புகழின் மயக்கத்தில்
அதியுச்ச சோகத்தில் புத்தி அவ்வளவாக வேலை செய்வதில்லை என்பதனை சாதகமாக்கி சித்திராங்கதாவை தன் இல்லம் நோக்கியே வரவழைத்து விட்டான் உக்கிரசேனன். அவளும் அதிகம் யோசனையில் ஆழ்ந்தவாறே உக்கிரசேனனின் சிறுமனைக்கு வந்து சேர்ந்தாள்.
‘நாட்டிய கலாராணிக்கு என் காலை வணக்கம்’ என்று வணங்கி வரவேற்றான் வன்னி மன்னன் வன்னியத்தேவன். உக்கிரசேனனும் ஓரமாக வணங்கியபடி நின்றான்.
வன்னி வேந்தர் தனக்கு இத்தகைய மரியாதை அளிப்பதில் ஆச்சர்யம் கொண்டாள் சித்திராங்கதா. தன் கலைக்கான கௌரவம் இது என கர்வத்தோடு ஏற்றுக்கொண்டே ‘வணங்கங்கள் வன்னி வேந்தரே, தாங்கள் என்னை சந்திக்க விரும்பிய நோக்கத்தை நான் அறிந்து கொள்ளலாமா?’
‘ஆடற்கலையின் அபூர்வசக்தி கொண்ட மாதர் தம்மை என் ராஜமாளிகையில் பெருவிருந்திற்கு அழைக்காமல் இப்படியொரு சிறு குடிலில் அழைத்ததைக்காக அதிகம் வருந்துகிறேன். ஆயினும் தங்களை காண்கின்ற வாய்ப்பை தவறவிட துணியாமலே இச்சந்திப்பை நிகழ்த்தியாக வேண்டும் என்று உக்கிரசேனனிடம் கூறினேன். தங்கள் கலையின் பரமரசிகனாய் தங்களைச் சந்திப்பதில் பேரானந்தம் கொள்கிறேன்’
இப்படியான உயர்வுமொழிகளைக் கேட்ட சித்திரங்கதா இவ்வேளை தன் நாட்டிய அரங்கேற்றம் நிகழாமையால் மனமுடைந்து நிற்பதை அவ்விடத்தில் வெளிக்காட்டக் கூடாது என முடிவு செய்தாள்.
‘தன் ஆட்டத்தை இதுவரை எங்கேனும் தாங்கள் கண்டதாய் அறியேன். உக்கிரசேனனின் வார்த்தைகளை மட்டுமே நம்பி என் பரமரசிகன் ஆனதாய்ச் சொன்னால் தாங்கள் உக்கிரசேனனின் வார்த்தைத்திறமைக்கல்லவா இரசிகனாகி இருக்கிறீர்கள்? மாறாக என் நாட்டியத்தின் இரசிகன் என்று எங்ஙனம் உரைக்கின்றீர்கள்?’ என்றாள் ஒரு மிடுக்கான குரலோடு
‘தங்களது ஆட்டத்தை நான் இதுவரை கண்டதில்லை என்பது உண்மைதான். ஆனால் கண்ணால் காணாது புகழுரைகளை நம்பி பெருரசிகன் ஆவதென்பதும் பொய்க்கதையென்றல்லவே தேவி’
‘இருக்கலாம். ஆனாலும் என் நாட்டியத்தைக் காணதவர்கள் கூறும் புகழுரைகளை ஏற்பதில் எனக்கு எப்போதும் உடன்பாடு இருப்பதில்லை’ என்று தெளிவாகவே கூறினாள்.
‘காணுவதற்காகத்தானே காத்திருந்தேன். தக்க நாள் சித்திரை முழுநிலவு என பொறுமையோடு காத்திருந்தேன். அரங்கேற்ற வேளையில் யாழ்ப்பாணம் வருவதற்காய் ஆயத்தமாகவே இருந்தேன். குறித்த நாளில் நானும் வந்தேன். ஆனால் காரணங்கள் தான் எல்லாம் மாறிவிட்டன. மன்னிக்கவும். மாற்றி விட்டார்கள்.’
‘மாற்றப்பட்டதே தங்களைப் போன்ற மன்னர் பிரபுக்களுக்காகத்தானே’
‘ஆனால் மாற்றியது தங்கள் யாழ்ப்பாண மாமன்னர் அல்லவா? ‘
‘மாமன்னரின் ஆணைக்கு அரசர்கள் தாங்களே கட்டுப்படும் போது வணிகர் மகள்- நான் மட்டும் கொடி பிடித்து எதிர்க்கவா இயலும்?’
