இதழ் 40

ஐஸ்கிறீம் சிலையே நீ யாரோ?

மரங்களும் நடுங்கும் மார்கழிப்பனி கொட்டிக்கொண்டிருக்கிறது. பெட்சீட்டை இழுத்து போர்த்திக்கொண்டு இவர்களது பேச்சு விடியலை நோக்கி நகர்கிறது. பல மாதங்களாய் எதிர்பார்த்த கிறிஸ்துமஸ் விடுமுறை இது. பிள்ளைகளுடன் நுவரெலியாவிற்கு சுற்றுலா செல்லலாம் என்று ஏற்கனவே திட்டம் போட்டிருந்தாலும், கடும் பனியால் பிள்ளைகளுக்கு தடிமனும் காய்ச்சலும் பிடித்துக்கொள்ளவே வீட்டிலேயே கிறிஸ்துமஸ் – புதுவருட கொண்டாட்டங்களை செய்வது என்று முடிவு.

இரண்டு குழந்தைகளும் அடுத்த அறைய ஆழ்ந்த துயிலில் இருக்க, இவர்களது படுக்கையறையில் மென்மையான சத்தத்தில் இளையராஜா தொடங்கி டி. இமான் வரை மலரினும் மென்மையான மெலடிகள் அறை முழுவதையும் நிரப்பிக்கொண்டிருக்கிறது.

“மரங்கள் நடுங்கும் மார்கழி
ரத்தம் உறையும் குளிர்
உஷ்ணம் யாசிக்கும் உடல்
ஒற்றைப் போர்வை
பரஸ்பர வெப்பம்
இது போதும் எனக்கு”

வைரமுத்துவின் கவிதைக்கு அர்த்தம் செய்து கொண்டிருக்கிறார்கள்.

“அடை மழை வரும் அதில் நனைவோமே
குளிர் காய்ச்சலோடு சிநேகம்
ஒரு போர்வைக்குள் இரு தூக்கம்”

பிளேயரில் ஹாரிஸ் ஜெயராஜின் இசையில் பாம்பாய் ஜெயஸ்ரீ ரீங்கரிக்க, காதலித்த காலங்கள் இருவர் கண்களிலும் மின்னுகிறது. அவள் பாடல் வரிகளுக்குள் இறங்க இவன் அவள் அருகினிலே கிறங்க,

“காதலெனும் முடிவிலியில் கடிகார நேரம் கிடையாதே”

இந்த வரிகளில் சிலிர்த்து கொண்டவள், யாரப்பா இந்த பாட்டு எழுதினது?

“சில சமயம் விளையாட்டாய்
உன் ஆடைக்குள்ளே நான் வேண்டும்”

இந்த வரிகளை தாண்டும் போதே அவனின் சில்மிஷங்கள் ஆரம்பித்து விட்டாலும், அவளுக்கு வரிகளிலே மயக்கம். காதலெனும் முடிவிலியில் கடிகார நேரம் கிடையாது என்ற இடத்தில் மயக்கம் கலைந்து சிலிர்ப்பை தர கேள்வியால் அவனை தட்டி விட்டாள்!

தாமரை!

இவன் பதில் சொன்னான் அவள் செவிகளை கடித்துக் கொண்டே!

எழும்புங்கோ காணும்! என்ற படியே மின்னலே தானே படம் என்ன?

ஓம்! அந்த படத்தில தான் ஹரிஸ் ஜெயராஜும் அறிமுகமானது. தாமரையும் அறிமுகமானது. தாமரையும் வாலியும் தான் பாட்டு எழுதினது.

ஆஆ! என்ற படி இவள் கேட்டுக்கொண்டிருக்க இவனோ,

இப்ப இதா உனக்கு வேணும்? என்னா குளிர் என்ற படி அவளை அணைக்க, பிளேயர் ஹாரிஸிலிருந்து ராஜாக்கு மாறியது.

