இதழ் 41

வானம் பொய்க்காது

“எங்களோடு வயலுக்கு வந்தாயா?
ஏற்றம் இறைத்தாயா?
நீர் பாய்ச்சி நெடுவயல் நிறையக் கண்டாயா?
நாற்று நட்டாயா? களை பறித்தாயா? கழனிவாழ் உழவருக்கு கஞ்சி கலயம் சுமந்தாயா? அங்கு கொஞ்சி விளையாடும் எம்குலப் பெண்களுக்கு மஞ்சள் அரைத்துப் பணிபுரிந்தாயா? அல்லது மாமனா? மச்சானா? மானங்கெட்டவனே!”

இது மேற்குலகவாதியை நோக்கி எம் மூத்த குடியினர் எழுப்பிய ஒரு வீரக்குரல். அடிக்கடி கேட்டு இரசித்திருப்போம். ஆனால் இந்தக் கேள்விகளை இன்று நாம் நம்மை நோக்கியே கேட்க வேண்டிய ஒரு துர்பாக்கிய நகரமயமாக்கலை நோக்கி நகர்ந்து வந்து விட்டோம் என்பதுதான் இன்றைய சூழலின் நிதர்சனம்.

வீட்டு முன்றலில் வேம்பு, பலா – கிணற்றை அண்டி இளங்கமுகு- வேலியில் நெடும் பனைகள்- வடமேற்கில் மா – பின்வளவில் கப்பல் வாழை – ஆயிரங்காய்ச்சி அமுதசுரபியாய் அங்கங்கே தென்னை – என அனைத்தும் வீட்டிலேயே காய்க்க காய்க்க பறித்துண்டு பசி மறந்தோம் என்று போன தலைமுறை சொல்கிற கதைகளையே முழுவதுமாய் நம்ப மறுக்கும் ஓர் இளைய தலைமுறையாய் இன்றைய சமுதாயம் மாறிக்கொண்டிருப்பதையே நாம் அனைவரும் மௌனமாய் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றோம். உணவும் உணவிற்குத் தேவையானவையும் சந்தைகளிலும் பல்பொருள் அங்காடிகளிலும் மட்டுமே வாங்கி பழங்கப்பட்ட இன்றைய பெரும்பாலான தலைமுறையினர்க்கு இந்தக் கதைகளை நம்புவது கொஞ்சம் கடினம் தான்.

விவசாயம் என்பது ஒரு பழைய வாழ்க்கைமுறை எனக்கருதி இந்த சமுதாயம் பல அர்த்தமற்ற புதிய மூட நம்பிக்கைகளிற்கும், வியாபார யுத்திகளிற்குள்ளும் சிக்குப்பட்டு சிதைந்து கொண்டிருக்கிறது. யார் கைகளையும் எதிர்பாராது, யார் தயவிலும் தங்கியிராது, போலிப்பணிவு நாடகங்கள் போட்டு அதிகார வாழ்க்கைக்கு பொய்யாய் அடிபணிந்து வாழாது, வானத்தையும், பூமியையும் கடவுளாய் மதித்து தலை நிமிர்ந்து தம் உழைப்பில் தன்னிறைவாய் வாழ எக்காலத்திலும் விவசாயமே ஆகச்சிறந்த வழி என்பது நாம் எல்லோரும் வெளிப்படையாக ஏற்றுக் கொண்டே ஆகவேண்டிய உண்மையாகும்.

உழவர்களது எக்காலத்துக்குமான ஒரே நம்பிக்கை ‘வானம் பொய்க்காது’ என்பதுதான். வானம் எத்தனையோ முறை பொய்த்திருந்தாலும் கூட அவர்கள் நம்பிக்கை அசைவதில்லை. அந்த திடமான நம்பிக்கைதான் அவர்களது தலை நிமிர்ந்த வாழ்வுக்கு காரணம். எத்தனை இடர்களையும் தாண்டி விளைந்த கதிரினை கைகளில் வாரியெடுக்கும் போதுதான் அவர்களது ஒட்டு மொத்தமான நம்பிக்கையின் உருவமாய் ஓர் இறைவனை தரிசிக்கிறார்கள். அந்தக்காட்சியையே இம்முறை நாம் உங்களிற்கு தரிசனமாக்கியுள்ளோம்.

