இதழ் 40

சித்திராங்கதா – 39

சமாதானத் தூது

நடந்து முடிந்த வன்னியர் விழாவில் வன்னியத்தேவனின் வெளிப்படையான எண்ணத்தை அறிந்து கொள்ள முடியாவிடினும் வன்னியத்தேவனின் உள்ளெண்ணம் குறித்து ஏனைய வன்னி வேந்தர்களுற்கு தெளிவூட்டும் முயற்சி வெற்றி கண்டது என்றே சொல்ல வேண்டும். பாதிக்கப்பட்ட வன்னியத்தேவனின் வியூகங்கள் இனி மேலும் கூர்மையாக்கப்படும் என்பதை சங்கிலிய மகாராஜா நன்றாகவே உணர்ந்திருந்தார். அதற்கு முதல் எடுத்துக்காட்டாய் அரண்மனை வாயிற் காவலன் போர்த்துக்கேய பாதிரியார் டிமெல்லோ சங்கிலிய மகாராஜாவை சந்திக்க வந்திருப்பதாய் அரசவையில் வந்து தெரிவித்தான்.

ஒரு மதத்தலைவர் என்கிற முறையில் மரியாதையுடனே பாதிரியார் அரசவைக்குள் வரவேற்கப்பட்டார்.

ஆனால் அரசவைக்குள் பிரவேசித்த பாதிரியாரின் செயல்களில் மரியாதையோ பணிவோ சிறிதும் இருக்கவில்லை. அரசவையில் இருந்த எல்லோரும் அதனை ஆச்சர்யமாகப் பார்த்தனர். சங்கிலிய மகாராஜா அதைப் பொருட்படுத்தவில்லை. பண்பு தெரியாதவர்களிடம் அதை எதிர்பார்ப்பது அநாவசியம் என்பதை உணர்ந்திருந்தார் மகாராஜா.

“போர்த்துக்கேய படையினரும் தளபதி பிலிப்-டி-ஒலிவேரா அவர்களும் புத்தளம் மன்னார் வழியாகப் பயணித்து பூநகரியில் பாசறையிட்டுள்ளனர். அங்கிருந்து யாழ்ப்பாணத்திற்குள் பிரவேசிக்க குடாக்கடலை கடந்தாகவேண்டும். போதுமாட ஓடங்களையும், நாவாய்களையும் சங்கிலிமன்னன் உடனே ஏற்பாடு செய்து தர வேண்டும் என்ற கோரிக்கையினை தெரியப்படுத்தவே இவ்விடம் வந்தேன்” என்றார் பாதிரியார் டிமெல்லோ.

‘பாதிரியார் டிமெல்லோக்கு புத்தி பேதளித்திருக்காது என்று எதிர்பார்த்தேன்’ என்று தன் கோபத்தை அடக்கியபடியே கூறினான் சங்கிலியன்.

‘இதனால் நீ கூறவருவது என்ன என்பதை நான் தெளிவாக அறிந்து கொள்ளலாமா?’

‘தங்களிற்கு சிறிதளவாவது சிந்தை தெளிவு இருந்திருந்தால் இப்படியொரு கோரிக்கையை ஈழ அரண்மனைக்கு எடுத்து வந்திருப்பீரா?
மதத்தலைவர்கள் மதத்தோடு நிற்க வேண்டும் என்பதை மறந்து இப்படி பொல்லாத்தனத்திற்கொல்லாம் துணைபோக துணிவது மடத்தனமாக தமக்கு தோன்றவில்லையா பாதிரியாரே?

‘சங்கிலியா, மதத்தலைவனாய் இருந்தாலும் நான் போர்த்துக்கேய ஆட்சிக்கு கட்டுப்பட்டவன். சமயத்தோடு சமாதானமும் என் பணியே. தளபதி கூறிய கருத்தை தெரிவிக்கும் தூதுவனாகவே உன்னிடம் வந்தேன். நீ தெரிவிக்கும் மறுமொழியை அவர்களிடம் சென்று தெரிவிப்பேன். அதுவே எனக்கு இட்ட பணியாகும்’ என்றார் பாதிரியார்.

‘அப்படியாயின் இப்போதே சென்று கூறுங்கள் தங்கள் தளபதியாரிடம்… அழையாத விருந்தாளிகளை நாங்கள் வரவேற்கத் தயாரில்லை என்று.. நாவாய் ஓடம் எதுவுமே அவர்களிற்கு அளிக்கப்படாது என்று.. கூறுங்கள்’
என்று ஆவேசமாய் கூறியவன் ராஜமந்திரியாரை நோக்கி
‘மந்திரியாரே… குடாக் கடலோரம் வாழும் மீனவர்களுக்கு இந்த உத்தரவு அளிக்கப்பட வேண்டும். யாரும் ஒரு கட்டுமரம் கூட தந்துதவக் கூடாது’

‘அப்படியே அரசே..’ என்றார் ராஜமந்திரியார்.

