இதழ் 41

ஒன்றாய் மீள்வோம்…!

வருடாவருடம் தைத்திருநாள் மலருகையில் மக்கள் மனங்கள் பூரிப்புடன், எமக்கு உணவு அளிக்கும் விவசாயிக்கும் சூரியனுக்கும் நன்றி சொல்லி புலகாங்கிதமடைவதே மரபாக உள்ளது. எனினும் இலங்கையில் 2022ஆம் ஆண்டு தைத்திருநாள் மக்கள் மனங்களில் அச்ச உணர்வையே அதிகப்படுத்துகிறது.

ஏற்கனவே எரிவாயு, எரிசக்தி, மரக்கறி என யாவற்றினதும் விலை பலமடங்கு பல்கிப்பெருகிக்கொண்டே செல்கிறது. அரிசி தான் ஓரளவு நியம விலையில் பெறக்கூடியதாக இருந்தது. ஏழைமக்கள் கஞ்சியாவது குடித்து தங்கள் வாழ்க்கையை நகர்த்தி செல்லக்கூடியதாக இருந்தது. எனினும் புதுப்பொங்கலிற்கு பின் கஞ்சியும் கனவாய்ப்போயிடுமோ என்பதே ஏக்கமாக காணப்படுகிறது.

அரசாங்கம் திட்டமிடலற்ற முறையில் உரங்களை தடை செய்திருந்தமையின் விளைவுகளை அரிசியில் புதிய அறுவடைக்கு பின்னரே உணர முடியும். பல பொருளியல் ஆய்வாளர்களும், அரிசியின் ஆரம்ப விலைகள் 300 ரூபாவை தாண்டலாமென ஆரூடம் கூறுகிறார்கள். அதுமட்டுமன்றி உள்ளூர் உற்பத்தி இலங்கை மக்களுக்கு போதுமானதாக காணப்படாது என்றும், எனினும் இறக்குமதிக்கு இலங்கை பொருளாதார நிலைமைகள் ஒத்துழைக்க போவதுமில்லை என்ற ஆருடங்களும் முன்வைக்கப்படுகிறது.

இவ்ஆருடங்கள் இலங்கையின் மத்தியதரவர்க்க குடிமக்களையும், ஏழை மக்களையுமே அதிகம் பாதிக்க செய்துள்ளது. தைத்திருநாளை இன்முகத்துடன் வரவேற்க இயலாத சூழலில் இலங்கையில் எதிர்காலத்தில் ஏற்படவுள்ள உணவு நெருக்கடி தொடர்பான எண்ணங்களிலேயே மூழ்கி உள்ளனர்.

ஒரு சமூகம் இவ்வாறாக மகிழ்வற்று எதிர்கால உணவு நெருக்கடியை நினைத்து அச்சம்கொள்ளும் சமகாலப்பகுதியிலேயே உணவினை வீண்விரயமாக்கும் செயல்களையும் காணக்கூடியதாகவே உள்ளது. வருடநிறைவு விருந்து, வருட ஆரம்ப விருந்து என ஆடம்பர கொண்டாட்டங்களில் உணவுகள் குப்பை தொட்டிக்குள் போகும் நிகழ்வுகளையும் அவதானிக்கக்கூடியதாகவே உள்ளது. இவ்வாறான அசமந்த செயற்பாடுகளும் உணவு நெருக்கடிக்கு ஏதொவொரு வகையில் காரணமாகிறது.

நாம் பலரும் அரசாங்கத்தின் மீது மாத்திரம் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து எம் கடமைகள் பொறுப்புக்களை துறந்து செல்கிறோம். ஏற்படவுள்ள உணவு நெருக்கடியில் முழு சமுகத்தையும் இணைத்து பாதுகாத்து கடந்து செல்வது தொடர்பில் ஒவ்வொரு குடிமகனும் ஆரோக்கியமான சிந்தனைகளை திறக்க வேண்டும். இன்று யாருக்கோ என நினைத்து கடந்து செல்ல முற்படின், நாளை நம் வீட்டு கதவுகளுக்கு முன்னால் இதே சிக்கல் வருகையில் பிறர் யாருக்கோ என்றவாறு கடந்து செல்லும் அவலமே தொடரும்.

தை பிறந்துவிட்டது…
வழியை நாம்தான் பிறப்பிக்க வேண்டும்..

Related posts

சிங்ககிரித்தலைவன்-37

Thumi202122

வானம் பொய்க்காது

Thumi202122

வினோத உலகம் – 07

Thumi202122

Leave a Comment