நவீனமயமாக்கப்பட்ட சூழலில் தன் தேவைகளை நோக்கி நகர்ந்து செல்வதாகவே அனைவரது வாழ்க்கை முறையும் இன்று அமையப் பெற்றுள்ளது. வேலைப்பளு காரணமாகவும், வீட்டு வேலைகளை தொடர்ந்து செய்வதாலும் குழந்தைகளை பராமரிக்க முடியாமலும், தாய்ப் பாலூட்டலை வழங்குவதை தொடர்ந்து செய்வதிலும் சிரமத்தை கண்டுள்ளனர்.
சிக்மண்ட் பிராய்ட்டின் உளவளர்ச்சி கொள்கையை மையமாக கொண்டு தாய்ப்பால் வழங்கலின் அவசியத்தை சற்று விரிவாக நோக்குவோம்.
பிறந்தது தொடக்கம் ஒரு வயது வரை குழந்தை வாய் வழி மூலமே இன்பத்தை அனுபவிக்கின்றனர். இதனாலே தாயின் முளைக்காம்பு மூலம் பாலை உறிஞ்சிக் குடிப்பதால் இன்பம் பெறுவதோடு, கையில் கிடைக்கும் பொருட்களை வாயில் வைத்து சுவைத்துப் பார்க்கும் நிலைமையும் கண்கூடாக நாம் பார்த்திருக்கின்றோம்.
தாய்ப்பாலூட்டுவதை எப்போது நிறுத்துவது என்பது தொடர்பான கேள்வி தாய்மார்களிடம் கேள்விக் குறியாகவே உள்ளது எனலாம். இது தாயின் அழகு, உடலியல் மாற்றம், பிறர் உரையாடல் போன்றன மூலமே கையாளப்படுகிறதே தவிர குழந்தையின் ஆளுமை பற்றிய புரிந்துணர்வு இங்கு ஏற்படவில்லை என்றே கூறமுடியும். உரிய பருவத்திற்கு முன் தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்துவது குழந் தைக்கு உள ரீதியான தாக்கத்தை ஏற்படுத்துவதால் உரிய பருவம் வரை பால் கொடுத்தல் அவசியமாகும்.
பருவம் தாண்டியும் தாய்ப்பால் கொடுப்பது என்பது சிக்கல் வாய்ந்ததாக காணப்படுகிறது. இவர்கள் வாய் சார்ந்த பல விடயங்களை மையப்படுத்தி செயற்படும் நிலையும் காணப்படும். வெறுமனே தாய்ப்பால் போசனை க்காக மட்டுமே என எண்ணாது குழந்தையின் பிற்கால நடத்தை களையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
தாய்ப்பாலூட்டல் அதிகம் காணப்படும் போது வளர்ந்தோர் பருவத்தில் புகைத்தல், குடித்தல், நெருக்கடியான சூழலில் நகம் கடித்தல் போன்ற பண்புகளையும், பிறரை தன் கீழ் அடிமைப்படுத்துபவர்களாகவும், பிறர் தன்னை கவனிக்க வேண்டும் என்றும், வெகுளித்தனம் உடையவர்களாகவும், பிறரில் அதிகம் தங்கி வாழும் தன்மை கொண்டவர்களாகவும் காணப்படுவர்.
தாய்பால் பருவத்திற்கு முன் நிறுத்தப்படும் போது தமது உறவுகளில் பகை, வன்முறை, பிறர் மீது பொறாமை உடையவராகவும், தன்னில் பிழையிருப்பினும் கருத்து முரன்பாடுகளுடன் விவாதிப்பவர்களாகவும், பிறரில் குறை காண்பவர்களாகவும், பிறரை பிழையாக சுட்டிக்காட்டுபவர்களாகவும், சுயநலத்திற்காக பிறரை பயன்படுத்துபவர்களாகவும் காணப்படுவர்.
இத்தகைய நடத்தைகள் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தி குழந்தையின் ஆளுமையில் எதிர்மறையான நிலைக்கு கொண்டு செல்லும்.
குழந்தையை பெற்றெடுத்து வளர்ப்பதில் பல விடயங்களை உடலியல் ரீதியாக மட்டுமே கவனிக்கின்றோமே தவிர உள ரீதியான தாக்கங்களை கவனிப்ப தில்லை. ஆகையால் நாமும், நம் குழந்தைகளிடமும் உடல் வேறு உளம் வேறு என எண்ணாமல் இரண்டும் இரண்டு கண் போல் பேண வேண்டிய அவசியம் குடும்ப உறுப்பினர்களிடம் கட்டாயமாக உணரப்பட வேண்டும் என்பதனை நாம் அனைவரும் அறிதல் வேண்டும்.