“மயில் போல பொண்ணு ஒன்னு
கிளி போல பேச்சு ஒன்னு
குயில் போல பாட்டு ஒன்னு
கேட்டு நின்னு மனசு போன இடம் தெரியல
அந்த மயக்கம் இன்னும் தெளியல …”
பெண்கள் என்றாலே அழகு!
சிரித்தாலும், அழுதாலும், கோபப்பட்டாலும், வெட்கப்பட்டாலும், சண்டை போட்டாலும், சோம்பல் முறித்தாலும், கூந்தலை ஒதிக்கினாலும், புருவத்தை தூக்கி பேசினாலும், உதடு சுளித்தாலும்…இப்படி பெண்ணுக்கு எல்லாமே பேரழகுதான்…
ஆணுக்கு?
அட்டைப்படத்தை மீண்டும் ஒருமுறை பாருங்கள்!
அழகானவற்றை கண்டாலே பெண்களிற்கு ஒப்பிட்டு விடுகின்ற கவிஞர்கள் மறந்துபோன உண்மை எது தெரியுமா? தோகை விரித்து ஆடுகின்ற கானமயில் – கலாபமயில் எல்லாமே ஆண்மயில்கள் தானே? பிறகு எப்படி மயில் போல பொண்ணு ஒன்னு? இந்த முரணோடு கொஞ்சம் முன்னேறிப் பார்ப்போம்.
மயில் ஆடுவதைப் பார்த்தால் விலகிச் செல்ல மனம் இடந்தராது. காணக் காணக் கானமயிலின் ஆட்டம் உள்ளத்தினை இன்பத்தில் ஈரமாக்க வல்லது. மேகத்தைக் கண்ட அந்த நொடியே மயிலுக்குக் கொண்டாட்டம் தொடங்குகிறது. மழை பெய்தால் அடடா அதன் ஆனந்தத்தின் உச்சமாய் தோகை விரிக்கிறது.
தான் கவிமழை சிந்தக் கண்டு களிக்கும் கலாப மயிலே என்று சகலகலாவல்லியினை அழைத்து மகிழ்ந்தார் குமரகுருபரர். அது என்ன கலாபமயில் ? கலாபம் என்றால் ஆண்மயிலின் தோகை . தோகை விரித்தாடும் மயிலினையே கலாபமயில் என்கிறார்களாம். உண்மையில் அது மட்டுந்தானா? அப்போது கலாபக்காதலன் என்பது? இங்கு முரணில்லாமல் மயில் ஓர் ஆணிற்கு உவமையாக்கப்பட்டிருக்கிறது போல் தெரிகிறதல்லவா? வாருங்கள். கொஞ்சம் துலாவிப்பார்ப்போம்.
உண்மையில் மயில் மழையைக் கண்டுதான் தோகை விரித்து கொண்டாடுகிறதா என்றால் இல்லை. அது தன் துணையை கவர்வதற்காய்த்தான் போராடுகிறது. துணையின் பார்வையில் தன் அழகிய தோகை தென்படும்வரை அது ஆடுகின்ற ஆட்டமே எமக்கு கொண்டாட்டமாய்த் தெரிகின்றது.
உடல் வேட்கை கொண்ட ஆண் மயில், பெண் மயிலைக் கவர்வதற்காக மோக மிகுதியில் தோகை விரித்து ஆடும்போது அதன் உயிர்ச்சக்தி தரையில் விழும். ஈர்க்கப்பட்ட பெண் மயில் அதனைக் கொத்தி உண்டு கருத்தரிக்கிறது. அறிவியல்பூர்வமாக இது தவறென்றாலும் இலக்கியக்கூற்றுக்கு இந்த காதலையே கலாபக்காதல் என்று கவிஞர்கள் பயன்படுத்திக்கொள்கிறார்கள். மயிர் நீத்தால் உயிர் நீக்கும் கவரிமான் போல் – பாலைத்தனியே பகுத்துண்ணும் அன்னப்பட்சி போல் – பொய்யாகவே இருந்தாலும் கவிதைகளிற்கு இந்த கலாபக் காதல் கருப்பொருளும் அழகாய் கைக்கொடுக்கிறது.
தூரங்களால் கலந்து மனங்களில் இணைந்த காதலே இந்தக் கலாபக்காதல். காரணங்களற்ற காதலாகி ஓர் ஈர்ப்பின் விளைவாக தொடாமல் கொள்ளாமல் தொலைவிலிருந்து காதல் செய்பவனையே ‘கலாபக் காதலன்’ என்று சொல்லி வைத்திருக்கிறார்கள்.
