இதழ்-39

பிரண்டையின் மருத்துவம்-02

பிரண்டையின் பாவனை முறை
பிரண்டைத் துண்டுகளை சேகரித்து மேல் தோலை சீவி சிறு துண்டுகளாக நறுக்கி தேவையான அளவு நெய்யில் வதக்கி தேவையான அளவு புளி, உப்பு, காரம் சேர்த்து அரைக்கவேண்டும். பின்பு கடுகு, உளுந்து சேர்த்து தாளித்து துவையல் செய்து சாதத்துடன் சேர்த்து பிசைந்து சாப்பிட்டு வர இரத்த மூலம் குணமாகும். அத்தோடு வயிற்றுப் பசியையும் கட்டுப்படுத்தும்.

பிரண்டைத் துவையல் செய்து அன்றாட உணவில் சேர்த்துக்கொள்ள பழகிக் கொண்டால் உடல் சுறுசுறுப்பு அதிகரிக்கும், ஞாபக சக்தி பெருகும், மூளை நரம்புகள் பலப்படும்.

நன்றாக முற்றிய பிரண்டைத் துண்டுகளை சிறு துண்டுகளாக நறுக்கி மோரில் போட்டு தேவையான அளவு உப்பு சேர்த்து ஊற வைத்து உலர்த்தி வற்றல்களாக செய்து அதனை எண்ணையில் பொரித்து சாப்பிட பசியின்மை நாக்கு சுவையின்மை ஆகியன குணமாகும்.

பிரண்டையில் இருந்து சாறெடுத்து ஆறு தேக்கரண்டி அளவு சாற்றுடன் ஒரு தேக்கரண்டி நல்லெண்ணெய் கலந்து காலையில் மட்டும் ஒரு வாரம் சாப்பிட்டு வர மாதவிடாய் சீராக அமையும்.

பிரண்டைத் துவையலை குழந்தைகளுக்கு தொடர்ந்து கொடுத்து வர எலும்பு உறுதியாகும். மேலும் எலும்பு முறிவு ஏற்பட்டால் உடைந்த எலும்புகள் விரைவில் சேரவும் உதவுகிறது.

பிரண்டையை நன்கு காயவைத்து தூளாக்கி நீரில் குழைத்து எலும்பு முறிவு உள்ள பகுதியில் பூசி வரலாம்.

பிரண்டையின் வேரை உலர்த்தி பொடி செய்து வைத்து காலை மாலை 10 கிராம் அளவு சாப்பிட்டு வருவது சிறப்பாகும்

பிரண்டையில் இருந்து சாறு எடுத்து புளி, உப்பு சேர்த்து காய்ச்சி பொறுக்கும் சூட்டில் அடிப்பட்ட இடத்தில் மேல்பூச்சாக பற்றுப்போட அடிபட்ட வீக்கம் குணமாகும்இ பசியை தூண்டும், இரத்தக்கழிச்சல், அஜீரணம் ஆகியவற்றை குணமாக்கும்.

நோய் எதிர்ப்பு சக்தி
பிரண்டை காரச் சத்து அதிகம் நிறைந்த ஒன்று எனவே இதில் உள்ள சத்தானது நமது இரத்தத்தில் கலந்து உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துகிறது. மற்றும் வைரஸ் போன்ற ஒருசில கிருமிகளால் ஏற்படக்கூடிய நோய் போன்றவற்றையும் ஏற்படாமல் தடுக்கக் கூடிய தன்மை கொண்டது.

பற்கள் உறுதி
பற்களுக்கு உறுதி அளிக்கிறது. இனிப்பு அதிகமுள்ள பொருட்களை உண்பதாலும் உடலில் ஏற்படும் சத்து குறைபாட்டாலும் பற்களில் சொத்தை ஏற்படுதல்இ பற்களின் ஈறுகளில் ரத்தம் வடிதல் போன்ற பிரச்சினைகளுக்கு பிரண்டையை அடிக்கடி உணவுடன் சேர்த்து சாப்பிட்டு வருபவர்களுக்கு பற்கள் சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளும் குணமாகும்.

வாயு பிரச்சனைக்கு தீர்வு
இன்று பலரும் சரியான உணவின்மை காரணமாக வாயுத்தொல்லைக்கு ஆளாகின்றனர். வயிற்றில் வாயு கோளாறு ஏற்பட்டு அவதிப்படுபவர்கள் வாரம் ஒருமுறை அல்லது இருமுறை பிரண்டைத் துவையலை சாப்பிட்டு வந்தால் வாயுத் தொல்லை, அஜீரணக் கோளாறுகள் நீங்கும்.