“பனி விழும் இரவு நனைந்தது நிலவு
இளங்குயில் இரண்டு இசைக்கின்ற பொழுது
பூப்பூக்கும் ராப்போது பூங்காற்றும் தூங்காது
வா… வா… வா…”

வாலியின் வரிகள் இவனுக்கு சாதகமாகி விட இன்னும் இறுக்கினான்.

“பூவிலே ஒரு பாய் போட்டு பனித்துளி தூங்க
பூவிழி இமை மூடாமல் பைங்கிளி ஏங்க”

இவனை விட்டால் இந்த வரிகள் இங்கே கட்டில் காணும் என்று அவளுக்கு தெரியும்! அவளுக்கோ இப்பொழுது பேச்சு இன்பம் தேவையாக இருக்கிறது. அப்படியே அவனை கடிந்து தள்ளிவிட்டு, ரீமோட்டை எடுத்து பாடலை மாற்றினாள்.

” மார்கழி பூவே மார்கழி பூவே உன் மடி மேலே ஓர் இடம் வேண்டும்”

இசைப்புயலின் சில்லிடும் இசை. அந்த பாடலை கேட்கும் போதே உள்ளார குளிரும். வெளியில் கொட்டும் பனி போதாதென்று இசையிலும் குளிர்.

பாடல் குளிர்ந்தாலும், இவள் “மார்கழி” என்ற சொல்லை பிடித்துக்கொண்டாள்.

அப்பா! இந்த மாதங்களோட பேரில வாற பாட்டுக்கள் சொல்லுங்கோவன்?

அவளின் திடீர் கேள்வி உசுப்பி விட, அட! என்றிருந்தது அவளின் சிந்தனை வெட்டு.

எவ்வளவோ இருக்கேடி! அதிலையும் “மார்கழி”ல தான் நிறைய.

ஓமென்ன! என்ற படியே,

“மார்கழி திங்கள் அல்லவா மதி கொஞ்சும் நாள் அல்லவா இது கண்ணன் வரும் பொழுதல்லவா!”

அவளே பாடினாள்.

இந்த பாட்டுக்கு முன்னால வருமே? மார்கழி திங்கள் மதி நிறைந்த நன்னாளாம் எண்டு! அது என்ன தெரியுமா?

என்ன? கண்களால் அவள் கேட்க,

“மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்;
நீராடப் போதுவீர்! போதுமினோ, நேரிழையீர்!
சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்!
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்,
ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்,
கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல்முகத்தான்
நாரா யணனே, நமக்கே பறைதருவான்,
பாரோர் புகழப் படிந்தேலோ ரெம்பாவாய்”

இது ஆண்டாள் பாடிய திருப்பாவை. கண்ணனோட பெருமைகளை ஆண்டாள் தோழிகளுக்கு சொல்வது போல வரும் முப்பது பாடல்களில் ஒன்று இது. இதை வச்சு தான் வைரமுத்து அந்த பாடல் எழுதினது.

ஓகோ! அதென்ன மார்கழிக்கு அப்படியொரு சிறப்பு?

குளிர் தான்! வேறயென்ன? சிரித்தான்.

கண்ணதாசன், காலங்களில் அவள் வசந்தம் எண்ட பாட்டில

“மாதங்களில் அவள் மார்கழி”

என்று எழுதியிருக்கிறாரே! அவ்வளவு குளிர்மை- உன்னை போல.

அந்த குளிரிலும் அவளுக்கு ஒரு ‘ ஐஸ்’ வைத்தான்.

அவள் ஒரு முறாய்பை வீச,

“மார்கழி மாதத்து பனித்துளி அவளது குரலாகும்”

முத்துக்குமாரின் இந்த வரிகள் இவளுக்கே எழுதி வைத்தது போல இருக்கும். இதில் உயர்வு நவிற்சி எதுவுமே இல்லை; ஏன் உவமை என்பதே சற்று நெருடல் தான். அவள் குரலில் அப்படி ஒரு குளிர்மை. இதம் – பதம்- ஸ்வரம்.

அவனது புகழ்ச்சியில் உள்ளாரா சந்தோஷத்தாலும், ‘காணும் காணும்’ என்று அவனை மீறிக்கொண்டே,

வேற மாதங்களில என்ன என்ன வரிகள் இருக்கு?

