இதழ் 42

சித்திராங்கதா – 41

யாரும் அறியா வண்ணம்

இது உண்மைதானா?
என்பது போல் வார்த்தைகளற்று மாருதவல்லியை நோக்கினான் வருணகுலத்தான்.

‘உண்மைதான் தளபதியாரே, இது சித்திராங்கதா எழுதி அனுப்பிய ஓலையேதான். அந்தப்புர சேவகி ஒருத்தி காலையில் இரகசியமாய் என்னிடம் சேர்ப்பித்தாள். நானும் உடனே நம்பவில்லை. ஏற்கனவே உக்கிரசேனனிடமிருந்து வந்த ஓலை ஒன்றாலன்றோ நான் அன்று பெருந்தவறு புரிய நேர்ந்தது. ஆதலால் இவ்வோலை குறித்து தெளிவாகவே விசாரித்தேன். அந்த சேவகியும் அதற்கு மேல் பொய் சொல்லியிருக்க வாய்ப்பில்லை. இது பொய்யென்று தெரிந்தால் அவள் அந்தப்புரத்திலிருந்தே துரப்படுவாள் என்பதை அவள் நன்குணர்வாள். என் தெளிவின் படி இது சித்திராங்கதாவின் கைபட்ட ஓலைதான் என்பதில் ஐயமில்லை. எப்படியும் தாம் நேரே சென்று பார்த்தால் உண்மை தெரிந்துவிடுமல்லவா? வேறு ஏதாவது ஆபத்து விளைவிக்கக்கூடிய ஓலையாக இருந்தாலும் தம்மை எதிர்த்து நின்றால் ஆபத்து அவர்களையல்லவா சூழ்ந்து கொள்ளும். பிறகு தயக்கம் எதற்கு? அந்த ஓலையில் உள்ளபடி சட்டநாதர் ஆலயத்திற்கு சென்றுதான் பார்க்கலாமே’

‘தேவி . தாங்கள் சொல்வது போல் இது உண்மையாகவே சித்திராங்கதாவின் கைபட்ட ஓலையாக இருந்தால் நான் அடைகின்ற சந்தோசத்தை என்னால் எடுத்தியம்புதல் கூட இப்போது இயலாது. இருந்தும் சந்தேகத்தீ என்னுள் படர்ந்து இந்த சந்தோசச் செய்தியை முழுமையாய் அனுபவிக்க இடந்தராது அல்லல்படுத்துகிறது. சரி எதுவாகினும் நான் இப்போதே புறப்படுகிறேன்’ என்று அவசரமாய்த் தயாரானவனை நிறுத்தினாள் மாருதவல்லி.

‘சற்று பொறுங்கள் தளபதி. ஆர்வமிகுதியில் நிதானம் தவறி விடாதீர்கள். பெருவணிகர் எச்சதத்தர் இப்போதும் கோட்டைக்குள் தான் இருக்கிறார். அதனால்த்தான் போலும் மிக இரகசியமாக தம்மை வரும்படி சித்திராங்கதா கூறியிருக்கிறாள். தாங்கள் செல்லுகிற வேகமும், தங்கள் கண்களில் மின்னுகின்ற ஆர்வமும் இவ்வேளை காண்பவர் அனைவரையும் சந்தேகங் கொள்ளச் செய்யும். வாசலில் அமர்ந்திருக்கும் என் தந்தையார் தங்களை இரகசியமாய் பின்தொடர தூதுவனை கூட அனுப்பி வைக்கக் கூடும். ஆதலால் தற்சமயம் தாங்கள் கொஞ்சம் பொறுமை காத்து கருமமாற்ற வேண்டும் தளபதி..’

