இதழ் 42

ஒளித்து வைத்த இரகசியம்…!!!

“கனவுகள் பூக்கும்
ஆண்டுகள் தொடங்கும்
ஜனவரி மாதத்தில்
காதலை
சொல்ல தேதிகள் உண்டு
பிப்ரவரி மாதத்தில்”

ஆமாம்! தயாராகுங்கள்! காதலர் மாதத்திற்குள் பிரவேசித்துவிட்டோம் அல்லவா? இனி காதலை கொண்டாடுபவர்கள் கொண்டாடித் தீர்க்க ஆரம்பிப்பார்கள். அந்தக் காதல் அலப்பறைகளை நாம் சகித்துக் கொள்ளவும் ஆரம்பிக்க வேண்டும்.

காதல்….. காதல்….. காதல்….
எவ்வளவு இனிமை! இந்த வரியில் இன்னொரு தடவை இந்தவார்த்தை எழாதா என நீங்கள் சிலர் எண்ணுவது எனக்குப் புரிகிறது. போதும் நிறுத்து… வேறு ஏதாவது எழுது என்று ஒரு சிலர் கூறுவதும் எனக்குக் கேட்கிறது.

என்ன செய்வது? ஒரே நெருப்புத்தான் செங்கல்லை இறுக்கி உறுதியாக்குகிறது. மெழுகுவர்த்தியை உருக்கி உருக்குலைக்கிறது. நாம் என்னவாகிப்போனோம் என்பது நமக்கு மட்டுந்தானே தெரியும்.

சரி. சிரித்தால் சிநேகம் பிறக்கிறது. நம்பிக்கையில் நட்பு தொடங்குகிறது. இந்தக்காதல் எப்போது பிறக்கிறது? யாருக்காவது இதற்கு பதில் தெரியுமா?

காதல் என்பது ஒரே ஒரு படிநிலை மாத்திரம் கொண்டதல்ல. பல படிகளை கொண்ட ஏணி அது. சிலருக்கு அந்த ஏணியின் முதற்படியாக நம்பிக்கை இருக்கிறது. சிலருக்கு நட்பு இருக்கிறது. வேறு சிலருக்கு கவர்ச்சி இருக்கிறது. ஒரு சிலருக்கு என்னவென்றே சொல்லத்தெரியாத ஏதோ ஒன்று இருக்குறது. இப்படி ஒவ்வொருவரும் காதல் ஏணியின் முதற்படியினை அவரவர் இரசனைக்கேற்ப ஒவ்வொரு விடயத்தால் ஆக்கிக் கொள்கிறார்கள். இதில் மிகவும் இரசனையற்ற விடயம் என்னவெனில் இக்காதல் ஏணியில் ஒரு சிலர் ஒருசில படிகளை ஏறிவிட்டே காதலில் வென்றுவிட்டதாக அல்லது தோற்றுப்போய் விட்டதாக எண்ணிக்கொண்டிருக்கிறார்கள். காதலை வென்றதாய் நினைப்பவர்கள் திருமணம் என்கிற பெயரிலும் தோற்றதாய் நினைப்பவர்கள் வேறு வேறு பெயர்களிலும் அனர்த்தங்களை உருவாக்கிக் கொள்கின்றனர். இதற்கெல்லாம் மீட்சி இருக்கிறதா?

காதலை கனவுலகிலிருந்து யதார்த்த உலகிற்கு மீட்டெடுத்து அழைத்து வருவதுதான் இந்த பிரச்சனைகளின் முதல் தீர்வாய் அமையக்கூடியதாகும்.

