நடைபெற்று வருகின்ற தென்னாபிரிக்க-இந்தியா டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இந்தியா, தென்னாபிரிக்காவின் கோட்டையிலும்; இரெண்டாவது போட்டியில் தென்னாபிரிக்கா, இந்தியாவின் கோட்டையிலும் வெற்றி பெற்று இருக்கின்றனர்.
பல வருடங்களாக ஆஸ்திரேலியாவின் கோட்டையாக திகழ்ந்த பிறிஸ்பனில் 2021 இன் ஆரம்பத்தில் டெஸ்ட் வெற்றி பெற்ற இந்தியா, 2021 இன் இறுதியில் தென்னாபிரிக்காவின் செஞ்சுரியனில் வெற்றி பெற்றுள்ளது. இது வரை செஞ்சுரியனில் விளையாடிய 27 போட்டிகளில் 21 இல் வெற்றி பெற்றிருந்த தென்னாபிரிக்கா, இங்கிலாந்திடம் 2000 ம் ஆண்டும் ஆஸ்திரேலியாவிடம் 2014 யிலும் மட்டுமே தோல்வி அடைந்திருந்தது. இவ்வெற்றி இந்தியாவுக்கு தென்னாபிரிக்கா மண்ணில் நான்காவது வெற்றியாக அமைத்தது. இதற்கு முன் 2006 மற்றும் 2018 இல் ஜோஹன்னேஸ்பேர்கிலும் 2010 இல் டர்பனிலும் வெற்றிகள் பெற்றிருந்தது. இந்த போட்டியில் தென்னாபிரிக்கா இரு இன்னிங்ஸ்களிலும் 200 க்கு குறைவான ஓட்டங்களை பெற்றிந்தமை குறிப்பிடத்தக்கது. இவ்வாறு சொந்த மண்ணில் இடம்பெறுவது அவர்களின் மீள்வருகைக்கு பின் மூன்றாவது தடவையாகும்: மற்றைய இரு தடவைகளும் 2002 இல் ஆஸ்திரேலியா மற்றும் 2018 யிலும் இந்தியா க்கு எதிராக ஆகும்; இவை இரண்டும் ஜோஹன்னேஸ்பேர்கில் நடைபெற்றவை, எனவே செஞ்சுரியனில் இது முதல் தடவை.
தொடரின் முதல் போட்டியில் தென்னாபிரிக்காவின் கோட்டையான செஞ்சுரியனில் இந்தியா சாதித்து காட்ட, இரண்டாவது போட்டியில் தென்னாபிரிக்க மண்ணில் இந்தியா டெஸ்டில் தோல்வி அடையாத ஜோஹன்னேஸ்பேர்கில் (விளையாடிய ஐந்தில் இரு வெற்றி மற்றும் மூன்று வெற்றி-தோல்வி அற்ற முடிவுகளையும் இந்தியா பெற்றிருந்தது.) தென்னாபிரிக்கா வென்று அசத்தியிருக்கிறது. இந்த போட்டியின் தென்னாபிரிக்கா துரத்தி அடித்த 240 ஓட்டங்கள், நான்காம் இன்னிங்சில் இந்தியாக்கு எதிராக துரத்தி அடிக்கப்பட்ட மூன்றாவது அதிகூடிய ஓட்டங்கள் ஆகும்; மற்றைய இரண்டும் 1977 (அவுஸ்திரேலியாவால் 339, பெர்த்) மற்றும் 1987 (மேற்கிந்திய தீவுகளால் 276, டெல்லி) ஆண்டுகளில் நடைபெற்றது. இந்தியா, இதற்கு முன் 150 க்கு அதிகமான வெற்றி இலக்கை நிர்ணயித்து தோற்றது 2007 இல் ஆகும்; அதுவும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக தான். இதற்கு முன் தென்னாபிரிக்கா , 2011 இல் 200 க்கு அதிகமான வெற்றி இலக்கை துரத்தி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.