இதழ்-39

ஈழச்சூழலியல் 25

பொசுபரசு

பொசுபரசு தாவரங்களுக்கு தேவையான இன்னுமொரு போசணைபொருளாவதுடன் இதுவும் பசளையாக இடப்படுகின்றது.ஆனால், நைற்ரேற்டை விட பொஸ்பேட்டின் இரசாயனம் வித்தியாசமானதாகும். நைற்ரேற் நீரிற் கரையும் அதேவேளை, பொஸ்பேட் மண்ணிலுள்ள கல்சியம், மக்னீசியம், அலுமினியம், இரும்பு போன்ற நேரயன்களுடன் சேர்ந்து தொடரான சேர்வைகளை உருவாக்கும். இச்சேர்வைகள் நீரில் அரிதாகவே கரையும். இதனால் பொசுபரசு பசளை இடப்பட்ட மண்ணிலிருந்து ஓடும் மேற்பரப்பு நீரில் குறைந்தளவான கரைந்த பொசுபரசே காணப்படும். இலங்கையில் வருடம் முழுவதும் பல இடங்களில் இது தொடர்பான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அடுத்து நாம் சேதனப்பசளைகளை பற்றி ஆராய்வோமேயானால் அதன் பின்புலத்திலும் எதிர்மறையான விடயங்கள் இல்லாமலில்லை.இலங்கையில் காணப்படும் பெரும்பாலான சேதனப் பசளைகள், மிருகங்களின் கழிவுகளில் இருந்து பெறப்படுகின்றனவாகும். பெரும்பாலான மாடுகள் எருமைகள் புற்தரைகளில் சுயாதீனமாக மேயும் போது அவற்றின் சாணம் நிலமெங்கும் பரவிக் காணப்படும். இவ்வாறான சந்தர்ப்பங்களில், நீர் மாசடையாது. எனினும் சில சந்தர்ப்பங்களில் மிருகங்களின் கழிவு நீர்நிலைகளின் அருகே காணப்படும். மழை காலத்தில் இக்கழிவு நீருடன் சேர்ந்து நீரிற்கு போசணையை சேர்க்கும். வெப்பகாலத்தில் நீர் ஆவியாவதால், போசணையின் செறிவு கூடி நற்போசணை அதிகரிக்கும். நீர் மாசடைதல் பல அபிவிருத்தி அடைந்த நாடுகளுக்கு ஒரு ஆபத்தானது தோற்றப்பாடாக பார்க்கப்படுகிறது.

இந்நாடுகளில் பெருந்தொகையான கால்நடைகள் சிறிய புற்தரைகளில் அடைக்கப்பட்டு வளர்க்கப்டுகின்றன. இவ் விலங்குகளுக்கு உணவாக தானியங்கள் வெளியில் இருந்து கொண்டு வரப்படுகின்றன. கடலை, தானியங்கள் சோயா பீ;ன்ஸ் ஆகியவற்றில் உள்ள 50 %- 75% ஆன பொஸ்பரஸ் Phalate எனும் வடிவில் காணப்படுகிறது. இவை விலங்குகளினால்ஜீரணிக்க முடியாது. இவ்வாறான சந்தர்ப்பங்களில் உட்கொள்ளப்பட்ட பொஸ்பரசு கழிவாக வெளியேற்றப்படுகிறது. இந்த நிலத்தில் தொடர்ச்சியான கால்நடை வளர்ப்பானது நிலத்திலுள்ள பொஸ்பரசின் அளவை அதிகரிக்கச் செய்யும். இது நீரை மாசு நிலைக்கு கொண்டு செல்லும். இலங்கையில் பல பயிர்வகைகளுக்கு விலங்ககுகளின் சாணம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. எனினும் வருடாந்தம் இந்த வகையில் கொண்டு வரப்படும் பொஸ்பரசின் அளவு சூழலுக்கு ஆபத்தாக அமையுமென கருதமுடியாது.

அனைத்து தாவரங்களும் 17 வகையான போசணைச்சத்துக்களையும் கொண்டிருப்பதனால், உதாரணமாக பசு போன்றதொரு விலங்கு, தாவரப்பாகங்களில் பெரும்பாலானவற்றை உண்ணும் போது நிச்சயமாக சாணத்தில் அனைத்து தாவரங்களுக்கான போசணைச்சத்துக்களும் காணப்படும். இது மண்ணில் சிதைவடையும் போது சேதன வடிவிலுள்ள போசணை மூலகங்கள் மண்ணில் விடுவிக்கப்படும். இதனையடுத்து, இரசாயனப் பசளைகளிலுள்ள போசணைச்சத்துக்களில் ஏற்படும் மாற்றங்களே இதிலும் இடம்பெற்று, நீர்நிலைகளை மாசுபடுத்தும். சேதனப் பசளைகளிலுள்ள சாதகமானதொரு அம்சம் யாதெனில் அவை மெதுவாக சிதைவடைந்து, குறிப்பிட்ட காலத்தில் குறைந்தளவான போசணைச்சத்துக்களை விடுவிப்பதாகும். இதனால், சுற்றாடலில் இழக்கப்படும் போசணைச்சத்துக்களின் குறைவாகக் காணப்படும். ஆனால் ஒரே தடவையில் அதிகளவான சேதனப்பசளைகளை இடும் போது இந்நிலை இல்லாதிருக்கலாம். மிருகங்களுக்கு வழங்கப்படும் உணவு மற்றும் விலங்குளின் சாணம் என்பவற்றில் சிறிய அளவில் ஆபத்தான பார உலோகங்களான ஆசனிக் மற்றும் கட்மியம் என்பன காணப்படுவதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன. கிரமமாக அதிக அளவில் விலங்குகளின் சாணம் விவசாய நிலங்களுக்கு சேருமாயின் சூழலுக்கு ஆபத்தாக அமையும். சேதனப்பசளைகள் சூழலுக்கு உகந்தது என்பதும் இரசாயன பசளைகள் உகந்ததல்ல என்பதும் ஒரு பிழையான எண்ணக் கருத்தாகும். சேதனப் பொருட்கள் மிக மெதுவாகவே பிரிகை அடைவதால் அதிலிருந்து விடுவிக்கப்படும் போசணப் பொருட்களின் அளவும் குறைவாகும். இதன்காரணமாக நீருடன் கலக்கும் போசணப் பொருட்களின் அளவும் அதற்காக எடுக்கும் நேரத்துடன் ஒப்பிடுகையில் அனேக இரசாயன பசளைகளைவிட குறைவானதாகும்.