‘என்னால் அது இயலவில்லையே தேவி?… இந்த ஓலை உண்மையாக இருக்கும் பட்சத்தில் நானிங்கே வீணாய்க் காலங்கழித்து சித்திராங்கதாவை காக்கவைப்பது எப்படி முறையாகும்?… ஓலையில் குறிப்பிட்ட படி இருள் கவிழும் பொழுது நெருங்கிவருகிறது.. நான் உடனே சென்றாகத்தான் வேண்டும்’

‘சரி செல்லுங்கள்.. ஆனால் மனை வாசலை விடுத்து வேறு வழியாகச் செல்லுங்கள்’

‘அது எப்படி இயலும் தேவி? … எப்படியோ மனையை கடந்துவிட்டாலும் கூட சட்டநாதர் ஆலயம் செல்ல கோட்டையின் வடக்கு வாசல் வழியாகத்தானே சென்றாக வேண்டும்? யாரும் அறியா வண்ணம் செல்வது இக்கணத்தில் எப்படியும் சாத்தியமில்லையே தேவி… ஆனால் நான் காலந்தாமதியாது இப்போதே புறப்படுவது அவசியமாகும். வருவதைப் பின்னர் பார்த்துக் கொள்ளலாம்’

‘கொஞ்சம் பொறுங்கள் தளபதி…’ என்று கூறியபடியே ஏதோ தீர்க்கமாக யோசித்த மாருதவல்லி
‘என்னுடன் வாருங்கள். கூறுகிறேன்’ என்று எங்கோ அவசரமாக விரைந்து சென்றாள். வருணகுலத்தானும் அவளைப் பின்தொடர்ந்து சென்றான்.

அவர்கள் இருவரும் மந்திரிமனையின் வலதுபுறமாக இருந்த ஓர் அறைக்கு வந்து சேர்ந்தனர். வெளியிலிருந்து ஒளியின் சிறு கீற்று கூட உள்நுழையாதவாறு அந்த அறை அமைக்கப்பட்டிருந்தது. சுவர்களை குடைந்து ஓர் ஒழுங்குமுறையில் அமைக்கப்பட்டிருந்த வட்டவடிவ துவாரங்களில் விளக்குகள் வைக்கப்பட்டிருந்தன. அச்சிறிய விளக்குகளின் சேர்க்கை ஒளியில் அந்த அறையின் ஒரு மூலையில் படிக்கட்டுகள் கீழே இறங்கிச் செல்வதை காணமுடியும். அந்த சுரங்க வழிப்பாதை குறித்து வருணகுலத்தானிற்கு எடுத்துரைத்தாள் மாருதவல்லி.

‘இப்படிக்கட்டுகள் வழியே கீழே சென்றால் சிறு தொலைவில் மூன்று திசைகளின் வழியே பிரிந்து செல்லும் சந்தி ஒன்றைக் காண்பீர்கள். அச்சந்தியில் வடக்குத் திசை நோக்கி விரைந்தால் உங்கள் பயணத்தின் முடிவில் நெடுஞ்சுவர் ஒன்றைக் காண்பீர்கள். அச்சுவரின் இடப்பக்கமாக உள்ள படிக்கட்டுகளில் ஏறினால் நீங்கள் சட்டநாதர் கோயிலின் பின்புறத்தை அடைய முடியும். ஆனால் இங்கு மிகமுக்கியமான விடயம் யாதெனில் நீங்கள் அந்த சந்தியினைக் கடக்கின்ற வேளை மற்றைய வீதிகளில் யாரேனும் தங்களை கண்டுவிடுகிற அபாயம் நேர்ந்துவிடக்கூடாது. இச்சமயம் அப்படியொரு அபாயம் இருக்க வாய்ப்பில்லை என்றே கருதுகிறேன். இருந்தாலும் தாங்கள் எச்சரிக்கையாக இருப்பது நல்லது’ என்று மாருதவல்லி கூறியவற்றை பொறுமையோடு கேட்டுக்கொண்டிருந்த வருணகுலத்தான்
‘மிக்க நன்றி தேவி, இக்கட்டான இச்சூழ்நிலையில் தாமாற்றும் பேருதவிக்கு நான் எப்போதும் கடன்பட்டவனானேன். நான் இப்போதே சட்டநாதர் கோயில் நோக்கி விரைகிறேன்’ என்று வேகமாக படிக்கட்டுகளில் கால் வைத்தான்.

