இதழ் 40

பட்டாசு சொல்கிறது பாடம்!

கொண்டாட்டத்திற்கான உலகப் பொதுமொழி எதுவென்று கேட்டால் அது வானவேடிக்கைகளாகத்தான் இருக்கும். விளையாட்டின் வெற்றிகள் ஆகட்டும், அரசியல் கொண்டாட்டங்கள் ஆகட்டும், மத ரீதியான வழிபாட்டுக் கொண்டாட்ட முறைகள் ஆகட்டும் எங்கும் பார்ப்பவர்களை பரவசப்படுத்துவது வானவேடிக்கைகள் தான். மற்றைய நாட்களில் தரையிலே நடப்பவற்றை வேடிக்கை பார்த்த கண்களை வானை நோக்கி வேடிக்கை பார்க்க வைத்த பட்டாசுகளின் ஒருவகை தான் இந்த வானவேடிக்கைகள். எதிர்பாராமல் நடக்கும் சம்பவங்கள் தான் வியத்தகு கண்டுபிடிப்புக்களை கண்ணொதிரே கொண்டு வரும். பட்டாசுகள் உருவான கதையும் அந்த எழுதப்படாத விதிக்குள் அகப்பட்டே நடந்தது.

தரமற்ற பொருட்களின் தாய்வீடு என்று எகத்தாளமாக உலகம் கேளி செய்யும் சீனாவில்த்தான் உலகத்தின் கேளிக்கைகளுக்கு படையலாகும் பட்டாசுகளும் உருவாகின. உப்பில்லாப் பண்டம் குப்பையிலே என்பது உள்ளூர்ப் பழமொழி மட்டுமல்ல, உலகப் பழமொழியும் தான். பண்டைய சீனர்களிற்கு உணவுப் பஞ்சம் இருந்தாலும் உணவில் உள்ள உப்பில் பஞ்சம் இருக்காது. அந்த உப்பில் பொட்டாசியம் நைட்ரேட்டுக்கு பஞ்சம் இருக்காது. அன்றொரு நாள் ஒரு வீட்டில் அடுப்பில் அவிந்து கொண்டிருந்த கறிக்கு அள்ளி வீசிய உப்பில் கறிச்சட்டிக்குள் விழாமல் தப்பியவை அடுப்பின் நெரிப்பில் அகப்பட்டுக் கொண்டன. என்ன அதிசயம்?
உவர்க்கும் உப்பு தீ சுவாலையுடன் ஒளிர்ந்தது!

ஆச்சரியப்புள்ளிக்கு முற்றுப்புள்ளி வைக்காமல் காற்புள்ளி வைத்து ஆராய்ச்சியை தொடர்ந்தனர் சீனர்கள். கடலின் கட்டிதானே உப்பு! அது ஏன் ஒளிர்ந்தது? உப்பு ஒளிர்ந்ததா? உப்பில் இருந்தது ஒளிர்ந்ததா? தப்பாகிப் போகவில்லை அவர்களது ஆராய்ச்சி. சீனாவில் சனத்தொகை அதிகம். அதுபோல சீன உப்பில் பொட்டாசியம் நைட்ரேட் அதிகம். அந்த ஒளிச்சுவாலையின் இரகசியம் இந்த இரசாயனத்தில்த்தான் இருக்கிறது என்பதை கண்டறிந்து விட்டார்கள்.

வேடிக்கையாக தொடர்ந்த ஆய்வுகள் உலகத்திற்கே வேடித்கை காட்ட தொடங்கின. வித விதமான பட்டாசுகள் வித்தியாசமான முறையில் அறிமுகப்படுத்தப்பட்டன. ஈக்குடன் இணைத்த போது அது வானத்தில் பறந்தது. சிறிது நேரத்தில் அந்தரத்தில் வெடித்து வர்ணஜாலம் போட்டது. சீன வான் பரப்பில் தற்காலிக கோலம் போட்ட வான வேடிக்கைகள் முழு உலக வான் பரப்புக்களையும் வர்ணஜாலத்திற்குள் வசப்படுத்தின.

காலிமுகத்திடலிலும் இவ்வாறாக நடந்த ஒரு வானவேடிக்கைக் காட்சியில் நடந்த வேடிக்கையைத்தான் அட்டையில் காண்கிறீர்கள். திகதிகள் மாறுவதால் எதுவுமே மாறாது என்று தெரிந்திருந்தும் புத்துணர்ச்சி பெறுவதற்காக வரவேற்கப்படும் புத்தாண்டுக் கொண்டாட்டத்தின் புகைப்படமே அது.

