இதழ் 41

பொங்கலின் கதை

அறுவடையின் கொண்டாட்டமாக பார்க்கப்படும் தைப்பொங்கல் பண்டிகையின் பூர்வீகத்தை ஆராய்வதோடு கால ஓட்டத்துடன் எவ்வாறான மாறுதல்களை தைப்பொங்கல் பண்டிகை சந்தித்தது என்பதை தேடிப் பார்ப்பதே இந்த கட்டுரையின் நோக்கம்.

தை விரதம்

பழங்காலத்தில் மண்ணையும் மழையையும் நம்பி நெல் விதைத்து அறுவடை செய்ய குறைந்தது ஆறு மாதங்கள் ஆகும். ஒரு வருடத்தில், ஒரு வயல் 6 மாதங்கள் நெல் அறுவடைக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆடியில் தேடி விதைத்த பயிர் நன்றாக வளர்ந்து விளைச்சலை அடைந்து அறுவடை நிலைக்கு தயாராகும் மாதம்தான் தை.

தை பிறந்து விட்டால் அறுவடை நடக்கும். விவசாயிக்கு நெல் மணிகள் கிடைக்கும். காளைகளுக்கு வைக்கோல் கிடைக்கும். அறுவடையான நெல் மணிகள் உணவுக்கு மட்டுமல்ல விற்பனைக்கும் பயன்படுத்தப்படும்.
எனவே, தைப் பிறந்தால் விவசாயிகள், விலங்குகள், வர்த்தகர்கள் என சகலருக்கும் பலவழிகளில் நன்மை உருவாக ஆரம்பித்துவிடும். எனவேதான் தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற பழமொழி உருவானது.

நாடு சிறக்க வேண்டுமென்றால் நெற்பயிர்கள் செழிக்க வேண்டும். விதைப்பு தொடங்கிய ஆடி மாதம் தொடக்கம் மக்கள் பயபக்தியுடன் விரதம் இருப்பர். காலநிலையும் மண்ணும் கை கொடுக்க வேண்டுமென்று இயற்கையையும் இறைவனையும் வழிபடுவர். விரதம் வெற்றிகரமாக பூர்த்தியாகி, தமது உழைப்பிற்கு உதவிய இயற்கைக்கும், தம்மோடு சேர்ந்து உழைத்த கால்நடைகளுக்கும், தமது நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவிக்கும் விதமாக சர்க்கரைப் பொங்கல் படைத்து வழிபட்டனர்.

பணத்திற்கு பதிலாக காணப்பட்ட பண்டமாற்றின் முக்கிய அம்சமாக நெல் மணிகள் காணப்பட்டன. நெல் மணிகளையே மன்னர்களுக்கு வரியாக மக்கள் செலுத்தினார்கள். நன்கு விளைச்சல் பெற்றால் தான் வரி செலுத்தியது போக மீதத்தை வீட்டிற்கு கொண்டு செல்ல முடியும். வரி வசூலிக்கப்பட்ட நெல்கள், அரண்மனை நிர்வாக உணவிற்கு செலவிடப்படும். பஞ்சம் வந்தால் மக்களுக்கே கூடத் திருப்பி வழங்கப்படும்

தமிழ் மக்களின் நெடுங்காலப் பயிர் இந்த நெல். நெல்லுச்சோறு என்பது அந்தக் காலத்தில் எப்போதாவது விசேட நாட்களில் மட்டுமே சமைக்கப்படும் உணவாக காணப்பட்டது. செல்வந்தர்களும், அரச வம்சத்தினருமே தினமும் நெற்சோறு உண்டனர்.

அது ஏன் பொங்கல்?

பானையில் வெண்நுரை தள்ளிப் பொங்கி வழிவதே பொங்கல் எனப் பெயர் பெற்றது.

புதிய அடுப்பு, புதிய பானை மற்றும் புதிய விறகுகள் மட்டுமே பொங்கல் சமைக்க பயன்படுத்துவது வழக்கம். இன்றும் சில ஊர்களில், பொங்கலுக்குச் சில நாட்களுக்குமுன் பனை ஓலையை வெட்டி காயவைத்து அதை மட்டுமே எரித்து சமைப்பார்கள். அதே போன்றே அடுப்பும். செங்கல் அடுக்கி, சேறு பூசி, சாணி மொளுகி தயார் செய்வார்கள். முதலில் அறுவடை செய்த அரிசியை குத்தி பச்சரிசியாக்குவர்.

