சிங்கத்தின் நகங்கள் ஐந்து!
அணி அணியாக சிங்ககிரியின் அடிவாரத்தில் வீரர்கள் பாறைகளைப் புரட்டியும் அடர்ந்த பற்றைகளை வெட்டியும் அவற்றையானைகளின் உதவியோடு அப்புறப் படுத்தியும் ஆரவாரமாக பணிகளில் ஈடுபட்டிருந்தனர்! அவற்றை மிகாரனின் கட்டளைத் தளகர்த்தர்கள் நெறிப்படுத்திக் கொண்டிருந்தனர்!
பாறைகளைப் புரட்டப் புரட்ட வெளியே வந்த பழைய கட்டுமானங்களின் எச்சங்களை வீரர்கள் பார்வையிட்டனர்… தமக்கு முன்னேயும் யாரோ இங்கு கூட்டமாக வசித்திருக்க வேண்டும் … அவர்களால் இவை உருவாக்கப்பட்டிருக்க வேண்டும்… எனவே குன்றின் உச்சியில் ஏறுவதற்கு நிச்சயம் வழிகள் இருக்கும் என்ற நம்பிக்கை தளகர்த்தர்களுக்கு ஏற்பட்டது. ஆனாலும், முன்பு இங்கு வந்தவர்களும் ஒரு வேளை இந்தக் குன்றில் ஏற முயற்சித்து தோல்வியடைந்து இக் குன்றின் அடிவாரத்தில் வசித்தவர்களாக இருந்தால் என்ன செய்வது? என்ற எண்ணமும் அவர்களுக்கு ஏற்பட்டது! இதற்கிடையில் காசியப்பனுக்கு செய்தி அனுப்பப்பட்டதால் அவன் உரிய இடத்துக்கு உடனே குதிரையில் விரைந்திருந்தான்!
அப்புறப்படுத்தப்பட்ட கற்பாறைகளுக்குப் பின்னால் செதுக்கப்பட்டிருந்த பிரமாண்டமான கால் நகங்கள் அவன் கண்களுக்குத் தெரிந்தன… அவன் எண்ணத்தில் ஆயிரம் ஆயிரம் பொறிகள் தோன்றின! கற்பனையும் கலை இரசனையும் இயல்பாகவே வாய்க்கப்பெற்ற காசியப்பனின் எண்ணங்கள் எங்கெல்லாமோ சிறகடித்துப் பறந்தது!
ஏற்கனவே மீகாரன் ஆற்றங்கரையில் சந்தித்த துறவி சிங்ககிரியை பற்றி எச்சரித்திருந்தது காசியப்பனின் நினைவில் வந்து ஒரு விதக் கலக்கத்தினையும் ஏற்படுத்தி மறைந்தது! ஆனாலும் இந்த குன்று விடயத்தில் ஒரு கை பார்த்து விட வேண்டும்… இதனை தன் கோட்டையாக மாற்றி, எந்த காசியப்பனை தாழ்த்தப்பட்ட குலப்பெண்ணின் பிள்ளை என்றார்களோ, அந்தக் காசியப்பன் உயரத்தில் இருப்பதை, அகிலமே நிமிர்ந்து பார்க்க வேண்டும்!
இதுவரை இந்த இலங்கை தேசத்தில் எந்த அரசனும் வாழாத சுகபோக வாழ்வை தான் வாழ வேண்டும் என்ற எண்ணமே காசியப்பனுக்கு அனைத்திலும் மேலோங்கி நின்றது! எனவே பணியில் ஈடுபட்டிருந்த வீரர்களை உற்சாகப்படுத்தத் தொடங்கினான்!
“வீரர்களே வெற்றி… இங்கு நாம் வந்த இத்தனை நாட்களில் எமக்குக் கிடைத்த பெருவெற்றி இது! வேகமாகப்பாறைகளை நகர்த்துங்கள் இன்னும் இரண்டு மூன்று யானைகளை மேலதிகமாக வேண்டும் என்றால் வரவையுங்கள்! மீகாரன் அரண்மனையில் இருந்து திரும்புவதற்குள் நாம் குன்றின் உச்சியை அடைந்து மைத்துணருக்கு இன்ப அதிர்ச்சி கொடுப்போம்…”
என்றவன் தானும் வீரர்களோடு சேர்ந்து சிறிய பாறைகளைப் புரட்டிப் போடும் பணியில் இறங்கினான்! இதனால் இன்னும் உற்சாகமடைந்த வீரர்கள் வேலையை விரைவுபடுத்தினர்! மேற்பார்வை செய்து கொண்டிருந்த தளகர்த்தர்களும் இப்போது பணிகளில் ஈடுபட்டதனால், பணி விரைவு பட்டது! சிங்ககிரிக்கு காசியப்பனும் பரிவாரங்களும் வந்து நாட்கள் பல ஆனதால், அரண்மனையில் நடவடிக்கைகளை அனுராதபுரத்தில் கவனிப்பதற்காக மீகாரனை காசியப்பன் அனுப்பி வைத்திருந்தான்!
தமிழகத்தில், மகாநாமரையும் முகலனையும் கண்காணிக்க ஒற்றர்களை அனுப்பியது போலவே, மாந்தை மற்றும் யாழ்ப்பாணத்துறை முகங்களை கண்காணிக்க சிறு படைக்குழுக்களையும் மீகாரன்அனுப்பியிருந்தான்!