“ஒன்றா ரெண்டா ஆசைகள்
எல்லாம் சொல்லவே ஓர் நாள் போதுமா
அன்பே இரவைக் கேட்கலாம்
விடியல் தாண்டியும் இரவே நீளுமா
என் கனவில் நான் கண்ட
நாள் இதுதான் கலாபக் காதலா
பார்வைகளால் பல கதைகள்
பேசிடலாம் கலாபக் காதலா’
பல நாள் காத்திருந்த தனிமை நிறைந்த ஓர் இரவு புது மணம் கொண்ட ஆணுக்கும் பெண்ணுக்கும் ஆகச்சிறந்த முதல் இரவாக ஆசீர்வதிக்கப்படுகிறது. நீளக்கூடாத இரவில் பார்வைகளால் மட்டுமே பல கதைகள் பேச கணவனை ‘கலாபக் காதலா’ என்று அழைக்கிறாள் காதல் மனைவி. அதாவது இணையாமல் பார்வையில் பேசிக்கொள்ளும் காதலை ‘கலாபக் காதல்’ துணைகொண்டு எழுதுகிறார் கவிஞர் தாமரை.
‘கலாபம் போலாடும் கனவில் வாழ்கின்றேனே
கைநீட்டி உன்னை தீண்டவே பார்த்தேன் ஏனதில் தோற்றேன்
தள்ளிப் போகாதே’
காதல் கொண்ட கனவில் காதலியின் காதல் மொழியை யாசிக்கும் ஆணின் தவிப்பு இது. உயிர்போகும் தருவாயில் காதல் சொல்லப்பட்டாலும் அதுவரை தூரத்திலிருந்து காதல்கொண்டு வாழ்ந்த வாழ்வை இந்த இடத்தில கலாபக் காதல் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
எத்தனையோ காதல் முறைகளை இலக்கியங்கள் கற்றுத் தந்தாலும் இந்த மயில் காதல் வேறொரு பரிணாமம். அது செயற்கையற்ற இயற்கையான ஓர் அழகை எடுத்துக்காட்டுகிறது. கலாப மயில் ஆண்களுக்கான பேருவமையாக அமைந்து விடுகிறது.தொலைவிலிருந்தே தன் துணையை வசீகரிக்க ஆண்கள் எடுத்துக்கொள்ளும் பகீரதப் பிரயத்தனங்கள் எல்லாமே கலாபங்கள் ஆகி நிற்கின்றன.
உலக மங்கையர்களின் அனைவரையும் தன் மந்திரகீதத்தால் வசப்படுத்தும்
மாதவன் கூட தன் பூங்குழலிலும் சிகையிலும் மயிலிறகினையே ஆதரமாய்க் கொண்டுள்ளான். மாதவனை மிஞ்சிய கலாபக்காதலன் இருக்கமுடியுமா என்ன?
இன்னொரு பக்கம் அழகன் வடிவேலன் மயில் மீதே ஏறி வருகிறான். வள்ளியினை கவர்ந்தும் சென்றுவிட்டான். கலாபக்காதலன் கதைகள் இப்படி ஏராளம் சொல்லமுடியும்.
ஏன்? பிரதோஷ காலத்தில் சிவபெருமானுக்கு கூட ‘பிஞ்சகன்’ என்று பெயர். பிஞ்சகன் என்றால் மயில் தோகையுடன் ஆடுபவன் என்று பொருள். சிவன் மயில்த்தோகையுடன் ஆடும் அந்த தாண்டவத்திற்க்குத்தான் பிரதோஷ தாண்டவம் என்று பெயராம்.
இப்படி வாழ்வியல் வழி கூற வந்த இறைவர்கள் கூட ஆணாக பிறந்தமையால் கலாபக்காதலர்களாகவே வாழ்ந்துள்ளனர்.
தன் காதலினை வெளிப்படையாக வெளிப்படுத்தமுடியாமல் இரகசியமாய் தன் துணையை கவர ஆண்கள் செய்கின்ற அத்தனை கலாபங்களும் எவ்வளவு இரசனையானவை என இனி சிந்தித்துப் பாருங்கள்.
இனி அழகும் ஆண்மையும் இணைகின்ற நொடியில் ஒரு கலாபமயில் எம் கண்களிற்கு தென்படத் தொடங்குமல்லவா? தூரத்தில் ஒளிரும் ஒவ்வொரு ஆணின் கலாபங்களின் செயற்கைத்தனமில்லாத இயற்கையினை உணரத்தொடங்கினால் ஓர் உண்மை நமக்கு புலப்படும்.
அழகு என்பது ஆண்பால்தான்!