- அறிமுகம்
ஒரு குழந்தையின் மொழிவளமானது வாழும் சூழல் காரணிகளால் பெரிதும் ஆதிக்கம் செலுத்தப்படுகிறது. குழந்தை தாயின் கருவில் இருக்கின்ற ஏழாம் மாதத்தில் இருந்தே தாயின் குரலை நன்றாகக் கேட்கின்ற தன்மையைப் பெறுகின்றது. உயிரியல் மரபணுக் காரணிகள்இ பிள்ளை வளருகின்ற சூழலின் தனித்தன்மை ஆகியவற்றின் செல்வாக்கினால் ஒரு பிள்ளையின் வளர்ச்சியோடும் முதிர்ச்சியோடும் மொழித்தேட்டம் செம்மைப்படுத்தப்படுகின்றது. இங்கு மொழிவளத்தை உள்வாங்கும் செயற்பாடே மொழித்தேட்டம் ஆகின்றது.
பிறந்த குழந்தையின் படிப்படியான வளர்ச்சி நிலையோடு மொழியுடனான தொடர்பும் அதிகரித்துக்கொண்டு செல்கிறது. அதாவது ஒரு பிள்ளை ஆரம்பத்தில் பெற்றோர்களுடன் கொண்டுள்ள உறவும் அதன் பின் முன்பள்ளி மற்றும் சமூகத்துடனும் பெறுகின்ற பல அனுபவங்கள் ஊடாக மொழியைக் கற்றுக்கொள்கிறது. உடல் இயக்கம், மொழிக்கற்றல், அறிவாற்றல் திறன் என்பவற்றில் ஏற்படும் முன்னேற்றமானது பிள்ளை தொடர்ந்தும் சமூகமயமாக்கப்படுவதற்கும் பயிற்சி பெறுவதற்கும் அடிப்படையாக அமைகிறது. அந்தவகையில் முன் பள்ளிப்பருவமானது மாணவர்களுக்கு ஒரு வழிகாட்டியாகவும் வளர்ச்சியை ஊக்குவிப்பதாகவும் அமைகிறது. முன்பள்ளி மாணவர்களின் மொழித்தேட்டம் தொடர்பாக ஆசிரியர்களது வழிகாட்டுதல்கள் மற்றும் அவர்களினால் செயற்படுத்த ப்படுகின்ற கற்பித்தல் நுட்பங்களையும் மொழியியல் ஆய்வு முறையின் கீழ் ஆராய்தல் இவ்ஆய்வின் முக்கிய நோக்கமாகும்.
மேலும், முன்பள்ளிப் பருவ மாணவர்கள் மொழி தொடர்பாக எதிர்நோக்கும் பிரச்சினைகளை இனங்காணல், முதலாம் மொழித் தேட்டம், இரண்டாம் மொழித்தேட்டம் பற்றிய விடயங்களை அறிதல், முன்பள்ளிப்பருவ மாணவர்களது மொழித்தேட்டத்தில் பெற்றோரது பங்களிப்பு மற்றும் சமூகத்தின் செல்வாக்கு போன்றவற்றை மதிப்பிடல், முன்பள்ளியில் மொழி விருத்தியை முன்னெடுத்துச் செல்வதற்கு ஆசிரியர்களுக்கு உள்ள இடர்பாடுகளை அறிதல், முன்பள்ளி மாணவர்களின் மொழி விருத்திக்கு தடையாக அமையும் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை ஆலோசனைகளை முன்வைத்தல், முன்பள்ளியில் மாணவர்களுக்குக் கொடுக்கப்படுகின்ற மொழிவிருத்தி செயற்பாடுகள் அவர்கள் ஆரம்பக்கல்வியை முன்னெடுத்துச் செல்வதற்கு உதவியாய் அமைகின்றனவா என்பதை ஆராய்தல் போன்றவற்றையும் நோக்கங்களாகக் கொண்டு இவ் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.
முன்பள்ளி மாணவர்களது மொழித்தேட்டம் தொடர்பாக ஆசிரியர்கள் பல பிரச்சினைகளை எதிர்கொள்கின்றார்கள்.
அந்தவகையில் முன்பள்ளி மாணவர்களுக்கு மொழி தொடர்பான குறைபாடுகள் உள்ளதா, மாணவர்கள் மொழியை விருத்தி செய்து கொள்வதற்கு சூழல் செல்வாக்குச் செலுத்துகின்றதா, பெற்றோரது மனப்பாங்குகள் முன்பள்ளி மாணவரின் மொழிவிருத்தியுடன் கவனம் செலுத்தப்படுகின்றதா, ஆசிரியர்கள் மாணவர்களிடையே மொழித்திறன்களை வளர்ப்பதில் அக்கறை செலுத்துகின்றார்களா, ஆசிரியர்கள் முன்பள்ளி மாணவர்களை அடுத்தகட்டமான ஆரம்பக்கல்விக்குத் தேவையான மொழி ஆற்றலை வளர்க்கும் முகமாக மொழி கற்பித்தல் செயற்பாடுகளை மேற்கொள்கின்றார்களா, வலிகாமப் பிரதேசத்து முன்பள்ளிப்பருவ மாணவர்களுக்கு தாய்மொழி மற்றும் இரண்டாம் மொழித் திறன்களை வளர்த்தெடுப்பதில் ஆசிரியர்கள் எவ்வகையான பிரச்சினைகளை எதிர்கொள்கிறார்கள்? இத்தகைய வினாக்களுக்கு விடை காண்பதாக இவ் ஆய்வு அமைந்துள்ளது.
இவ்வகையில் இந்த ஆய்வின் ஆய்வுப்பிரதேசமானது இலங்கையின் வடக்கே அமைந்துள்ள வலிகாம வலயத்தில் இயங்கி வருகின்ற முன்பள்ளிகளை அடிப்படையாகக் கொண்டது. இங்கு தமிழ் மொழியை தாய்மொழியாகக் கொண்ட மக்கள் வசிக்கின்றனர். ஆயினும் ஆங்கில மொழியின் முக்கியத்துவம் கருதி இரண்டாம் மொழியாக ஆங்கிலம் முன்பள்ளிப் பருவ காலங்களில் பயிற்றுவிக்கப்படுகிறது. எனவே இவ்வாறான சூழலில் கல்வி கற்கின்ற முன்பள்ளிப்பருவ மாணவர்களது மொழித்தேட்டமானது பிரயோக மொழியியல் அடிப்படையில் இங்கு அவதானிக்கப்படுகின்றது.
முன்பள்ளிப்பருவப் பிள்ளைகளை முறைசார் கற்றலிற்கு வழிநடத்திச் செல்வதற்கு உரிய அடிப்படை முன்பள்ளிப் பருவத்தில் இடம்பெற வேண்டியது அவசியமாகும். முறைசார் பாடசாலைக்கான முன்னாயத்தம் என்பது முன்பள்ளியில் மொழி ஊடாக மேற்கொள்ள வேண்டி இருப்பதால் அதற்குரிய திட்டங்கள் தயார்ப்படுத்தல்களும் முன்பள்ளி மாணவர்களுக்கு சாதகமான முறையில் பயணிப்பதற்கு பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் சமூகம் என்பவற்றின் செயற்பாடுகள் ஆதரவளிப்பதும் அவசியமானதாகும். எனவே இவ்ஆய்வானது இத்தேவையினைக் கருத்திற் கொண்டு மேற்கொள்ளப்படுகிறது.
ஆராய்வோம்…