இதழ்-38

என் பெண்மையின் பரிபூரணமே – 02

வழமைபோலதான் அந்த நாளும் விடிந்தது. ஆனால் அவளுக்கு மட்டும் இது வித்தியாசமானது. கண்ணயர்ந்த மறுகணமே விழித்துவிட்டாற்போல் அவளுக்கு இருந்தது. எழுந்த சில வினாடிகளிலே நிகழ்கால நினைவுகளுக்குள் நுழைந்துவிட்டாள். வேகவேகமாக தயாரானாள். இருப்பதிலே நல்ல ஆடைகளை அணிவித்து தன் குழந்தைகளை அழகாக்கினாள். தானும் தன் தாயின் புடைவை ஒன்றை எடுத்து ஆசையோடு கட்டிக்கொண்டாள். தாயின் ஆசீர்வாதத்தை அந்தப்புடைவையில் தேடிக்கொண்டாள்.

அவள் தந்தை இன்னும் எழவில்லை. வழக்கமாக அவர் நித்திரை முடித்து எழும்ப ஒன்பது முப்பது மணியாவது ஆகும். அதற்கிடையில் கோயிலுக்கு போய் வந்து விடலாம் என்று இரு குழந்தைகளோடும் வாசலைப்பார்த்தபடி காத்துநின்றாள். தன் கஷ்டகாலத்தின் கடைசி விளிம்பில் நின்று விடைபெறுவது போல் ஏதோ ஆனந்தமொன்று உள்மனதில் ஊறிக்கொண்டே இருந்தது.

கடிகாரத்தைப் பார்த்தாள். நேரம் ஆறு நாற்பது ஆகி இருந்தது. ‘ஏழு மணிக்குத்தானே வாரதா சொன்னவர். இப்பவே ஏன் அவசரப்படுறா?’ என்று தன்னைத்தானே கிண்டல் அடித்தும் கொண்டாள்.

இதற்கிடையில் அவளைப் பின்பக்கமாக தட்டிக்கொண்டு ‘எங்கம்மா போப்போறோம்?’ கேட்டபடி நின்றாள் இளையமகள் சாலினி. திரும்பி அவள் உயரத்திற்கு குனிந்து ‘கோயிலுக்குப் போப்போறோம்’ என்றாள். இதுவரை அப்படி ஒரு மகிழ்ச்சியை சாலினி கூடத் தன் தாய்முகத்தில் கண்டதில்லை.

ஆ… அப்பிடியெண்டா ஆட்டோலயோ போறம்?’ என்று தன் எதிர்பார்ப்பை வெளிப்படுத்தினாள் சாலினி. ‘ஆமாண்டா.. நான் சாலிக்குட்டி துவா அண்ணா அதோட அந்த ஆட்டோ மாமா நாலு பேரும் கோயிலுக்கு போறோம்’

‘ஐ.. அப்ப நான் அந்த ஆட்டோ மாமாட மடியில இருந்து அந்த்க்கண்ணாடியில ரோட்ட பார்த்துக்கொண்டுதான் வருவன்’ என்று சொன்ன சாலினியின் விழிகளைப்பார்த்து கேட்டாள் ‘சாலிக்குட்டிக்கு அந்த ஆட்டோ மாமாவை பிடிக்குந்தானே?’

‘ஓ.. பிடிக்குமே..”அப்பிடியெண்டா அவரயும் கோயிலுக்கு கூட்டிக்கொண்டு போய் இனி சாலிக்குட்டிய எப்பயுமே பிரியக்கூடா எண்டு சத்தியம் வாங்குவோம். அதுக்குப்பிறகு அவர் சாலிக்குட்டியோடயே எப்பயும் இருப்பார். ஒரு அப்பா போல கூடவே இருப்பார்’ முழுவதுமாய் கூறிமுடித்துவிட்டு இமைமூடாது அவள் பதிலுக்காய் எதிர்பார்த்து நின்றாள்.
‘ஓ… அப்ப இனி நான் எங்க போனாலும் ஆட்டோலதான் போவன். ஆட்டோ மாமா போற இடமெல்லாம் போவன்’ என்று சந்தோசத்தாளத்திற்கு தலையாட்டியபடியே வார்த்தைகளை உதிர்த்தாள் சாலினி.