‘நல்லது சங்கிலியா, நான் அவ்வாறே தளபதி ஒலிவேராவிடம் தெரிவிக்கிறேன். அதொடு தளபதி கூறிய இன்னொரு கோரிக்கையையும் உன்னிடம் தெரிவிக்க வேண்டும்’

‘சொல்லுங்கள்!’ என்றான்.

‘உன்னிடம் நட்புறவு வேண்டியே தளபதி ஒலிவேரா யாழ்ப்பாணம் வருகிறார். நீ அரியணை ஏறியது நாட்டு மக்கள் ஒரு சாரர் ஏற்புடைய செயலல்ல என்று இன்றும் கருதுகின்றனர். அவர்களே நாட்டில் தொடர் கலவரங்களை நிகழ்த்திக் கொண்டிருக்கின்றனர். அக்கலவரங்களை அடக்கியாழ உனக்கு போர்த்துக்கேயத் தளபதி உதவிபுரியக் காத்திருக்கிறார். அவர்களின் உதவியை ஏற்க மறுத்து பெரும்படையை தஞ்சையில் இருந்து வருவித்து வீணான இழப்புக்களை அதிகப்படுத்தியுள்ளாய். ஆதலால் விரைந்து தஞ்சைப்படைகளை திருப்பி அனுப்ப வேண்டும் என்று தளபதி ஒலிவேரா உன்னிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.’

பாதிரியாரின் வார்த்தைகளால் சங்கிலியன் நிதானம் இழந்தான்.

‘தங்கள் நட்புறவு நாடகம் அபாரமாக இருக்கிறது பாதிரியாரே; ராஜதந்திரங்களை வேறு மன்னர்களிடம் சென்று காட்டச் சொல்லுங்கள் ஒலிவேராவிடம்…..
உள்நாட்டுக் கலவரங்களை அடக்க நீங்கள் எனக்கு துணை புரியப் போகிறீர்களா? கலவரங்களை கட்டவிழ்த்து விடுவதே தங்கள் திறமையல்லவா? பின்னர் எங்கள் களஞ்சியத்திற்கு வெள்ளெலிகள் காவாலா?
வர்த்தக நோக்கம் கருதி வந்தவர்கள் என்பதால்த்தான் தங்களிடம் அன்பு காட்டினர் எம்முன்னோர். கடை விரிக்க வந்தவர்கள் இன்று காலடியில் இருக்கும் பூமியையே களவாட துணிந்து விட்டீர்களோ? இன்று தஞ்சைப்படைகளை திருப்பியனுப்பும் படி எங்களிடமே கோரிக்கை விடுக்கின்றனர். என்ன ஆணவம் அந்த ஒலிவேராவுக்கு.. அவனே இப்போது திரும்பிச் செல்ல வேண்டும் என நான் உத்தரவிட்டதாக போய்ச் சொல்லுங்கள்’ என்று கோபத்தில் சிவந்த கண்களோடு கர்ச்சித்திக்கொண்டிருந்தான் சங்கிலியன்.

‘சங்கிலியா; நான் மீண்டும் சொல்கிறேன். போர்த்துக்கேயர் நட்புறவை மட்டுமே வேண்டி இங்கு வருகின்றனர். வீணாய்ப் பகை வளர்த்துக் கொண்டு தேவையற்ற இழப்புக்களை உண்டாக்குவதை விட்டு நட்புறவை ஏற்றுக் கொள்ளுவதே உபகாரமான செயல் என்பதை நீ உணர வேண்டும். சங்கிலியரும் போர்த்துக்கேயர்களை பகைவர்களாக கருதவில்லை என்பது எங்கள் நம்பிக்கை’

என பாதிரியார் கூறிக்கொண்டிருக்கும் போதே ராஜமந்திரியார் குறுக்கிட்டார்.
‘உங்கள் நம்பிக்கை வாழ்க: தங்கள் நட்புறவின் அடிப்படையிலோ ஏராளமான யுத்த மரக்கலங்களை நாகைப்பட்டணத்திலிருந்து வரச்செய்திருக்கிறீர்கள்? அது எந்த வகை நல்லெண்ணத்திலும் நட்பிலும் என்று கூறுவீர்களா மரியாதைக்குரிய பாதிரியாரே?’