ஒரு வேளை மகாநாமர் செய்தி அனுப்பி வேற்று நாட்டுப் படைகள் நாட்டுக்குள் நுழையக்கூடும் என்ற எண்ணம் இந்த ஏற்பாட்டுக்கு காரணமாக இருந்திருக்க வேண்டும்! தமிழகத்தில் பௌத்த நெறிக்கு சார்பான களப்பிரர் ஆட்சி நடைபெறுவதால், பாண்டிய மன்னர்கள் மகாநாமருக்கு உதவக் கூடிய சூழ்நிலை அமையாவிட்டாலும் கூட, மகாநாமரின் புத்திசாலித்தனத்தால் களப்பிரர்களின் உதவி கூட முகலனுக்கு கிடைக்க வாய்ப்பிருக்கிறது என்பதை மீகாரன் சந்தேகித்திருந்தான்!
நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டிய இந்த நிலையில் காசியப்பன் சிங்ககிரிக்கு சென்று அங்கு தன் அரண்மனை அமைக்க வலிந்து முயல்வதற்குப் பதிலாக அனுராதபுரக் கோட்டையை மேலும் பலப்படுத்தலாமே என்று மீகாரன் உள்ளார்ந்தமாக எண்ணிக் கொண்டாலும் தன் மீது உள்ள நம்பிக்கையால் தான் தன்னிடம் நாட்டின் பாதுகாப்பை ஒப்படைத்துவிட்டு காசியப்பன் சிங்ககிரியில் உள்ளான் என்ற எண்ணம் மீகாரனை சாந்தப்படுத்தியது!
பாறைகளும் பற்றைகளும் ஓரளவு அப்புறப்படுத்தப்பட்ட பின்னர் சிங்ககிரியின் அடிவாரத்தில் பிரமாண்டமாய் ஒரு விலங்கின் இரண்டு கால்களும், அவற்றின் இடையால் மேலே போகக்கூடிய பாதை அமைப்பும் தென்படவே காசியப்பனும் வீரர்களும் ஆனந்தக் கூத்தாடினர்!
ஆளை ஆள் கட்டித் தழுவியும், வெற்றிக்கோசங்கள் இட்டும் மகிழ்ந்தனர்…! அந்த ஆனந்தக் களிப்பில் அனைவருக்கும் இரவு விருந்து என்று காசியப்பன் அறிவித்தான்… திடீரென அவன் எண்ணம் எங்கோ செல்ல ஒரு வீரனை அழைத்து காதில் ஏதோ சொல்லி அனுப்பினான்… சிறிது நேரத்தில் ஒரு பல்லாக்கு அவ்விடம் வரவே, அதில் இருந்து அழகிய சிலையாக லீலாதேவி கீழே இறங்கி வந்தாள்…
“வர வேண்டும் லீலா… வரவேண்டும்… என்று நான் சிங்கச் சிகரம் என்று இதனைச் சொன்ன போது அப்படி ஒரு சிகரம் இருக்குமா? என்று வினவினாயே… உன் கண்களுக்கு இந்தச்சிங்கம் அன்று தெரியாமல் போய் இருக்கலாம் ஆனால் இன்று… இதோ பார்! சிங்கத்தின் கால்கள்… சிங்கத்தின் கால்கள் ….ஹா ஹா.. ஹா”
ஒரு சிங்கத்தைப் போலவே வியர்வையில் நீராடியிருந்த காசியப்பன் கர்ஜித்து சிரித்தான்!
லீலாதேவியின் விழிகள் அகலத் திறந்து கொண்டன…
“ஆஹா.. ஆஹா… என்ன ஒரு கலைநயம் …. எத்தனை அழகு இலங்கையின் முன்னோர்களின் ஆற்றல் வியக்க வைக்கிறதே… இது குபேரனின் நாடு என்று என் பாட்டி சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன்… அது உண்மை தான் போலும்…. இத்தனை பெரிய கட்டுமானத்தை குபேரனைத் தவிர யாரால் அமைக்க முடியும்…”
லீலாதேவியின் வார்த்தைகள் காசியப்பனை இன்னும் மகிழ்வடையச் செய்தன…
“குபேரனின் நாடு இப்போது இந்தக் காசியப்பனின் வீடு… குபேர சாம்ராஜ்ஜித்யத்தைப் போலவே மீண்டும் இங்கே ஒரு அரசை அமைப்பேன் ராணி” என்றவன் லீலாதேவியின் கையை பற்றி அதன் அருகினில் அழைத்து சென்றான்…
லீலாதேவி இமைக்காமல் அந்த கட்டுமானத்தின் கலை அழகை வியந்தபடிநின்றாள். அதை ஆவலோடு சுற்றிப்பார்த்தாள்…
ஒரு சிந்தனைப் பொறி லீலாவின் எண்ணத்தில் தட்டியது!
“நாதா… சிங்கச்சிகரம் என்றீர்களே… சிங்கத்திற்கு எத்தனை நகங்கள்?”
“இதிலென்ன சந்தேகம் லீலா… எத்தனை வேட்டைகளில் எத்தனை சிங்கங்களை வீழ்த்தியிருப்பேன்… நம்மைப் போலவே அவற்றுக்கும் ஐந்து நகங்கள் தானே…” என்றவன் சற்று தன்னைச் சுதாகரித்துக் கொண்டு, அந்தக் கட்டுமானத்தைப் பார்த்தான்…
அவன் முன்னே மூன்று நகங்கள் மட்டும் காசியப்பனை முறைப்பாய் பார்த்தபடி நின்றன….”
திருப்பங்கள் தொடரும்…