இதழ்-38

குருவை மிஞ்சிய சீடன்

தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமன் மரத்திலேறி அதில் தொங்கும் உடலைக் கீழே வீழ்த்தினான். பின்னர் அவன் கீழேயிறங்கி, அதைத் தூக்கிக் கொண்டு மயானத்திலிருந்து செல்லுகையில், அதனுள்ளிருந்த வேதாளம்,

‘மன்னா! யாரையாவது பழி தீர்ப்பதற்காக இந்த நள்ளிரவில் மயானத்தில் அலைந்து திரிந்து உன்னை நீயே வருத்திக் கொள்கிறாயா? உன் நோக்கம் தான் என்ன? உன்னைப் போல் சிலர் உணர்ச்சி வசப்பட்டு ஏதாவது சபதம் எடுத்துக் கொள்கிறார்கள். ஆனால் பல ஆண்டுகளுக்குப் பின் அவர்களுடைய ஆவேசம் தணிந்து போய் விடுகிறது. குணவீரமன் என்ற இளைஞன் தனது சிந்தனைகளைப் புரிந்து கொள்ளாத கிராமத்தினரை வெறுத்து அவர்களை விட்டு விலகியவன். இறுதியில் அவர்களிடமே மீண்டும் திரும்பி வந்தான். அவனுடைய கதையை உனக்குக் கூறுகிறேன் கேள்!” என்றது.

அன்னாவரம் என்ற கிராமம் மலைகள் சூழ்ந்த இயற்கை எழில் நறைந்த கிராமம். அங்கிருந்த விவசாயிகள் பல நூதனமான பயிர்களை விவசாயம் செய்து வந்தனர். பலவிதமான கிழங்குகளையும், பழமரங்களையும் மூலிகைகளையும் பயிர்செய்து, அவற்றையே தங்கள் முக்கிய உணவாகவும் கொண்டு இருந்தனர்.

அந்த கிராமத்தில் குணவர்மன் என்ற இளைஞன் வசித்து வந்தான். சிறுவயது முதலே, அவன் தீவிர சிந்தனையாளனாக இருந்தான். எப்போதும், எதைப் பற்றியாவது சிந்தித்துக் கொண்டேயிருந்தவனை, கிராமத்தினர் சோம்பேறி என்று இளக்காரம் செய்தனர். அவனுடைய வாழ்க்கையின் கண்ணோட்டமே வேறுவிதமாக இருந்தது. கிராமத்து மனிதர்களுடைய வாழ்க்கைமுறை அவனுக்குப் பிடிக்கவில்லை.

‘கடவுள் கொடுத்த பகுத்தறிவை நன்குப் பயன்படுத்த வேண்டும். கற்றுக் கொள்ள வேண்டிய விடயங்கள் உலகில் எத்தனையோ இருக்கின்றன.” என்பது போன்ற அவனுடைய புதுமையான சிந்தனைகள் கிராமத்தினரின் மூளையில் நுழையவில்லை.

தன்னுடைய புதிய கருத்துகளை யாரும் ஏற்காததால் சலிப்படைந்த குணவர்மன் ஒருநாள் தன் தந்தையிடம்,

‘அப்பா! இங்குள்ள மக்கள் இயந்திரம் போல் இயங்குகின்றனர். இங்கிருந்தால் என் வாழ்க்கை வீணாகிவிடும்! தண்டகாரண்யக் காட்டில் புஜங்கர் என்பவர் நடத்தும் குருகுலத்தில் சேர்ந்து, என் கல்வி அறிவை அபிவிருத்தி செய்து கொள்ள விரும்புகிறேன். பிறகு அங்கிருந்து திரும்பி வந்து, எந்த கிராமத்தினர் என்னை ஏளனம் செய்கின்றனரோ, அவர்கள் எனக்கு மரியாதை செலுத்துமாறு செய்வேன்!”

என்று கூறி விட்டு, தண்டகாரண்யத்தை நோக்கிச் சென்றான்.

புஜங்கரின் ஆசிரமத்தை நெருங்கிக் கொண்டு இருக்கையில், ஒரு தேர் அவன் பின்னால் வந்தது. அவனிடம் வந்து தேரை நிறுத்திய தேரோட்டி,

‘தம்பி! நீ எங்கு செல்கிறாய்?”

