சமகாலத்தில் சமூக வலைத்தளங்கள் ஏனைய ஊடகங்களை தாண்டி இளையோர்களின் அதிக ஈடுபாட்டை கொண்ட ஊடகமாக காணப்படுகிறது. சமூக வலைத்தளங்களும் இளையோ ர்களின் தேடல்களையும் சுருங்க செய்து விடுகிறது. நாலு வரிகளில் இடும் பதிவுகளை தகவலாக கடத்தும் தேடல்களற்ற இளம் சமூகத்தை சமூக வலைத்தளம் உருவாக்குவது சமூகத்தின் எதிர்காலத்தையே பெருவாரியாக சிதைக்கிறது.
அண்மையில் பேராசிரியர் ஒருவர் தனது அண்மைய மாணவர்களின் ஆய்வு சார்ந்த பரீட்சகராக அனுபவங்களை பகிருகையில், கலாநிதி ஆய்வு பட்டத்திலும் தேடல்களற்ற வெறும் சுருக்கமான தகவல்களுடன் கலாநிதி பட்ட ஆய்வேடுகளை சமர்ப்பிப்பதாக வேதனையை பகிர்ந்தார். சமூக ஊடகங்களோடு அதிகம் உறவாடும் இன்றைய இளைய சமூகம் இவ்வாறான ஆய்வுகளற்ற தேடல்களற்ற சமூகமாகவே உருவாகி வருகிறது.
தேடலற்ற உலகை உருவாக்கும் சமூக வலைத்தளங்களில் தகவல்களை பகிருகையில் சமூகப்பார்வையுடன் போட வேண்டிய தேவை காணப்படுகிறது. சமூகப்பொறுப்பற்ற வகையில் அண்மையிலோர் பதிவொன்று சமூக வலைத்தளத்தில் கடத்தப்பட்டிருந்தது. அதாவது ஆறுமுக நாவலரின் அபிமானிகள் நாவலரின் 200வது ஆண்டுக்கான கொண்டாட்டாங்களை தயார்ப்படுத்து கையில் சில பேஸ்புக் தளங்களில் நாவலர் தொடர்பான எதிர்மறையான கருத்துக்கள் மாத்திரம் உலாவியது.
ஒரு வரலாற்று தகவலை வழங்குகையில் சரியான ஆதாரங் களுடன் ஆழமான ஒப்பீடுகளுடன் பகுப்பாய்வுகளுக்குட்படுத்தி தரவுகளை பகிர வேண்டும். எதிர்மறையான கருத்துக்களை மாத்திரம் பகிருகையில் பகிர்பவரை தொடரும் இளம்பராயத்தினரிடம் நாவலர் தொடர்பான எதிர்மறையான கருத்துக்கள் மத்திரமே ஆழமாக பதியக்கூடியதாக காணப்படும். இது நாவலர் வரலாற்றில் முக்கியத்துவம் பெறும் மகிமைகளை மழுங்கடிக்கச்செய்கிறது. இது வரலாற்றை திரிவுபடுத்தக்கூடியது. இதில் நாவலர் ஓர் அண்மைய எடுத்துக்காட்டேயாகும். இவ்வரலாற்று திரிபுகள் பல கோணங்களில் இடம்பெறுகிறது.
ஆயுதங்கள் சரியான முறையில் பயன்படுத்தப்பட வேண்டும். தவறான பிரயோகம் இழப்புக்களையே அதிகரிக்கும்.
நல்லதோர் வீணை செய்தே
அதை நலங்கெட புழுதியில் எறிவதுவோ?