‘அதெப்படிக் கூறுகிறீர்கள் தேவி? தாங்கள் வணிகர் மகள் என்பது தங்கள் பிறப்பின் அடையாளம் மட்டுமே. தங்கள் கலையழகு மூலம் நாட்டிய கலாராணியாய் மூடிசூடிக் கொண்டவராவீர்கள் தாங்கள். யாழ் வேந்தனிற்கு இத்தேசந் தாண்டி புகழோ மதிப்போ கிடைப்பதென்பது அரிது. ஆனால் தம் கலையின் புகழ் வடநாடு தாண்டியும் தமக்கு மரியாதை தரவல்லதாகும். வடநாட்டு வேந்தர்கள் கூட தம் கலையழகு கண்டால் தங்கள் காலடியில் விழுந்து கிடப்பர். ஆனால் தாங்களோ யாழ்வேந்தரின் ஆணைக்கு கட்டுப்பட்டு நிற்பதுதான் எனக்கு அநாவசிய ஆச்சரியத்தை அளிக்கிறது தேவி. தம் அரங்கேற்றத்தை தாங்கள் எக்காரணம் கொண்டும் நிறுத்தியிருக்கக் கூடாது தேவி’ என்றான் வன்னியத்தேவன்.
வன்னியத்தேவர் கூறிய வார்த்தைகள் கேட்டு சித்திராங்கதா இன்னும் அதிக மிடுக்குடன் நிமிர்ந்தாள். அவள் அறிவை இயங்கச்செய்யாதபடி அப்புகழுரைகளை அவள் மீது அள்ளி வீசினான் வன்னியத்தேவன்.
‘அரங்கேற்றத்தை நான் நிறுத்தவில்லை என நீர் அறிவீரன்றோ வன்னித்தேவரே, நாட்டில் அவசர கடமைகள்- அதாவது தங்களது வன்னியர் விழாவிற்காகவே நிறுத்தப்பட்டது’
‘ஆமாம்… ஆமாம்… நேற்று நிகழ்ந்த வன்னியர் விழா அவ்வளவு அவசரகாரியம் போல்த்தான் நிகழ்ந்தது’ என்று கூறி கோரமாகச்சிரித்தான் வன்னியத்தேவன்.
‘எல்லாம் அர்த்தமற்ற காரணங்கள் என்று தாங்கள் உணரவில்லையா தேவி? நேற்றைய விழா என்பதே வன்னியரிடம் இருந்து திறை சேர்த்துக் கொள்ள நடாத்தப்பட்ட அவசர நாடகமேயாகும். தவிர அப்படி எந்த அவசிய கருமம் பற்றியும் அங்கு பேசியதாய் எனக்கு நினைவில்லை. இது தங்களுடைய அரங்கேற்ற விழாவை அவசரமாக தடுத்து நிறுத்த வேண்டியே ஏற்பாடு செய்யப்பட்ட விழா என்றுதான் எனக்குத் தோன்றுகிறது.’
‘என்ன கூறுகிறீர்கள் வன்னியத்தேவரே? தாம் கூறுவது பெருங்குழப்பத்தை என்னிடம் உண்டாக்குகிறது.’
‘தங்களை குழப்பும் நோக்கம் என்னுடையதல்ல தேவி. அது யாழ் ராஜகுலத்தவர்கள் ஆற்றுகின்ற சதிச்செயல் ஆகும்.
ஆம். இன்னும் விளக்கமாய்ச் சொல்வதாயின் தன் கைப்பொம்மையாய் யாழ்வேந்தரை கொண்டு கருமமாற்றுகிற ராஜமந்திரி ஏகாம்பரம் தொண்டமனாரே இதற்கு காரணமாகும். தங்கள் அரங்கேற்றத்தை வேண்டுமென நிறுத்தியதும் அவரது கைவண்ணமே ஆகும் தேவி’ என்று எங்கோ தீர்க்கமான பார்வையுடைய கண்களோடு கூறிக்கொண்டிருந்தான் வன்னியத்தேவன்.
‘ராஜமந்திரியாரா? அவர் எதற்கு அப்படிச் செய்ய வேண்டும் வன்னியத்தேவரே? தாம் கூறவருவதை தெளிவாய்க் கூறினால் உபகாரமாய் இருக்கும். மேலும் மேலும் என்னைக் குழப்பாதீர்கள்’
‘கூறுகிறேன் தேவி. ராஜமந்திரியார் என்பவர் படமெடுக்கும் ராஜநாகத்திலும் ஆபத்தானவர் தேவி. அவர் பிடியிலிருந்து தங்கள் மாமன்னர் சங்கிலியர் கூட தப்பிக்க முடியாது. தாங்களும் அந்தப் பிடிக்குள் சிக்கிக்கொண்டு விடுவீரோ என்கிற அச்சத்தில் தான் இப்போது இதை தங்களிடம் கூறுகிறேன்.’
‘தாங்கள் சொல்வதே உண்மை என்றால் ராஜமந்திரியாருக்கும் எனக்கும் பகை என்ன இருக்கிறது? அவர் எதற்கான என் அரங்கேற்றத்தை நிறுத்த வேண்டும்?’
குழப்பத்தின் உச்சத்தில் சித்திராங்கதாவிடம் பொறுமை இருக்கவில்லை. அடுக்கடுக்காய் கேள்விகளைக் கேட்டாள். வன்னியத்தேவன் கூறுவதை முழுவதுமாய் நம்ப முடியவில்லையாயினும் அதில் ஏதாவது உண்மை இருக்குமோ என்கிற கேள்வி அவளை தொடர்ந்து அவன் பதிலிற்காய் காக்க வைத்தது.