இதழ்-39

மாதங்களில் நான் மார்கழி

பனி, குளிர், தொடர் மழை என இயற்கை சோதிக்கும் பீடை மாதமா மார்கழி? இல்லை! மார்கழியை பீடை மாதம் என்று தவறாக சொல்வார்கள். பீடு என்றால் பெருமை என்று பொருள். பெருமை நிறைந்த மாதம் என்பதே மருவி பீடை என்றானது. மகத்துவங்கள் நிறைந்ததும் இறைவழிபாட்டிற்கே உரியதுமான மாதம் என்றால் அது மார்கழி தான். அதனால்தான் மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன்!’ என்று கிருஷ்ணனே கூறியிருக்கிறார். மேலும் அவரே, கீதையில் மார்கழி மாதத்தை தேவர்களின் மாதம் என்று சொல்கிறார்.

இத்தகைய சிறப்பு பொருந்திய மாதத்தில் அதிகாலையில் எழுந்து நீராடி திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி மற்றும் திருப்பாவை என்பவற்றை பாடிப் பரவசமடைவது சிறப்பானது. குளிர் பனி ஆரம்பிக்கும் காலத்தில் காலையில் எழுவதே கடினமானதாக இருக்கும். ஆனால் அதிகாலையில் எழுந்து நீராடி கோலம் போட்டு ஆலயம் செல்வதாக கட்டமைக்கப்பட்டுள்ள எமது வழக்கங்கள் முரணாக இருக்கிறதா? இல்லை!

“மார்கழியில் குளித்துப்பார் குளிர் பழகிப்போகும் என்பார்கள்.”

மார்கழியிலேயே அதிகாலையில் எழுந்து சுறுசுறுப்பாக இயங்கத் தொடங்கிவிட்டால் மற்றய மாதங்களில் அவை இலகுவாகி விடும். இதனால்த்தான் இவ்வாறு சொல்லி இருக்க வேண்டும்.

திருவெம்பாவை
தேன் சொட்டச்சொட்ட மணிவாசகரால் பாடப்பட்ட திருவெம்பாவையில் மொத்தம் இருபது பாடல்கள் உள்ளன. முதல் எட்டு பாடல்கள் மகளிர்கள் ஒருவரை ஒருவர் எழுப்பிக்கொண்டு எல்லோருமாக இறைவனின் புகழினை பாடியவாறு நீராடச் செல்லுதலையும், ஒன்பதாவது பாடலில் தங்களது வேண்டுகோளை இறைவனிடம் வைப்பதையும், பத்தாவது பாடலில் இறைவனைப் புகழ்ந்து பாடும் தன்மையை கேட்டு அறிவதையும் உணர்த்துகின்றன. அடுத்த பத்து பாடல்கள் அனைவரும் சேர்ந்து நீராடுதலை உணர்த்துவதாகவும் அமைந்துள்ளன.

திருவெம்பாவையில் வரும் பெண்கள் தம் மனத்து இல்லம் தோறும் இறைவன் எழுந்தருளி இருப்பதால் எந்த குறையும் இல்லாதவர்கள். எனினும் ஆதியும் அந்தமும் இல்லாத அரும் பெருஞ்சோதியைச் சுமக்கின்ற பரந்த மனமுடைய அவர்கள், இந்தப் பேரின்பப் பெருவழிக்கு வராது விடுபட்டுப் போன அக்கம்பக்கத்திலுள்ள தம் எல்லாத் தோழிகளின் துயில் மயக்கத்தைத் தெளிவித்து, அவருடைய உறுதியின்மையால் தாம் தளர்வுறாது, இறைவன் பால் ஒருமைப்பட்ட தம் மனத்தால் அவரையும் கண்ணுக்கினிய கருணைக் கடலான சிவபெருமானைப் பாடத் தேற்றுகின்றனர். இதுவே நமது இன்றைய தேவை. நாம் உய்யும் நெறியை உறுதியாகப் பற்றவேண்டும். அதே நேரத்தில் அவ்வாறு பற்றுவதால் நாம் பெறும் இன்பத்தை அண்டை அயலவர் எல்லோருக்கும் கிடைக்கும் வண்ணம், “யாம் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம்” என அறைகூவி அழைத்தும், எல்லோரது பேரின்ப பெருவாழ்வுக்கும் வழி காட்டுகிறார்கள்.

திருப்பாவை
திருப்பாவை என்பது சூடிக்கொடுத்த சுடர்க்கொடி எனப் போற்றப்படும் ஆண்டாள் நாச்சியாரால் பாடப்பட்ட பாடல்களின் தொகுப்பாகும். இவர் பன்னிரண்டு ஆழ்வார்களில் ஒருவரான பெரியாழ்வாரின் மகள்.

திருப்பாவை மொத்தம் 30 பாடல்களைக் கொண்டது. திருப்பாவையின் முதல் பாடலானது, திருப்பாவையின் தொகுப்பு பாடப்பட்டதற்கான நோக்கத்தை எடுத்துரைக்கும் வகையில் சுருக்கமாக அமைந்துள்ளது. அதைத் தொடர்ந்து வரும் 2 முதல் 5 வரையான பாடல்கள், திருப்பாற்கடலில் பள்ளிகொண்டுள்ள நாராயணரின் சிறப்பை எடுத்துக் கூறுகிறது.

ஆறு முதல் பதினைந்து வரையான துதிப்பாடல்கள், ஆழ்வார்களுக்கு ஒப்பாக, பெண் தோழியர்களை கற்பனை செய்து கொண்டு அவர்களை எழுப்பி, நீராடிவிட்டு கோவிலுக்கு செல்வதை சொல்கிறது. அடுத்து வரும் பதினைந்து பாடல்களும், ‘உன்னையே கணவனாக எண்ணிக் கொண்டுள்ள என்னை ஏற்றுக்கொள்” என்று வெண்ணெய் உண்டவனை நினைத்து உருகிப்பாடுவதாக அமைந்திருக்கிறது.

இத்தகைய தெய்வீக பாசுர பாராயணங்களோடு மார்கழி மாதத்தை வரவேற்போம்.

Related posts

ஐயப்பன் விரதமும் இளைஞர்களின் வகிபங்கும்

Thumi202122

ஈழச்சூழலியல் 25

Thumi202122

பிள்ளையார் பிடிக்க நினைத்து குரங்காக்கி விடாதீர்கள்…!

Thumi202122

Leave a Comment