‘மந்திரியார் வெறுமனே உணர்ச்சிவயப்பட்டு பேசுகிறார். பீரங்கிகளும், வெடிமருந்துகளும் எங்கள் வியாபாரப் பொருட்கள். அவற்றை ஏற்றி வரும் மரக்கலங்களை யுத்தகலங்கள் என்று எண்ணமுடியுமா? யுத்தத்தை மனிதர்கள் தானே தீர்மானிக்கிறார்கள். ஆயுதங்கள் அல்லவே! ‘

ஓர் ஏளனச்சிரிப்போடு சங்கிலியன் கூறினான்
‘ஓ… நன்றாக இருக்கிறது உங்கள் சாக்குருவி வேதாந்தம் பாதிரியாரே, யுத்தத்தை எப்போதும் தவிர்ப்பதற்கே முயல்பவர்கள் நாம். ஆனால் யுத்தமே வழி என்று அறிந்த பின் தமிழர் பின்வாங்கவும் தயாராக மாட்டார்கள் என்பதுவும் மறந்து விடாதீர்கள். மனித நேயம் பேசி வந்த சமாதானத் தூதுவரே, உங்கள் இன வெறியையும் நாம் கண்டு கொண்டோம். ஆனால் எய்தவனை விட்டு அம்பினைப் பகைப்பதில் அர்த்தமல்ல என்றறிவோம். பாதிரியாரே நீங்கள் செல்லலாம். ஒலிவேராவின் இரண்டு கோரிக்கைகளும் நிராகரிக்கப்பட்டுவிட்டன என்று போய்க் கூறுங்கள்.

‘புறப்படுகிறேன் சங்கிலியா, அதற்குமுன் தளபதி ஒலிவேராவின் முழு ஒப்பந்தச் செய்தியையும் கூறிவிட்டுச் செல்கிறேன்’ என்று அந்த நீதிக்குப் புறம்பான வார்த்தைகளை தயக்கமன்றி கூறத்தொடங்கினார் பாதிரியார்.

அவையோர் எல்லோரும் செவிகளை தீட்டி அவற்றை கேட்கத் தயாரானனர்.

‘எங்கள் மத மாவீரனான டொம் லூயிஸ் இனை கடுமையாக தாக்கி அநாகரிக முறையில் சிறைப்பிடித்துள்ளீர்கள். அவ்வீரனை உடன் விடுதலை செய்ய வேண்டும். மேலும் டொம் லூயிசினையும் அவனது வீரர்களையும் கடுமையாக தாக்கிய குற்றத்திற்காக தளபதி ஒலிவேரா தஞ்சைப்படைத்தளபதியை விசாரிக்க வேண்டும். விசாரணைக்காக தஞ்சை தளபதியை உடன் அனுப்பி வைக்க வேண்டும். தஞ்சை தளபதி மீதான விசாரணையிலோ, நீதி வழங்களிலோ சங்கிலி மன்னன் எவ்வகையிலும் தலையிடக்கூடாது…’
பாதிரியார் சொல்லிக்கொண்டிருக்கும் போதே
‘ஆ…………………..’ என்று கர்ச்சித்தான் சங்கிலியன். அவன் கண்களில் எரிமலையினைக் கண்ட பாதிரியார் மௌனமானார்.

சங்கிலியன் அரியணையை விட்டு கொதித்தெழுந்து ‘யாரங்கே? என் வாளிற்கு இறையாகும் முன் இந்தப் பாதிரியை உடனடியாக வெளியேற்றுங்கள். இல்லாவிட்டால் இவன் தலை இவ் அவையிலேயே துண்டாகும்….. ம்……’
என்று சங்கிலியன் வாளை உருவமுன் காவல்வீரர்களால் விரைந்து பாதிரியார் வெளியேற்றப்பட்டார்.

ஒரு போரைத் துவங்குவதற்கு முன்பு ஆயிரம் முறை சிந்திப்பது தான் ஓர் அரசனுக்கு அழகு. இடையிலுள்ள பிரச்சினை வெறும் கௌரவம் சம்பந்தப்பட்டதாக மட்டும் இருந்து அதன் காரணமாக மூளும் போரினால் இரண்டு தரப்பு மக்களையும் வீணாய்க் கொன்று குவிப்பதனை பின்னாளில் மனிதகுலம் ஒருபோதும் மன்னிக்காது. ஆனால் அன்பு நெறியும் அறச்சிந்தனைகளும் போதிக்கும் ஒரு மதபோதகரின் வசீகர வார்த்தைகள் மூலம் அன்பை முன்னிறுத்தி அடிமடியில் அடிமைப்படுத்தும் சாதனங்களை தூதனுப்பி வைப்பவர்களை என்ன செய்வது?

இனிமை பூசிய வார்த்தைகளை வசிய மந்திரம் போல் உதடுகளில் உச்சரித்து உதிர்க்கையில் அவர்தம் இதயத்து எரிதழலை எங்ஙனம் ஊகிப்பது?

இராமன், சீதை எல்லோரும் இறந்து விட்டார்கள். ஆனால் பொய்மான் இன்னும் இறக்கவில்லை.

Related posts

ஈழச்சூழலியல் 26

Thumi202122

ஐயப்பன் விரதமும் இளைஞர்களின் வகிபங்கும் – 02

Thumi202122

24 வருடங்கள்

Thumi202122

Leave a Comment