மனித மனத்தின் இயல்பான ஒரு குணம் நிரந்தரத்தை எதிர்பார்ப்பது. அன்பு, பாசம், காதல், கல்வி, வருமானம், தொழில், சந்தோசம், நிம்மதி என இப்படி எல்லாவற்றிலும் ஒரு நிரந்தரத்தை மனிதன் தேடிக்கொண்டே இருக்கிறேன். இதுவரை நிரந்தரமான எதையாவது அவன் அடைந்திருக்கின்றானா? இந்தக்காதலும் இப்படியே எப்போதும் நிரந்தரமாய் இருந்துவிடும் என்று நம்புவதால்த்தானே எல்லா நாடகங்களையும் அரங்கேற்றிக் கொண்டிருக்கிறான். உண்மையில் இது நிரந்தரந்தானா? நிரந்தரமான அன்பு கொண்ட யாரையாவது பார்த்திருக்கிறீர்களா? நிரந்தரமான அன்பு என்பது எப்படியிருக்கும் என்று உணர்ந்திருக்கிறீர்களா?

ஒரு கிரேக்க கவிஞன் தன் மேசை மீதிருந்த பூச்சாடியில் ஓர் அழகிய ஓவியத்தைக் காண்கிறான். அது காதலியை காதலன் முத்தமிடுவதற்காக நெருங்கிச் செல்கிற ஓவியம். அந்தக் கிரேக்க கவிஞன் பேனா எடுத்து எழுதினான்.

“துணிச்சலான காதலனே!
உன் லட்சியத்தை
நீ நெருங்கியிருந்தாலும்
ம்ஹூம்……
உன்னால் முத்தமிடவே முடியாது”

ஏன்?
ஓவியமல்லவா? எப்படி முத்தமிடமுடியும்? அப்படியே தானே நின்றாக வேண்டும்.

ஆனாலும் தொடர்ந்து எழுதுகிறார்.

“இருந்தாலும் வருத்தப்படாதே,
அவள் மங்கமாட்டாள்;
உன் பேரின்பத்தை
நீ அடையாவிட்டாலும்,
நீ காதலித்துக் கொண்டே இருப்பாய்
அவள் அழகாகவே இருப்பாள்
நிரந்தரமாக”

நிதர்சனமான காதல்களின் நிரந்தரமற்ற தன்மையை இதை விட அழகாக எப்படிச்சொல்ல முடியும்! சொல்லுங்கள்.

இதேகேள்விக்கு அறிஞர் ஓஷோ அவர்கள் கூறுகின்ற பதிலினையும் இவ்விடத்தில் பதிவு செய்தல் இரசனை மிக்கது என்று கருதுகிறேன்.

“அன்பு என்பது ஒரு ரோஜாவைப் போன்றது
ரோஜா மலர்வதைப் போல
அன்பும் முழுமையாக மலர்கிறது
இதில் நீ நிரந்தரத்தை தேடாதே
ஒருவேளை நீ நிரந்தரத்தைத் தேடினால்
நீ காகிதப் பூக்களை தான் காதலிக்க வேண்டி வரும்”

எத்தனை சத்தியமான வரிகள் என்று விளங்குகின்றனவா?
ஒரு ரோஜாவை பார்ப்பவர்கள் எல்லோருக்கும் தான் பிடிக்கும். எல்லோரும் சிலகணம் நின்று இரசிப்பார்கள். காதல் கூட கொள்வார்கள். கவிதை புனைவார்கள். பாடல் இசைப்பார்கள். இன்னும் என்னென்னவோ எல்லாம் செய்வார்கள்.

ஆனால் அதே ரோஜா மறுநாள் வாடிவிட்டால்? அதன் பெயரை ரோஜா என்றாவது யாரும் சொல்வார்களா? மனிதர்களை விடுங்கள். நன்றி மறப்பது அவர்களிற்கு இலகு. ஆனால் செடியின் முட்களுக்கிடையிலும் வாரி அணைத்து நாள் முழுவதும் நின்ற நறுமணத்தை கவர்ந்து சென்ற தென்றல் கூட இனி இதில் இனிமையில்லை என்று விலகிவிடுகிறதே. ஒளி மலர்ந்ததா? மலர் மலர்ந்ததா? என்று மயங்குமளவிற்கு ரோஜாவின் அழகிய உடலில் தன் அழகைச் சேர்த்த கதிரவனும் இனி ஒளியை வீண்செய்ய விரும்பாது விலகிச் செல்கிறானே.