இவள் எதிர்பார்த்து நின்ற ‘அப்பா’ என்ற வார்தையை சாலினி கண்டுகொள்ளவே இல்லை. பாவம் அந்த வார்த்தைகளின் அர்த்தம் அவளுக்குப் புரிந்திருக்கத்;தான் வாய்ப்பில்லையே என்று தன் மனத்துள்ளே நினைத்துக்கொண்டு சாலினிய கட்டித்தழுவிக் கொண்டாள்.
இளையமகளை தழுவிக்கொண்டிருந்த பொழுது இன்று மட்டும் ஏதோ அதிசயமாய் வாசலில் பூத்து நின்ற அந்த சூரியகாந்திப்பூவை என்னவென்று புரியாமல் விசித்திரமாக பார்த்துக் கொண்டிருந்த துவாரகனை கண்டதும் எழுந்துவந்து அவனருகில் அமர்ந்து கொண்டாள். அவன் வலது கையை வாங்கி தன் மடி மேல் வைத்து பின் அந்தக்கையை தன் இரு கைகளுக்குமிடையில் அழுத்திப்பிடித்துக் கொண்டு அவன் விழிபார்த்து இருவரும் தம் மொழி பேசிக்கொண்டிருந்தனர்.
‘ஆட்டோ மாமா.. ஆட்டோ மாமா…’ என்று கத்திக்கொண்டுவந்த சாலினியின் குரல் கேட்டு திடுக்கிட்டு எழுந்து நின்று கொண்டாள். வாசலில் ஆட்டோ ஓய்வடைந்ததும் ‘ அம்மா வாங்கோ கெதியாய்..’ என்றவாறே ஆட்டோக்குள் ஏறி அமர்ந்து கொண்டாள் சாலினி.

அவன் ஆட்டோவை விட்டு இறங்கி இவளருகே நடந்து வந்தான். தன்னைக் கண்டு கொள்ளாத அவன் செயல் சாலினிக்கு பெரியதோர் ஏமாற்றத்தை தந்தாலும் ஆட்டோவில் போகப்போகும் சந்தோசத்தில் அவள் மூழ்கிப்போய்விட்டாள்.

அருகில் வந்து கொண்டிருந்த அவன் கண்களை நோக்கி ‘வெளிக்கிடுவோமா? நேரம் போகுது..’ என்று கேட்டாள். அவளை நிமிர்ந்து பார்த்து விட்டு பதிலேதும் சொல்லாமல் அருகில் வந்தான்.
இவள் முகத்திலிருந்த புன்னகை கொஞ்சம் கொஞ்சமாய் ஓய்வடைய தொடங்குகியது. அருகில் வந்த அவன் இவள் கண்களைப்பார்த்து விட்டு உடனே பார்வையை திசை திருப்பிக் கொண்டான்.
‘என்ன ரவி? என்னாச்சு? ஒரு மாதிரியா இருக்கிறீங்க..’ அவள் கேட்டுவிட்டாள்.
‘ஓ.. ஒண்டுமில்ல. நேத்து மனசு பொறுக்காம அம்மாட்ட போய் எல்லாத்தையும் சொல்லிட்டன். இண்டைக்கு எடுத்த முடிவு பற்றியும் சொன்னன்’ என்றவாறே தலையை நிமிர்ந்து இவள் முகமாற்றத்தை அவதானித்தான். மலர்ந்த கடைசிப் புன்னகையும் அவள் முகத்தை விட்டு எங்கேயோ ஓடிஒளிந்து கொண்டிருந்தது.

‘ஒண்டுமில்ல. முதல்ல கொஞ்சம் கத்தினாங்க. பேந்து நான் சொல்லச்சொல்ல ஒரு மாதிரி சம்மதிச்சிட்டாங்க. ஆனா தன்னோடயே இருக்கச் சொல்லிக் கேட்டாங்க. நானும் போயிட்டா தன்னால தனிய இருந்து ஒண்டும் பண்ணேலாதாம் எண்டாங்க.. அதுதான்.. எங்கம்மா கூட இருக்கிறது உனக்கு ஓகேயா?’ என்று வேகவேகமாக கூறி முடித்து விட்டான்.
அவள் ஒரு பெருமூச்சோடு ‘பிரச்சனை இல்ல ரவி. உங்க அம்மாவோடயே இருப்பம். அவாவும் பாவம்தானே? துனிய இருந்து வீணா எதுக்கு கஷ்டப்படோணும்? அவாக்கு நாங்க இருக்கிறது சம்மதம் எண்டா வயசான காலத்தில தனிய விட்டிட்டு நாங்க ஏன் வேற வீடு பார்க்கோணும்?’ என்று மலர்ந்த புன்னகையோடு கூறி முடித்தாள்.
‘தாங்ஸ் ஜெயந்தி.. நேற்று முழுக்க அம்மா ஒரே அழுகை. கடைசியாத்தான் இதக் கேட்டா.. நீ சம்மதிப்பியோ எண்டுதான் பயந்து கொண்டிருந்தன். ஏனெண்டா நீயும் உன்ர அப்பாவ தனிய விட்டுட்டு தானே வர்றா..’ என்று தயங்கியபடி நின்றவனை இடைமறித்து ‘இதில என்ன இருக்கு ரவி. உங்கட அம்மா சம்மதிச்சதுவே பெரிய விசயம். வேற யாராச்சும் சம்மதிப்பாங்களோ சொல்லுங்கோ. நாங்க இதெண்டாலும் பண்ணேலாட்டி எப்பிடி? அதோட எங்கட அப்பாவ வழக்கம்போல வேலைக்காரி சுமதி வருவாள் தானே? இப்பயும் நான் நாள் முழுக்க கடையில நிக்க சுமதிதானே பார்க்கிறது?’ என்று அவனைத் தெளிவுபடுத்த முயன்றாள்.