‘ம்.. ம்….தளபதியாரே,’ என்று கூறியவாறே அருகிலிருந்த ஓர் கொள்ளிக்கட்டையினை எடுத்து அங்கிருந்த விளக்கொன்றின் மூலம் அதனை தீப்பந்தமாக்கி வருணகுலத்தான் கைகளில் கொடுத்தாள்.

‘இதை எடுத்துச் செல்லுங்கள். யாரும் தங்களை காண நேராதவகையில் இதனை பயன்படுத்திக் கொள்ளுங்கள்’

பணிவோடு அதை வாங்கிக்கொண்டு படிக்கட்டுகள் வழியே வேகமாக கீழே இறங்கினான் வருணகுலத்தான். இறங்கி சில கணங்களில்த்தான் அந்த தீப்பந்தத்தின் அவசியம் அவனுக்குப் புரிந்தது. சுற்றி மையிருட்டு. பலவாறாக சுழன்று சுழன்று அந்தப்பாதை சென்று கொண்டிருந்தது. தன்னைப்போல் முதல்முறை இச்சுரங்கத்தினுள் வருபவர்கள் தீப்பந்தம் மாத்திரம் இல்லாவிடின் சுவர்களில் அடிபட்டு அடிபட்டே சுற்றிக்கொண்டிருக்க வேண்டியதுதான். அல்லாமல் ஒரு அடி கூட முன்னேறிச் செல்ல இயலாது என்று அவனிற்குத் தோன்றியது.

சிறு தொலைவில் மாருதவல்லி கூறிய சந்தியினை அவனால் காணமுடிந்தது. மாருதவல்லி கூறியபடி யாரேனும் அவ்விடத்தில் இருக்கின்றனரா என தெளிவாக உற்று நோக்கியபடியே அச்சந்தியை நோக்கி நடந்தான்.

அச்சந்தியின் வேறொரு வீதியிலிருந்து ஒரு வெளிச்சத்தின் தூரத்து அசைவு ஒன்று அவன் கண்களிற்கு முதலில் தென்பட்டது. யாரோ வந்துகொண்டிருக்கிறார்கள் என்பதை உணர்ந்தவன் துரிதமாக தன் தீப்பந்தத்தை அணைத்துக் கொண்டான். அவன் உள்ளத்தின் அவசரத்திற்கு வருவது யாராக இருந்தாலும் பொருட்டில்லைதான். இருந்தாலும் தனக்கு உதவி புரிந்த மாருதவல்லிக்கு தேவையற்ற சிக்கல்களை வழங்கிவிடக்கூடாது என்ற எண்ணத்தில் மறைவாக ஒரு சுவரோடு ஒளிந்து கொண்டான்.

அந்த தீ வெளிச்சம் சந்தியை நோக்கி விரைந்து கொண்டிருந்தது. அடர்ந்த இருட்டிலும் அந்த ஒளிப்பெருக்கு சந்தியை நோக்கி விரைந்து வருவதை வருணகுலத்தானால் தெளிவாகவே பார்க்க முடிந்தது. வருவது யாராக இருக்கும் என்ற யோசனையை விட யாராக இருந்தாலும் விரைந்து விலகி விட வேண்டும் என்ற எண்ணத்திலே வருணகுலத்தான் நிதானத்தை கைக்கொண்டு காத்திருந்தான்.

ஆனால் வந்து கொண்டிருக்கும் அந்த உருவம் வருணகுலத்தானிற்கு நன்கு பழக்கமான ஓர் உருவம் தான். இருந்தாலும் இச்சமயத்தில் அவன் அதை எதிர்பார்த்திருக்கவில்லை.

வெளிக்கும்….

Related posts

உடல் உள போஷாக்கில் தாய்ப்பால்

Thumi202122

முன்பள்ளிப்பருவ மாணவர்களது மொழித்தேட்டம்-03

Thumi202122

சர்க்கரை பொங்கல்

Thumi202122

Leave a Comment