பீடைநாசினிகளினால் நீர் மாசடைதல்

ஆயிரக் கணக்கான வருடங்களாக மனிதர்கள் இயற்கையான பீடைநாசினிகளைப் பயன்படுத்தியபோதிலும், நோய்கள், பூச்சிகளின் தாக்கம், களைத் தொற்றல்கள் என்பனவற்றிலிருந்து பயிர்களைப் பாதுகாப்பதற்கு செயற்கை பீடைநாசினிகளைப் பயன்படுத்துவது அண்மையில் ஏற்பட்டதொரு நிகழ்வாகும். பங்கசுநாசினிகள், பூச்சிநாசினிகள், நெமற்றோட்டுநாசினிகள், களைநாசினிகள் என்பன பொதுவாக பீடைநாசினிகள் என அழைக்கப்படுகின்றன. சில காலத்திற்கு முன்னர் செயற்கைப் பீடைநாசினிகளை அபிவிருத்தி செய்த போது, பீடைகளை விரைவாகவும், குறைந்த செலவிலும் அழித்து, பட்டினியால் வாடும் உலகில் உணவுற்பத்தியை அதிகரிப்பதற்கான ஒரு மைல்கல்லாக கட்டியம் கூறி பெருமளவில் வரவேற்கப்பட்ட போதிலும், தற்போது பெரும்பாலான பீடைநாசினிகள் மாசுபடுத்திகள் எனக்கருதப்படுகின்றன. இவை சுற்றாடற் தொகுதியைக் குழப்புகின்றன. இரை ஊணுன்னி தொடர்பினைக் குழப்புகின்றன. உயிரியற் பல்லினத்தன்மையை இழப்பதற்கு வழிவகுக்கின்றன. மனிதர்களிற்கும் ஏனைய உயிரினங்களிற்கும் ஆரோக்கியப் பிரச்சினைகளை ஏற்படுத்துகின்றன.

பீடைநாசினிகளை பின்வரும் நான்கு பிரதான பிரிவுகளாக வகைப்படுத்தலாம்.

  1. குளோரினேற்றம் செய்யப்பட்ட ஐதரோகாபன்கள். உதாரணம் – டி. டி ரி. (டைகுளோரோ டைபீனைல் றைகுளோரோ ஈதேன் – DDT
  2. ஓகனோபொஸ்பேற்றுகள். உதாரணம் – மலத்தியன்
  3. காபமேற்றுகள். உதாரணம் – காபொறில்
  4. பார உலோகங்களைக் கொண்ட பொருட்கள் – உதாரணம் – போடெக்ஸ் கலவைகள்
    DDT ஆரம்ப பீடைநாசினிகளில் ஒன்றாகும். 1945 இல் சுவிற்சர்லாந்தில் போல் முல்லர் அவர்களினால் இது அபிவிருத்தி செய்யப்பட்டது. இதற்கென அவர் நோபல் பரிசைப் பெற்றுக் கொண்டார். இதனையடுத்து, ஒகனோபொஸ்பேற்றுக்களும், காபமேற்றுக்களும் அறிமுகப்படுத்தப்பட்டன. பீடைநாசினியொன்றின் செயற்பாட்டு மூலகம், அதனை உருவாக்கும் போது பயன்படுத்தப்பட்ட சேர்மானப் பொருட்கள், ஒளியிரசாயனவியலில் உருவாகும் படியிறக்கமடையும் பொருட்கள், மண்ணில் படியிறக்கமடையும் இரசாயன, நுண்ணுயிர் பொருட்கள் என்பன மேற்பரப்பு நீரோட்டம், ஊடுவடிதல் என்பனவற்றின் மூலம் நீர்நிலைகளை அடையலாம். ஒரு பீடைநாசினி அல்லது அதன் சிதைவடைந்த பாகம் நீரிற் கரையாத போதிலும் கூட, அவை ஆழத்திற் சென்று நீர் நிலைகளின் அடியிற் படிந்துள்ள அடையல்களுடன் சேரும் போது, அங்கு நிலவும் தாழ்த்தப்பட்ட நிலைமையில் கரையத் தொடங்கும். அவ்வாறான அடையல்களை உதாரணமாக மீன்கள் போன்றன உண்ணும் போது, அவை மனிதஉடலை அடைந்து உணவுச் சங்கிலியில் மேல்நோக்கிச் செல்லும்.

ஆராய்வோம்…………

Related posts

காதல் கண்ணா!

Thumi202122

குறுக்கெழுத்துப்போட்டி – 35

Thumi202122

வினோத உலகம் – 05

Thumi202122

Leave a Comment