இதழ் 42

சர்க்கரை பொங்கல்

உடைத்த சிரட்டைத் துண்டுகளுடன் இரவு பெய்த மழையில் நனைந்து ஊறிப்போன விறகுகளையும் ஒருவாறு உலரப்பண்ணி பன்னாடையையும் சேர்த்து அடுப்பை மூட்டிய பவளம், வாய் நெளிந்த பானையைத் தூக்கி அடுப்பில் வைத்தாள். அடுப்படிக்கு மேலே காட்டுத்தடிகள் கொண்டு வரியப்பட்ட பரணில் இருந்த சிறிய ஓலைப்பெட்டியை பக்குவமாய் எடுத்தவள் அதற்குள்ளிருந்த ஒரு சுண்டே அளவான அரிசியைக் கழுவி அடுப்பில் இருந்த பானையினுள் போட்டு அகப்பையால் கிளறிவிட்டாள். ஈரவிறகின் மகிமையால் எழுந்த புகைமண்டலத்தை விலக்கும் முயற்சியில் ‘ஊ…ஊவ்..” என அடுப்பை ஊதிவிட்டு நிமிர்ந்தவளின் கண்களில் இருந்து ‘பொல பொல” வென கண்ணீர் வழிந்தது….

காதலித்துக் கரம்பிடித்த நிலவனுடன் அவள் வாழ்ந்த வாழ்க்கையில் கொண்டாடிக் கழித்த பொங்கல் விழாக்களின் நினைவால் நெஞ்சம் கனத்தது. தோட்டப்புறத்திலும், வயலிலுமாய் நிலவன் பாடுபட்டு உழைத்துக் கொண்டுவர பவளமும் அநாவசிய செலவற்று சிறுகச் சிறுகச் சேமித்துக் கட்டிய அந்தப் பெரும் வீட்டின் முற்றத்தில் சாணியால் தரைமெழுகி மாக்கோலமிட்டு நிறைகுடமும் குத்துவிளக்கும் மங்கலமாய்க் கொலுவிருக்க புதுப்பானையில் பால் பொங்கி நுரை ததும்ப சொந்த வயலில் அறுவடை செய்த புத்தரிசியில் பொங்கல் பொங்கி கரும்பும் பழங்களுமாய்ப் படையலிட்டு சூரியனை வணங்கி அண்டை அயலாருக்கெல்லாம் விருந்தளித்து மகிழ்ந்திருந்த அந்த நாட்களுக்குள் மீளவும் சென்றிட மனசு குழந்தையாய் அடம்பிடித்தது.

நிலவனுடன் புதுமனையில் குடிபுகுந்து முதற்பொங்கலைக் கோலாகலமாய்க் கொண்டாடி அடுத்த மாதமே எறிகணைகள் துரத்த இடம்விட்டு இடம்மாறி அலைந்து இறுதியில் படுகாயமுற்ற நிலவனை அகதி முகாமில் வைத்துப் பராமரித்து சொந்த ஊர் மீண்ட போது அவர்களுக்கு மணமாகி ஐந்து வருடங்கள் கடந்திருந்தன. சொந்தமண்ணின் மகத்துவத்தால் நிலவனின் காயங்கள் குணமாகி அவன் பழைய நிலையை அடைந்த போது அவர்களிடம் குடிகொண்ட சந்தோசம் மீளவும் காணாமற்போகத் தொடங்கியது.

‘என்ன இன்னும் ஒரு விசேசமும் இல்லையோ?”

‘என்னடி பவளம்இ உன்ர வயித்தில ஒரு புழு பூச்சியும் தங்கேல்லையோ?”

என்கின்ற ஊராரின் கேள்விக் கணைகளால் பவளமும் நிலவனும் துடிதுடித்துப் போயினர். அதன் பின்னரான காலங்களில் உழைப்பது அனைத்துமே கோயில் குளங்களுக்கு அலைவதிலேயே கரைந்து போனது..

இப்படியே சில காலம் கழிய பவளத்தின் கண்ணீரும் கல்லாய் இருந்த கடவுளையும் கரைத்திட அவளின் வயிற்றில் கருவாய் உருவாகி வந்து பிறந்தவள்தான் நிலானி. தொடர்ந்து வந்த மூன்று வருடங்களும் நிலானியின் மழலைக் குறும்புகளுடன் மகிழ்வாய்க் கழிந்து போக கடந்த வருடம் காற்றுடன் கலந்து வந்த கொடிய ‘கொரோனாப்பேய்” காலனாகி நிலவனைக் கவர்ந்து சென்றுவிட கணவனற்ற பவளமும் தந்தையற்ற நிலானியும் நிர்க்கதியாகினர்.

திரும்பவும் புதுவீடு கட்டும் ஆசையில் அவர்கள் சேர்த்த காசெல்லாம் வைத்தியத்திற்கும் வயிற்றுக்குமாய் செலவாகிப்போக மீதிநாட்களில் அடுத்தவரின் வயல்களிலும் தோட்டப் புறங்களிலும் கூலிக்கு மாரடிப்பவளாய் மாறிப்போனாள் பவளம். கிடுகிடுவென உயரும் விலைவாசியேற்றமும், கடுகதியாய் பரவும் ஆட்கொல்லி நோயும் படாதபாடு படுத்திக் கொண்டிருக்க ஐந்தே வயதான பெண்குழந்தை நிலானியுடன் ஒருவேளை சோற்றுக்கே அல்லாடும் அவலம் தனக்கு வாய்த்ததை எண்ணி, எண்ணி மறுகினாள் பவளம்.

