்பியில் துரு. விசைப்படகின் விளிம்பில் துரு. இன்னும் துருப்பிடிக்காதிருப்பது அவர்களின் எலும்பு மட்டுந் தான்.

காற்றை எதிர்த்துக் கடலையே
கிழிக்கும் வீரர்களால் தம் குடும்பத்தின் வறுமைக்கோட்டை மட்டும் தாண்டிச் செல்ல முடிவதில்லை. ஆனால் விடாத உழைப்பில் வெற்றி கிட்டும் என்கிற நம்பிக்கையையே வாழ்நாள் முழுக்க சுமக்கின்றனர். கரையில்
தொலைத்த வாழ்க்கையைக்
கடலில் தொடர்ந்தும் தேடிக்
கொண்டிருக்கிறார்கள்.

மனிதனின் முதல்தொழில் மீன்பிடித்தல்தான். வேட்டையே மீன் வேட்டையில்தான் ஆரம்பித்தது.அந்தப் பழந்தொழில் செய்த இனம் இன்னும் பழையதாகவே இருக்கிறது. துருப்பிடித்த வாழ்க்கையிலும் தொழில் தர்மம் மட்டும் காக்க அவர்கள் தவறியதில்லை.

ஆனைக்கொரு காலம். பூனைக்கொரு காலம். இவர்கள் ஆனையும் இல்லை. பூனையும் இல்லை. இவர்களுக்கென்றொரு காலத்தை இவர்கள் கனவில் மட்டுமே காண்கின்றனர். மீன்நாற்றத்தில் மூக்கு முடிக்கொள்கிற சில மனிதர்களைப் போலவே இவர்களையும் பார்த்துக்
கண்முடிக் கொள்கிறது காலம்.

இயற்கை தாலாட்டினால்
இந்தக் கடல் இவர்களுக்குத்
தொட்டில். இயற்கை தள்ளிவிட்டால் இதே கடல் – கல்லறை. பொங்கினாலும் பொறுத்தாலும் அவர்கள் நெய்தலின் தெய்வமல்லவா கடல் மாதா? கைதொழ கடைசி வரை மறக்கமாட்டார்கள்.

கரைகளில் நின்று கால் நனைத்து மகிழும் எமக்கும் இவர்களிற்கும் கடல் என்பது வேறுவேறானது. கடல் மீது இவர்கள் கொண்ட பயமோ பற்றோ பக்தியோ பாசமோ நன்றியோ நம்பிக்கையோ எதுவும் எம்மால் உணரமுடிவதில்லை. அது கடலோடு அவர்கள் கொண்ட ‘காதல்”

எத்தனை செய்திகள் பத்திரிகைகளில் வந்தாலும்
படித்து மூடி வைத்து விட்டு மீண்டும் கடலை நோக்கியே பயணிக்கும்
அவர்கள் காதல் எப்போதும் புனிதமானது!!!
மனிதர் உணர்ந்து கொள்ளவும் முடியாதது!!!

Related posts

சித்திராங்கதா – 36

Thumi202122

உலகக்கோப்பை 2021- நடந்தது என்ன?

Thumi202122

சித்திரக்குள்ளனின் சாபம்

Thumi202122

Leave a Comment