இதழ்-38

ஒரு பாதி கதவு நீயடி…!

//நடைபாதை கடையில் உன் பெயர் படித்தால்
நெஞ்சுக்குள் ஏனோ மயக்கங்கள் பிறக்கும்//

அளவெட்டியில் வகுப்பெடுக்க சென்று வரும் போதெல்லாம் விளான் சந்தியையும் சண்டிலிப்பாய் பண்டத்தரிப்பு ரோட்டையும் இணைக்கும் வீதியால் செல்வது வழமை. சரியாக, இளவாலை பற்றிமாதா கோவிலுக்கு எதிரே இருக்கிறது ஒரு தையலகம். அந்த வீதியில் எப்பொழுது சென்றாலும் சீமைக்கிழுவைகளுக்கிடையில் தொங்கும் வெள்ளை பெயின்ட் அடித்த தகரத்தில் கறுப்பு வர்ணத்தால் எழுதப்பட்ட அந்த தையலகத்தின் போர்ட்டை திரும்பி பார்க்காத நாளே இல்லை. எவ்வளவு அவசரமாக வகுப்புக்கு சென்றாலும் சரி மிக ஆறுதலாக எதையோ சிந்தித்தபடி வந்தாலும் சரி, என்னையும் அறியாமல் அந்த போர்ட்டை நோக்கி கண்கள் செல்லும்.

// நிலநடுக்கம் அது கொடுமைகள் இல்லை
மனநடுக்கம் அது மிகக்கொடுமை //

நடைபாதை கடைகள் மட்டுமில்லை; இன்னும் எங்கெங்கோ! எங்கு பார்த்தாலும் மனம் சில நிமிடம் ஸ்தம்பித்து நினைவுகளை அசைபோடுகிறது. அப்படி அந்த இரண்டெழுத்துக்களின் இணைவில் என்ன கருத்தாக்கங்கள் நடக்கிறதோ எனக்கு விளக்குவதேயில்லை.

//இது என்ன காற்றில் இன்று ஈரப்பதம் குறைகிறதே//


//ஐயரு பொண்ணு மீன் வாங்க வந்தா லவ் மேரேஜ்ன்னு தெரிஞ்சுக்கோ//

வீட்டுக்கு முன்னால கோவில். பதினாறு வயது வரை கோவிலில் ஐயருக்கு எடுபிடி என்பதாக ஒரு வாழ்வு. தேவாரம் பாடுவதில் தொடங்கி,

‘ஓம் யோபாம் புஷ்பம் வேத
புஷ்பவான் ப்ரஜாவான் பஸுமான் பவதி
சந்த்ரமா வா அபாம் புஷ்பம்
புஷ்பவான் ப்ரஜாவான் பஸுமான் பவதி
ய ஏவம் வேத யோபாமாயதனம் வேத ஆயதனவான் பவதி’

என மந்திரங்களின் அர்த்தம் தெரியாது போனாலும் மீண்டும் மீண்டும் கேட்டு கேட்டு சமஸ்கிருதம் நாவில் நர்த்தனம் ஆடிய காலமொன்றிருந்தது. பின் வாசிப்பு – சிந்திப்பு என எல்லைகள் விரிய, கடவுள் இல்லை என்யு மதத்திலிருந்து முற்றாய் விலகிய பின், அவளின் சந்திப்பு.

கோவில் பக்கமே திரும்பாதவன் இப்பொழுது அவள் அருகில் கோவில்களில் நிற்கிறான். சின்ன சின்ன சண்டைகளை தீர்த்து வைக்க எல்லாம் கடவுளை கூப்பிடுகிறான்!

கடவுள் அவ்வளவு வெட்டியாக இருக்கிறாரா என்ன?

**

//கல்லறை மீது தான் பூத்த பூக்கள்
என்று தான் வண்ணத்துப்பூச்சிகள் பார்த்திடுமா?//

வண்ணத்துப்பூச்சி! குழந்தைகள் போல அழகான ஆடைகள் அணிவதிலா? கபடமில்லாத சிரிப்பாலா? கல்வியின் மேன்மையின் வண்ணச்சித்திரங்கள் தீட்டுவதாலா? எத்தனையோ காரணங்கள்! அந்த வண்ணாத்துப்பூச்சியை கொண்டாட! யாருக்கு வண்ணத்துப்பூச்சி பிடிக்காது. தோட்டத்தில் பல்வேறு வண்ணங்களில் வண்ணத்துப்பூச்சிகளை பார்த்து ரசித்தவன் இந்த வண்ணத்துப்பூச்சி மேலே லஜித்ததில் என்ன ஆச்சரியம் இருக்கிறது?

ரசிப்பவனிடம் என்ன இருக்கிறது?

//கல்லறை மேலே பூக்கும் பூக்கள்
கூந்தலை போய் தான் சேராதே//

கல்லறை பூ என்று வண்ணத்துப்பூச்சி பார்க்கவில்லை. அது தனக்கான பூவை தானே தேடிக்கொண்டது. கூந்தல் முழுதும் சூடிக்கொண்டது.