பொங்கலன்று அதிகாலை எழுந்து வீட்டு முற்றத்தில் கோலம் இட்டு அதன் நடுவில் பானை வைப்பர். புதுப்பானையில் புது அரிசியிட்டு முற்றத்தில் பொங்க வைப்பார்கள். புதிய பானைக்குப் புதிய மஞ்சளைக் காப்பாக அணிவர். புதிய மஞ்சள் கொத்தையும், புதிய கரும்பையும், புதிய காய்கறிகளையும் அன்று பயன்படுத்துவர். கோலமிட்ட இடத்தில் தலை வாழையிலையில் நிறைகுடம் வைத்து விளக்கேற்றி, கதிரவனை வணங்கி பொங்கலிடத் தொடங்குவர். புதிய பானையில் அரிசி, வெல்லம், பால், நெய் சேர்த்து சமைப்பர்.

இந்துத் தமிழர்கள், சாணத்தில் பிள்ளையார் பிடித்தும் வைப்பார்கள். பொங்கல் பொங்கி வரும் வேளையில் குடும்பத் தலைவன், மனைவி மக்களுடன் கூடி நின்று “பொங்கலோ பொங்கல்! பொங்கலோ பொங்கல்!” என்று உரக்கக் கூவுவர். தனது முதற் பயனை கதிரவனுக்குப் படைத்துப் பின் குடும்பத்தாருக்கும் சுற்றத்தாருக்கும் கொடுத்த பின்பே, தாங்கள் நுகர்வார்கள். இது தமிழரின் பண்பாடாக தொன்று தொட்டு உள்ளது.

பழங்காலத்தில் பொங்கல் வைக்க மண் பானைகள் பயன்படுத்தப்பட்டது. தற்பொழுது அதிகம் வெண்கலப் பானை, சில்வர் பானைகள் பயன்படுத்தப்படுகின்றன. நெல்லுடன் அந்த வருடத்தில் என்னென்ன அறுவடை செய்தனரோ அதையும் வைத்து சூரிய வழிபாடு அல்லது இறைவழிபாடு செய்வார்கள். பிற்காலத்தில் கரும்பு மட்டுமே பிரதான இடம் பிடித்தது. கரும்பை மட்டும் சேர்த்து வழிபாடு செய்யத் துவங்கினர்.

முதல் நாள் போகிப் பண்டிகை

சூரியனை மையமாகக் கொண்ட தமிழரின் ஆண்டுக் கணிப்பின்படி வருடத்தின் இறுதி நாளான மார்கழி இறுதி நாளில் போகிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த நாள் ‘பழையன கழித்து, புதியன புகவிடும்’ நாளாகக் கருதப்படுகிறது. பழையவற்றையும், உபயோகமற்றவையும் விட்டெறியும் நாளாகக் கருதப்படுகிறது. போகியன்று, வீட்டின் கூரையில் பூலாப்பூ செருகப்படும். அன்றைய தினம், வீட்டில் தேங்கிப் போயிருக்கும் குப்பைகள், தேவையற்ற பொருட்களை அப்புறப்படுத்தப்பட்டு வீடு சுத்தமாக்கப்படும்.

பழந்துயரங்களை அழிப்பதான இப்பண்டிகையைப் ‘போக்கி” என்றனர். அந்தச் சொல் நாளடைவில் மருவி ‘போகி” என்றாகிவிட்டது. அக்கால வழக்கப்படி வருடத்தின் கடைசிநாள் என்பதால், நடந்து முடிந்த நல் நிகழ்வுகளுக்கு நன்றி கூறும் நாள் போகி என்போரும் உண்டு. போகிப் பண்டிகையின் போது போளி, வடை, பாயசம் போன்றவை இறைவனுக்கு நிவேதனம் செய்யப்படும்.

