இதழ் 41

ஈழச்சூழலியல் 27

கடலில் தாங்கியொன்றிலிருந்து வெளியேறும் எண்ணெயின் நியம விதியை தீர்மானிப்பதில் எண்ணெயின் பௌதீக, இரசாயன இயல்புகள், நுண்ணுயிர்களின் தன்மை, அவற்றின் தொழிற்பாடுகள் போன்ற பல காரணிகள் செல்வாக்குச் செலுத்துகின்றன. இங்கு கவனத்திற் கொள்ளப்பட வேண்டிய சில பௌதீக காரணிகளாவன,எண்ணெயின் தண்ணீர்ப்பு, ஆவியாதல் பண்புகள், பாகுத்தன்மை என்பனவாகும். பெரும்பாலான எண்ணெய்களின் தண்ணீர்ப்பு நீரை விடக் குறைவாகும். இதனால் அவை நீரில் மிதக்கின்றன. பாரமான எண்ணெய்கள் நீரில் தாழ்ந்து போகின்றன. வழமையாக இவை தொங்குநிலைப் பதார்த்தங்களுடன் கலக்கின்றன. மண்ணெண்ணை, டீசல், கெசோலின் என்பன விரைவாக ஆவியாகக் கூடியனவாகும். பலமான காற்று வீசும் போதும், வெப்பநிலை அதிகமாக உள்ள போதும், இது தூண்டப்படும். குறைந்த கொதிநிலையுடைய, பாரமான மசகு எண்ணெய் குறைவாகவே ஆவியாகும். கடல் நீரிலும், நன்னீரிலும் வாழும் ஏராளமான பக்ரீறியாக்களும், பங்கசுக்களும் தமக்கு தேவையான காபன், சக்தி என்பனவற்றைப் பெற எண்ணையை பயன்படுத்தும் வல்லமையைக் கொண்டுள்ளன.

குறைந்தளவான நைதரசனையும், பொசுபரசையும் கொண்டுள்ள நீரில் எண்ணைய் பிரியகையடைவதைத் தூண்டும் நுண்ணுயிர்களின் தொழிற்பாடு குறைவாகவே காணப்படும். எனவே நைதரசனையும், பொசுபரசையும் மேலதிகமாக இடும் போது உயிரியற் படியிறக்கமடையும் வேகத்தைத் தூண்டலாம். குளிரான பிரதேசங்களில் குறைவான வெப்பநிலையில் பக்ரீறியாக்களின் தொழிற்பாடுகள் மந்தமாகவே இடம்பெறுவதால், இங்கு எண்ணெய்கள் மெதுவாகவே பிரிகையடையும். எண்ணைய் வெளியேறுவதால் மீன்பிடித்துறைக்கு பொருளாதார இழப்புகள் ஏற்படும். இது குளித்தல்,முக்குளித்தல், படகோட்டம், ஏனைய பாரம்பரிய நடவடிக்கைகள், மற்றைய பொழுதுபோக்கு அம்சங்கள் என்பனவற்றை பாதிப்பதோடு, உல்லாச பயணத் துறையையும் மோசமாகப் பாதிக்கும். எண்ணையினால் நீர் அதிகளவில் மாசடைந்துள்ள வேளையில் குளிரூட்டுவதற்கு கடல்நீரைப் பயன்படுத்தும் கடலிற்கு அண்மையில் அமைந்துள்ள மின்பிறப்பாக்கி நிலையங்களை கட்டாயமாக மூடவேண்டிய நிலையேற்படலாம். இதேபோன்று உப்பகற்றும் தொழிற்துறையும் மோசமாகப் பாதிக்கப்படலாம். துறைமுகங்களில் ஏற்றி, இறக்கும் போது ஏற்படும் விபத்துகளினால் வெளியேறும் எண்ணையின் காரணமாக கப்பல்களின் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படலாம்.

மனிதர்களின் செயற்பாடுகளினால் உருவாகும் கழிவுகளை உறிஞ்சி, அதனை விரைவாகப் உயிரியற் படியிறக்கமடையச் செய்யும் அளப்பரிய வல்லமை கடலிற்கு உள்ளதென சிலர் பிழையாகக் கருதுகின்றனர். பெரும்பாலான ஆறுகள் தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் திரவக்கழிவுகளை கடலிற்கு காவிச் செல்கின்றன. ஐரோப்பாவிலிருந்து எல்பே, ரைன், சீல்ட், தேம்ஸ், ஹம்பர், டைன் என்பனவும், மத்தியதரைப் பிரதேசத்திலிருந்து ரோன், ஆர்னோ, போ என்பன மேற்குறிப்பட்டவாறு கடல்நீரை மாசடையச் செய்யும் ஆறுகளிற்கு நன்கறியப்பட்ட சிறந்த உதாரணங்களாகும். தற்போதுகூட சில நாடுகளில் சாக்கடைக் கழிவுகள் கடலினுள் இறைக்கப்படுகின்றன. பால்டிக், வடகடல் என்பனவற்றை அடையும் நதிகள் பல தொன் கணக்கான நைதரசனை கொண்டு வருவதால் சில ஐரோப்பிய நாடுகளின் கடற்கரை வழியே அல்காக்களின் அபரிதமான வளர்ச்சி பொதுவானதொரு காட்சியாகும். Acectaldehyde மற்றும் Vinyl chloride என்பனவற்றை உற்பத்தி செய்யும் தொழிற்சாலையினால், 1932 ஆண்டிலிருந்து 1968 ஆண்டு வரையிலான காலப்பகுதியில் கடலுக்கு வெளியேற்றப்பட்ட கழிவுகளினால், யப்பானிலுள்ன மினமரா என்னுமிடத்தில் பாதரசம் (Mercury) நஞ்சாக்கம் நிகழ்வு இடப்பெற்றது. இந்த தொழிற்சாலை பாதரச (மேர்கரி) ஒக்சைட்டை ஊக்கியாக பயன்படுத்தியது. நுண்ணுயிர்கள் நீரில் காணப்பட்ட பாதரசத்தை மிகுந்த நச்சுப் பொருளான மெதயில் மேர்கறியாக மாற்றியது. இது மீன்களால் உள்வாங்கப்பட்டு உள்ளுர்வாசிகளுக்கு உணவு சங்கில் மூலமாக கடத்தப்பட்டது. ஆயிரம் பேர் இறந்ததுடன், பல ஆயிரக்கணக்கானோர் அங்கவீனமுற்றார்கள். மெதயில் மேர்க்கறியினால் தான் நஞ்சாக்கம் நிகழ்ந்தது என்பதை அறிய சில காலம் எடுத்தது.

