இதழ் 42

இதயத்தின் மொழிகள் புரிந்து விடில்..!

காதலும் காதலர் சண்டைகளும் ஒட்டிப்பிறந்த இரட்டை குழந்தைகள் போல. பொதுவாகவே பெண்கள் பிடிவாதமானவர்கள். பொதுவில் சாதாரணமாக பாவித்துக்கொண்டாலும் ‘தனக்கானவன்’ எவனோ, அவனிடம் தங்களது மொத்த வில்லத்தனத்தையும் காட்டுவது அவர்களது இயல்பு. அடம்பிடிக்கும் போது குழந்தையாகி தன்னவனை பாடாய்படுத்துவார்கள்.

“வாலாட்டும் நேரத்தில் என் பிள்ளையாகின்றாய்
நானாக தொட்டாலோ முள்ளாகிப் போகின்றாய்”

சண்டை என்று வந்து விட்டால், ஆண்களில் பலர் உடனடியான கோபத்தில் வாய்க்கு வந்தபடி பேசிவிட்டு பின்னர் மனம் வருந்துவார்கள். பெண்களோ அஹிம்சை போராட்டம் தான். அப்படியே மௌனமாகி விடுவார்கள்.

“இதயமே இதயமே உன் மௌனம் என்னை கொல்லுதே இதயமே”

ஏட்டிக்கு போட்டியாக சண்டை என்றால் எதிர்த்து நிற்கலாம். ஆனால் அது காதலின் குணமில்லையே! அவள் மௌன விரதத்தை ஆரம்பித்து விட்டால், இங்கே இவன் மனதின் ஊசலாட்டம் தொடங்கும்.

“இடி தாங்கும் இதயம் கூட மௌனம் தாங்காது”

மௌனம். மனிதர்களுக்கு மிகவும் கடினமான செயல் என்றால் அது மௌனமாக இருப்பது தான். அதனால் தான் மௌனமே ஒரு விரதம் என்கிறார்கள். சாதாரணமாக ஒருவர் மௌனமாக இருந்தால் அவரது ஆள்மனதில் சிந்தனை அலைகள் கொந்தளிப்பு பாய்ச்சலில் இருக்கும். ஆர்ப்பரிப்பெல்லாம் அடங்கி மனதும் மௌனமான நிலையை அடைவதை தான் ஆன்மிகம் கடவுளை காணும் வழி என்றும் – தியானம் என்றும் தவம் என்றும் போற்றுகிறது.

அனேகமாக காதலில் சண்டைகளை தொடங்குபவர்கள் பெண்கள் தான்! அதை பிடித்து தொடர்பவர்களும் அவர்கள் தான். ஆனால் சாதாரணமாக சண்டைகளை குழப்ப நிலைக்கு மாற்றுவது ஆண்களின் கோபமும் பொறுமையின்மையும் கூடவே காதலும்!

இவன் தவறி வீசிய சொல்லில் அவள் காயம் பட்டிருக்கிறாள். இவன் மன்னிப்பு கேட்கும் படலம் ஆரம்பித்திருக்கிறது!

//கண்ணால் பேசும் பெண்ணே எனை மன்னிப்பாயா
கவிதைத் தமிழில் கேட்டேன் எனை மன்னிப்பாயா//

பெண்களுக்கு வாய் மட்டும் அல்ல கண்ணும் பேசும். காதல் மொழி பேசும் கண்களே கோபத்தின் போது ஈட்டிகள் வீசும் ; சோகமானால் கண்ணீர்க்குடங்களையும் உடைக்கும்.

//எங்கே குறுநகை எங்கே குறும்புகள் எங்கே கூறடி
கண்ணில் கடல் கொண்ட கண்ணில் புயல் சின்னம் ஏதோ தெரியுதடி//

கண்ணில் பாவம் காட்டுதல் மனிதருக்கே பொதுவான இயல்பென்றாலும் பெண்களுக்கு அது தனித்துவமான கலை!

//சலவை செய்த நிலவே எனை மன்னிப்பாயா//

நிலவே பால் வண்ணம்! அதனை சலவை செய்தவதென்றால்?

“அடி வெள்ளாவி வச்சுத்தான் வெளுத்தாய்ங்களா
உன்ன வெயிலுக்கு காட்டாம வளர்த்தாய்ங்களா”

வெள்ளை. பொதுவாகவே ஆண்களுக்கு வெள்ளைத்தோலின் மேல் ஈர்ப்பு அதிகம். வெள்ளை – கறுப்பு இடையில் பொதுநிறம் என அத்தனையும் தோலின் நிறத்திற்கான பரம்பரை அலகுகளின் சேர்க்கையின் விளைவு. வெள்ளைத்தோல் என்றால் ‘மெலனின்’ நிறப்பொருள் குறைவாக சுரக்கப்படுகிறது என்று பொருள்.

வெள்ளை பெட்டை என்றால் வடிவான பெட்டை என்பது பொதுவாக ஆண்களின் அகராதியில் பொருள் விளக்கம். இன்றைய ஆண்களில் சிலருக்கு மட்டும் பெண்களின் டஸ்கி ஸ்கின் ஷெக்சி!

//சிறு தவறைத் தவறி செய்தேன் எனை மன்னிப்பாயா//

கை எடுத்து கும்பிட்டாலும் ஏன் காலிலேயே விழுந்தாலும் அவளுக்கு மன்னிக்க தோன்றினால் மட்டுமே மன்னிப்பு! அதுவரை இவனது கெஞ்சல்கள் தொடர வேண்டியது தான்!

