இதழ் 43

சித்திராங்கதா – 42

இருட்டுச் சுரங்கம்

யாரும் அறிய நேரா வண்ணம் தன் ஆதர்ச நாயகி சித்திராங்கதாவை சந்திக்க, அவளிடமிருந்தே வந்ததாக நம்புகின்ற அந்த முதல் அழைப்பை சாட்சியாகக்கொண்டு சட்டநாதர் கோயில் நோக்கி இரகசிய சுரங்க வழியினூடு சென்று கொண்டிருக்கும் வருணகுலத்தானிற்கு தன் பயணத்தை தாமதிக்க வைத்த அந்த உருவம் நல்லைச் சேனாதிபதி மகிழாந்தகனுடையதே என்று தெரிந்து கொண்ட நொடி கொஞ்சம் ஆச்சரியமாகவும் பெருமளவு நிம்மதியாகவும் இருந்தது.

‘என் நண்பன் தான் வந்துகொண்டிருக்கிறான். நான் எதற்கு இனி ஒளிந்திருக்க வேண்டும்’ என்று விரைந்து வெளிப்பட துணிந்த வருணகுலத்தான் சிந்தையில் மாருதவல்லியின் முகம் சிலகணம் தோன்றி அவனை தடுத்து நிறுத்தியது. ‘இச்சமயத்தில் நான் எப்படி இங்கே வந்திருக்க முடியும்? ‘ என்கிற கேள்விக்கு தான் மகிழாந்தனிடம் என்ன பதில் கூற முடியும் என்ற யோசனையில் நின்ற இடத்திலேயே மேலும் ஒளிந்து நின்று கொண்டான் வருணகுலத்தான்.

‘என்ன இருந்தாலும் இது நல்லூர் இராசதானியின் ஓர் இரகசிய வழி… நான் இங்கு வந்திருக்கும் ஓர் அந்நியன். எனக்கு இவ்வழி பற்றி ஏதும் தெரியக்கூடாது என்பதால் தானே இவ்வழி பற்றிய இரகசியத்தை அரசரோ வேறு யாரோ இதுவரை என்னிடம் கூறியதில்லை…. ‘ என்று தன் எண்ணப்போக்கில் பயணித்துக் கொண்டிருந்த வருணகுலத்தானிற்கு நடந்த முடிந்த ஒரு சம்பவம் தீடீரென நினைவில் வந்து எதையோ புரியவைத்தது.

‘நான் முதன்முதலாய் நல்லூர் அரசவைக்குள் பிரவேசித்த நாளில் என்னை எங்கே தங்க வைப்பது என்கிற கேள்விக்கு “வீரர்கள் யாவரும் கோப்பாய் அரச மாளிகையில் தங்க வைக்கப்படுவதால் தஞ்சை தளபதி மந்திரி மனையில் தங்குவதே உசிதமாகும்”’என்பதுபோல் அன்று மந்திரியார் கூறிய வார்த்தைகள் நினைவுக்கு வந்தபோதுதான் வருணகுலத்தானிற்கு அந்த சந்தேகம் உதித்தது.

‘அப்படியாயின் இந்த சுரங்கத்தின் வழியே பயணித்தால் கோப்பாய் மாளிகைக்கு செல்ல முடியுமா? அத்தனை தூரம் இந்தச்சுரங்கப்பாதை நீளமுடியுமா?
ஆமாம்.. உண்மைதான்’ என்பதுபோல் மீண்டும் இன்னொரு சம்பவம் அவன் நினைவிற்குள் வந்தது.

‘வன்னியர் விழா பற்றிய அறிவிப்பை எனக்கு தெரியப்படுத்த கோப்பாய் மாளிகை நோக்கி தனது ரதத்தில் வந்த மந்திரியார், தகவல் அறிந்து நான் அஸ்வதமங்கலத்தில் ஏறி அதிவேகமாக புறப்பட்டு நல்லை கோட்டை நோக்கி வருவதற்கு முன்னமே மந்திரியார் கோட்டைக்குள் வந்து அரசரை சந்திக்க சென்றுவிட்டதாய் அன்று மாருதவல்லி கூறினாரல்லவா? அப்படியாயின் அன்று மந்திரியார் இந்தச் சுரங்கப்பாதை வழியாகத்தான் வந்திருந்தாரா? ‘ என்கிற கேள்வியோடு அன்று மந்திரியாரது ரதம் வெறுமையாக சாரதியோடு மாத்திரம் கோட்டை நோக்கி வந்து கொண்டிருந்த காட்சியும் அவன் நினைவில் தோன்ற ‘ஆம்…. நிச்சயமாக கோப்பாய் மாளிகைக்கும், மந்திரிமனைக்கும் இடையேயான ஒரு நீளமான சுரங்கப்பாதையாகத்தான் இச்சுரங்கவழி இருக்க வேண்டும்’ என தனக்குள் உறுதியானான்.

‘அப்படியாயின் இப்போது மகிழாந்தகன் வந்து கொண்டிருக்கும் திசை கோப்பாய் மாளிகையிலிருந்து வரும் திசையாகத்தான் இருக்க வேண்டும்’
மகிழாந்தகனது தீப்பந்த ஒளி இப்போது சந்தி முழுவதும் பரவி இருந்தது. அவன் சந்தியை நோக்கி நெருங்கிவிட்டான் என்பதை உணர்ந்து தான் வந்த வீதி வழியே சிறிது பின்னோக்கி சென்று மேலும் மறைவாய் நின்று கொண்டான் வருணகுலத்தான்.

