சீனாவில் ஆற்றைக் கடக்கும் சிவப்பு மான்கள்
சீனாவில் சிவப்பு மான்கள் என்று அழைக்கப்படும் அரிய Yarkand இனத்தைச் சேர்ந்த மான்கள் குட்டிகளோடு டரிம் (Tarim) ஆற்றைக் கடக்கும் காணொலியினை வனத்துறையினர் வெளியிட்டுள்ளனர்.
சிவப்பு மான்களை கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது இந்த காட்சியை காணும் வாய்ப்பு கிடைத்ததாக குறிப்பிட்டுள்ள வனத்துறையினர் சிவப்பு மான்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
மெக்சிகோவில் கண்டெடுக்கப்பட்ட மாயன்களின் படகு
ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட படகு ஒன்று மெக்சிகோவில் சேதமடையாத நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. மாயன் நாகரிகத்தை சேர்ந்ததாக நம்பப்படும் இந்த படகு, Chichén Itzá எனப்படும் மாயன்களின் அழிவடைந்த நகரின் அருகில் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
5 அடிக்கு சற்று அதிகமான நீளத்தையும் 2.5 அடி அகலத்தையும் கொண்டுள்ள இந்தப் படகானது குடிநீர் மற்றும் சடங்குகளுக்கான பொருட்களை கொண்டுசெல்ல பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என மெக்சிகன் தொல்லியல் நிறுவனத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஸ்பெயினில் பிறந்துள்ள அரிய வகை வெள்ளை சிங்கங்கள்
ஸ்பெயினில் உள்ள விலங்குகள் காப்பகம் ஒன்றில் இரண்டு வெள்ளை நிற ஆபிரிக்க சிங்கக்குட்டிகள் பிறந்துள்ளன.
இவை தற்போது விஷேட பராமரிப்பு மற்றும் உணவளித்தலுக்காக அன்டலூசியாவிலுள்ள சிறப்பு அறை ஒன்றில் வைத்து பராமரிக்கப்படுகின்றன.
இவற்றின் பெற்றோர் சாதரண ஆபிரிக்க சிங்கங்களாக இருப்பதனால் அவற்றிடமிருந்து வெள்ளை சிங்கக்குட்டிகள் பிறந்துள்ளமை அனைவரையும் ஆச்சரியத்தில் ஆற்றியுள்ளது.
உலக வெள்ளை சிங்கங்கள் பாதுகாப்பு அறக்கட்டளையானது, இவை அல்பினோக்கள் இல்லை என்பதை உறுதிப்படுத்தியதோடு தென்னாபிரிக்காவின் Krueger தேசிய பூங்காவின் Greater Timbavati பகுதியை சேர்ந்த அரிய வகையை சேர்ந்தவை எனவும் குறிப்பிட்டுள்ளது.
1930 களில் வெள்ளை சிங்கங்கள் காடுகளில் இருந்து அகற்றப்பட்ட நிலையில் தற்போது 13 க்கும் குறைவான வெள்ளை சிங்கங்களே அவற்றின் இயற்கையான வாழிடங்களில் வாழ்கின்றன.
1200 அடி உயரத்தில் தொங்குவதற்கான புதிய சுற்றுலா தளம்
நியூயார்க் நகரில் உள்ள ஹட்சன் யார்ட்ஸ் எனும் வானுயர்ந்த கட்டடத்தில் “சிற்றி கிளைம்ப்” எனும் புதிய சுற்றுலா தளம் நவம்பர் 9 இல் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இதில் சுமார் 1200 அடிகள் மேலே ஏறிய பின்னர் அங்குள்ள தளத்திலிருந்து பாதுகாப்பு பெல்ட்டினை அணிந்து சிறிது நேரம் வெளியே தொங்கி கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.