**

//அவள் கூந்தல் ஒன்றும் நீளமில்லை
அந்தக்காட்டில் தொலைந்தேன் மீளவில்லை//

சங்ககாலம் தொடங்கி இன்றைய திரைப்பாடல்கள் வரை பெண்ணின் தலைமுடி என்றால் நீளமாக இருக்க வேண்டும் – அதுவே அழகு என்று கவிஞர்கள் ஒரு விம்பத்தை உருவாக்கி வைத்திருக்கிறார்கள். இந்த கவிஞர்களின் “ஐஸ்” எல்லாம் இவனுக்கு எந்த நடுக்கத்தையும் கொடுக்கவில்லை.

ஆனால், சிறுவயதில் அன்ரெனாவை சுற்றி சுழற்றி ஸ்ரேசன் பிடித்து, என்ன சேனல் இழுக்குது? இப்ப இழுக்குதே? இப்ப? என்று கேட்டு கேட்டு டீவி பார்த்த நாட்களில், பொதிகை தான் ஒரே தஞ்சம்.

அதில் ஞாயிற்றுக்கிழமை திரைப்படத்தின் இடையில் வரும் விளம்பரங்களில் , அஞ்சால் அலுப்பு மருந்து , கத்தரிக்கவும் கலக்கவும் தடவவும் என்ற படி வரும் ‘டை’ விளம்பரம் மற்றும் கோபால் பல்பொடி, நிஜாம்பாக்கு இவற்றோடு அன்றைய தேதியில் அறிமுகமானது தான் “கார்த்திகா” சாம்பூ விளம்பரம். அதில் விளம்பரத்தில் நடித்த பெண்ணுக்கு தலைமுடி முழுங்கால்களை முட்டும். அங்கிருந்து வந்த ஆசை, கற்பனை தன் கதாநாயகிக்கும் முடி நீளமாக இருக்கவேண்டும் என்பது.

இன்று முடிவே வேறு மாதிரி இருக்கும் போது முடி மட்டும் முடி போடுமா என்ன?

//மழை மட்டுமா அழகு ! சுடும் வெயில் கூட ஒரு அழகு !
மலர் மட்டுமா அழகு ! விழும் இலை கூட ஒரு அழகு !//

நீள முடி மட்டுமில்லை. கட்டை முடியும் அழகு தான்.

**

//உலகத்தில் எத்தனை பெண் உள்ளது
மனம் ஒருத்தியை மட்டும் கொண்டாடுது
ஒரு முறை வாழ்ந்திட திண்டாடுது இது
உயிர் வரை பாய்ந்து பந்தாடுது//

வாலி ஆயிரம் எனுமொரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில், கவிஞர் வாலியோடு பல சினிமா பிரபலங்கள் உரையாடி வினா தொடுத்து, அவருடைய அனுபவங்களை பகிர்ந்து கொண்டுசென்றார்கள். அதில் கார்ட்டூனிஸ்ட் மதன் உரையாடும் போது வாலியிடம் ஒரு கேள்வி கேட்டார்.

காதலை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீங்கள்?

வாலி சொன்னார், என் பதிலை கேட்டு எல்லாருமே என்னை ஏசுவார்கள்!
‘லவ் எண்டது ஒண்டுமே இல்லை ஜஸ்ட் பிசிகல் அட்ராக்க்ஷன் தான்’. அவனுக்கு அவள் அழகா தெரிவாள். அது தான் பேஸ்.

மதனுக்கு அந்த பதில் ஏற்புடையதாக இருக்கவில்லை. இவ்வளவு காவியங்கள், பாடல்கள் கதைகள் ஏந்தி காலம் தாண்டி வாழும் காதல் என்பது வெறும் உடலீர்ப்பு என்றால்??

காதலும் கடவுளும் ஒன்று! இரண்டுமே எங்கு இருக்கிறது? ஏன் தான் இருக்கிறது? என்ன செய்யும் என்று எதுவும் தெரியாது! ஆனாலும் எங்கோ இருந்து ஏதோ செய்துகொண்டேயிருக்கும். பல ஆயிரம் காதல் பாடல்கள் எழுதிய கவிஞனுக்கு கூட அது விளங்கவில்லையே!

**

//நான் என்றால் நானே இல்லை நீ தானே நானாய் ஆனேன்//

சுஜாதா ஒரு முறை விகடனில் ஒரு வாசகர் கேள்விக்கு இப்படி பதில் எழுதியிருந்தார்

ஒன்றின் மேல் நம்பிக்கை வேண்டும், ஏதாவது ஒன்று. உதாரணம் கடவுள், இயற்கை,உழைப்பு, வெற்றி இப்படி ஏதாவது. நம்பிக்கை நங்கூரம் போல.கேள்வி கேட்காத நம்பிக்கை.கேள்வி கேட்பது சிலவேளை இம்சை.நவீன விஞ்ஞானம் அதிகப்படியாகக் கேள்வி கேட்டு இப்போது தவித்துக்கொண்டிருக்கிறது.

அசையாத நம்பிக்கையை தீவிரமான காதல் என்று சொல்லலாம். அல்லது தீவிரமான காதலில் தான் அசையாத நம்பிக்கை பிறக்கிறது.

“உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே”

காதலும் ஒரு நம்பிக்கை என்பதிலிருந்து நம்பிக்கையே காதல் தான் என முகிழ்தல் அநாதியானது.

Related posts

ஆபிரகாம் பெஞ்சமின் டி வில்லியர்ஸ்

Thumi202122

என் பெண்மையின் பரிபூரணமே – 02

Thumi202122

கலாபக் காதலர்களை கண்டீரோ…?

Thumi202122

Leave a Comment