சந்திக்க ஓர் அழைப்பு
மருள் மாலை வேளை ஒன்றில் மந்திரிமனை வாயில் முகப்பில் ராஜமந்திரியார் ஏகாம்பரம் தொண்டமனாரும், வன்னியர் விழாவிற்காய் வருகை தந்திருந்த திருமலை தனியுண்ணாப்பூபால வன்னியரும் உரையாடிக் கொண்டிருந்தனர். வயதில் மூத்த இருவரினதும் நட்பு பல காலத்து கதைகளை கொண்டிருந்தது. ஒவ்வொரு முறையும் பூபால வன்னியர் யாழ்ப்பாணம் வரும்போது மந்திரிமனையில் தங்கிச் செல்வதே வழக்கம்.
மாருத வல்லிக்கும் பூபால வன்னியர் மீது ஒரு தனி மரியாதை இருந்தது. மந்திரியாரும் பூபால வன்னியரும் பேசிக் கொண்டிருக்கையில் அரண்மனையிலிருந்து மந்திரி மனை நோக்கி மாருதவல்லி வந்தாள். பூபால வன்னியரைக் கண்டதும் அவர் கால்களில் வீழ்ந்து ஆசிர்வாதம் பெற்றுக் கொண்டாள்.
மாருதவல்லியின் தலையினை தன் முதிர்ந்த கரங்களால் தடவியபடியே பூபால வன்னியர் ‘பெருமகளே, நீ சகல சம்பத்துக்களும் பெற்று ஈழத்தின் ஈடு இணையற்ற சௌந்தர்யக்காரியாய் வாழவேண்டும். ஒரு கொடிய ஆபத்திலிருந்து எப்படியோ மீண்டு வந்துவிட்டாய். அந்தக்கரிய செய்தியினை கேள்வியுற்ற நாளில் நான் பட்ட பாடினை எப்படியும் என்னால் கூற இயலாது தாயே. நல்லவேளை, அந்த கோணநாதன் அருளால் தஞ்சைவீரர் உன்னை காத்தருளினார். இனி எல்லாம் உனக்கு சுபமாகவே அமைய வேண்டும் மகளே’ என்று கனிவான பார்வையோடு கூறிக் கொண்டிருந்தார்.
பூபால வன்னியர் தஞ்சை வீரரைப் பற்றிக் கூறியபோது மாருதவல்லி தன் இடையில் மறைத்துவைத்திருந்த ஒரு பொருளை தடவிப்பார்த்து அதன் இருப்பை உறுதி செய்து கொண்டாள்.
‘தங்கள் ஆசிர்வாதம் உடன் இருக்கையில் எனக்கு என்ன ஆபத்து வந்துவிடப் போகிறது? ஆனால் தாங்கள் தான் இங்கு வருவதை இப்போது வெகுவாகக் குறைத்து விட்டீர்கள்’ என்று விளையாட்டாய் திருமலை வன்னியர் மீது கோபங் கொண்டாள்.
‘எனக்கு மட்டும் வரவேண்டும் என்று இல்லையா மகளே? என்ன செய்வது. பல நேரங்களில் இந்த ஆட்சிச்சுமை இருக்கிறதே, அது தலை நிமிரவை விடுவதில்லை. இல்லாதிருந்தால் என் ஓய்வுநேரமெல்லாம் நான் மந்திரியாரையும் உன்னையும் பார்க்க இங்கு பறந்து வந்துவிடுவேனல்லவா?’
‘ஆமாம்.. ஆமாம்… என் தந்தைக்கும் சரி . உங்களிற்கும் சரி.. இந்த ஆட்சிச்சுமையில்த்தான் சிந்தனை சதாநேரமும் இருக்கிறது. தங்களிருவருக்கும் இதிலிருந்து மீட்சி என்ற ஒன்று இருக்குமென்றே நான் நம்பமாட்டேன்’ என்று கூறிச் சிரித்தாள். பூபால வன்னியரும் ராஜமந்திரியாரும் கூடவே சிரித்தனர்.
மீண்டும் மாருதவல்லி தன் இடையில் ஒளித்து வைத்திருந்த பொருளை தடவிப்பார்த்தவாறே ‘சரி நீங்கள் உங்கள் ஆட்சிச்சுமை குறித்தே உரையாடுங்கள். நான் உடனடியாக தஞ்சைவீரரை சந்தித்தாக வேண்டும். விடைபெறுகிறேன்’ என்று புன்னகையோடு கூறியபடி மனைக்குள் உள்நுழைந்தாள் மாருதவல்லி.