எலும்பு ஆரோக்கியம்
பிரண்டையின் சிறப்பு என்னவென்றால் எலும்பு தொடர்பான பாதிப்புகளிற்கு சிறந்த நிவாரணமாக இருப்பது தான் மிக முக்கியமான காரணமாகும். எலும்பு தேய்மானம் உள்ளவர்கள் பிரண்டை ரசம் வைத்து சாப்பிட்டு வருவது எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு மிக நல்லது. எலும்பு முறிவின் காரணமாக அவதிப்படுபவர்கள் பிரண்டையை எடுத்து வாரத்தில் ஒரு முறையாவது துவையலாக செய்து சாப்பிட்டு வந்தால் உடைந்த எலும்புகள் வேகமாக கூடும்.

கொழுப்பினை குறைக்கும்
பிரண்டை உடலில் தங்கும் கொழுப்புக்களை கரைக்கும் தன்மை கொண்டது. பிரண்டையை பக்குவப் படுத்தி சாப்பிடுவதன் மூலம் அதில் உள்ள அனைத்து சத்துக்களும் ரத்தத்தில் கலந்து நரம்புகளில் இருக்கக்கூடிய கொழுப்புகளினை கரைகிறது. மேலும் அடைப்புகள் எதுவும் ஏற்படாமல் தடுக்கிறது.

சர்க்கரை நோய் நிவாரணி
நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறந்த இயற்கை உணவுகளில் ஒன்றாக பிரண்டை இருக்கின்றது. இதில் நிறைந்திருக்கும் காரத்தன்மை உடலில் ஓடும் ரத்தத்தில் உள்ள சக்கரை அதிகரிக்காமல் தடுக்கிறது.

மூலம் இனி நிர்மூலம்
ஆசன வாயில் உள்ள சதையிலும் ஆசன வாய்க்குள்ளும் ஏற்படக்கூடிய ஒரு பாதிப்புதான் மூலம். மூலம் பாதிப்பின் காரணமாக அவதிப்படுபவர்கள் தினசரி பிரண்டை துண்டுகள் எடுத்து நெய்யில் வதக்கி சாப்பிட்டு வருவதன் மூலமாக மூலம் மிக விரைவில் குணமாகும்.

உடல் வலி நிவாரணி
மிக முக்கியமாக பிரண்டை அனைத்து விதமான வலிகளையும் நீக்குகிறது. மூட்டுவலி, இடுப்புவலி போன்றவைக்கும் பிரண்டை துவையல் செய்து மூன்று வாரம் தொடர்ந்து சாப்பிடுவது சிறப்பாகும்.

நெடுங்காலமாக நம் உணவு முறையில் முக்கிய பங்கு வகித்த பிரண்டை மருத்துவத்துக்கு மட்டுமல்லாது வாழ்வில் பல இடங்களில் செல்வாக்குப் பெறுகிறது. சடங்குகளிலும் விழாக்களிலும் பிரண்டையின் செல்வாக்கு காணமுடிகிறது.

கன்று போட்ட பசு மாடு அல்லது எருமை கன்று எலுங்கொடி விழாவிட்டால் தொங்கிக் கிடக்கும் எலுங்கொடியில் பாரமாக பிரண்டை கொடி சேர்த்து வைத்துக் கட்டுவார்கள் .

பிள்ளை இல்லாதவர்களைப் பார்த்து, ‘பிள்ளை இல்லேன்னா பெரண்டை கொடியை அடிவயிற்றிலே கெட்டிக்கிட்டு படு” என சொல்லும் பழமொழி வழக்கில் உள்ளது.
வாக்கு சொல்லும் சில இடங்களிலும் தேசிக்காயைப் போன்று பிரண்டை தண்டை பயன்படுத்திக் கொள்ளும் வழக்கம் இன்றும் காணப்படுகின்றது.
திவச சடங்கின் போது ஐயருக்கு கொடுக்கும் பொருட்களில் பிரண்டை தண்டு வைத்துக் கொடுக்கும் வழக்கமும் காணப்படுகிறது.

பொங்கல் பண்டிகைக்கு முன் நடைபெறும் போகிப்பண்டிகை எனப்படும் காப்புகட்டில் ஆவரை, சிறுபீளை, வேப்பிலை ,மாவிலை, தும்பை, பிரண்டை போன்றவை பயன்படுத்தப்படும்.
எமது அன்றாட வாழ்வில் பிரண்டை போன்று வலிமை பொருந்திய சித்த மருத்துவங்களின் மகிமை அறியாது அவற்றினை மழுங்கடிப் பதனாலே ஆரோக்கியமற்ற வாழ்வோடு போராடுகிறோம்.காலம் தாழ்த்தினாலும் பெரும் நன்மை பயக்கும் திறன் கொண்ட சித்தமருத்துவம் என்றும் வாழ்வை செம்மைப்படுத்தும் சிறப்பு வாய்ந்ததாகும்.

Related posts

ஐயப்பன் விரதமும் இளைஞர்களின் வகிபங்கும்

Thumi202122

திரும்ப வந்துட்டேன்னு சொல்கிறதா அமெரிக்கா?

Thumi202122

வினோத உலகம் – 05

Thumi202122

Leave a Comment