இதழ் 41

வானவில்லே வானவில்லே…!

நிறம்! மனித சமுதாயத்தின் மிக முக்கியமான அரசியல். அதிலும் கறுப்பும் வெள்ளையும் தோலில் ஒட்டிக்கொண்டு மனிதர்களை மடையர்களாக்கி உள்ளே ஓடும் சிவப்பை ருசி பார்த்த வரலாறு மிக நீண்டது. கறுப்பு தாழ்ந்தது – தீண்டத்தகாதது என்றும் வெள்ளை உயர்ந்தது – தூய்மையானது என்பதும் இன்று வரை சமூகத்தின் பொதுப்புத்தியில் ஆழ வேரூன்றிவிட்ட வர்ண அரசியல்.

கறுப்பை கொண்டாடும் ஒரே பொது நிலை காதல். அரசியல் நிலை பெரியாரிசம்.

//இரவின் நிறமே இரவின் நிறமே
கார்காலத்தின் மொத்த நிறமே
காக்கைச் சிறகில் காணும் நிறமே
பெண்மை எழுதும் கண்மை நிறமே
வெயிலில் பாடும் குயிலின் நிறமே
எல்லாம் சேர்ந்து கூந்தல் நிறமே//

கார்குழல் சோலையில் சிக்கி சாலை தேடி அலையும் காதலனுக்கு காதலியின் கருங்கூந்தலின் மேல் இருக்கும் மயக்கமே கவி வர்ணனையின் தொடக்கம்.

காதலன் கருப்பானவனென்றால்,

“கருப்பு தான் எனக்கு பிடிச்ச கலரு”

என்று காதலி கவிதைகள் புனைய ஆரம்பித்துவிடுகிறாள்.

**

நிறங்களின் விஞ்ஞானம் பற்றி சொன்னால், சூரியனிலிருந்து வரும் வெள்ளொளி ஏழு நிறங்களில் சேர்க்கை. அந்த ஏழு நிறங்களின் பிரிகை தான் நாம் காணும் அத்தனை நிறமும். ஒரு பொருள் பச்சையாக தெரிகின்றதென்றால் அந்த பொருளில் சூரிய ஒளி படுவதனால் பச்சை நிறம் மட்டும் தெறித்து கண்ணை அடைய மிச்சம் ஆறு நிறமும் அந்த பொருளினால் உறிஞ்சப்பட்டு விட்டதென்று பொருள். வெள்ளையாக தெரிகிறது என்றால் ஏழு நிறமும் தெறித்து கண்ணை அடைகிறது. கறுப்பென்றால் அனைத்து நிறமும் பொருளாலேயே அகத்துறிஞ்சப்பட்டுவிட்டது என்று அர்த்தம்.

உளவியலின் படி ஒவ்வொரு நிறமும் மனித மனதின் ஒவ்வொரு உணர்வுகளை தூண்டும் அல்லது பிரதிபலிக்கும் இயல்பை கொண்டிருக்கிறதாம். அது இயற்கையில் நாம் ஏற்கனவே பார்த்து வளர்ந்த நிறங்களும் அந்த நிறங்களை கொண்ட பொருட்களும் இணைந்த காட்சிப்பிழையின் நீட்சி.

பச்சையென்றால் புத்துணர்ச்சி. நீலமென்றால் குளிர்மை. சிவப்பென்றால் வலிமை. மஞ்சள் என்றால் நேர்மறை சிந்தனைகள்.

இந்த கோட்டிலேயே, உடலின் நிறம் பார்க்காது மனதின் நிறம் பார்ப்பதாக சொல்லப்படும் காதலிலும் நிறமுண்டு என்கிறான் கவிஞன்!

//காதலில் காதலில் காதலில் நிறமுண்டு
என் அன்பே அன்பே உனக்கும் நிறமுண்டு//

**

நீலமும் பச்சையும் தான் உலகத்தின் நிறங்கள். கடல் நீலமாகவும் நிலம் தாவரங்களினால் பச்சையாகவும் தான் இயற்கை தன்னை தகவமைத்துக் கொண்டது. அப்படியான பச்சை என்பது காதலுக்கு சம்மதம் தரும் நிறமென்கிறான் இவன். வீதி சமிக்ஞையில் பச்சை விளக்கு ஒளிர வாகனங்கள் நகர தொடங்குவது போல வாழ்க்கை என்ற பயணத்துக்கு காதல் எனும் சம்மதம் அவசியமே!