நினைவுகள் உளத்தை வருத்த ஈரவிறகின் புகை உடலை உலைக்க, கடந்த காலத்திலிருந்து விடுபட்ட பவளம் அடுப்பிலிருந்த உலைமூடியைத் திறந்து அங்கொன்றும் இங்கொன்றுமாய் சிதறியபடி அவிந்திருந்த சோற்றுப்பருக்கைகளை துழாவ முயல்கையில் ‘அம்மா…அம்மா..” என அழைத்தபடி ஓடிவந்த நிலானி

‘ஏனம்மா நாங்கள் முத்தத்தில பானை வச்சு பொங்கேல்ல..வெளிய ஒருக்கா வந்து பாருங்கோவன்.. விதுவாக்கள் வீட்ட எல்லாம் எவ்வளவு வடிவா கோலம் போட்டு புதுப்பானையில பொங்கியிருக்கினம்.”

என்றவாறு அவளின் சட்டையைப் பிடித்து இழுக்கத் தொடங்கினாள்.
பொங்கலுக்கு ஒருபிடி அரிசி கிடைத்ததே பெரிய புண்ணியமாய் இருக்கையில் புதுப்பானைக்கும் பொங்கற் பொருட்களுக்கும் அவள் எங்கே போவாள்? கடைகளில் சீனியை கண்ணிலயும் காட்டுகிறார்கள் இல்லை… சர்க்கரை கொஞ்சம் வாங்குவோமென்றால் மூடைக்கணக்கில் சீனியைப் பதுக்கிய முதலாளிமார் சர்க்கரையைக் கூட ஆனவிலை, குதிரை விலை சொல்லும் போது பவளம் போன்ற அன்றாடங்காய்ச்சிகளின் வீட்டில் பொங்கல் என்பது வெறும் நினைவும் கனவும் தானே!

இதையெல்லாம் அறியாக்குழந்தை நிலானிக்கு எப்படிப்புரியவைப்பது? தவமிருந்து பெற்ற மகளின் குறைந்தபட்ச ஆசைகளைக்கூட தன்னால் நிறைவேற்ற முடியாமற்போன தரித்திரத்தை எண்ணிக் கலங்கிய பவளம்

‘இப்ப கொரோனா தானே செல்லம்.. வெளிய வச்சு சமைக்கக் கூடாது.. வாங்கோ நாங்கள் உள்ள இருந்தே பொங்கல் சாப்பிடுவம்.”

என மகளைத் தேற்றியவள் காலியாகிவிட்ட சீனிப்பேணியில் நீர்விட்டுக் கழுவி அதைப் பொங்கல் பானையுள் ஊற்றிக் கிளறிவிட்டு பக்குவமாய் இறக்கி, தலைவாழை இலையை நிலவனின் படத்தின் முன்னால் வைத்து வெந்துபோன அந்த வெற்றுச் சோற்றுக் கரைசலை படையலிட்டு மகளையும் இருத்தி உண்ணத்தொடங்கிய போது துக்கம் தாளாது கண்கள் உடைப்பெடுத்து கன்னங்களில் நீராய் பாய்ந்தோடியது. எதிரே இருந்து தன் பிஞ்சுவிரல்களால் சோற்றை அழைந்த குழந்தை இவளின் கண்ணீரைப் பார்த்து என்ன நினைத்ததோ

‘அம்மா .. விதுவின்ர அம்மாக்கு வடிவா பொங்கத் தெரியாது போல.. அவேன்ர பொங்கல் சரியான கறுப்பா இருந்திச்சு, என்ர அம்மா எவ்வளவு அச்சா.. நல்ல வடிவா வெள்ளையா பொங்கியிருக்கிறா…”
என கலகலத்து சிரித்தபடி சாப்பிடத் தொடங்கினாள். உணர்ச்சிப் பெருக்கில் மகளைக் கட்டியணைத்த பவளம்

‘அடுத்த வருசப் பொங்கலுக்கு பிள்ளைக்கு புதுச்சட்டையும் வாங்கி புதுப்பானையில நல்ல இனிப்பா சக்கரைப் பொங்கல் பொங்குவம்..”

என குழந்தைக்கு சொல்வது போல் தன் மனதையும் திடப்படுத்தியவளாய் ஆசுவாசமுற்ற போது
‘எதிர்வரும் காலங்களில் அரிசியின் விலை ரூபா 500 ஐ எட்டலாம்..”

என பக்கத்து வீட்டு தொலைக்காட்சியில் இருந்து வந்த செய்திக்குரல் பவளத்தின் செவிகளைத் துளைத்தது..

Related posts

இந்திய அரசியலும் நேரு பரம்பரையும் ஒரு விமர்சன ரீதியான ஆய்வு

Thumi202122

உடல் உள போஷாக்கில் தாய்ப்பால்

Thumi202122

சுவாமி விவேகானந்தரின் இலங்கை விஜயத்தின் 125ஆவது ஆண்டு விழா

Thumi202122

Leave a Comment