வாசம் வரண்டுவிட்டது. நிறம் மங்கிவிட்டது. ரோஜாவிடம் நிரந்தரத்தை எதிரபார்த்த தென்றலும் கதிரவனும் தம் காதலை முறித்துக் கொண்டு சென்றுவிட்டனர். ஆனாலும் உண்மைக்காதல் கொண்ட ஒரு வண்ணத்துப்பூச்சி மட்டும் வாடிய மலரிலும் வாசத்தைக் கண்டு வந்தமர்ந்து கலவி கொள்கிறது. தேன் பருகுகிறது. பேரின்பம் கொள்கிறது. உண்மையானவை எல்லாமே மாறக்கூடியது என்பதை உணர்ந்து கொண்ட வண்ணத்துப்பூச்சியின் உண்மைக் காதல் அது. அந்த அழகை நீங்கள் பார்க்க வேண்டுமானால் மீண்டும் ஒருமுறை அட்டையி்ல் சென்று பாருங்கள்! அடடா..! இதயத்தை குடைந்து அம்பு விடுவதை விட இதுவன்றோ உண்மைக்காதலின் சின்னமாக இருக்கவேண்டும்.

உண்மையானவை யாவும் நிரந்தரமற்றவை என்பதே இறைவன் இந்த உலகத்திற்குள் ஒளித்து வைத்த இரகசியமாகும். நிரந்தரமற்ற நிதர்சனத்தை புரிந்து கொள்ளுங்கள். நிரந்தரமாக இருப்பவை மீது சந்தேகம் கொள்ளுங்கள். நிரந்தரமான முகம் என்பது முகமூடியோ என்று சந்தேகியுங்கள். நிரந்தரமான அன்பு என்பது காகிதப்பூ போன்றது என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.

‘காதல் இல்லையேல் சாதல்’ என்பதும் ‘ஒருவரை நினைத்த மனதில் இன்னொருவரிற்கு இடமில்லை’ என்பதும் மனித இருப்பையே சரி வர விளங்கிக்கொள்ளாத மயக்கமான சிந்தனைகளல்லவா?
இளமைக்காதல்கள இந்த உண்மையை ஏற்கமறுத்து வாதாடுகின்றன. ‘எங்கள் காதல் அப்படிப்பட்டதல்ல’ என்கிற கௌரவ விம்பத்திற்குள் தங்களை கண்டு இரசித்தவர்கள் அந்த விம்பம் உடைந்து போகிற தருணத்தில் தம் காதலையே முறித்துக் கொள்கிற துர்பாக்கிய நிலமைக்கு தள்ளப்படுகிறார்கள். அந்த நிதர்சனத்தை உணர்ந்த முதுமைக் காதலர்களோ இறுதிவரை கைகோர்த்து செல்கிறார்கள்.

ஆதலால் இப்போது கூறுங்கள்! காதல் ஏணியின் கடைசிப்படி என்பது இந்த உண்மையை ஏற்றுக் கொள்ளும் நிலையாக தானே இருக்க முடியும். காதலின் வெற்றி தோல்வி என்பதை அப்போது தானே தீர்மானிக்க முடியும்.

காதலிப்பவர்கள் யாரும் இதை புரிந்து கொள்வார்களா?
காதலிப்பவர்கள் புரிந்து கொள்ள ஆரம்பித்துவிட்டால் காதலுக்கும் வயசாகி காதல் என்றைக்கோ அழிந்திருக்குமல்லவா?
காதலுக்கு எப்போதும் வயசாகாது!

நன்றி!
காதலர் தினம் களைகட்டட்டும்.

Related posts

அவுஸ்திரேலியன் ஓபன் – 2022

Thumi202122

உடல் உள போஷாக்கில் தாய்ப்பால்

Thumi202122

ஐயப்பன் விரதமும் இளைஞர்களின் வகிபங்கும் – 03

Thumi202122

Leave a Comment