‘சரி ஜெயந்தி. ஆனா அதோட….’ என்று முடியாத கதையாய் இழுத்தான்.
‘என்ன ரவி சொல்லுங்க’ என்று இமைகளை சுருக்கியபடி வினவினாள்.

‘அம்மா சாலினிய மட்டும்..’ என்று சொல்லி விட்டு தொண்டைக்குள் விழுங்கிக்கொண்;டான். அவள் இமைகள் மேலும் சுருங்கி விழிகள் இவன் வார்த்தைகளை எதிர்பார்த்து நின்றது. ‘அம்மா சாலினிய மட்டும் கூட்டிக்கொண்டு வரச்சொன்னவா… ஏனெண்டா துவாரகனையும் கூட்டிக்கொண்டு வந்து காலம் முழுக்க கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கிறத தன்னால பார்க்கேலாதாம். துவாரகன ஒரு நல்ல சிறுவர் இல்லத்தில சேர்த்திட்டா அவங்க நல்லாப் பார்த்தப்பினம். தேவையான காசை நாங்களே அனுப்புவம். நான் நீ சாலினி மூண்டுபேரும் அம்மாவோட சந்தோசமா வாழலாம். அம்மா இது மட்டுமாவது நான் சொல்றத கேட்பியா எண்டு கேட்டாங்க’ என்று தணிந்த குரலாய் கூறி முடித்தான். செவிக்குள் நுழைந்த வார்த்தைகள் அவள் இரத்தத்தை உறைய வைத்து விட்டது. உடல் முழுவதும் சிலையானாள். விறைத்துப் போன விழிகள் கடைசியாய்ப் பார்த்த இடத்திலேயே தங்கிவிட்டன.

இவன் மெல்ல அவள் தோள்களைப்பற்றி ‘ஜெயந்தி’ என்று பயத்தோடு அழைத்தான். ‘அதுக்கு நீங்க என்ன சொன்னீங்க?’ அசையாத சிலையில் கண்ணீர் பெருக்கெடுக்க கேட்டாள்.
‘அவ இதமட்டுந்தான் கடைசியா கேட்டாங்க. என்னால மறுக்க முடியல’ என்றதும் கண்களை இறுக்கி மூடிக்கொண்டு தன் தோளிலிருந்து அவன் கையை விலக்கிவிட்டு தன் மகனருகே ஓடினாள்.

‘ஜெயந்தி கொஞசம் யோசி. நீதானே சொன்னா. அவங்க சம்மதிச்சதே பெரிய விசயம். இப்ப யார் இப்பிடியெல்லாம் இருப்பாங்க. இத மடடும் செஞ்சா ஒரு பிரச்சனையும் இல்லை. சிறுவர் இல்லத்தில நல்லாப் பார்த்துப்பாங்க. நாங்க நினைக்கிற நேரமெல்லாம் போய்ப்பார்த்திட்டு வரலாம்.’

‘ரவி பிளீஸ்… நிப்பாட்டுங்க. என் துவாரகன் தனி ஆள் கிடையாது. என் உசிரும் அவன் உடப்பும் சேர்ந்ததுதான் அவன். அவனில்லாமல் நானோ நானில்லாம அவனோ கற்பனை பண்ணிக்கூட பார்க்கேலா’

‘ஆனா ஜெயந்தி. இது ஒண்டு மட்டுந்தான்.. நான் நீ சாலினியோட வசதியா சந்தோசமா இருக்கலாம்’ என்று விடாமல் தன் போராட்டத்தை தொடர்ந்தான்.

‘என்ன ரவி சொல்றீங்க? வசதியா சந்தோசமாவா? வுசதியால எப்பிடி ரவி சந்தோசத்த தரமுயும்? இத்தனை வயசாகியும் உங்களாலேயே உங்கட அம்மாவ விட்டுட்டு இருக்கேலா எண்டா என்ர பிஞ்சுக்குழந்தையால முடியுமெண்டு எப்பிடி ரவி நினைச்சீங்க?’ அவன் முகம் பார்க்காமல் வழிந்தோடும் விழிகளோடு கேட்டாள்.