மகிழாந்தகன் தான் நிற்கக்கூடிய வீதியை நோக்கி வந்துவிடக்கூடுமோ என்கிற யோசனையில் பதற்றத்தோடு இருந்த வருணகுலத்தான் மகிழாந்தகன் விலகிச்சென்றதும் ஒரு நிம்மதிப்பெருமூச்சு விட்டான்.

அவன் வேறொரு வீதி வழியாக அவசரமாக விலகிச் சென்று விட்டான். ‘இவ்வளவு அவசரமாக மகிழாந்தகன் எங்கு செல்கிறான்? இந்த வீதிகள் யாவும் எதை நோக்கிச் செல்கின்றன?’ என எதுவும் தெரியாதவனாய் பெருங்குழப்பத்தில் நின்று கொண்டிருந்தான் வருணகுலத்தான். ஆனால் அது பற்றி யோசித்து நேரத்தை மேலும் வீணாக்காமல் மாருதவல்லி கூறியபடி வடக்குத்திசை பாதையினூடு சென்று விரைந்து சட்டநாதர் கோயிலை அடைந்தாகவேண்டும் என தன் பயணத்தை மீண்டும் வேகமாக தொடர தயாரானான்.

மகிழாந்தகன் தொலைதூரம் விலகிச்சென்ற பின்தான் தன்கையில் தீப்பந்தம் இல்லாதது வருணகுலத்தானிற்கு தெரிந்தது. மீண்டும் சுரங்கத்தினுள் மையிருட்டு பற்றிக் கொண்டது . வந்த பாதை கூட பலவாறாக சுழன்று இருந்தமையால் தான் நிற்கின்ற திசை எது என்பது கூட அவனிற்குத் தெரியவில்லை.

சட்டநாதர் கோயிலிற்கு செல்ல சந்தியில் வடக்குதிசை வீதி வழியே சென்றாகவேண்டும் என்றால் இந்த சந்தியில் எது வடக்குதிசை வீதி என்பதை இப்போது எப்படி அறிவது என்று தெரியாமலும் அங்கே தனக்காக காத்துக்கொண்டிருப்பாள் என்று நம்புகிற சித்திராங்கதாவின் முகம் உள்ளத்தில் தோன்றி அவனை வேகப்படுத்தவும் செய்வது ஏதென்றறியாமல் அந்த சுவர்களிலே மீண்டும் மீண்டும் முட்டி மோதிக்கொண்டிருந்தான்.

ஒரு யோசனை திடீரெனத் தோன்றியது. ‘மகிழாந்தகன் கோப்பாய் மாளிகையில் இருந்து வெறெங்கோ செல்கிறான்? அல்லது வேறெங்கோயிருந்து கோப்பாய் மாளிகைக்கு செல்கிறான் என்பது உண்மையாக இருந்தாலும் கோட்டைக்கு வெளியே இருக்கும் சட்டநாதர் கோயிலிற்கும் கோப்பாய் மாளிகைக்கும் இடையே செல்ல இவ் இரகசிய வழியை பயன்படுத்தவேண்டிய அவசியமில்லையே’ என்கிற கேள்வி அவன் புத்தியில் உதித்தது. அந்தக் கேள்வியினையே நம்பி தான் வந்த வழி, மகிழாந்தகன் வந்து சென்ற பாதைகளை தவிர்த்து எஞ்சியுள்ள பாதையே வடதிசையாக இருக்கவேண்டும் என்று ஊகித்தான். தன் ஊகத்தினையே ஒரே நம்பிக்கையாய்க் கொண்டு தன் கைகளினால் சுவரினைத் தடவியபடியே அவ்வீதி வழியே முன்னேறத் தொடங்கினான்.

அவன் உள்ளத்தின் அதிவேகத்தோடு அந்த இருண்ட சுரங்கத்தினை கடக்கின்ற போது சுவருடன் மோதுகின்ற நொடிகள் பெருவலியை அவனிற்கு உண்டாக்கியது. ஆயினும் அவன் வேகம் மட்டும் குறைவதாய் இல்லை. அதே வேகத்தோடு ஒரு பெருஞ்சுவரில் முட்டி மோதி கீழே விழுந்த போதுதான் அதற்கு மேல் அங்கு பாதை இல்லை என்பதை புரிந்து கொண்டான்.

இதுதான் மாருதவல்லி கூறிய அந்நெடுஞ்சுவராய் இருக்கவேண்டும் என எண்ணியவன் தன் இடப்புறத்தில் ஏதாவது படிக்கட்டுகள் இருக்கின்றனவா எனத் தேடினான். படிக்கட்டுக்களும் இருந்தன. பெருநம்பிக்கையோடு அவற்றில் கால்வைத்து மேலேறினான்.

காதலின் வேகம் கால்களின் போட்டியாக படிகளில் தட்டுத்தடுமாறி ஏறிக் கொண்டிருந்தான். இருளின் முடிவாய் முதல் வெளிச்சம் அவனிற்குத் தெரியத் தொடங்கியது. ஆனால் அவன் தேடி வந்த வெளிச்சம் என்பது அதுதானா?….

இருள் விலகும்…

Related posts

கொம்யூனிசம் சொல்லித்தரும் அணில்

Thumi202122

மெய்ப்பொருள் காண்பதே அறிவு

Thumi202122

ஏற்றமா ஏமாற்றமா ஏலம் – விரிவான அலசல்

Thumi202122

Leave a Comment