“சித்திரை மாதம் மார்கழி ஆனது
வா நீ வா என் அதிசய பூவே வா
நீ வா நீ வா என் அழகிய தீவே வா”

சித்திரை மாதம் மார்கழி ஆகிறதெண்டா என்ன அர்த்தம்?

நான்கு காலங்கள் இருக்கே! இளவேனில் காலம், கோடை காலம், இலையுதிர் காலம், குளிர் காலம். இளவேனில் என்றால் மிதமான சூடு. அது தான் வசந்த காலம். சித்திரை, வைகாசி மாதங்கள். குளிர்காலம் மார்கழி. தன் காதலியால சித்திரை மாதத்திலையே குளிருதாம்!

ஓஹோ! சித்திரை மாதத்தில வேற என்ன பாட்டு இருக்கு?

அடுத்த கேள்வியை தொடுத்தாள். அவளோ கேள்வி கேட்பதில் கெட்டிக்காரி. அது என்ன இது என்ன? ஏன்? எதற்கு? எப்படி? இப்படி குடைந்து கொண்டே இருப்பாள்! இப்பொழுது மாதங்களில் மதம் பிடித்திருக்கிறதே! விடுவாளா?

“சித்திரை நிலவு சேலேயில் வந்தது முன்னே”

இது புலமைப்பித்தன் வரி தானே என்ன?

யெஸ்! ரஹ்மானுக்கு அவர் எழுதின ஒரே பாட்டு!

வேற சித்திரை இருக்கா?

“ஏப்ரல் மாதத்தில் ஓர் அர்த்த ஜாமத்தில்
என் ஜன்னல் ஓரத்தில் நிலா நிலா”

அடடே! ஏப்ரல் மாதத்தில் என்று ஒரு படமே வந்திச்சே! அதிலயும் இப்படி மாதங்களை வச்சு பாட்டிருக்கெல்லோ?

“கனவுகள் பூக்கும் ஆண்டுகள் தொடங்கும்
ஜனவரி மாதத்தில்
காதலை சொல்ல தேதிகள் உண்டு
பிப்ரவரி மாதத்தில்
தேர்வுகள் வந்து தொல்லை கொடுக்கும்
மார்ச் மாதத்தில் எல்லா
நாளும் விடுமுறை நாளே ஏப்ரல் மாதத்தில்”

இதே தான்! பெப்ரவரில வேற?

தலைவர்ட ரொம்ப பேமஸான பாட்டே இருக்கே! என்ற படியே அவளை இறுக்கி அணைத்தான்.

“மாசி மாசம் ஆளான பொண்ணு
மாமன் எனக்குத்தானே”

டேய்! விடுடா! மிச்ச மாதங்களில வாற பாட்டையும் சொல்லு!

இந்த முறை அவன் விடுவதாய் இல்லை! மிச்சத்தை நாளைக்கு சொல்லுறன் என்ற படியே அவளிடம் மச்சங்கள் தேட தொடங்கினான்!

“காமலீலா வினோதம்
காதல் கவிதா விலாசம்
படித்துப் படித்து எடுக்க எடுக்க”

பஞ்சு அருணாசலத்தின் வரிகள் அவனுக்கு வழியை காட்ட ஜேசுதாஸின் கீர்த்தனை தொடர்ந்தது.

“ஆசை ஆஹா பிரமாதம்
மோக கவிதா பிரவாகம்
தொடுத்துத் தொடுத்து முடிக்க முடிக்க

கொடிதான் தவழுது தவழுது
பூப்போல் சிரிக்குது சிரிக்குது
உறவும் நெருங்குது நெருங்குது
உலகம் மயங்குது உறங்குது”

Related posts

சி.வை. தாமோதரம்பிள்ளை

Thumi202122

புதிர்19 – பரிசும் அவனுக்கே… தண்டனையும் அவனுக்கே…

Thumi202122

ஈழச்சூழலியல் 26

Thumi202122

Leave a Comment