பலன் என்ன?
நூறு ஆண்டுகளுக்கு மேலாக நன்கு வளர்த்து திரண்டு உயர்திருந்த மருத மரத்தின் வேர்கள் நன்கு உயர்ந்து (விரித்து வைத்த கையின் கைவிரல் இடுக்குகள் போல), விரிந்து கிடந்தது. அதன் மேலே மரத்தின் ஒரு கயிறைக் கட்டி அதில் இருந்து ஓலைப்பாய் ஒன்றைக்கட்டி மரத்தின் அடியில், அந்த மருதமரத்தையே ஆதாரமாகக் கொண்டு இரு கூடாரங்கள் அமைக்கப்பட்டிருந்தது. முகலனும், மகாநாமரும் வந்த மாட்டு வண்டிகள் அருகிலே கட்டப்பட்டிருந்தன. காளைமாடுகள் அந்த வண்டிகளுக்கு அருகிலேயே படுத்திருந்து அசைமீட்டு; இரைமீட்டுக் கொண்டிருந்தன. கண்ணுக்கு எட்டிய தூரத்தில் எந்த வெளிச்சமும் இல்லை. வானத்தில் நட்சத்திரங்கள் மின்னிக் கொண்டிருந்தன.
அமைக்கப்பட்ட கூடாரத்தில் முகலன் பயண அசதியினால் ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்தான். இரண்டு பேர் வெளியிலே காவலுக்கு அமர்ந்திருந்தனர். அவர்களும் சிறுது நேரத்தில் அசதியால் உறங்கிவிட்டனர். இந்த மருதமரத்தில் ஒரு ஆந்தை அமர்ந்திருந்து இடையிடையே ஒலி எழுப்பிக் கொண்டிருந்தது! சில் வண்டு ஒன்று தூரத்தில் இரைந்து கொண்டிருந்தது. அவர்கள் கூடாரம் அமைத்திருந்த மரத்திற்கு அப்பால் ஒரு கறுத்த மனித உருவம் மெல்ல மெல்ல நகர்ந்துகொண்டிருந்தது. அதன் கையில் கூரான சிறிய கோடாரி ஒன்று கறுத்த துணியால் மூடப்பட்டு இருந்தது. இப்போது இந்த உருவம் மருதமரத்தின் அடிப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த கூடாரத்தை நோக்கி நகர்ந்து வந்தது.
மங்கியபடி எரிந்துகொண்டிருந்த தீப்பந்தத்தின் ஒளியில் அந்த உருவத்தின் முகம் அவ்வளவாகத் தெரியவில்லை. ஆனாலும் அது மீகாரனின் முகத்தைப் போலவும், காசியப்பனின் முகத்தைப் போலவும் தெரிந்தது! ஆனால் அவர்கள் அந்த இடத்தில் தோன்றுவதற்கு தான் சந்தர்ப்பம் இல்லையே……. இல்லை! அந்த முகம் மீகாரனின் முகசாயலையம் காசியப்பனின் முகசாயலையும் ஒத்திருந்த வேறொருவனின் முகம் தான்!
அந்த உருவம் ஒரு கூடாரத்தின் ஒலைப்பாயை மெல்ல நகர்த்தி உள்ளே உற்று பார்த்தது. அதற்குள்ளே மகாநாமர் ஆழ்ந்த உறங்கிக்கொண்டிருந்தார். சற்று நகர்ந்த அந்த உருவம் முகலன் உறங்கி கொண்டிருந்த கூடாரத்தின் ஓலைப் பாயை சற்று விலக்கி பார்த்து விட்டு, மெல்ல உள்ளே தன்னை நுழைத்து, கையில் இருந்த தன் கோடாரியை மெல்ல எடுத்து ஓங்கி முகிலனின் மார்பில் இறக்கியது! முகலன் தன் நெஞ்சில் கையை வைத்து பொத்தியபடி அலறினான்! ஆந்த கறுத்த உருவம் பயங்கரமாக சிரித்தது! அந்த சிரிப்பு சற்று சாந்தமாகிஇ கலகலவென்ற சிரிப்பாக மாறியது!