எண்ணெய்  தாங்கிகளினால்  ஏற்படும் விபத்துகளினால் கடல் மாசடைகிறது. 1989 ஜுன் மாதத்தில் 53 மில்லியன் கலன் எண்ணெய் தன்னகத்தே கொண்ட Exxon valdez என அழைக்கப்படும் 1,000 அடி நீளமான எண்ணெய்த் தாங்கி கடலில் உள்ள கற்பாறையுடன் மோதி அலஸ்கா கடற்ப்பகுதியில் மூழ்கியது. இதனால் 53 மில்லியன் கலன் மசகு எண்ணெய் கடலில் சிந்தப்பட்டது. இதனால் பல ஆயிரக்கணக்கான கடல் பறவைகள் இறந்ததுடன் மீன் வளங்களும் அழிந்தன. மேலும் பல உயிர் வாழினங்களுக்கு தீங்கு ஏற்பட்டதுடன் சுற்றாடலுக்கும் பாதிப்பு ஏற்பட்டது. இந்த பாதிப்புகளிலிருந்து இன்னமும் இந்த பிராந்தியம் மீளவில்லை. ஆயிரம் மைல்களைக் கொண்ட கரையோரம் மாசைடந்தது. இதைத் சுத்தமாக்க 3.4 பில்லியன் டொலர் பணமதிப்பு செலவாகியது. ஏப்பிரல் 2010 இல், Louisiana கடற்கரையிலிருந்து 50 மைல்களுக்கு அப்பால் Deepwater Horizon எண்ணெய் அகழ்வு இயந்திரம் (Oil rig)வெடித்து சிதறிய போது 200,000 கலன்களை அண்டிய எண்ணெய் தினமும் கடலில் சிந்தப்பட்டது. இதுதான் உலகத்திலே மிகவும் மோசமான எண்ணெய் சிந்தப்பட்ட விபத்தாகும். இந்த விபத்தில் 20 ஊழியர்கள் இறந்தார்கள். முழுமையான விசாரணையின் பின்னர், அமெரிக்க நீதித்துறை 4.5 பில்லியன் அமெரிக்க டொலர்களை அபராதமாக பிரிட்டிஸ் பெற்றோலியம் கொம்பனிக்கு விதிக்தது.இலங்கையின் மேற்கு கடலோரங்களில் அவ்வப்போது காணப்படும் அல்காக்களைக் கொண்ட துர்நாற்றத்துடனான சிவப்பு நிறமான அலைகள் உருவெடுக்கின்ற தோற்றப்பாடானது சில பிரதேசங்களில் கடல், கழிவுகளை உறிஞ்சுவதில் தமது எல்லையை அடைந்துள்ளது என்பதற்கான சிறந்ததொரு சான்றாகும். அத்துடன் கொழும்பைச் சூழ கடல் மாசடைந்து வருகின்றது என்பதற்கான எச்சரிக்கையாகவும் இது விளங்குகின்றது. ஐக்கிய நாடுகளிற்கான சர்வதேச கடல் நிறுவனம், தூய்மையானகடலைப் பேணிப் பராமரிப்பதற்கு வசதியாக 1989 ஜுன் முதலாம் திகதி முதல் அமுலிற்கு வரும் வகையில் கப்பல்களினால் கடலில் வீசப்படும் கழிவுகள் தொடர்பாக கடும் நிபந்தனைகளைக் கொண்ட சர்வதேச விதிமுறைகளை விதித்துள்ளது.

(அ). நிலத்திலிருந்து ஐந்து கிலோ மீற்றர்கள் தூரம் வரையில் எவ்வகையான கழிவுப்பொருட்களையும் வீசக் கூடாது.

(ஆ) எந்தவொரு இடத்திலும் பிளாஸ்டிக் போன்ற இலகுவில் பிரிந்தழியாத பொருட்களை வீசக் கூடாது.

(இ) ஏனைய கழிவுகளை, அவற்றின் தன்மைக்கேற்ப பல தூரங்களில் வீசலாம். உதாரணமாக சில கழிவுகளை நிலத்திலிருந்து 40 கிலோ மீற்றர்களிற்கு அப்பாலேயே வீச வேண்டும்.

ஆராய்வோம்…..

Related posts

குறுக்கெழுத்துப்போட்டி – 37

Thumi202122

கோட்டைகளின் சரிவு

Thumi202122

வினோத உலகம் – 07

Thumi202122

Leave a Comment