//பச்சை நிறமே பச்சை நிறமே
இச்சை ஊட்டும் பச்சை நிறமே
புல்லின் சிரிப்பும் பச்சை நிறமே
எனக்கு சம்மதம் தருமே
பச்சை நிறமே பச்சை நிறமே
இலையின் இளமை பச்சை நிறமே
உந்தன் நரம்பும் பச்சை நிறமே
எனக்கு சம்மதம் தருமே//

புல்லின் சிரிப்பு- இலையின் இளமை. இயற்கை உடுத்திய பச்சை சேலை.

“திருப்பதி ஏழுமலை வெங்கடேசா – பையன் காதலுக்கு பச்சைக்கொடி காட்டு லேசா”

**

நிறப்பாகுபாடு உலகமெல்லாம் தலைவிரித்து ஆடிய போது தோலின் நிறம் கறுப்பு- வெள்ளை என்றாலும் உள்ளே ஓடும் இரத்தம் சிவப்பு என்பதே சமத்துவத்தை வலியுறுத்தும் முக்கிய பிரச்சாரமாக இருந்தது. அதே நேரம் உழைக்கும் மக்களுக்கான உரிமைகளை வென்றெடுக்கவென கார்ல் மார்க்ஸ் பொதுவுடமை சித்தார்த்தை முன்வைத்த போதும் கம்யூனிசத்தின் வர்ணம் சிவப்பு என்றானது.

“நிறத்துக்கு ஒவ்வொரு மதிப்பு
அந்த நிறங்களில் சிவப்பே சிறப்பு
அட வறுமையின் நிறமா சிவப்பு?
அதை மாற்றும் நிறமே சிவப்பு!”

காதலில் சிவப்பை காதலியின் கோபத்துக்கு உவமை செய்கிறான் கவிஞன்.

கோபம் கொள்ளும் போது வெளியிடப்படும் இராசயனங்கள் காரணமாக முகத்தில் உள்ள குருதி கலன்கள் விரிவதனால் குருதி அதிகமாக முகத்தில் தேங்கும். இதனால் கோபப்படும் போது முகம் சிவப்பாக மாறுவது பொதுவான உடற்தொழிற்பாடு.

//கிளையில் காணும் கிளியின் மூக்கு
விடலைப் பெண்ணின் வெற்றிலை நாக்கு
புத்தம் புதிதாய் ரத்த ரோஜா
பூமி தொடாத பிள்ளையின் பாதம்
எல்லா சிவப்பும் உந்தன் கோபம்//

காதலில் கோபம் எல்லாம் காதலெனும் சூரியனின் பார்வை மேவ பனி போல மறைய வேண்டும். உரிமையான செல்லக்கோபங்கள். அது தான் காதலின் குணம். கோபங்களே நிரந்தரமானால் காதல் காயந்துவிட்டதென்று பொருள்.

**

தமிழர்களுக்கு மஞ்சள் என்றால் மங்களம் என்பது பொதுவான வாழ்வியல் வழக்கு. நல்ல நாட்களில் மஞ்சளில் பிள்ளையார் செய்வதில் இருந்து மஞ்சள் பூசி குளிக்கும் பெண்கள் வரை மஞ்சளுக்குள்ளேயே பல மன்றங்கள்.

//அந்திவானம் அரைக்கும் மஞ்சள்
அக்கினிக் கொழுந்தில் பூத்த மஞ்சள்

தங்கத்தோடு ஜனித்த மஞ்சள்
கொன்றைப் பூவில் குளித்த மஞ்சள்
மஞ்சள் மஞ்சள் மஞ்சள்
மாலை நிலவின் மரகத மஞ்சள்
எல்லாம் தங்கும் உந்தன் நெஞ்சில்//

அத்தனை மஞ்சளும் உன் மார்பில் தங்கும் என்பது, காதலியின் மார்பில் மஞ்சளை சங்கமிக்க செய்வது காதலின் குறும்பு.

“அக்கினிக் கொழுந்திப் பூத்த மஞ்சள்”

ஏதேனும் ஒரு பொருள் எரியும் போது எரியும் சுவாலையில் மூன்று வலயங்கள் இருக்கும். எரியும் பதார்த்தங்களுடன் தொடர்பில் இருக்கும் காபனோர் ஒக்சைட் நிரப்பிய கறுப்பு வலயம். அதற்கு மேல் சுவாலையின் பிரதான இடத்தை பிடித்திருப்பது, குறை தகனம் நிகழும் மஞ்சள் வலயம். அதற்கும் மேல் சொற்பமாக இருக்கும் பூரண தகனம் நிகழும் நீல வலயம்.