அண்மையின் கொட்டும் மழை நேரம் ஒரு விவசாயியை நாம் சந்திக்க நேர்ந்தது. ‘கார்த்திகை போனால் மழையில்லையே’ என்பது பழமொழி. கார்த்திகை முடிந்தும் விட்டது. விளை நிலம் காய்ந்து கிடக்கிறது. மண்ணைக் கிழித்து வெங்காயச்செய்கையை இப்போதே ஆரம்பித்து விட்டால் தன் விளைச்சல் சந்தையில் முன்னிற்கும் என்று முனைப்பாய் வெங்காயம் நட்டு முடித்து விட்ட மறுநாள் பெருமழையின் முதல் நாள். ஒரு நாள் மழை நீர் இறைப்பு மிச்சமாக இறைவன் தந்த பரிசு என்று சந்தோசத்தில் நனைந்து நனைந்து நீர் பாய்ச்சினார். ஆனால் அது இறைவன் அளித்த பரிசல்ல. அழிவிற்கான அறிவிப்பு என்பதை அவரின் உள்ளத்தின் ஒரு ஓரம் உணர்ந்திருந்தாலும் நம்பிக்கை கொண்ட நெஞ்சமாய் அதை ஏற்க மறுத்து கருமமாற்றிக்கொண்டிருந்தார்.
தொடர்ந்து கொட்டிய பெருமழையில் தன் பயிர் முழுவதும் மூழ்கி அழிந்து விட்ட பெருந்துயரில் இருந்தபோதுதான் நாம் அவரை சந்திக்க நேர்ந்தது.

அவர் துயரில் பங்கு கொள்ள, வீணாய்ப்போன அவர் உழைப்பினை நேரில் வந்து பார்க்கிறோம் என்று கூறினோம். அவருக்கு ஆறுதலாய் இருக்க அதுவே ஒரு வழி என்று கருதி அவரோடு வயலுக்குப் புறப்பட்டோம். ஆம் வயலுக்கு வந்தோம்!

வரம்பை மிஞ்சி நின்றது வெள்ளம். ‘வரப்புயர’ என்று அந்த மூத்த பெண்மணி சொன்னது எமக்கு நினைவில் வர அந்த பெண்புலமையினை மீண்டும் எண்ணி நமக்குள்ளே பிரமித்திக் கொண்டோம். முழங்கால் வரை புதைந்துவிடக் கூடிய அந்த சகதிக்குள் இறங்க எம்மிடையே ஏற்பட்ட தயக்கத்தை கண்ட அந்த முதிய விவசாயி “தம்பி, சேத்தில கால் வைக்க யோசிச்சா இனி சோத்தில கைவைக்கவும் யோசிக்கோணும்” என்று முதுமையின் பளீர்ச்சிரிப்போடு கூறிக்கொண்டு முன்னேறினார். எம் தரம்- தராதரம் எல்லாம் அத்தோடு கால் விரல் இடை வழியே நழுவி காணாமல் போனதாய் உணர்ந்தோம். அவர் கூறியது இதுவரை கேட்டிராத புதுக்கவிதை ஒன்றும் இல்லைதான். ஆனால் அதை அவர் கூறிய போது அந்த வார்த்தைகளில் சக்தி எம்மை அதிகமாகவே தாக்கியது என்று சொல்லலாம். அவர் பாதங்களை தொடர்ந்தவாறே நாமும் பயணித்தோம்.

“சோனையன் அங்க இங்க திரியும் . கவனமா பார்த்து வாங்கோ” (சோனையன்- பாம்பு) கூறிவிட்டு அவர் சாதாரணமாக நடந்து சென்றார். ஆனால் எமது நிலையோ பெருந்திண்டாட்டம் தான். அவரின் பாதங்களை தவறவிடாமலே பின்னோக்கி தொடர்ந்து கொண்டிருந்தோம்.

