1.அறிமுகம்
நேரு குடும்பம் நூறு ஆண்டுகளுக்கு மேலாக இந்திய அரசியலில் இருந்து வருகின்றது. நேரு குடும்பத்தில் ஜவஹர்லால் நேரு, இந்திராகாந்தி, ராஜீவ்காந்தி ஆகியோர் பிதமர்களாக பணியாற்றினர். மற்றைய உறுப்பினர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாக பணியாற்றினர். மோதிலால் நேரு, ஜவஹர்லால் நேரு, இந்திராகாந்தி, பெரோஸ்காந்தி, சஞ்சய் காந்தி, ராஜீவ்காந்தி, சோனியாகாந்தி, ராகுல்காந்தி, மேனகாகாந்தி, வருண்காந்தி, பிரியங்காகாந்தி இவ்வாறாக இந்திய அரசியலில் நேரு பரம்பரையின் செல்வாக்கை ஆராய்வதாக இவ்ஆய்வு அமைந்துள்ளது. இந்திய அரசியலில் நேரு பரம்பரை எத்தகைய செல்வாக்குச் செலுத்துகிறது என்பதனை இனங்கண்டு வெளிக்கொணர்தல், நேரு பரம்பரையின் அரசியல் பின்புலத்தை வெளிக்கொணர்தல், நேரு பரம்பரை அரசியல் மேதாவிலாசத்தால் இந்திய காங்கிரஸின் நிலைப்பாட்டை மதிப்பீடு செய்தல், பாராளுமன்ற சட்ட ஆக்கச் செயற்பாடுகளில் நேரு குடும்பத்தின் பங்களிப்பு தொடர்பான விடயங்களை வெளிக்கொணர்தல், நேரு குடும்ப அரசியலின் கீழ் இந்திய மக்கள் பெற்றுக் கொண்ட அரசியல்-சமூக-பொருளாதாரரீதியான அடைவுகளை இனங்காணல் போன்றன இவ்ஆய்வின் நோக்கங்களாகும்.

மிகப்பெரிய நிலப்பரப்பையும் அதிக மக்கள் தொகையையும் கொண்ட இந்தியா தென்னாசியப் பிராந்தியத்தில் வலிமை மிக்க தேசமாகவும் தீர்மானம் எடுக்கும் சக்தியாகவும் அமைந்துள்ளது. இந்தியாவில் மதரீதியான பிணக்குகளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதில் இந்திராகாந்தியின் பங்களிப்புக்கள் எவை, இந்தியாவின் தேசிய ஒருமைப்பாட்டில் நேரு குடும்பத்தின் பங்களிப்புக்கள் எவை? ஏன் நேரு பரம்பரையின் செல்வாக்கு இந்திய அரசியலில் தவிர்க்க முடியாத ஒன்றாகக் காணப்படுகின்றது? நேரு பரம்பரையின் சிறப்புக்கள் எவை போன்ற வினாக்களுக்கு விடை காணும் வகையில் இவ்ஆய்வு அமைந்துள்ளது.
2.இலக்கிய மீளாய்வு
கிருஸ்ணா அனந்த். வி, (2012), “இந்திய அரசியல் வரலாறு” எனும் இந்நூலானது சுதந்திரத்தின் பின்னர் இந்தியாவில் தோன்றிய தேசிய சிந்தனையின் எழுச்சி, காங்கிரஸ் கட்சியின் நிலை என்பன பற்றியும் நேருவின் மறைவிற்குப் பின்னர் இந்திராகாந்தி, ராஜீவ்காந்தி போன்றோரின் அரசியல் பிரவேசமும் காங்கிரஸ் கட்சியில் அவர்களது வகிபங்கும் அரசியல் பொருளாதார கொள்கைகள் தொடர்பாகவும் விமர்சனரீதியாக எடுத்துக் காட்டப்பட்டுள்ளது. ஆகவே இந்நூல் இவ்ஆய்வுடன் தொடர்புடையதாகக் காணப்படுகின்றது.

தமிழ்வாணன். எம். ஏ., (1985), “காங்கிரஸின் தோற்றமும் வளர்ச்சியும்” இந்நூலில் இந்தியாவில் காங்கிரஸ் கட்சியின் தோற்றம், வளர்ச்சி காங்கிரஸ் கட்சியில் நேரு, இந்திராகாந்தி, ராஜீவ்காந்தி ஆகியோரின் அரசியல் பயணம் தொடர்பான விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நூலில் கட்சி சார்புடைய கருத்துக்களே அதிகம் தொனிப்பதை அடையாளம் காண முடிகின்றது.
Abbas.K.A., (1966), ”Indira Gandhi” இந்நூலில் இந்திராகாந்தியின் ஆளுமை மற்றும் மகத்துவம் பற்றி மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இந்திராகாந்தியின் அரசியல் அணுகலிற்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுத்து அரசியல் வரலாற்றை விபரித்துச் செல்கிறது. ஆகவே இந்நூல் இவ் ஆய்விற்கு வழிகாட்டியாக அமைந்துள்ளது.
Jayakar. P., (1995), “Indira Gandhi A Biography” இந் நூலில் இந்திராகாந்தியின் வாழ்க்கை வரலாறு பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவின் அரசியல் வரலாற்றில் இந்திராகாந்தியின் வகிபங்கு தொடர்பாக விமர்சன ரீதியாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகவே இந் நூல் இவ் ஆய்விற்கு பெரிதும் உதவியாக அமைந்துள்ளது.

Pawan sikka, (2008), “Rajiv Gandhi u;is Vision of the 21 st centry – science, technology and national development” இந் நூல் ராஜீவ்காந்தியின் எழுத்துக்கள் மற்றும் உரைகள் பற்றிய ஆழமான ஆய்வாக உள்ளது. ராஜீவ்காந்தியின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் குறித்து முக்கிய அவதானிப்புக்கள் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந் நூல் சிறியளவில் மட்டுமே பயன்பட்டுள்ளது.
Nugent. N., (1990), “Rajiv Gandhi son of a dynasty” இந்தியாவின் சர்வதேச நிலைப்பாட்டில் ராஜீவ்காந்தி அளித்த பங்களிப்பு குறித்து இந்நூல் பகுப்பாய்வு செய்கிறது. ராஜீவ்காந்தியின் முந்தைய அனுபவங்கள் மற்றும் வெற்றி தோல்விகள் என்பன குறிப்படப்பட்டுள்ளது. ஆகவே இந் நூல் இவ்ஆய்விற்கு வழிகாட்டியாக அமைந்துள்ளது.
தேடுவோம்…