பட்டாசுகளின் ஜாலத்தை மட்டுமா இந்த அட்டைப்படம் காட்டுகிறது? வாழ்க்கையின் கோலத்தையே காட்டுகிறது என்கிறார்கள். என்னென்ன சொல்கிறார்கள்… வாருங்கள்! கேட்போம்…!

“கடவுள் தந்த கண்களால் கண்குளிர காணாமல் கமராக் கண்களால் எல்லாவற்றையும் சிறைப்படுத்திவிட முனையும் இன்றைய இளம் தலைமுறையின் பிரதிநிதியாம் அந்த தந்தை. புத்தாண்டு தரும் அந்த புதுத் தென்றலை நுகராமல், புத்தாண்டின் புத்துணர்ச்சியை உணராமல், வான வேடிக்கைகளின் வர்ணஜாலத்தை ரசிக்காமல் புகைப்படம் எடுக்கிறார் தந்தை. அந்தக் கணத்தை அனுபவிக்கத் தெரியாதவராக தோற்றுப்போகும் தந்தைக்கு உடன் இருக்கும் தனயன் தக்க பாடம் சொல்கிறான். தேய்வதும் வளர்வதுமான நிலவையும், வந்து வந்து காணாமல் போகும் நட்சத்திரங்களையும், கண் கொண்டு காண முடியாத சூரியனையும் மட்டுமே பார்த்துப் பழகிய அந்தக்குழந்தைக்கு இந்த சத்தத்தோடு வெடித்து விழும் திடீர் நட்சத்திரங்கள் ஆச்சரியத்தின் உச்சமாக இருக்கின்றன. இதுவரை காணாத ஒன்றை அந்தக் குழந்தை இப்போது பார்க்கிறது. இனி எப்போது பார்க்கும் என்றும் தெரியாது. அதைப் பற்றிய எந்தக் கவலையும் இல்லாமல் இயற்கை இந்த நேரத்தில் அந்தக் குழந்தைக்கு தந்த ஆச்சரியத்தை அந்த நேரத்திலேயே முழுமையாக அனுபவிக்கிறது அந்த குழந்தை.”

” ஒரு சில விநாடிகளே பார்வைக்கு விருந்தளிக்கும் இந்தப் பட்டாசுகளுக்கு பயன்தரு நேரத்தோடு ஒப்பிடுகையில் செலவாகும் பணம் சற்றே அதிகம்தான். என்றாலும் இது போல புகைப்படங்களின் மூலமாக அந்த கண நேர இன்பங்களை கன நேர இன்பங்களாக்கிவிட முடியும். “

” தன் குழந்தையின் மழலைச் சொற்களின் இனிமையை உணராதவர்கள் தான் குழல் இனிது, யாழ் இனிது என்பார்களாம். அது போல வானத்தில் சிரிக்கின்ற பட்டாசை படம் பிடிக்கும் அந்த நபர் தன் கையில் இருக்கும் குழந்தையின் கள்ளங் கபடமற்ற வெள்ளைச்சிரிப்பை இதுவரை பார்க்காதவராகத் தான் இருக்க வேண்டும்.”

பார்த்தீர்களா? ஒரு காட்சிக்கு எத்தனை கருத்துக்கள்? புது வருடத்தில் எண்கள் மாறுவதைப்போல மனிதர்களுக்கு மனிதர் எண்ணங்களும் மாறுபடும். எங்கள் செயல்களுக்கு நன்மை தீமை சொல்ல போட்டி போட்டுக் கொண்டு ஆயிரம் பேர் வருவார்கள். அவர்களின் கருத்துக்களுக்கு எல்லாம் செவி கொடுங்கள். ஆனால் உங்களுக்கு தேவையானவை என்று தெரிவதை மட்டுமே செவிக்குள் எடுங்கள்.

தவறிய உப்பின் உபயம் தான் பட்டாசு. தவறிச் செய்யும் தவறுகள் தவறே அல்ல என்பதற்கு தக்க சாட்சி தான் பட்டாசு. அதற்காக தவறு என்று தெரிந்தும் தவறு செய்யாதீர்கள். அது மகா தவறு.

இந்தப் புத்தாண்டில் எண்களில் ஏற்ப்பட்ட உயர்வு எண்ணங்களிலும் ஏற்பட

ஒன்றாவோம்! நன்றாவோம்! வென்றாவோம்!

Related posts

குறுக்கெழுத்துப்போட்டி – 36

Thumi202122

மீண்டும் ஒருமுறை சாம்பியனான யாழ்ப்பாணம்

Thumi202122

சிங்ககிரித்தலைவன்

Thumi202122

Leave a Comment