//எனது கோரிக்கை நீ கேளடி கேளடி
உனது கோபங்களும் ஏனடி
உனது சில்லென்ற கண் பாரடி பாரடி
எனது சாபங்களைத் தீரடி//


//நிலா பேசுவதில்லை அது ஒரு குறை இல்லையே
குறை அழகென்று கொண்டால் வாழ்க்கையிலெங்கும் பிழையில்லையே//

பொதுவாகவே எந்த பெண் என்றாலும் அவளை முற்றாக புரிந்து கொள்வது ஆண்களுக்கு கடினமானது தான். இருபத்தெட்டு நாட்களுக்கொருமுறை நிலவு தேய்ந்து வளர்வது போலவே பெண்ணும் ஓமோன்களின் ஆதிக்கத்தில் அலைகிறாள். இந்த உணர்வுகளின் ஊசலாட்ட நிலை காதலிலும் பிரதிபலிக்கும்.

//பெண்ணே அறிந்து கொண்டேன் இயல்பே அழகு என்பேன்
பூவை வரைந்து அதிலே மீசை வரைய மாட்டேன்//

பொதுவாகவே தான் காதல் செய்யும் பெண்ணிடம் ஆண்களுக்கு நிறைய எதிர்பார்ப்பு இருக்கும். என்ன உடை போட வேண்டும் என்பதிலிருந்து கட்டிலில் எப்படி வேண்டும் என்பது வரை ஒரு லிஸ்டே வைத்திருப்பார்கள். அந்த எதிர்பார்ப்புகளுடன் புரிந்துணர்வு சேரும் போது காதல் நெருக்கமாகவும் எதிர்பார்ப்புகள் கட்டாயமாக்கப்படும் போது காதல் தூரமாகவுமாகிறது.

காதலில் மிக அழகான விஷயமே புரிந்து கொள்ளலும் இயல்பை ரசித்தலும் தான்.

//மெளனம் பேசும் போது சப்தம் கேட்க மாட்டேன்
மூன்றாம்பிறையின் முன்னே நிலவைத் தேட மாட்டேன்//

மௌனம் பேசும் மொழிக்கு அதிக வலு இருக்கிறது. காதல் தொடங்கும் காலத்தில் பேசாமல் ஒருவரை ஒருவர் பார்த்தபடியே நேரத்தை நகர்த்தி காதல் வளர்த்தவர்கள்,

“மௌனமே பார்வையாய் பேசிக்கொண்டோம்
நாணமே வண்ணமாய் பூசிக்கொண்டோம்”

சண்டைகளென்று வரும் போது ‘மௌனம்’ பாரமாகிறது.மனம் கவர்ந்தவள் பேச்சை கேட்பதில் தானே காதலின் சுகமே! அவள் மௌனமானால்,

//வாழ்வோ துவர்க்குதடி வயசோ கசக்குதடி
சைகையிலே எனை மன்னித்து சாபம் தீரடி//

Oh I’m sorry I’m sorry I’m sorry Oho I’m sorry I’m sorry I’m sorry.

“காதல் மொழி விழியா? இதழா?”

என்று கொஞ்சியவளிடம் கெஞ்சுதல் எப்பொழுதும் தவறில்லை!

//செல்லக் கொஞ்சல் வேண்டாம் சின்னச் சிணுங்கல் போதும்
பார்த்துப் பழக வேண்டாம் பாதிச் சிரிப்பு போதும்
காரப் பார்வை வேண்டாம் ஓரப் பார்வை போதும்
வாசல் திறக்க வேண்டாம் ஜன்னல் மட்டும் போதும்
வாழ்க்கை கடக்குதடி நாட்கள் நரைக்குதடி
இரு கண்ணால் என் வாழ்வை நீ ஈரம் செய்யடி//

மீண்டும் அதே மௌனம். அவளுக்குள்,

“மௌனமான நேரம்
இள மனதில் என்ன பாரம்
மனதில் ஓசைகள்
இதழில் மௌனங்கள்
ஏன் என்று கேளுங்கள்”

காதலில் பீடிக்கப்பட்ட ஆண்களுக்கு காதலி மௌனமானதும் அவள் மீண்டும் பேச வேண்டும் என்பதே ஒரே தேவையாக இருக்கும்! ஆனால் அவளுக்கோ தன் மௌனம் ஏன் என்பதை அவன் அறிய வேண்டும் என்பதே தேவை!

“பேசும் வார்த்தை போல மௌனம் புரியாது”

ஆண்களுக்கு பொதுவாகவே உணர்வுகளின் புரிதல் குறைவு. பெண்கள் போல ஆண்கள் அவ்வளவு உணர்ச்சி வயப்பட்டவர்களும் அல்ல. ஆதலால் காதலில் சண்டைகளும் கண்ணீரும் சமாதானப்படுத்தல்களும் மன்னிப்பும் தொடரும் பயணத்தின் காதலை இறுக பற்றுதலுக்கான சங்கிலிகள்.

“காதல் பேசும் போது மொழிகள் கிடையாது
கண்கள் பேசும் வார்த்தை கடவுள் அறியாது”

Related posts

சித்திராங்கதா – 41

Thumi202122

ஒளித்து வைத்த இரகசியம்…!!!

Thumi202122

உடல் உள போஷாக்கில் தாய்ப்பால்

Thumi202122

Leave a Comment