இதழ்-39

சித்திராங்கதா – 38

நட்புறவு என்னும் ராஜதந்திரம்

‘ராஜவல்லமை கொண்ட சுயபுத்தி மிகுந்த ஒருவன் அரியணையை அலங்கரிக்க வேண்டும். சங்கிலிய குமார பூபதி அரியணையில் உள்ளவரை நடப்பது இராஜமந்திரியாரது ஆட்சியாகும். அப்படியிருக்கையில் அவரது சதித்திட்டங்களை எம்மால் வெல்வது சாத்தியமல்ல என்பதே சத்தியமாகும் தேவி’ என்று உறுதியான குரலில் சொல்லிக்கொண்டிருந்தான் வன்னியத்தேவன்.

பொறுமையுடன் அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்த சித்திராங்கதா இப்போது கேட்டாள்.

‘ஆட்சியிலிருந்து மன்னரை அப்புறப்படுத்துவது ஒன்றும் எம்மால் ஆகக்கூடிய காரியமல்லவே வன்னியத்தேவரே; அப்படியே நிகழினும் தாம் கூறிய சுயபுத்தி மிக்க வேந்தரை எங்ஙனம் அறிவீர்?
ஒருவேளை தாம் தங்களை எண்ணித்தான் அப்படிக் கூறினீர்களோ? தங்களது அரசியல் அவாவிற்கு என்னை உபயோகப்படுத்திக் கொள்ள எண்ணம் கொண்டீரோ?’ என்று தன் சந்தேகத்தை தயக்கமின்றி கேட்டாள் சித்திராங்கதா.

‘தேவி! இது என்ன கூறுகிறீர்கள்? என் அரசியல் அவா என்று எனக்கெதுவுமல்ல தேவி. நான் ஒரு சிற்றரசன். யாழ் அரியணையில் அமருவது பற்றி எனக்குத் துளியளவும் எண்ணமோ ஆசையோ கிடையாது. நான் அத்தகைய ஆசை கொள்ளவும் தகுதியிலேன் ஆவேன் தேவி; தங்கள் ஆடற்கலை மீது கொண்ட பிரியத்தினால் ஆடற்கலையின் அபூர்வராணிக்கு நிகழப்போகிற ஓர் அநியாயத்தை அறிந்தும் நான் அமைதியாய் இருத்தல் ஆகாது என்கிற நல்லெண்ணம் கருதியே இதனை தங்களிடம் உரைக்க வந்தேன். அன்றி தாங்கள் கூறுவது போல் ஏதுமில்லை தேவி’ என்று அவசரவசரமாக கூறிமுடித்தான் வன்னியத்தேவன்.

‘பிறகு சுயபுத்தியிற் சிறந்த வேந்தன் என்று யாரைப்பற்றி புகழ்ந்துரைத்தீர்கள் வன்னியத்தேவரே?’

‘தஞ்சை வீரரை பற்றியே அங்ஙனம் கூறினேன் தேவி’

வன்னியத்தேவனின் இக்கூற்று சித்திராங்கதாவிற்கு சற்றும் எதிர்பாராத வியப்பை உண்டாக்கியது.

‘என்ன வன்னியத்தேவரே? தாமே ராஜமந்திரியாரது திட்டத்தை வெற்றியாக்க வழி கூறுகிறீர்களா? தஞ்சை வேந்தரை அரசராக்குவதுதான் ராஜமந்திரியாரது திட்டம் என்று சற்றுமுன்தானே கூறினீர்கள்?’

‘ராஜமந்திரியாரது திட்டமும் அதுதான் தேவி. ஆனால் ராஜமந்திரியார் அதனை சங்கிலிய குமாரரை கொண்டு சாதிக்க விரும்புகிறார். நான் சங்கிலிய குமாரரை எதிர்த்து சாதிக்க வேண்டும் என்கிறேன். அன்றி தற்சமயம் நாட்டிற்குத் தேவையான இணையற்ற தலைவன் தஞ்சைவீரர் வருணகுலத்தான் என்பதில் எனக்கும் மறுப்பில்லை தேவி’

‘ஆனால் எனக்கு மறுப்பிருக்கிறது வன்னியத்தேவரே; எங்ஙனம் தஞ்சைவீரர் அரியணை ஏறினாலும் அதன் அடுத்தபடி ராஜமந்திரியாரின் எண்ணம் கைகூட வெகு இலகுவாகிவிடுமல்லவா? பிறகு எதற்கு இந்த வீண் திட்டம்?’

‘தேவி, அந்த விடயத்தில் தான் தாங்கள் தெளிவாக சிந்திக்க வேண்டும். தஞ்சை வீரர் சங்கிலியகுமாரர் போல் இல்லையல்லவா? அவர் அறிவாற்றல் மிகுந்தவர். அப்படியொரு செயலை தஞ்சைவீரர் ஆற்றமாட்டார் என தாங்கள் அவர் மேல் நம்பிக்கை கொள்ளவில்லையா தேவி?’
என்றான் வன்னியத்தேவன்.