மாருதவல்லி விடைபெற்றுச் சென்ற உற்சாகத்தையும், மகிழ்ச்சியையும் பார்த்த பூபாலவன்னியர் ஒரு மறைமுகச்சிரிப்போடு ராஜமந்திரியாரை நோக்கினார். ராஜமந்திரியார் அந்தச்சிரிப்பை உள்வாங்கியபடியே வானத்தை நோக்கினார். அவர்கள் நட்பின் மொழியில் அவர்கள் பேசிய விடயம் என்னவென்று எல்லோருமே ஊகித்திருப்பீர்கள் என்று நம்புகிறோம்.
தனிமையே தக்கதுணையாக தீரா யோசனையில் இருக்கும் எம் கதாநாயகன் வருணகுலத்தானை நீண்ட நாட்களிற்குப் பின் மாருதவல்லியோடு நாமும் சந்திக்கப் போகின்றோம்.
‘வன்னியர் விழா நிறைவடைந்த பின்னும் தஞ்சைத்தளபதி தீவிர சிந்தனையில் இன்னும் இருப்பது ஏனாமோ?’ என்ற கேள்வியோடு நுழைந்தாள் மாருதவல்லி.
‘வாருங்கள் தேவி’ என்று சிந்தனை திடுக்கிட்டு திரும்பிப்பார்த்தபடி கூறிய வருணகுலத்தான் ஒரு ஆழ்ந்த சுவாசத்திற்குப் பின்
‘வன்னியர் விழா நன்றாகவே தான் முடிந்துவிட்டது. வன்னி சிற்றரசர்கள் யாழ்ப்பாண பேரரசு மீது கொண்டிருந்த பயபக்தியையும், மரியாதையையும் கண்டு உண்மையிலேயே மகிழ்ச்சியடைகிறேன். சிற்றரசுகளின் சேர்க்கையே யாழ் இராச்சியத்திற்கு பெரும்பலமாக இருப்பதை நான் இப்போது தான் அறிகிறேன். உரிய நாளில் மட்டும் வன்னியர் விழா நிகழாமல் போயிருந்தால் அந்த சேர்க்கையே உடைந்திருக்கக்கூடிய அபாயம் இருந்ததை மந்திரியார் அன்று அவையில் கூறியபோதுதான் உணர்ந்து கொண்டேன். வன்னியத்தேவனின் சதித்திட்டங்களை சாதுர்யமாக தோற்கடித்த மந்திரியாரின் மதிநுட்பதிறமையை எண்ணி நான் உள்ளார வியந்து கொண்டிருக்கிறேன் தேவி’ என்றான்.
‘உண்மைதான் தளபதியாரே, தன் தந்தையிடம் எதிர்த்துப் பேசுவதாக அன்று சென்றவளும் தந்தையின் பேச்சிற்கு கட்டுப்பட்டுப் போனாள் என்று என்னைப்பற்றிக் கூட அன்று நீங்கள் நினைத்திருக்கலாம். ஆனால் உண்மையில் நான் அன்று தந்தையின் கண்களில் கண்டது அப்படியொரு உறுதி. எக்காரணம் கொண்டேனும் சித்திரை முழுநிலவு நாளில் வன்னியர் விழாவை நடாத்த வேண்டியது நாட்டிற்கு மிகமிக அவசியம் என்ற கருத்தில் அவரிடம் வேற்றுக்கருத்தே இல்லை என்பதை புரிந்து கொண்டேன். அதற்கு வலுவான காரணம் ஏதோ இருப்பதை உணர்ந்து கொண்டே மேற்கொண்டு அவரை சங்கடத்திற்கு உள்ளாக்காமல் விலகிக் கொண்டேன்’
‘உண்மை தேவி… நான்தான் சிறிதும் யோசிக்காமல் கூறிவிட்டேன். ஒருவேளை விழா மட்டும் நடக்காது போயிருந்தால் ஏற்பட்டிருப்பது பேரிழப்பாய் போயிருக்கும். ஆனால் எக்காரணம் கொண்டும் அப்படியொரு சம்பவத்திற்கு ராஜமந்திரியார் அனுமதித்திருக்கமாட்டார் என்பதை இப்போது உறுதியாக நம்புகிறேன்’ என்றான்.