நெற்காணிகளை அவர் அறிமுகப்படுத்திய போது அவர் முகத்தில் தெரிந்த சிரிப்பு எங்கோ திடீரென்று ஒளிந்து கொண்டது போல் தோன்றியது. மட்டத்திற்கு சில அடி மேலே கையை உயர்த்தி ‘வழமைக்கு இங்க நிக்கும் தம்பி.. இப்ப எப்பிடிக் கிடக்கு பாருங்கோ. இந்த முறை விளைச்சல் பெரிய நட்டந்தான். ஆனாலும் என்ன செய்யிற? வாரத கண்டுகொள்ளவேண்டியதுதான். உரம் இல்லை எண்டதுக்காக நிலத்தை காயவிடேலுமே? கிடக்கிறத வைச்சு வாரத வெட்டுறதான்’ என்று அவர் கூறிய பிறகுதான் உரமில்லாத பிரச்சினையின் உருவம் எமக்கு புலப்பட ஆரம்பித்தது. அரிசிக்கும் தட்டுப்பாடான எதிர்காலத்தை நோக்கி நம் நாடும் நாமும் சென்றுகொண்டிருக்கிறோம் என்பதை அந்தக்காட்சி எமக்கு தெளிவாக புலப்படுத்தியது.

தொடர்ந்து அவர் தன் வெங்காயச் செய்கைக்கு அழைத்துச் சென்றார். நட்ட தடம் தெரியாமல் வெள்ளம் மூடி இருந்தது. எங்களைப் போலவே அந்த வெள்ளத்தை பார்த்துக் கொண்டிருந்த அந்த விவசாயக் கண்களை மீண்டும் ஒருமுறை பார்த்தோம். கண்களில் கண்ணீர் ஏதும் தெரிகிறதா என்று உற்றுப் பார்த்தோம். இன்னும் அந்தக் கண்களில் நம்பிக்கை மட்டுமே தெரிந்தது. முழுவதுமே அழிந்தாலும் அவர்கள் வானத்தின் மீது கொண்ட நம்பிக்கையை மட்டும் யாராலும் அழித்து விடமுடியாது.

அவர்கள் கண்களில் தெரியும் அந்த நம்பிக்கையின் வேர் எது என்பதை சிந்தித்திப் பார்ப்பீர்களா? அதற்கான பதிலை அட்டைப்படத்தில் கண்டு கொள்வீர்கள்! ஆம். எத்தனை பேரிடர் தாண்டியும் அவர்கள் நம்பிக்கை வெற்றி பெறுகின்ற அந்த நொடியை அனுபவிக்கும் போது தன் கஷ்டங்களை எல்லாம் மறந்து அவர்கள் பூரிக்கிறார்கள். தம் நம்பிக்கை பலிக்கின்ற நொடியில் அவர்கள் காண்கின்ற எல்லாவற்றையும் கடவுளாய் எண்ணி கைதொழ ஆரம்பிக்கின்றனர். அந்த பூரிப்பின் பிரதிவிம்பம் தான் ,பொங்கல்’ என்கிற பண்டிகைக் கொண்டாட்டம்.

பொங்கல் எம்மில் எத்தனையோ பேருக்கு- யாருக்கோ அடி பணிந்து வாழும் அரச- தனியார் ஊழியர்களுக்கு ஒரு விடுமுறைப் பண்டிகை மட்டும்தான். ஆனால் உழவனுக்கு அது உணர்வு. தன் அசைக்க முடியாத நம்பிக்கையின் வெற்றிக் கொண்டாட்டம். பொங்கி வழிவது பால் மட்டுமல்ல அவர்கள் உள்ளமும் இன்பமும்.

“பொங்கலோ பொங்கல் பெருவாழ்த்துக்கள்”

Related posts

ஈழச்சூழலியல் 27

Thumi202122

பாசறை – எழுத்தாளர் பா.ராகவன்

Thumi202122

குறுக்கெழுத்துப்போட்டி – 37

Thumi202122

Leave a Comment