‘நம்பிக்கை கொள்கிறேன் வன்னியத்தேவரே, ஆனால் அரச காரியங்கள் உண்டாக்க வல்ல சங்கடங்கள் குறித்தும் எண்ணுகையில் தான் அச்சம் கொள்கிறேன்’

‘அதனால்த்தான் சங்கிலியகுமாரரை எதிர்த்து அரியணை ஏறியாக வேண்டும் என்கிறேன். சங்கிலியகுமாரரோடு நட்புறவு கொண்டிருந்தாலன்றோ அப்படியொரு தர்மசங்கட சூழ்நிலைக்கு தஞ்சைவீரர் உள்ளாகக்கூடும். அதுவே ராஜமந்திரியார்தம் திட்டத்தை வெற்றிப்பாதைக்கு அழைத்துச்செல்லவும் வல்லதாகிவிடும். அதனால்த்தான் கூறினேன் மாமன்னரை எதிர்த்தே தஞ்சைவீரர் அரியணையில் அமர வேண்டும் என்று’

‘ஆனால் வன்னியத்தேவரே, எதற்கு இந்த விபரீதம்? தஞ்சைவீரர் அரியணையில் ஏற நேராவிட்டாலே இத்தகைய தேவையற்ற சிக்கல்களை நாம் தவிர்த்து விட இயலுமல்லவா?’

‘தேவி தாம் தேவையற்ற அச்சம் கொள்கிறீர்கள். தாம் நாட்டிய கலாராணி ஆவீர்கள். இந்நாடு மீதும் இந்நாட்டு மக்கள் மீதும் தாம் கொண்ட கரிசனம் குறித்து தங்கள் கலையே பேசுமல்லவா? தங்களது தன்னல அச்சத்திற்காக நாட்டுமக்களிற்கு நன்மை பயக்கும் காரியத்தை நடத்த மறுக்கலாமா தேவி?’ என்று வன்னியத்தேவன் கூறிய வார்த்தைகளால் நெகிழ்ந்து போனாள் சித்திராங்கதா. வருணகுலத்தான் அரியணையில் ஏறுவது தன் உள்மனதிற்கு ஆபத்தாகப் பட்டாலும் அதுவே யாழ்மக்களிற்கு பெருநன்மை பயக்க வல்லது எனவும் முழுமையாக நம்பத்தொடங்கினாள்.

‘ஆனால் தனியாளாக தஞ்சைவீரர் எங்ஙனம் சங்கிலியமகாராஜாவை எதிர்க்க இயலும் வன்னியத்தேவரே?’

‘தனியாள் என்று தஞ்சைவீரரை கூறுதல் முறையோ தேவி? அவர் வீரத்திறன் நான் சொல்லியா தங்களிற்குத் தெரிய வேண்டும்? அத்தோடு ஐயாயிரம் வீரர்படை கோப்பாய் மாளிகையில் தங்கியுள்ளனரே; இதைவிட யாழ் வேந்தரை எதிர்க்க வேறுபலம் வேண்டுமா தேவி?’

‘ஆனால் அப்படைவீரர்கள் அனைவரும் பறங்கியர்களை எதிர்க்க புறப்பட்டு வந்த உதவிப்படை வீரர்கள் அல்லவா?’

‘அது இப்போது அநாவசியம் என்று தான் கூறுவேன் தேவி. அதைவிட இதுவே மிகமுக்கியமானதாகும்’

‘என்ன கூறுகிறீர்கள் வன்னியத்தேவரே? பறங்கியரை எதிர்ப்பது அநாவசியமா? தங்கள் இக்கூற்று எனக்கு ஐயத்தை உண்டுபண்ணுகிறது’

‘தேவி, கொஞ்சம் பொறுமையோடு சிந்தித்துப் பாருங்கள். நான் கூறவிளைவது தங்களிற்கும் புரியும். பறங்கியரது போர்க்கப்பல்களும், பீரங்கிகளும் மன்னார்குடாக்கடலை நோக்கி வந்து கொண்டிருக்கின்றனவாம். எத்தனை பெரிய படையாயினும் அந்தப் பீரங்கிகளுக்கு முன்னால் முன்னேறினால் அனைத்துமே தீக்கிரையாவது தான் உறுதி. இந்த சமயத்தில் ஐயாயிரம் படைவீரர்களை பறங்கியரை எதிர்த்து நாம் அனுப்ப நேர்ந்தால் பெரும்படையினை அடியோடு நாம் இழக்கவேண்டியதுதான். ஆவேச பேச்சுக்களை விடுத்து அறிவாற்றலோடு சிந்தித்துப் பார்த்தால் பறங்கியனை எதிர்ப்பதற்கு இது தக்கசமயமல்ல. இது தகுந்த முறையுமல்ல என்று தங்களிற்கே புரியும் தேவி.’