‘ஆ…… குழலி…… குழலி….”
‘ஆம் இளவரசே மீண்டும் அச்சம் கொண்டுவிட்டீர்கள்? இதுவும் குங்குமக் கரைசல் தான் குருதி அல்ல!”
என்றபடி குழலி மறைந்தாள்! முகலன் திடுக்குற்று எழுந்து, தன் கையால் காற்றைத் துளாவினான்! குழலி ஏற்கனவே செய்த குறும்பும் மாநாமாரின் எச்சரிக்கையும் சேர்ந்து இப்பிடி ஒரு கனவாக பரிணமித்துள்ளது என்பதை உணர்ந்த முகலன், எதோ உணர்வு பெற்றுத் திடீரென எழுந்து கூடாரத்தின் வெளியே வந்து மகாநாமாரின் கூடாரத்தை சற்று நகர்த்திப் பார்த்தான்!
மகாநாமர் முகலனின் முனகலால் கூட தன் உறக்கம் கலையாமல் ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்தார்! முகலன் நின்மதிப் பெருமூச்செறிந்தான்! வானத்தில் மின்னும் நட்சத்திரங் களைப் பார்த்தபடியே வண்டிலின் அருகில் வந்து பானையில் இருந்த நீரை எடுத்துப் பருகித் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டான்! ஆனாலும் அந்தக் கனவின் தாக்கம் அவனை விட்டு அகன்றபாடில்லை! யாருக்காவது தன் கனவினை சொல்லி ஆறவேண்டும் போலிருந்தாலும், அதற்கு சந்தர்ப்பமும் இல்லை! இந்த நேரத்தில் மகாநாமரையோ, மற்றவர்களையே துயிலெழுப்புவது அவ்வளவு நன்றாக இருக்காது என்பதை அறிந்தான்! இன்னும் சிறிது நேரத்தில் விடிந்துவிடும் போல் முகலனுக்கு தோன்றியது!
தூரத்தில் எங்கோ சேவல் ஒன்று கூவும் சத்தம் தொலைவில் குடியிருப்புக்கள் இருக்க வேண்டும் என்பதை உணர்த்தியது. இதமான குளிர்காற்று ஒன்று மெல்ல வீசிப்போனது! ஆதன் ஸ்பரிசம் அவனுக்கு குழலியை நினைவுபடுத்தியது! இந்தக் கொடூரமான கனவு கூட குழலியின் கலகலப்பான சிரிப்பில் நிறைவடைந்ததால் முகலன் சற்று குழம்பிப் போயிருந்தான்! அது தன்னைக் கொல்ல வந்த உருவம் குழலியாக மாறியதை அவனால் ஏற்றுக்கொள்ள முடியாமலும் இருந்தது!
பொதுவாகவே சிங்கள அரச வம்சத்தவர்கள் கனவுகளையும் சகுன நிமித்தங்களையும் சோதிடர்கள் மூலம் அறிந்து கொள்வார்கள்! தாதுசேனரும் இப்படியாக பல சந்தர்ப்பங்களில் பலன் பார்த்ததை முகலன் அறிந்திருந்தான்! முகலன் பாரதத்திற்கு முன்னர் வந்தபோதும், கெட்ட கனவு ஒன்றைக் கண்டிருந்ததாகவும், நாட்டுக்கு திரும்பும் படியும் ஓலை அனுப்பியது முகலனுக்கு மறந்து போகக்கூடிய ஒன்றும் இல்லை!
தனக்கு வரப்போகும் ஆபத்தை குழலி தடுப்பாள்! அதையே இக் கனவு உணர்த்துகிறது என்று தனக்குத்தானே முகலன் சமாதானப்படுத்திக் கொண்டபோது ஓரளவு விடிந்துவிட்டது! அதே நேரம் குழலியின் பேச்சை நம்பிய மல்லன் குழு மதுரையை நோக்கிப் புறப்பட தயாராகிக் கொண்டிருந்தது.
பயணம் தொடரும்……