தீயின் பூத்த மஞ்சள் தான் நெருப்புக்கே வர்ணம் பூசுகிறது.

“கொன்றைப்பூவில் குளித்த மஞ்சள்”

பூக்களில் கொப்பும் குலையுபாக பூப்பது கொன்றை. சித்திரை மாதங்களில் பூத்து குலுங்கும் கொன்றைப் பூ நிலத்தில் உதிர, மரத்தை சுற்றி அத்தனை இடமும் மஞ்சள் பட்டொளி வீசும்.

மஞ்சள் – மகிழ்ச்சியின் நிறம்.

**

உலகில் உள்ள மனிதர்கள் பலருக்கும் பிடித்த வர்ணம் நீலம். நட்பின் வர்ணம் – அமைதியின் வர்ணம். நீலத்தின் அரசியல் இந்திய துணைக்கண்டத்தில் சாதிமறுப்பு – சகோதரத்துவம் என அம்பேத்கரிலிருந்து ஆரம்பிக்கிறது.

//அலையில்லாத ஆழி வண்ணம்
முகிலில்லாத வானின் வண்ணம்
மயிலின் கழுத்தில் வாழும் வண்ணம்
குவளைப் பூவில் குழைத்த வண்ணம்
ஊதாப் பூவில் ஊற்றிய வண்ணம்
எல்லாம் சேர்ந்துன் கண்ணில் மின்னும்//

“முகிலில்லாத வானின் வண்ணம்”

சூரியனில் இருந்து வரும் ஒளி வளியில் உள்ள துகள்களில் பட்டு சிதறலடையும். நீலமும் அதனையும் விட அதிர்வெண் கூடிய கதிர்களுமே அதிகம் சிதறலடைந்தாலும் நீலத்திற்கான கண்ணின் உணர்திறன் அதிகமாக இருப்பதால் வானம் நீலமாக தெரிகிறது.

“அலையில்லாத ஆழி வண்ணம்”

முன்னர் ஆகாயத்தின் நீல நிறத்தின் பிரதிபலிப்பே கடலின் நீல நிறத்துக்கான காரணம் என்று நம்பப்பட்டது. அப்படி என்றால், இரவிலும் கடல் நீல நிறமாகவே தோன்றுவதெப்படி? அதை தான் சி.வி.ராமனின் “ராமன் விளைவு” விவரிக்கிறது. சூரிய ஒளி, தண்ணீர் மூலக்கூறுகள் மூலம் சிதறடிக்கப்படுவதனாலேயே கடல் நீல நிறமாக தோன்றுகிறது என்றார் ராமன்.

“நீல நிறம் வானுக்கும் கடலுக்கும் நீல நிறம்
காரணம் ஏன் கண்ணே உன் கண்ணோ”

மனித கண்ணின் நீல நிறத்துக்கு காரணம் பரம்பரை அலகுகளின் சேர்க்கை. கண்ணின் கதிராளியின் நிறத்தை வானுக்கும் கடலுக்கும் பிரதிபலிப்பாக்குவது கவிஞனின் கற்பனை.

“நீலத்தை பிரித்து விட்டால் வானத்தில் ஏதுமில்லை”

இது விஞ்ஞானம் வழி ஓர் ஆன்மிகத்தேடல்.

**

//வெள்ளை நிறமே வெள்ளை நிறமே
மழையில் உடையும் தும்பை நிறமே
விழியில் பாதி உள்ள நிறமே
உனது மனசின் நிறமே//

வெள்ளையான மனம் என்றால் நல்ல சிந்தனை கொண்டவர் என்பது பொதுவான பார்வை. எல்லா காதலனுக்கும் தன் காதலி நல்லவள் தான்.

தும்பை என்பது ஒரு வகை பூண்டுத்தாவரம். பற்றைகளில் முளைத்தாலும் பல்வேறு மருத்துவ குணங்களை உடையது. இதில் மிக மென்மையான இதழ் போன்ற வெள்ளை பூ பூக்கும். மழை நீரின் அழுத்தத்தில் உடைந்து விழும் அளவுக்கு மெல்லிய பூ அது. கிராமத்து காதலன் என்பதனால் தும்பையும் கவிதையாகியிருக்கிறது.

காலம் மாறும் போது காதலின் நிறமும் மாறும் – காதலர் நிறமும் மாறும்.

Related posts

வானம் பொய்க்காது

Thumi202122

ஒன்றாய் மீள்வோம்…!

Thumi202122

சித்திராங்கதா – 40

Thumi202122

Leave a Comment