இவன் நெஞ்சம் பதைபதைத்தது. தன் நியாயமும் எதிர்பார்ப்பும் தரம் குன்றிப்போய்க்கொண்டிருப்பதை உணர்ந்தான். தன் கருத்தை நிரூபிக்க வழிகள் ஏதும் அவனுக்கு தெரியவில்லை. நியாயமற்றவைகள் தன் பக்கம் வலுச்சேர்க்க சத்தத்தை உதவிக்கு அழைத்துக் கொள்ளும்.

‘இந்த ஒரு தியாகத்த கூட எனக்காக உன்னால செய்யேலாதோ?’ கத்திவிட்டான். அந்தக்கத்தலில் தான் மட்டுமே பெருந்தன்மை புரிவதாய் எங்கோ ஆழ்மனதில் கிடந்த எண்ணம் வெளிப்பட்டுவிட்டது.

‘இதெல்லாம் தியாகம் இல்ல ரவி. இப்பிடிச்செஞ்சா அதுக்கு பிறகு ஜெயந்தி எண்ட ஒருத்தியே தேவல்ல..’ என்று அவன் கத்தலே தோற்கும்படி அமைதியாகச் சொன்னாள்.
‘போதும் ரவி நீங்க போயிட்டு வாங்க’ என்று துவாரகனின் வண்டியோடு உள்ளே வேகமாக நுழைந்து கதவுகளை அடைத்துக் கொண்டாள். அவனுக்க எல்லாப் பக்கங்களும் அடைத்து விட்டன. செய்வதறியாது அவள் அடைத்துவிட்ட கதவுகளை தன் எதிர்காலத்தையே அழைப்பது போல் சத்தமாகத் தட்டினான்.

‘ரவி போயிட்டு வாங்க… என் பிள்ளைய பிரிஞ்சு என்னால இருக்க முடியா. அதுக்காக இன்னொரு தாயிடமிருந்து பிள்ளைய பிரிக்கவும் என் மனசு சம்மதிக்காது. என்னை மன்னிச்சிருங்க. தயவு செய்து போங்க ரவி..’ என்று அவன் தடடல் சத்தத்தை தாண்டி கத்திவிட்டு கைகளால் வாயை இறுக்க மூடிக்கொண்டாள்.

அவனும் ஜெயந்தி என்று அழைத்தபடி கதவைத் தட்டிக் கொண்டே நின்றான். தடடும் சத்தம் மெல்ல ஓய்வடையத் தொடங்கியது. இப்போது ஓசை நின்றே விட்டது. மெல்லிய பெருமூச்சு விட்டுக்கொண்ட மறுகணமே வேகமாக கதவைத்திறந்து வெளியே பார்த்தாள். அவன் திரும்பி சென்று கொண்டிருந்தான். ஏதோ இனம் புரியாத எதிர்பார்ப்பாய் அவனையே விழி தொடர்ந்து நின்றாள். அவன் நேரே சென்று ஆட்டோக்குள் இருந்த சாலினியை கலங்கிய கண்களோடு முத்தமிட்டுவிட்டு புறப்பட்டுவிட்டான்.

வேர்களை மறைத்துக்கொண்ட பெருவிருட்சம் போல் தன் எதிர்பார்ப்பை எல்லாம் நெஞ்சுக்குள் புதைத்து விட்டு ஒன்றும் புரியாதவளாய் ஓடி வந்த சாலினியை அணைத்து துக்கிக்கொண்டே உள்ளே நுழைந்தாள். வீட்டினுள் நுழைந்ததும் ஒரு விளையாட்டுப் பொருளாய் துவாரகனின் கைகளில் பட்டு சின்னாபின்னமாகிக் கொண்டிருக்கும் அந்தக்கடிதத்தைக் கண்டு ஓடிவந்து அவனை ஆரத்தழுவி முடியுமானவரை முத்தமிட்டுக்கொண்டாள்.

மறுபடியும் குழந்தைகளோடு கடைக்கு செல்கிறாள். கடைவீதியில் பல ஆட்டோக்கள் கடந்து செல்கின்றன. ஓவ்வொரு ஆட்டோ சத்தத்தின் போதும் தலையை இன்னும் அழுத்தமாகக் குனிந்து கொண்டு கடைக்கணக்கு பார்த்துக்கொண்டிருக்கிறாள்.

Related posts

பிரண்டையின் மருத்துவம்

Thumi202122

ஈழச்சூழலியல் 24

Thumi202122

ஆபிரகாம் பெஞ்சமின் டி வில்லியர்ஸ்

Thumi202122

Leave a Comment