இதழ்-38

சிங்ககிரித்தலைவன் – 35

மல்லனா மகாநாமரா?

‘புத்தம் சரணம் கச்சாமி,
சங்கம் சரணம் கச்சாமி,
கர்மம் சரணம் கச்சாமி”

மல்லனின் போலித் துறவி அணி கீழக்கரையில் தம் தேடுதல் வேட்டையை ஆரம்பித்தது! ஒவ்வொரு தெருவாக மல்லனின் போதை துறவிகள் மகாநாமரைப் பற்றியும் முகலனைப் பற்றியும் விசாரித்தவாறு சென்றார்கள்! தாம் அவர்களின் சீடர்கள் என்றும் அவர்களைப் பின் தொடர்ந்து தம் கப்பல் வர இருந்தது என்றும் தம் மரக்கலத்தில் திடீரென ஏற்பட்ட கோளாறால் மீண்டும் மாந்தை சென்று இத்தனை நாட்கள் கழித்து வருவதாகவும் கதையளந்தவாறே தம் காரியத்தில் கண்ணாய் இருந்தனர். ஆனால் எங்கும் மகாநாமரைப் பற்றியோ முகலனைப் பற்றியோ எந்த தகவலும் அவர்களுக்குக் கிடைக்கவில்லை! சலிப்படைந்த மல்லனின் குழு அன்றிரவு சத்திரத்தை அடைந்து அங்கே விளக்கேற்றிக் கொண்டு தங்கியது!

‘மல்லரே…. எமது ஒற்றர்கள் சொன்ன தரவின்படி அவர்கள் இங்கு தானே தங்கியிருக்க வேண்டும்? ஒரு வேளை நாம் வருவதை அறிந்து இடம் மாறிந் சென்று விட்டார்களா?”

மல்லனின் அணி வீரன் களைப்போடு கட்டிலில் சாய்ந்திருந்த மல்லனிடம் வினாவினான்.

‘இல்லை… நாம் வருவதை அவர்கள் அறிய வாய்ப்பு இல்லை! ஆனால் ஊகித்திருக்கலாம்….”

என்று மல்லன் சொல்லி முடிப்பதற்குள் நமக்கு முன்னரே பழக்கப்பட்ட ஒரு குரல்

‘சாதுக்களே இரவு உணவு தயாராகி விட்டது… தாங்கள் பசியாறலாம்”

மல்லன் எரியும் தீப ஒளியில் வாசலைப் பார்த்தான். குழலி தங்கப் பதுமையைப் போல் நின்று கொண்டிருந்தாள்!

‘யாரம்மா நீ….. உள்ளே வா….”
துள்ளல் நடையோடு குழலி மல்லனின் அருகில் வந்து வணங்கி நின்றாள்! மல்லன் தன் குரூர விழிகளால் குழலியை அங்குல அங்குலமாக இரசித்தான்…. அந்த மங்கல் ஒளியில் குழலி அதனைக் கவனிக்கவில்லை.

‘வணங்குகின்றேன் தேவா…. நான் குழலி இந்த சத்திரத்திற்கு உணவு கொடுக்கும் பொறுப்பில் உள்ளேன்…”

‘அடடா… அப்படியா… எம்மைப் போன்ற சாதுக்களுக்கு ஏற்ற உணவுகளை உன்னால் வழங்க முடியுமா?”

குழலி கலகலவென சிரித்தாள்.
“நேற்றுவரை அடுத்த தெருவில் உள்ள சத்திரத்தில் தங்கியிருந்த சாதுவுக்கு நானே என் கையால் சமைத்துக் கொடுத்தேன்…”

மல்லனின் விழிகள் அகலத் திறந்து கொண்டன. ஏனைய போலி சாதுக்களும் வாயடைத்து நின்றனர் எதையும் வெளியிலே காட்டிக் கொள்ளாதவனாக மல்லன்,

‘ஆஹா….. நாம் தேடிவந்த எம் குருநாதர் மகாநாம தேரரா அவர்?”

‘ஆம் அவரே தான். அவர் உங்கள் குருவா? ஒரு நாள் முன்னே வந்திருந்தால் கூட அவரை நீங்கள் கண்டு மகிழ்ந்திருக்கலாமே….”

‘ஏனம்மா? இப்போது அவர் எங்கே? இப்போதே அவர் திருவடிகளை வணங்க மனம் ஏங்குகின்றது…”

வந்த வேலை ஆரம்பத்தில் கொஞ்சம் கலக்கத்தை தந்தாலும் இப்போது எளிதாக நிறைவேறப் போகின்றது என்று மல்லன் மனக்கணக்கு போட்டுக் கொண்டான்! ஆனால் அது குழலியின் மறுமொழியில் கானல் நீராய்ப் போனது!

‘இல்லை தேவா…. அவர்கள் மதுரைக்குப் புறப்பட்டுவிட்டனர். என் பெரிய தகப்பனாரும் தான் உடன் போகின்றார்..”

மல்லன் இலாவகமாகப் பேசி மதுரை போகும் பாதையை அறிந்து கொண்டான். அடுத்த கணமே குழலியை அனுப்பிவிட்டு நான்கு குதிரைகள் வாங்கி வர இருவரை அனுப்பிவைத்தான் மல்லன்!

அதேநேரம் தஞ்சையை நோக்கி இரண்டு மாட்டு வண்டிகளும் இரண்டு குதிரைகளும் மெல்ல மெல்லமாக நகர்ந்து கொண்டிருந்தன. கையில் தீப்பந்தத்தை உயர்த்திய படி முகலன் குதிரையில் முன்னே செல்ல உத்தமரும் மகாநாமரும் மாட்டுவண்டியில் பயணப்பட்டனர். அதிக தூரம் பயணித்ததாலும், இருண்டு போனதாலும் ஒரு ஆலமரத்தடியில் வண்டில்களை நிறுத்திவிட்டு, இளைப்பாற இறங்கினர்.

மகாநாமர் முகலனைப் பார்த்தார். அவனோ களைத்துப் போயிருந்தான்!
‘முகலா…… இந்த திடீர் பயணம் உன்னை களைப்படையச் செய்திருக்கும் ஆனால் இது உன் பாதுகாப்புக்கானது என்பதை நீ அறிய வேண்டும்…. எப்படியும் புனித தந்த தாது இங்கு வந்ததை காசியப்பன் அறிந்திருப்பான். அவன் கோவத்தின் உச்சத்தில் எம்மை அழித்துவிட ஏற்பாடுகளை செய்திருப்பான்! அதற்கு முன்னர் நாம் தற்காத்துக் கொள்வது முறை தானே..”

‘தேவா….. நீங்கள் எதைச் செய்தாலும் அது எம் நன்மைக்கு என்பதை நன்கு அறிவேன்! நீங்கள் காட்டிய வழியில் பயணிக்க நாம் எப்போதும் தயாராகவே இருப்போம்….”

முகலன் வணங்கிய படி சொன்னான்.

‘அதுசரி முகலா குழலியிடம் நாம் மதுரை செல்வதாகத் தானே கூறினாய்?”
முகலன் முகத்தில் தெரிந்த களைப்பு குழலியின பெயரைக் கேட்டு மறைந்து போனது!

‘ஆம் தேவா”

“ம்…. அதுவே சரி!”

மகாநாமர் தன் தலையை ஆட்டினார்.

ஆட்டம் தொடரும்…

Related posts

அழுகை….!!!

Thumi202122

வினோத உலகம் – 04

Thumi202122

ஈழச்சூழலியல் 24

Thumi202122

Leave a Comment