‘அதற்காக பறங்கியனிடம் பணிந்து வாழ்வதே சாலச்சிறந்தது என்பீர்களா? அப்படி எதற்காக பெரும்படை காத்து நாடாள வேண்டும்? படைவீரர்கள் போரிட முன்னர் அவநம்பிக்கை கொண்டு முடிவுரைப்பது தம் வீரத்திறத்திற்கு இழுக்கு என்று தோன்றவில்லையா தமக்கு?’

‘தேவி, பறங்கியனுக்கு பணிந்து வாழ்வதை விட உயிரை விடுதல் மேல் என்று நானும் ஏற்கிறேன். பணிந்து வாழ நான் கூறவில்லை. அவன் எம்மைப் பகையாய் நினைத்தால் நாம் அவனை பகடையாக்க வேண்டும் என்றே கூறுகிறேன். வீரத்தை விட எம்மதிநுட்பத்தை கொண்டே அவனை வென்றாகமுடியும் என்று நான் நம்புகிறேன். அவன் எங்ஙனம் எம்மிடம் நட்புறவு கொள்ள விளைகிறானோ அதே நட்புறவினை நாம் ராஜதந்திரமாக கொள்ளவேண்டும் என்கிறேன்.
தேவி, ஒரு விடயத்தை சிந்தித்துப்பாருங்கள். அவனிற்கு நம் மக்களை ஆளவேண்டிய அவசியமெதுவுமில்லை. அதில் அவன் நாட்டம் கொள்ளவும் இல்லை. தன் மொழியே புரியாத ஒரு மக்கள் கூட்டத்தின் தலைவனாய் தான் இருக்க அவனிற்கு எவ்வித எண்ணமும் இல்லை. அவனது ஒரே நோக்கம் வர்த்தகம். அதற்காகவே அவன் எல்லாவற்றையும் செய்கிறான். தீவிரமான தன் வர்த்தகப்பயணத்தில் தடை எது வரினும் அதை எதிர்க்க எது வேண்டுமானாலும் செய்வான். அதை புரிந்து கொள்ளாமல் எம் நாடை நாம் ஆளும் உரிமைக்காக அவனிற்கு எதிராய் போர்க்கொடி தூக்குவது தேவையற்ற இழப்புகளையே எம்பக்கம் உண்டாக்கும். மாறாக எம்மதிநுட்பம் கொண்டே அவனை விரட்டியடிக்க முடியும் என்கிறேன். அதற்கு தகுதிமிக்க வேந்தர் அரியணையில் இருக்கவேண்டியது அவசியமாகும் தேவி’ என்றான் வன்னியத்தேவன்.

‘தாங்கள் கூறுவது பெருங்குழப்பம் அளிக்கிறது வன்னியத்தேவரே; அப்படியாயின் தெற்கின் இராச்சியங்களை பறங்கியர்கள் இன்று முழுவதுமாய் தம் ஆதிக்கத்திற்குள் அடக்கி வைத்துள்ளார்களே, அது எதற்காகவாம்?
பிறகு எப்படி ஆளும் நோக்கம் அவர்களுக்கல்ல என்று உரைக்கிறீர்கள்?’

‘அது அவர்கள் வீணாய் பகை வளர்த்துக் கொண்டதால் ஏற்பட்ட அவலமாகும் தேவி. நட்புறவோடு இருந்தவரை பறங்கியனிற்கு கூட அவ்வெண்ணம் இருந்ததாய் நான் அறியேன். வீணாய்ப் போர்க்கொடி தூக்கி வீணாகிப் போயினர். அதே அவலம் யாழ் இராச்சியத்திற்கு வந்துவிடக்கூடாது என்பதற்காகவே நான் கூறுகிறேன்.’

வன்னியத்தேவனது வார்த்தைகள் சித்திராங்கதாவின் மனதிற்குள் பல கேள்விகளை உண்டுபண்ணிக்கொண்டிருந்தாலும் எல்லாவற்றிற்கும் வன்னியத்தேவன் பதிலுரைத்துக்கொண்டே இருந்தேன். மேலும் பல வியூகங்கள், உபாயங்கள் என அவன் நினைத்த விதத்திலே சித்திராங்கதாவை தன் மாயவலைக்குள் முழுவதுமாய் சிக்கவைத்து விட்டான் என்றே சொல்ல வேண்டும். வன்னியன் விரித்த வலையில் சித்திராங்கதா சிக்கிக்கொண்டது போல் நல்லூர் அரசவை நோக்கியும் ஒரு நச்சு வலையினை தூதுவன் வடிவில் அனுப்பி வைத்திருந்தனர் பறங்கியர்.

Related posts

பிள்ளையார் பிடிக்க நினைத்து குரங்காக்கி விடாதீர்கள்…!

Thumi202122

திரும்ப வந்துட்டேன்னு சொல்கிறதா அமெரிக்கா?

Thumi202122

ஈழச்சூழலியல் 25

Thumi202122

Leave a Comment