இதழ்-39

பழைய பாட்ஷாவாக வருவாரா…?

தற்கால கிரிக்கெட் உலகில் விராட் கோலி, ஸ்டீபன் ஸ்மித், கேன் வில்லியம்சன் மற்றும் ஜோய் ரூட் இடையே யார் சிறந்த மட்டையாளர் என்பதற்கான நான்முனை போட்டி நிலவியது. இதில் டெஸ்ட் போட்டியில் ஸ்மித்தும் ஒருநாள் ஆட்டங்களில் கோலியும் மற்றைய மூவரையும் பின்னுக்குத் தள்ளினாலும் ஆனால் மூன்று விதமான ஆட்டங்களிலும் சேர்த்து யார் என்பதில் வேறு வேறு தெரிவுகள் இருக்கிறது. இங்கிலாந்தின் Tactical முடிவினால் இந்த நால்வரில் ரூட் மட்டும், தற்போது (2019க்கு பின்) ரி20 சர்வதேச ஆட்டங்களில் விளையாடுவதில்லை.

இப்படியான நிலையில் கடந்த 2019ம் ஆண்டு ஆஷஸ் டெஸ்ட் தொடரில், ஜோஸ் ஹசல்வூட் மற்றும் பட் கம்மின்ஸ் கூட்டணி ரூட் க்கு மிகப்பெரும் நெருக்கடியை கொடுத்தது இதனால் ரூட் தனது கால்களை சற்று முன்னதாக அசைந்து சற்று நேரம் எடுத்துக் கொள்ள பார்த்தார். ஆனால் அது சரி வரவில்லை. அதன் பின்னர் 2020ம் ஆண்டு, ரூட்க்கு அறிமுகமான வருடங்களுக்கு பிறகு (2012-டெஸ்ட்,2013-ஒருநாள்) சதம் அடிக்காத முதல் வருடமானது.

2021 இல் விஸ்வரூபம் எடுத்த ரூட்க்கு டெஸ்டில் சதங்களும் இரட்டை சதங்களும் கிடைத்தன; ஒருநாள் சர்வதேச ஆட்டங்களில் விளையாடிய இரு போட்டியிலும் ஆட்டமிழக்கவில்லை. அதுமட்டுமின்றி இங்கிலாந்து சார்பாக ஒரு வருடத்தில் அதிக டெஸ்ட் ரன்கள் எடுத்த வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். அத்துடன் ரூட் அதிக நிமிடங்கள் களத்தில் துடுப்பாடிய முதல் ஏழு சந்தர்ப்பங்களில் நான்கு தடவைகள் இந்த வருடம் என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் வைத்து இரட்டை சதத்துடன் இவ்வருடத்தினை ஆரம்பித்த ரூட் இந்தியாவிலும் இரட்டை சதம் விளாசினார். ஜோய் ரூட் தான் பெறும் அரைச்சதங்களை சதங்களாக மாற்றுவதில் தடுமாறுபவர் ஆனாலும் இந்த வருடம் இந்த தவறையும் திருத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வருடம் ரூட் டெஸ்டில் அசத்தி வர இதுவரை சதங்கள் குவித்து வந்த கோலியும் ஸ்மித்தும் கடந்த வருடங்களில் சதம் பெறுவது குறைந்து விட்டது.

இதுவரை அவுஸ்திரேலிய மண்ணில் சதம் அடிக்காத ரூட், இம்முறை நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஆஷஸ் தொடரின் முதலாவது டெஸ்டில் முதல் இன்னிங்சில் ரன் ஏதும் எடுக்காது ஆட்டமிழந்தார், ஆனாலும் இரண்டாம் இன்னிங்ஸில் 83 எடுத்து அரைச்சதம் கடந்தார். இந்த 2021 கலக்கி வரும் இவர், இம்முறை ஆஸி மண்ணில் சதம் அடிப்பாரா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

Related posts

காதல் கண்ணா!

Thumi202122

ஈழச்சூழலியல் 25

Thumi202122

சித்திராங்கதா – 38

Thumi202122

Leave a Comment