நசிம் ஹிக்மற் என்பவர் தன் நண்பன் அபிடின் டினோ என்பவரிடம் மகிழ்ச்சியின் ஓவியத்தை வரையுமாறு கேட்டார். அதற்கு அவர் வரைந்து கொடுத்த ஓவியத்தையே இங்கு காண்கிறீர்கள். ஒழுகும் ஓட்டையுள்ள கூரையுள்ள வீட்டில் முறிந்த கட்டிலில் படுத்திருப்பவர்களைக் கொண்ட இது எப்படி மகிழ்ச்சியின் ஓவியம் ஆகும்?
ஓட்டைக்கூரை தான். உடைந்த கட்டில் தான். மொத்த குடும்பத்திற்கு மட்டுமல்ல அவர்களின் பூனைக்கும் படுக்கை அந்த ஒரே கட்டில்தான். அப்படியானால் அவ்வளவு தான் வீடு. அவ்வளவு தான் வசதி. ஆனால் கவலைப்படுகிறார்களா அவர்கள்? அவர்கள் முகம் புன்னகையால் நிரம்பி இருக்கிறது. எப்படி?
துன்பம் அற்ற வாழ்க்கையா மகிழ்ச்சியான வாழ்க்கை? துன்பம் அற்ற வாழ்க்கை யாருக்கு அமையும்? யாருக்கும் அமையாது. இன்ப துன்பங்கள் மாறி மாறி வருவதே வாழ்க்கை. துன்பம் வரும்போது துவண்டு போகாமல் அந்த துன்பத்தை எற்றுக்கொள்வதே உண்மையான மகிழ்ச்சி. இங்கே இவர்கள் அனைவருமே இவர்களின் துன்பத்தை பூரணமாக ஏற்று அந்த துன்பத்திலும் உள்ள இன்பத்தை அனுபவிக்கிறார்கள். அவர்கள் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட செயற்பாடுகளை எண்ணி அவர்கள் வருந்தத் தயாரில்லை. அது தேவையும் இல்லை. இதுவே இந்த புன்னகையின் இரகசியம்.