என்று கேட்க, குணவர்மன் பதில் சொல்லவும், அவன்,

‘நானும் அங்குதான் செல்கிறேன்! நீயும் தேரில் ஏறிக்கொள்! மன்னரின் தாய்க்கு உடல் நிலை சரியில்லாததால், புஜங்கரை அழைத்துச் செல்ல நான் வந்திருக்கிறேன்!”

என்று கூறிவிட்டு குணவர்மனைத் தன்னுடன் அழைத்துச் சென்றான்.
குருகுலத்தை அடைந்ததும், குணவர்மன் புஜங்கரை கால்களில் விழுந்து வணங்கித் தன் விருப்பத்தை வெளியிட்டான்.

அதற்கு அவர்,

‘மகனே! என்னிடம் சீடனாகச் சேர வேண்டுமெனில், அதற்குமுன் ஜம்புகாரண்யத்தில் என் பழைய மாணவர் வினயர் ஒரு குருகுலம் நடத்தி வருகிறார். அங்கு சென்று இரண்டு ஆண்டுகள் பயின்ற பிறகு நீ இங்கு வா!” என்றார்.

‘குருவே! உங்களுக்கு என் அறிவுத் திறமையில் சந்தேகம் என்று நினைக்கிறேன். வேண்டுமானால், நீங்கள் என் அறிவை சோதித்துப் பாருங்கள்!” என்றான்.

குணவர்மனின் சிந்தனைத் திறனை சோதிக்க ஒரு புதிரொன்றை வினவ எண்ணினார். அதற்கு பதிலளிக்க ஐந்து நிமிடங்கள் காலக்கெடு விதித்தார்.

ஒரு காகித சமபக்க முக்கோணத்தை எடுத்து ஐந்து துண்டுகளாக வெட்டி, பின்னர் நான்கு சிறிய சமபக்க முக்கோணங்களை உருவாக்க பயன்படுத்தலாம். ஒவ்வொரு முக்கோணத்தையும் உருவாக்க அனைத்து துண்டுகளும் பயன்படுத்த தேவையில்லை. குணவர்மனும் ஐந்து நிமிடங்களுக்குள் சரியான பதிலளிக்க அவனை தன்னுடைய சீடனாகவே வைத்திருக்க எண்ணினார். இருப்பினும் அவனை மேலும் சோதிக்க எண்ணினார்.
‘மகனே! இப்போது நான் அரண்மனைக்குச் செல்ல வேண்டி இருக்கிறது. திரும்பி வர எனக்கு ஒரு வாரம் ஆகும்! அதுவரை இந்த இரண்டு கிரந்தங்களை உன்னிடம் தருகிறேன். இவற்றை கவனமாகப் படி! இவற்றினுடைய கருத்தை நீ நன்றாகப் புரிந்து கொண்டால் மட்டுமே, நீ என் சீடனாக அமையத் தகுதியுள்ளவன்!”

என்று கூறிவிட்டு அரண்மனை தேரில் ஏறிச் சென்று விட்டார்.

உடனே, மற்ற சீடர்கள் அவனிடம்,

‘இரண்டு ஆண்டுகளாக இவற்றைப் புரிந்து கொள்ள நாங்கள் படாதபாடு படுகிறோம். அப்படி இருக்க, உன்னால் ஒரு வாரத்தில் புரிந்து கொள்ள முடியுமா?”

என்று அவனை பயமுறுத்தினர்.
ஆனால் குணவர்மனோ,

‘இதை நான் ஒரு சவாலாக ஏற்றுக் கொள்கிறேன்!”

என்று சொல்லிவிட்டு, கிரந்தங்கள் இயற்றப்பட்டிருந்த ஓலைச்சுவடிகளை ஆழ்ந்து படிக்கத் தொடங்கினான். நான்கே நாள்களில், அவற்றின் சாரத்தை குணவர்மன் நன்றாக கிரகித்துக் கொண்டான்.

அரண்மனையிலிருந்து திரும்பிய புஜங்கர், வந்ததும் உடனே குணவர்மனை கிரந்தங்களின் விளக்கம் கேட்டார். குணவர்மன் கூறிய விளக்கங்களைக் கேட்டு அவர் வியந்து போனார்.

‘மகனே! உன்னைப் போல் ஒரு புத்திசாலி எனக்கு சீடனாகக் கிடைக்க நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும்!”