‘மிக்க சரிதான் தளபதியாரே, நான் வரும்போது தாங்கள் தீவிர யோசனையில் இதைப்பற்றித்தான் எண்ணிக் கொண்டிருந்தீர்களா? உள்ளத்தில் புகைபோல் படர்ந்த வேறொரு வேதனையில் இருப்பீர்கள் என்றல்லவா வந்தேன்’
‘தாங்கள் கூறுவது பொய்யல்லத்தான். ஒரு புறம் வன்னியர் விழா வெற்றிகரமாக நிகழ்ந்து முடிந்து விட்டது. ஆனால் அந்த வெற்றி துளியளவும் உள்ளத்தில் இன்பத்தை தராமல் அந்த வெற்றிக்குப் பின்னுள்ள ஒரு தோல்வியின் கதறல்தான் என்னை நிம்மதி கொள்ள விடாது துன்புறுத்துகிறது தேவி. இந்த சங்கடமான நிலையில் என் அடுத்த அடி குறித்த எண்ணமே எனக்கு யோசனையாக இருக்கிறது. சித்திராங்கதாவை வேதனைத் தீயில் வாடவைத்துக் கொண்டு நான் பறங்கியரை சரித்து வெற்றிவாகை சூட்டிக் கொள்ளினும் அது என் உள்ளத்தில் இன்பத்தை நல்காது என்றறிவேன். ஆனால் என் சுயவிருப்பங்களை தாண்டி என் கடமையைச் செய்து முடிக்கவேண்டியதே என் உடலில் தலை இருப்பதற்கான தற்சான்றாகும் என்பதையும் நான் ஒருபோதும் மறவேன்’
‘தங்கள் நிலமை எனக்கு தெளிவாகவே புரிகிறது தளபதி… சித்திராங்கதா ஓர் ஆடற்கலையரசி என்பதைத் தாண்டி அவளும் ஓர் ஈழத்து மங்கையாவாள். நாட்டின் நலனையே அவளும் தன் தலையாய விடயமாய் எண்ணுவாள் என்றே நான் கருதுகிறேன். இது குறித்து தாங்களே சித்திராங்கதாவிடம் எடுத்துரைத்தலே ஆகச்சிறந்த வழி ஆகும்’
‘நான் எங்ஙனம் சித்திராங்கதாவை இனி சந்திக்க இயலும் தேவி..? என் முகத்தினை நேரெதிரே கண்டால் அவள் கண்கள் பொறுமை காக்குமா?’
‘கண்டால் பொறுமை காப்பது மட்டுமல்ல. காண்பதற்காக அந்தக்கண்கள் காத்திருக்கின்றன என்பதே உண்மையாகும்’
‘என்ன கூறுகிறீர்கள் தேவி?…’
‘ஆம் உண்மையைத்தான் கூறுகிறேன். என் சேவகி ஒருத்தி மூலம் தங்களிற்கு ஓர் ஓலை வந்திருக்கிறது. இதோ..’
என்று தன் இடையில் மறைத்து வந்திருந்த ஓலையை எடுத்து நீட்டினாள் மாருதவல்லி.
“தஞ்சை மாவீரர் தம்மை சந்திக்கப் பிரயத்தனம் கொண்டேன். யாரும் அறிய நேரா வண்ணம் காரிருள் கவிழும் பொழுதில் சட்டநாதர் கோயிலில் நான் இருப்பேன்….
எதிர்பார்ப்போடு
சித்திராங்கதா”
ஓலையை படித்த வருணகுலத்தானிற்கு எதையும் நம்ப முடியவில்லை. சித்திராங்கதாவை நேருக்கு நேரே எதிர்கொள்வது கூட இனி சாத்தியமில்லை என்று வாடியவனுக்கு சந்திக்க அழைப்பு வந்தருக்கிறது என்பதை எப்படி நம்ப இயலும்?
நீங்கள் நம்புகிறீர்களா?
அதற்காக ஆகப்பெரிய சந்தோசம் தரும் இப்படியொரு செய்தியை சந்தேகித்து புறந்தள்ளிவிட முடியுமா?
ஒருவேளை உண்மையாக இருந்தால்!
பார்ப்போம்…