வீடு மட்டுமல்ல மனதில் இருக்கும் தீய எண்ணங்களும், தவறான எண்ணங்களும் நீக்கப்பட வேண்டும் என்பது இதில் உள்ள தத்துவமாகும். இது இந்தியத் தமிழர்களிடையே தான் முக்கியமான பண்டிகையாக உள்ளது.

மறுநாள் மாட்டுப் பொங்கல்

இன்று போல் இயந்திரங்களையும் இரசாயனங்களையும் நம்பி அன்று எவரும் விவசாயம் செய்யவில்லை. வாழ்வாதாராமான உழவுக்கு உதவும் காளை மாடுகளை வீட்டின் இன்னொரு உறுப்பினராகவே கருதினர். அந்த காளை மாடுகளுக்கு நன்றி செலுத்தி வழிபடும் நாளாக தைப்பொங்கலின் மறுநாளை கொண்டாடினார்கள். இயந்திரங்கள் வந்துவிட்டாலும் இன்றும் காளைகளுக்கான வணக்கம் செலுத்தும் முறை தமிழர் வாழும் பகுதி எங்கும் வாழ்ந்துகொண்டு தான் இருக்கிறது.

மாடுகள் கட்டும் தொழுவத்தினைச் சுத்தம் செய்து கொள்வார்கள். கால்நடைகளைக் குளிப்பாட்டி சுத்தம் செய்வார்கள். மாடுகளின் கொம்புகள் சீவப்பட்டு வண்ணம் பூசி, கூரான கொம்பில் சலங்கை கட்டிவிடுவார்கள். திருநீறு பூசி குங்குமப் பொட்டிட்டும் புதிய மூக்கணாங் கயிறு, தாம்புக் கயிறு அணிவித்தும் தயார் செய்வார்கள்.

Maattu Pongal | Impressions

உழவுக்கருவிகளைச் சுத்தம் செய்து சந்தனம், குங்குமம் வைப்பார்கள். விவசாயத்தில் பயன்படுத்தப்படும் அனைத்து கருவிகளையும் இதேபோல செய்வார்கள். தாம்பாளத் தட்டுகளில் தோட்டம், காடுகளில் விளைந்த பயிர், பச்சைகளை வைத்தும் தேங்காய், பூ, பழம், நாட்டுச் சர்க்கரை என எல்லாம் பூஜைக்காக எடுத்து வைப்பார்கள். தொழுவத்திலேயே பொங்கல் பொங்கி கற்பூர தீபாராதனைக் காட்டப்படும். இதன் பின் பசு, காளை, எருமை என அனைத்து கால்நடைகளுக்கும் பொங்கல், பழம் கொடுப்பார்கள்.
தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் காளை பிடிக்கும் ஜல்லிக்கட்டு விளையாட்டு இந்நாளில் நடைபெறும். ஆனால் இலங்கையில் மாட்டுச்சவாரி நிகழ்வுகள்தான் பரவலாக எல்லா இடங்களிலும் நடைபெறும்.

காணும் பொங்கல்

இதுவும் இந்தியாவில் மட்டுமே பிரபலமான பண்டிகையாகும். உற்றார், உறவினர், நண்பர்களைக் காணுதல் மற்றும் பெரியோர் ஆசி பெறுதல் என்பன நடக்கும். பல்வேறு விளையாட்டுப் போட்டிகள், பட்டி மன்றம், உரி அடித்தல், வழுக்கு மரம் ஏறல் என்று வீர சாகசப் போட்டிகளும் இடம்பெறும்.

பொங்கல் வெறும் பண்டிகை மட்டுமல்ல. இது இயற்கைக்கும் மனிதர்களுக்குமான நெருக்கத்தை ஆண்டுதோறும் புதுப்பிக்கும் பண்டிகை என்பதை மனதில் கொண்டு வருடத்தின் மற்றைய நாட்களிலும் இயன்றவரை இயற்கையோடு இயைந்த வாழ்வை வாழ்வோமாக.

Related posts

சிங்ககிரித்தலைவன்-37

Thumi202122

ஒன்றாய் மீள்வோம்…!

Thumi202122

பாசறை – எழுத்தாளர் பா.ராகவன்

Thumi202122

Leave a Comment