என்று மனமாரப் புகழ்ந்தார். அதன்பின் அவர் அரண்மனையில் நடந்ததை விவரிக்கத் தொடங்கினார்.

மன்னரின் தாயின் நோயை குணமாக்க எந்த வைத்தியராலும் முடியவில்லை. அப்போது, அவருடைய சபையில் இருந்த கவிஞர்களில் ஒருவர் தான் பத்திரப்படுத்தி வைத்திருந்த யாரோ ஒருவர் எழுதிய காவியத்தை மன்னரிடம் படித்துக் காட்டினார். காவியத்தில் வரும் நாயகிக்கு ஏற்பட்ட விசித்திர நோயின் வர்ணனைகள் மன்னரின் தாய்க்கு ஏற்பட்டிருந்த நோயை அப்படியே ஒத்திருந்தது.

அதைப் படித்துக் காட்டிய கவிஞர்,

‘மன்னா! இதில் மூலிகைகளைப் பற்றிய விவரங்களும் சிகிச்சை முறை பற்றியும் எழுதியுள்ள கவிதைகளின் பொருள் எனக்கு விளங்கவில்லை. இதைப் படித்து யாரேனும் அதன் பொருளை உணர்ந்து கொண்டால், அதே மருந்துகளையும், சிகிச்சையும் அளித்துத் தங்கள் தாயை குணமாக்கி விடலாம்!” என்றார்.

அதற்காகத்தான், புஜங்கர் அரண்மனைக்கு அழைக்கப் பட்டிருந்தார். ஆனால், அவராலும் அதன் பொருளை உணர்ந்து கொள்ள முடியவில்லை.

‘மகனே! எனக்கே விளங்காத கவிதைகளின் பொருள் உனக்கு ஒருக்கால் விளங்கக்கூடும்! நீ படித்துப் பார்!” என்றார்.

அவற்றை வாங்கிப் படித்ததும், உடனே குணவர்மனுக்குப் பொருள் விளங்கி விட்டது.

‘குருவே! இதில் மூலிகைகளின் பெயர்கள் இரு பொருள்பட கூறப்பட்டுள்ளன. அவற்றை முறையே எடுத்து கசாயம் செய்து இதில் குறிப்பிடப்பட்டு உள்ளபடி மன்னரின் தாய் ஆடல் பாடலை ரசித்தபடி அருந்தினால் அவர் குணமடைந்து விடுவார்” என்றான்.

‘ஆனால், இந்த மூலிகைகளை எப்படித் தேடுவது? நான் இவற்றைப் பற்றி கேள்விப்பட்டதே இல்லையே!” என்றார் புஜங்கர்.

‘அது பற்றிக் கவலையில்லை! இந்த மூலிகைகள் அனைத்தும் என் கிராமத்தில் பயிரிடப்படுகின்றன!”

என்று குணவர்மன் கூற, புஜங்கர் மகிழ்ச்சியுடன் அவனை அரண்மனைக்கு அழைத்துச் சென்றார். குணவர்மனை சந்தித்த மன்னர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார். உடனே, மன்னருடைய ஆட்கள் குணவர்மனுடன் சென்று அன்னாவரத்திலிருந்து மூலிகைகள் கொண்டுவர, வைத்தியர்கள் மருந்துத் தயாரித்துத் தந்தவுடன், மன்னரின் தாய் குணமானாள். மிகுந்த மகிழ்ச்சியுற்ற மன்னர் குணவர்மனுக்குப் பொன்னும் பொருளும் வெகுமதி அளித்தார்.

விக்ரமாதித்தனே இது உம்முடைய நேரம் குணவர்மன் புஜங்கர் கேட்ட புதிருக்கு என்ன பதிலழித்திருப்பான் என கண்டுபிடியுங்கள் பார்க்கலாம் நான் சிறிது ஓய்வெடுக்கிறேன் கதை கூறி களைத்து விட்டேன் என்று முடித்தது வேதாளம்.

துமி அன்பர்களே

நீங்களும் சிந்தியுங்கள்

சரியான பதிலை எமக்கு அனுப்பி வையுங்கள்.

Related posts

கலாபக் காதலர்களை கண்டீரோ…?

Thumi202122

ஒரு பாதி கதவு நீயடி…!

Thumi202122

ஈழச்சூழலியல் 24

Thumi202122

Leave a Comment